Nov 21 – Nov 29
Janasakthi- 33 issue – Nov 21 to 27
சட்டத்தின் வழியில் நீதித்துறையா? ஆளுவோருக்கு ஏற்றவாறு நீதித்துறையா?
- த.லெனின்
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி
முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர் தூக்கும் துலாக்கோல்போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும் என்கிறது குறள்.
ஆனால், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்ட சஞ்சீவ் பானர்ஜி எந்தவித உரிய காரணமும் இன்றி திடீரென 70 நீதிபதிகளுக்கு மேல் பணியாற்றும் பாரம்பரியம்மிக்க சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து நான்கு நீதிபதிகளே பணியாற்றும் மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு கொலீஜியம் பரிந்துரையின்படி குடிரசுத்தலைவரால் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளது ஏன்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்தியாவிலேயே மொழியின் பெயரைக் கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். திருவள்ளுவரின் மண்ணிற்கு தான் வந்திருப்பது பெருமை அளிக்கிறது. தமிழகத்தை மற்றொரு தாய்வீடாக நான் கருதுகிறேன். மிகப் பழமையான தமிழ்மொழியை இன்னும் கோடிக் கணக்கானோர் பெருமிதத்தோடு பேசி வரு கிறார்கள். பாரம்பரியம், இசை, இலக்கியம், நட னம், கலாச்சாரம் என பல தனித்தன்மைகளோடு சிறந்து விளங்கும் தமிழ்நாடு என்னுடைய மாநிலம். அப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்க சென்னை உயர்நீதிமன்றத்தற்கு நான் வந்திருப்பது பெருமையாக இருக் கிறது என்று தனக்கு வரவேற்பு அளிக்கப்பட்டபோது சஞ்சீவ் பானர்ஜி பேசிய பேச்சுக்களாகும்.
அவர் காலத்தில் அவர் வழங்கிய தீர்ப்புகள் மாநில மொழி உரிமை மற்றும் பன் மைத்துவத்தை பாதுகாக்கும் வகையில் அமைந்திருந்தது.
ஒன்றிய அரசு நடத்தும் கிஷோர் வைக்கியனிக் புரோத் சாகன் யோஜனா தேர்வுகள் அனைத்தும் அனைத்து மொழிகளிலும் நடைபெற வேண்டும் என்பது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி எம்.துரைசாமி அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் அறிவியல் ஆர்வம் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. அவர்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை. இந்தி, ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் ஏன் தேர்வு நடத்தக் கூடாது? அனைத்து மாநில மொழிகளிலும் தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்தியை புற வாசல் வழியாக நுழைக்க முற்படுகிறீர்களா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தனர். அத்துடன் அனைத்து மொழிகளிலும் தேர்வு நடத்துவது குறித்து ஒன்றிய அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.
அதுபோலவே, நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த, தமிழ்நாடு அரசு நியமித்த ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் ஒன்றிய அரசு சார்பில் நீட் தேர்வு முறையாக கண்காணிக்கப்படுகிறது, தமிழக அரசு குழு நியமிக்க வேண்டிய அவசியமில்லை, இது மாநில அரசின் அதிகார வரம்பு மீறிய செயல் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார், இராமமூர்த்தி அமர்வுக்கு முன்பு விசா ரணைக்கு வந்தது. அதில் அரசுப் பள்ளி மாணவர்கள், சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய இந்தக் குழு ஏற்படுத் தப்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று சொல்ல முடியாது. மாநில அரசின் வரம்பையும் மீறியதாக இல்லை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் சட்டப்பேரவை தேர்தல் நடவடிக்கை தான் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவ காரணமாக உள்ளது என்று இவர் குறிப்பிட்டதுடன் தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்கு பதிவு செய்து ஏன் நடவ டிக்கை எடுக்கக் கூடாது? என்றும் கேட்டிருந்தார்.
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் மக்களைக் கொன்று விட்டு, அதற்கு இழப்பீடாக பணம் வழங்கி விட்டால் அரசின் கடமை முடிந்துவிடுமா? மக்களுக்கான நீதியை பெற்றுத் தர வேண்டும் என்றும் நீலகிரியில் டி.23 புலியை உயிருடன் பிடிக்க வேண்டும் என்றும் மக்கள் நலன் சார்ந்து மாநில உரிமைகள் சார்ந்து நீதியின் வழியில் பல்வேறு தீர்ப்புகளை, உத்தரவுகளை வழங்கியிருந்தார் நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி.
இப்படிப்பட்ட தீர்ப்பகளை வழங்கியதால்தான் அவர் மாற்றப்பட்டாரா?
இதுபோலவே கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக இருந்த விஜயா கமலேஷ் தகில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றி உச்சநீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டது. இதனை மறு பரிசீலனை செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்து விட்டது. இதனையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார். அதே போன்ற ஒரு நிலையை இப்போதும் சென்னை உயர்நீதிமன்றம் சந்தித்து வருகிறது.
வடகிழக்கு டெல்லியில்நடைபெற்ற கலவர வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது சிபிஐக்கு எதிராக கருத்துச் சொன்ன நீதிபதி வினோத் யாதவ் மற்றும் 11 நீதித்துறை அலுவலர்கள் பணியிடம் மாற்றப்பட்டனர். அது போலவே டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதியரசர் முரளீதர் காவல்துறையின் அத்துமீறிய தாக்குதலைக் கண்டித்ததுடன் டெல்லி கலவரம் நடந்தபோது மூன்று நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்வி எழுப்பிய காரணத்தால் அவர் உடனடியாக பஞ்சாப் & ஹரியான உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட செய்தியையும் நாடு அறிந்ததே.
