பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை
![](https://www.janasakthi.in/wp-content/uploads/2024/02/IMG_20240202_084559.jpg)
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பழைய ஓய்வூதியத் திட்டம்
பணியாளர்கள் – ஆசிரியர்களை அழைத்து பேசி அறிவிக்க வேண்டும்
புதிய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் ஓய்வூதியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அரசுப் பணியாளர்கள், ஆசிரியர் அமைப்புக்கள் உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து, 2021 ஆம் ஆண்டில் தேர்தல் களத்தில் “பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்கப்படும்” என உறுதியளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு செய்து, அரசுக்குப் பரிந்துரை வழங்க மூன்று உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அறிக்கை அளிக்க ஒன்பது மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை பணியாளர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிலும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்து, ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏற்று, செயல்படுத்தும் கொள்கை முடிவை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.