கட்டுரைகள்

ஒரே நாடு, ஒரே தேர்தல் : ஜனநாயகம், மாநில உரிமைக்கு எதிரானது

டி.ராஜா, பொதுச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த உயர்மட்டக் குழுவுக்கு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஒரு உயர்மட்ட குழுவை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. அதன் செயலாளர் டாக்டர் நிரேன் சந்திரா, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துகளைக் கேட்டு கடிதம் (கடித எண். H. 11019/3/2023-Leg.II (HLC) ஜனவரி 1, 2024 தேதியிட்டது) எழுதி இருக்கிறார்.

இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா, ஜனவரி 10 ஆம் தேதி பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில்,

“ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவும் இல்லை; அங்கீகரிக்கவும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ள டி.ராஜா, இப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டுக்கு வருவதில் உள்ள பன்முகக் குழப்பங்கள் நிறைந்த பிரச்சினைகளை விரிவாக பட்டியலிட்டு கடிதத்தில் இணைத்து இருக்கிறார்.

அதன் விவரம் வருமாறு: நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது, அதனை வடிவமைத்தவர்கள் நமது நாட்டின் பன்முகத்தன்மையையும், இதற்கு பல முனைகளிலும் தீர்வைத் தேடுவதற்காக சவாலையும் நன்கு அறிந்திருந்தனர்.  தவிர உண்மைத்தன்மை இத்தகைய பன்மைத் தன்மை கொண்ட நாட்டில் பொறுப்புள்ள அரசாங்கத்தையும் மக்கள் பிரதிநிதித்துவத்தின் முழுமையான புரிதலையும் அடித்தளமாக கொண்டு தான், நம் நாட்டின் ஜனநாயக முறைமை ஆரம்பமானது.

நமது அரசியலமைப்புச் சட்டம், வாக்குரிமையின் நோக்கத்தை பெரிதும் விரிவுபடுத்தியது. பாலினம், மதம், சாதி, பிறந்த இடம் அல்லது வேறு எந்த வேறுபாடுகளையும் பொருட்படுத்தாமல் 21 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் (இப்போது 18 வயது) வாக்குரிமை வழங்கியது.

தேசிய மற்றும் உள்ளூர் நாட்டங்களை மதித்து, அவற்றுக்கு இடம் அளிக்கும் வகையில், ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையே ஒரு தெளிவான அதிகார பகிர்வை வழங்கியது.  இந்த அமைப்பில், ஜனநாயக செயல்முறையை வழிநடத்த தொடர்ச்சியான, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் தேவைப்பட்டன.  இதன் காரணமாக அரசியலமைப்புச் சட்டத்தின் 324 வது பிரிவிலிருந்து நேரடியாக அதிகாரத்தைப் பெறும் நிரந்தர, சுதந்திரமான அமைப்பாக இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது.

நமது தற்போதைய தேர்தல் முறையில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள், சட்டசபையின் நம்பிக்கையை பெற்றிருக்கும் வரை அல்லது தங்கள் பதவிக்காலம் முடியும் வரை, அதாவது 5 ஆண்டுகள் வரை, பதவியில் தொடர உரிமை உண்டு.  நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது, டாக்டர் அம்பேத்கரும் மற்ற தலைவர்களும் நிலைத்தன்மையை விட, அரசு பொறுப்புள்ள தன்மையுடன் இருப்பதை விரும்பினர்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டமானது, மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களில் வெளிப்படுத்தப்பட்ட பல்வேறு மாநில மக்களின் கருத்தையும், நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல்களில் வெளிப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசு குறித்த மக்களின் கருத்தையும் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் அரசியல் கட்சிகள் மக்களைச் சந்திக்கும் என்பதால் அவற்றின் கடமைகளும் தமது செயல்களுக்கு பொறுப்பேற்பதும் வெகுவாக பாதிக்கப்படும். ஒரே தேர்தல் என்பதை கடைப்பிடித்தால், நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் மக்களவை கலைக்கப்பட்டாலும் அல்லது மக்களவையில் நிலையான பெரும்பான்மை  தனிக்கட்சிக்கோ அல்லது ஒரு கூட்டணிக்கோ கிடைக்காவிட்டாலும், அனைத்து மாநிலங்களிலும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும். மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைந்திருந்து அதை கலைப்பதற்கான எந்த தேவையும் இல்லாத நிலையிலும், அங்கு ஆட்சி கலைப்பு செய்வது அவசியமாகிவிடும்.

இது மாநிலக் கட்சிகளுக்கு மக்கள் அளித்த ஆணையை அவமதிப்பதாகவும், பிரதிநிதித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு எதிரானதாகவும் உள்ளது.

