உடல் உறுப்பு கொடை வழங்குவோரின் இறுதி நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது முன்னுதாரண முயற்சி என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தம் உடல் உறுப்புகளை ஈந்து பல மனித உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில் இறக்கும் முன் உறுப்பு கொடை வழங்குவோரின் இறுதி நிகழ்வுகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது நாட்டின் முன்னுதாரண முயற்சி என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்கிறது.
உடல் உறுப்பு கொடையின் மூலம் பல நூறு பேருக்கு வாழ்வழிக்கும் அரும் பணியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது. மூளைச்சாவு அடைந்த துயரச் சூழலிலும் அவர்களின் உடல் உறுப்புகளை கொடையாக அளிக்க முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் மேற்கண்ட சாதனைகள் சாத்தியமாகிறது. உடல் உறுப்புதானம் என்பதின் அவசியம் மேன்மேலும் உணரப்பட மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவத்துறை தமிழக அரசின் கீழ் எடுக்கும் முயற்சிகள் மேன்மேலும் தொடரட்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.