ஒரே நாடு ஒரே தேர்தல் என நாட்டை திசைதிருப்ப ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இது பேரழிவு முயற்சி. திட்டமிட்டே தான் ஒன்றிய அரசு துடிக்கிறது. “இந்தியா” கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைகிறது. இதிலிருந்து மக்களைத் திசைதிருப்பவே இந்த நவீன “ஒத்தல்லோ நாடகம்”.
ஒத்தல்லோ ஷேக்ஸ்பியரின் மிகவும் பேசப்பட்ட நாடகம். மிக மோசமான வட்டி கடைக்காரனை மையப்படுத்திய நாடகம் இது. இதனையே மிஞ்சிவிடும் நாடகங்களை பிரதமர் இனி நாள்தோறும் அரங்கேற்றக் கூடும்.
ஒரே நாடு, ஒரே நாடு என்கிறார் பிரதமர். இது ஒற்றுமைச் சொல் அல்ல!, பன்முகத்தை சிதைக்கும் வேற்றுமை சொல்!.
இந்தியா ஒற்றை மொழி, ஒற்றை இனத்தை அடையாளப்படுத்தும் ஒற்றை நாடல்ல. மாறாக, பல்வேறு மொழி வழி மாநிலங்களின் கூட்டிசைவுதான் இந்தியா. எனவேதான், அரசியல் சாசன வடிப்பில் “ஒன்றியம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே தேர்தல், ஒரே தேர்தல் என்கிறது ஒன்றிய அரசு. நமது நாடாளுமன்ற ஜனநாயக முறைமை, மக்கள் அதிகாரத்தின் மூன்று முக்கிய விழுமியங்களை சுட்டிக்காட்டுகிறது.
1, நாடாளுமன்றம்
2, சட்டமன்றம்
3, உள்ளாட்சி
உள்ளாட்சி மட்டும் 20 லட்சத்திற்கும் மேல், இதில் இன்னும் அதிர்ச்சி தகவல் உள்ளன. இந்தியாவின் காடுகளில், மலைகளில் வசிக்கும் மக்கள் பலர் வாக்களிப்பது இல்லை. தேர்தல் கூட அங்கு நடத்தப்படவில்லை. (குழுக்களின் அறிக்கையில் இருந்து)
சரி ஒரே தேர்தல்!?
வாழ்க்கை அனுபவங்கள் சாத்தியப்படுத்துமா? அரசின் அதிகாரப்பூர்வ குழுக்கள் பல ஒரே தேர்தல் சாத்தியமல்ல என நிராகரித்துவிட்டது. தேர்தல் சீர்திருத்தம் குறித்து தோழர் இந்திரஜித் குப்தா கமிட்டி உட்பட இதனை சுட்டிக்காட்டியுள்ளது.
சரி அப்படியே ஒரே தேர்தல் என்றாலும், இது குறித்து நாடாளுமன்றம் அல்லவா விவாதிக்க வேண்டும்? சரி, எதிர்க்கட்சிகளை கலந்தாலோசனை செய்ததா ஒன்றிய அரசு?
அரசியல் நிர்ணய சபையில் விவாதித்த போது நிதி, நிர்வாகம், அரசாங்கம், பத்திரிகைகள் என இந்திய ஜனநாயக தூண்கள் குறித்து குறிப்பிடப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் இதில் சிறப்பு தூண்கள் இரண்டு என்றார்.
1.எதிர்க்கட்சிகள்
- நாடாளுமன்ற விவாத முறை
இரண்டையும் நிராகரிக்கிறது ஒன்றிய பாஜக அரசு!
தமிழக முதலமைச்சர் கேட்பது போல் மேலும் ஒரு கேள்வி, இந்த குழுவிற்கு ஏன் முன்னாள் குடியரசுத்தலைவர்? சட்ட நெறிகள் அல்லது தார்மீக விழுமியங்கள் இடம் தருகிறதா? ஒரே தேர்தல் எனும்போது, தேர்தல் சீர்திருத்தம் குறித்து ஒன்றிய அரசின் நிலை என்ன?
நாடாளுமன்றம் பணக்காரர்களின் அவையல்ல, மேலும் அது மதவாதிகளின் அரங்கமும் அல்ல, மாறாக அது மக்கள் அரங்கம். மக்களை அடையாளப்படுத்தும் மிகத் தெளிந்த மக்கள் பிரதிநிதிகளின் அடையாளம். இது மெய்ப்பட தேர்தல் சீர்திருத்தம் அவசியம் அல்லவா?
ஒரே தேர்தல், ஒரே தேர்தல் எனும் ஒன்றிய அரசு. அடுத்து ஒரே வாக்கு, ஒரே வாக்கு என கூறக்கூடும். அந்த வாக்கு இந்துக்களுக்கானது என்றும் கூறக்கூடும். ஆபத்து அப்படிச் செல்லும்..?
பன்முக கட்சிகளின் இயங்கும் முறையையோ, பல கோடி மக்கள் வாக்களிக்கும் முறையையோ, ஒன்றிய பாஜக அரசு விரும்புவதில்லை. தேர்தல் ஜனநாயகத்தை மயான பூமியாக மாற்றத் துடிக்கிறது ஒன்றிய பாஜக அரசு.
உலகில் பல அறிஞர்களால் புகழப்படும் நாடு இந்தியா. இதன் ஜனநாயகத்தை ஜனநாயகத்தின் திறவு என்கிறார்கள். இதன் தேர்தலை தேர்தல் திருவிழா என்கிறார்கள். நமக்கு இந்த முதலாளித்துவ சமூக அமைப்போடு உடன்பாடு இல்லை, எனினும் இந்திய ஜனநாயகத்தை பிற நாடுகளோடு ஒப்பிடும்போது, மேதைகள் பலர் இதனை நாட்டியம் புரியும் ஜனநாயகம் என்கின்றனர்.
என்ன..! அந்த மாலையில் செம்மலர்களை கோர்க்க வேண்டும். அப்படி கோர்த்தால் அதன் உண்மை வாசம் வீசும்.
உண்மையில் வேறு எங்கும் இல்லாத நறுமண மாலை தான் இது!
ஆனால், அது குரங்குகளிடம் அல்லவா கிடைத்து விட்டது. மீண்டும் மக்கள் கைகளில் கிடைக்க இந்தியா எழுக! இந்தியா வெல்க!!