நமது குடியரசு பதவியேற்ற பிறகு, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்படுவதாக வாதிடப்படுகிறது.  ஒரே நேரத்திலான தேர்தல் என்ற சுழற்சி ஏன் முதலில் உடைந்தது என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். 1957-ல் இரண்டாவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைத்த ஆட்சியும் இதற்கு ஒரு காரணம்.  கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சரவை, அரசியல் சாசனத்தின் 356 வது பிரிவின்கீழ் முதல் பலியாக கலைக்கப்பட்டது.  மூன்றாவது பொதுத் தேர்தல் 1962ல் நடப்பதற்கு முன்பாகவே, 1960ல் கேரள சட்டப்பேரவைக்கென தனித் தேர்தல் நடத்தப்பட்டது.  அந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையும், தனது பதவி காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பாகவே கவிழ்ந்ததால், 1965 இல் மறுபடியும் நாடாளுமன்றத் தேர்தலோடு தொடர்பு இல்லாமல் மற்றொரு சட்டப் பேரவை தேர்தல் நடத்தப்பட்டது.

அந்த தேர்தலுக்குப் பின்பும் எந்த கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், 1967ம் ஆண்டு பொதுத் தேர்தலுடன் மீண்டும் சட்டப்பேரவைக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டன.  தேர்தல் ஜனநாயகத்தின் தன்மை மற்றும் மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திய விதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த செயல்முறை இயல்பாக நடந்துவிட்டது. மக்களவைத் தேர்தலுடன் மாநில சட்டப் பேரவைத் தேர்தலை ஒத்திசைந்து  திணிக்கப்படவுமில்லை அல்லது மறுக்கப்படவுமில்லை.

1967 க்குப் பிறகு, பெரும்பாலான மாநிலங்களில் ஒரு கட்சி ஆட்சிக்கு சவால் விடும் பிற சக்திகள் அரசியல் அடிவானத்தில் தோன்றின.  அதுவரை இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய கட்சி 8 மாநிலங்களில் ஆட்சியை இழந்தது.  1967 தேர்தல்களின் முடிவுகள் ஜனநாயகம் ஊடுருவி வளர்ந்ததை நிரூபித்தது. மேலும் பல மாநிலங்களில் ஒன்றிய அளவில் உள்ள ஆதிக்கக் கட்சியை விட மக்களின் வளர்ந்து வரும் விருப்பங்களை வழிமொழிந்த அரசியல் கட்சிகள் அதிக இடங்களை பெற்றன.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,  ஒரே மாதிரியான சுழற்சியில் இருந்து விடுபடும்  விருப்பம், ஜனநாயகத்தில் சட்டபூர்வமான வடிவமாகும்.  கூட்டாட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தில், மக்கள் சபைக்கும் மாநிலச் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, மக்களின் வாக்குரிமை மற்றும் தீர்ப்பின் மீது கட்டுப்படுத்தப்பட்ட விளைவை ஏற்படுத்தும்.

பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு, அரசியலமைப்புச் சட்டத்தின் தோல்வியைக் காரணம் காட்டி குடியரசுத் தலைவரால் நான்கு மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொள்கை அடிப்படையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை எதிர்த்தாலும், மாநிலத்தில் நிர்வாகம் முற்றிலுமாக சீர்கேட்டிருப்பதைக் கண்டு பலர் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கோரியுள்ளனர்.  ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற திட்டமானது, இத்தகைய சூழலுக்கு எந்த தீர்வையும் காட்டவில்லை. மாறாக, மாநிலங்களில் ஜனநாயக விரோத தன்மையையே நிலை நிறுத்துகிறது.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விரும்பத்தக்கதாகக் கூறப்படுகிறது ஒரு முக்கிய காரணம் நிதி.  தேர்தலை நடத்தும் செலவுகளை ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மிச்சப்படுத்தும் என்பதால், அதிக இது ஒரு முக்கியமான உத்தி என்று சொல்லப்படுகிறது.  மாநிலத்தின் தேர்தல் செலவுகள், வாக்குச் சாவடிகள் அமைப்பது, தேர்தல் வேலைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பயணப்படி அகவிலைப்படி வழங்குதல், போக்குவரத்து ஏற்பாடுகள், அடையாள மை செலவு போன்றவை, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் கணிசமாகக் குறையும் அல்லது பாதியாகக் குறையும் என்று வாதிடப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறப்பட்ட தரவுகள், தேர்தல் செலவுகள் பற்றிய முழு பரிமாணத்தை வெளிப்படுத்தவில்லை என்பதையும், கவனமாக ஆய்வு செய்யாமல்,  இதுபோன்ற பொதுவான கருத்துகளை வெளியிடுவது பொருத்தமற்றது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

உதாரணமாக, ஆந்திரப் பிரதேசத்தில், 2014ல் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோது, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரியாக ரூ. 1.66 கோடி செலவானது.  மற்றொரு பெரிய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில், மக்களவை மற்றும் மாநில சட்டசபைக்கான தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்பட்டபோது, இரண்டு தேர்தல்களுக்கும் சேர்த்து மொத்த செலவு  ஒரு தொகுதிக்கு ரூ.1.43 கோடிதான்.

