பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி டெல்லியில் குவிந்த 20 லட்சம் பேர்!
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஒன்றிய – மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். ஆனால், ஒன்றிய பாஜக அரசு அதனை செயல்படுத்த மறுத்து வருகிறது. இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேசிய இயக்கம் (National Movement for Old Pension Scheme – NMOPS) அழைப்பு விடுத்ததை அடுத்து, அக்டோபர் ஒன்றாம் தேதி 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஒன்றிய – மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் என 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டெல்லி ராம்லீலா மைதானத்தில் குவிந்தனர். அந்த மைதானமே மனிதத் தலைகளாக காட்சியளித்தது.
“ஓய்வூதிய மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துமாறு நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். எங்களின் முயற்சியாலும், போராட்டத்தாலும் நான்கைந்து மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஒன்றிய அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அங்கீகரித்தால், மாநில அரசுகளின் மீது சுமை விழாது என்று எங்கள் குழு நம்புகிறது; எனவேதான், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஒன்றிய அரசே நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்திப் போராடுகிறோம்” என்று பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் விஜய்குமார் பந்து தெரிவித்தார்.
‘ஓய்வூதிய சங்கநாதப் பேரணி’ என்ற பெயரில், நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து, ராம் லீலா மைதானத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் குவிந்தது மோடி அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே, 20 லட்சம் பேர் திரண்ட இந்த பிரம்மாண்ட நிகழ்வை ஒரு சில ஆங்கில ஊடகங்கள் – பிடிஐ, நேஷனல் ஹெரால்ட், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஒரு சில ஆங்கில ஊடகங்கள் மட்டுமே செய்தியை வெளியிட்டன. ஆசியாவின் மிகப் பெரிய செய்தி நிறுவனம் என்று கூறிக்கொள்ளும் ஏஎன்ஐ (ANI) உட்பட மோடி அரசுக்கு ஆதரவான தேசிய ஊடகங்கள் எதுவும் சிறு செய்தியாக கூட இதனை வெளியிடவில்லை.
பழைய ஓய்வூதியக் கோரிக்கைக்கான இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், ஆம் ஆத்மி ஆதரவு தெரிவித்திருந்தன. தலைவர்களும் பங்கேற்றனர்.