தமிழகம் பிறந்ததைக் கொண்டாடி 1-11-1956 ல் ஜனசக்தி வெளியிட்ட ‘புதிய தமிழக மலர்’ சிறப்பிதழில், தேசியப் பெருநாள் என்ற தலைப்பில் பேராசான் ஜீவா எழுதிய கட்டுரை
தேசியப் பெருநாள்!
ஊதுமினோ சங்கம்!
ஒலிமினோ வாழ்த்தொலிகள்! ஓதுமினோ வெற்றி!
ஓங்குமினோ ஓங்குமினோ! – பாரதி
இன்று புதிய தமிழகம் பிறக்கிறது. ஆந்திரப்பிரதேசம், கன்னடம், கேரளம் போன்ற புதிய ராஜ்யங்கள் மலர்கின்றன. பாரத நாட்டுப் படம் திருத்தி எழுதப்படுகிறது: பி’ பிரிவு ராஜ்யங்கள் ஒழிக்கப்பட்டு, பல ராஜ்யங்களின் எல்லைகள் சீரமைக்கப்படுகின்றன. இராஜப் பிரமுகர்கள் மறைகிறார்கள்.
நவம்பர் முதல் நாள், தமிழ்ப் பெருமக்களின் நீண்ட நாட்பட்ட, நியாயமான, சரித்திர பூர்வமான, மொழிவழி ராஜ்யக் கோரிக்கையான, புதிய தமிழகம் மலர்கிற நாள் தமிழனின் வரலாற்றில் முதல்பெரும் முக்கியத்துவம் வாய்ந்த நாள்.
இந்தியா விடுதலை பெற்ற பிறகு, சமஸ்தான ஒழிப்பு என்ற பெரிய நிகழ்ச்சிக்குப் பின்னர், மிகப் பெரிய நிகழ்ச்சி, இந்த ராஜ்யச் சீரமைப்பு நிகழ்ச்சிதான்.
தமிழ் மக்கள், இந்தியாவின் பல்வேறு மொழி மக்களோடு, ஜனநாயக, சமதர்ம, சமாதான வாழ்வை நோக்கிக் கம்பீரமாக முன்னேறுவது மகத்தான வாய்ப்பைத் திறந்துவிடுகிற நாள், நவம்பர் முதல்நாள்.
ஆகவே, இந்நாள், தமிழ்ப் பெருமக்களுக்குத் திருநாள் – பெருநாளாகும். இன்று கம்யூனிஸ்டுக் கட்சி வெற்றி சூடி எக்களிக்கும் 3 கோடி தமிழ் மக்களையும் பெருமிதத்துடன் வாழ்த்துகிறது. அவர்களோடு, இந்தத் திருவிழா- பெரு விழாவில் மகிழ்ச்சியுடன் பங்குகொள்கிறது.
இந்த ஜனசக்தியின் வெற்றி வெள்ளப் பெருக்கு, தொடர்ந்து பாய்ந்து, சம்யுக்த மகாராஷ்டிரத்தையும், மகா குஜராத்தையும் அந்த இரு பெருமக்களும் அடையச் செய்வர் என்பது உறுதி,
எல்லைப் பிரச்சினைகள் – வடக்கெல்லையும் சரி, தேவிகுளம் பீர்மேடும் சரி – இதர எல்லைகளும் சரி – இந்த ராஜ்யத்திலும் சரி இதர ராஜ்யங்களிலும் சரி – இன்னும் தீர்க்கப்படவில்லை. இன்றைய மக்கள் வெற்றி தொடர்ந்து பேச்சு வார்த்தை முறைகளில் இவற்றிற்குத் தீர்வு காணும் என்பது திண்ணம்.
சென்னை ராஜ்யத்திற்கு மக்கள் விருப்பப்படி, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட ஆட்சியாளர்கள் இதுவரை ஒருப்படவில்லை. தமிழே, தமிழ் ராஜ்யத்தின் ஆட்சி மொழி என்பது இன்னும் சட்டத்திலும் நடப்பிலும் கைவரப் பெறவில்லை. இந்த மக்கள் கோரிக்கைகள் விரைவில் வெற்றி பெறப்போவதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
மக்களின் ஜனநாயகச் சக்தி ஐயந்திரிபுக்கு இடமின்றி வெற்றி பெற்றிருப்பது மெய் ஆயினும், பிரிட்டிஷ் படைப்பான பிரிவினையும், சரித்திரத் தன்மையுற்ற செயற்கைப் படைப்பான எல்லைகளும், இந்திய ஒற்றுமைக்கு அபாயம் விளைக்கும் என்பதைவிட ஆற்றல் அளிக்கும் என்று காங்கிரஸ் தலைமை கருதுகிறது. அமிர்தசரஸ் காங்கிரஸ் தீர்மானத்தையும், நேருஜியின் கூற்றுகளையும் கவனித்தால் காங்கிரஸ் தலைமையின் மொழி ராஜ்யங்களை நோக்கத்தான் தேசத்தை இழுத்துக்கொண் டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகும்.
எனவே கிடைத்த மகத்தான வெற்றியை விழிப்போடிருந்து காக்கவேண்டும்.
இந்தச் சரித்திர ரீதியான புதிய வாய்ப்பு, தமிழ் மக்களை நிலச்சீர்திருத்தத்தில் கவனத்தை ஊன்றவும், தமிழ்த் தேசிய முதலாளிகள், அந்நிய ஏகபோக மூலதனத்திலிருந்து தங்களைப் பிரித்துக் காட்டி, தேசப் பொருளாதார முன்னேற்றத்திற்காக வாய்ப்புகளைப் பெறவும் அதிக வாய்ப்பு அளிக்கும்.
பொருளாதாரச் சீரமைப்பாலும் கலாசார மறுமலர்ச்சியாலும், தமிழ்த் தாயகத்தைச் சீரமைப்பதும், தமிழ்ப் பெருமக்கள் உயர் வாழ்வு பெறச்செய்வதும் தான், இன்று சகல ஜனநாயகச் சக்திகளின் முன்பும் நிற்கும் முதற் பெரும் போராட்டம்.
இந்தப் புனிதப் பொன்னாளில், நீலகிரிவாழ் தொதுவர், ஏலகிரி, ஜவ்வாது மலைகளில் வாழும் மலைவாசிகள் போன்ற மலைவாழ் மக்களும் நம்மோடு, வெகு விரைவில், ஈடுசோடாக முன்னேற, சகோதர உணர்ச்சியுடன் உதவ, நினைவு கூர்வோமாக!.
இந்தத் திருநாளில் சீரமைப்பால் ஒன்றுபட்ட புதிய ராஜ்யங்கள் மூலம் மேலும் மிக வலுப்பெறும் இந்திய ஒற்றுமையை, கண்ணின் கருவிழிபோல் காப்போமாக!
இந்தத் திருநாளில் சம்யுக்த மகாராஷ்டிரமும் மகா குஜராத்தும் உருவாக மொழிவழி ராஜ்ய வெற்றி பெற்ற சகோதர மக்களோடு நாமும் அணிவகுத்து நின்று ஒற்றுமை முழக்கம் செய்வோமாக!
இந்த நன்னாளில் ஏற்படுகிற மகத்தான வெற்றியைத் தொடர்ந்து புதிய வெற்றிகளை நோக்கி முன்னேறுவோமாக!
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழ்! வாழிய பாரத மணித்திருநாடு!