ஒரே நேரத்தில் அல்லது தனித்தனியாக தேர்தல் நடத்துவதில், செலவுகள் ஒரு முக்கிய பங்கு வகித்து விடவில்லை. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது மக்களின் ஜனநாயக உரிமையைக் குறைக்கிறது என்பதைத் தவிர, மற்ற  முறைகேடுகளுக்கு இந்த முறை எந்த தடுப்பையும் வழங்கி விடவில்லை.

மேலும், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது நிதிச் செலவுகளை இன்னும் கூடுதலாக்கவும் செய்யும்.   ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த, முன்னெப்போதும் இல்லாத அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்குவது ஒரு பெரிய செலவாகும், மேலும் அவை ஐந்து வருட காலத்திற்கு பாதுகாப்பாக வைத்திருக்கப் படவும் வேண்டும்.

வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களை,  ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு, பிறகு பூட்டி வைப்பதில் ஒரு நியாயமும் இல்லை.  பணத்தைச் சேமிப்பதற்காக மட்டுமே இந்த முறை என்று சொன்னால், அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை இலக்காகக் கொண்ட விரிவான தேர்தல் சீர்திருத்தங்கள் நமது நாட்டிற்குத் தேவை.  அரசியல் கட்சிகளின் செலவுகளை கட்டுப்படுத்த இந்த முறை உதவும் என்று சொல்லவும் வழியில்லை. இந்திரஜித் குப்தா கமிட்டியின் பரிந்துரையின்படி வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளையும் அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என்ற மாற்று வழிகளை ஆலோசிக்க வேண்டும்.

தேர்தல் பத்திரங்கள் வடிவில் உள்ள நிறுவனமயமாக்கப்பட்ட ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், மேலும் தேர்தலில் பணபலம் மற்றும் குண்டர் பலத்தையும் குறைக்க சிறந்த சட்டங்களை உருவாக்க வேண்டும்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது வெறுப்பூட்டும் பேச்சின் நிகழ்வைக் குறைக்கும் என்று சிலர் வாதிடுகின்றனர்.  ஏனெனில் குறைவான பேரணிகள், பரப்புரைகளே சாத்தியம் என்பதால், வெறுப்பு பேச்சின் அளவும் குறைவாக இருக்கும் என்று கருதுவது சரியல்ல.

வெறுப்பு அரசியலை, மக்களை பிளவுபடுத்தும் வகையில் அநாகரிகமாக பேசுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளைப் பரிந்துரைப்பதற்குப் பதிலாக, அரசியல் தலைவர்கள், மக்களிடம் நேரடியாக பேசுகிற வாய்ப்பை பறிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதால் இந்தக் கூற்று கேலிக்கு உரியதாகும்.

ஊடக நிறுவனங்களின் சார்பு நிலை, சுதந்திரமான தகவல் பரிமாற்றத்தை சேதப்படுத்துகிறது. அதனை மாற்றுவதற்கு வழி காணாமல், தேர்தல் முறையை மாற்றுவது பொருத்தமற்றது.

இந்திய சட்ட ஆணையம், இந்த விஷயத்தில் கருத்துகளைக் கேட்டபோது, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது.  ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய சட்ட ஆணையத்திடம் எழுத்துப்பூர்வ பதில்கள் சமர்ப்பிக்கப்பட்ட போது, 13 அரசியல் கட்சிகள் இந்த நடவடிக்கையை முற்றிலும் எதிர்த்தன. பதில்களைத் தந்த மொத்தமுள்ள 26 கட்சிகளில் 3 அரசியல் கட்சிகள் இந்த திட்டத்தைப் பற்றி தங்கள் அச்சங்களை வெளிப்படுத்தின.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 தேசிய கட்சிகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஒரே ஒரு தேசிய கட்சி மட்டுமே ஆதரவளித்தது.

இது தொடர்பாக மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டபோது, 10 அரசியல் கட்சிகள் இந்த நடவடிக்கையை எதிர்த்தன.  மீண்டும், சிபிஐ உட்பட 3 தேசிய அரசியல் கட்சிகள் இந்த முன்மொழிவை எதிர்த்தன, ஒரு தேசிய அரசியல் கட்சி மட்டுமே ஆதரவளித்தது.  எனவே தேர்தலில் பங்கேற்கும் இந்திய அரசியல் கட்சிகளிடையே புதிய முறை குறித்து ஒருமித்த கருத்து உருவாகவே இல்லை என்பது தெளிவு.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டம் ஜனநாயகத்தையும், மாநில உரிமைகளையும் பறிக்கிறது என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியோடு வலியுறுத்துகிறது.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது ஒரே மாதிரியான கொள்கையை திணிப்பதன் மூலம் மாற்றுக் கருத்துகளை அழிக்கும் முயற்சியாகும். இது நாட்டை ஒரு கட்சி ஆட்சிக்கு தள்ளிச் செல்லும்.  இந்தியாவை ஜனநாயகமற்ற மற்றும் பொறுப்பற்ற அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்லக் கூடியது. எனவே ஒரு தேசம் ஒரு தேர்தல் இன்னும் திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக நிராகரிக்கிறது.

தமிழில் டி.எம்.மூர்த்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button