சட்டத்தின் வழியில் ஆட்சி என்பதற்கு பதிலாக ஆட்சியாளர் களுக்கு ஏற்ற நீதி சேவை என்பதாக நமது நீதி பரிபாலன முறையை மாற்றி அமைக்கும் பாசிசத்தின் கோரக் கரங்களை மக்கள் அறிந்து கொள்வது அவசியமாகும்.
ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பணியிட மாறுதல் ஆணையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் 237 பேர் கொலீஜியத்திற்கு கடிதம் எழுதினர்.
1993ஆம் ஆண்டு நீதித்துறையின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு புதுமையான முறைமையான கொலீஜியம் உருவாக்கப்பட்டது-. இது நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.
இதனை பாஜக அரசு விரும்பாது தேசிய நீதித்துறை ஆணையத்தை உருவாக்க உத்தரவிட்டிருந்தது. அதனையும் கடந்த 2015ஆம் ஆண்டு தீர்ப்பின் வழியே நீக்கிதான் இந்த கொலீஜியம் தொடர்கிறது. ஆனால் வெளிப்படைத்தன்மை என்னவானது? என்பதுதான் கேள்வி.
இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நான்கு நீதிபதிகள் அடங்கிய குழுவே கொலீஜியம் ஆகும். அதுபோல உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கியதும் கொலீஜியம்தான்.
ஆனால் உச்சீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.போப்டே காலத்தில் ஒரு பரிந்துரை கூட கொலீஜியம் முன் வைக்கவில்லை. காரணம் ஒத்த கருத்து எட்டப்படாததே ஆகும். ஆனால், இப்போது உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஏன் பந்தாடப்படுகிறார்கள்? இந்த முடிவுகள் குறித்து வெளிப்படையான விவாதங்கள் கொலீஜியத்தில் எழுந்ததா? என்பதெல்லாம் மக்களிடம் விளக்க வேண்டிய பொறுப்பு நீதித்துறைக்கு உள்ளது.
மக்களை விட நீதித்துறை உயர்ந்தது அல்ல. நீதியே மக்களுக்கானதுதான். ஆனால் இன்று ஆளும் வர்க்கம் சார்ந்து நிலப்பிரபுத்துவ பழமைவாத கண்ணோட்டத்தோடு நீதிமன்றங்கள் செயல்படுவது நமது அரசமைப்பு சட்டத்தின் விழுமியங்களுக்கு நேர் எதிரானது.
கொலீஜியத்தின் பணியிடை மாற்றம் குறித்த விதி முறைகளில் 25.2 வது பத்தியில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பணியிடமாற்றம் நடைபெறும் உயர்நீதிமன்றம் குறித்த ஞானம் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்தையும் கேட்டறிந்து செயல்பட வேண்டும் என்றும், 25.3வது பத்தியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நான்கு நீதிபதிகள் குழு பணியிடை மாற்றம் செய்யப்படும் நீதிபதியின் கருத்தை அறிந்தும் அவரது விருப்பமான உயர்நீதிமன்றம் குறித்து அறிந்தும், பணியிடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா எப்போதும், வெளிப்படைத் தன்மை பற்றியே அடிக்கடி பேசி வருகிறார். மக்கள் விரும்புவதும் அதுதான். கொலீஜியத்தில் என்ன நடந்தது? வெளிப்படையாக நாட்டு மக்களுக்கு அறிவிப்பதே நீதித்துறையின் மான்பை காக்கும் செயல். காக்குமா நீதித்துறை?
தொடர்புக்கு: 94444 81703
தமிழருக்கு தாய் மதம் உண்டா?
- இளசை கணேசன்
இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் தங்கள் தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும்!
கிறிஸ்துவம் ஐரோப்பாவிலிருந்து வந்தது! இஸ்லாம் அரேபியாவிலிருந்து வந்தது!
- என்றவாறு நாக்கு தடித்து பேசப்படு
கின்றன. தர்க்கம் செய்யும் நோக்கத்தில் அல்ல, தரவுகள் இல்லாமல் தமிழர்களைப் பிளவுபடுத்தும் முயற்சி இது.
தடுமாற்றம் இருக்கிறது. கிறிஸ்துவம் ஐரோப்பாவில் தோன்றியது அல்ல. அது தோன் றிய இடம் மத்திய ஆசியா.
அது தோன்றிய போது, உலகம் கண்டங்களாகப் பிரிக்கப்படவில்லை. உலக வரைபடம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது.
* தமிழர்களுக்கு தாய் மதம் உண்டா?
* எது தாய் மதம்?
-என்று கேள்விகள் எழுந்த பின்பு ...
“நான் பேசியது தவறாகப் புரிந்து கொள் ளப்பட்டுள்ளது. இந்து மதத்தில் சேரச் சொல் லவில்லை. சைவம்- மாலியம் (வைணவம்) மதங்களில்தான் சேரவேண்டும் என்றுதான் சொன்னேன்”
-என்று அந்தர் பல்டி அடிக்கப்பட்டுள்ளது.
என்ன சொல்ல வருகிறார்?
இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா? புதிய தலைமுறைக்கு வரலாற்று உண்மைகள் தெரிய வேண்டும் என்பதே நமது நோக்கம்.
சைவமும் - வைணவமும் தமிழர்களின் தாய் மதங்களாம்!
கிறிஸ்தவமும் இஸ்லாமும் அந்நிய நாட்டி லிருந்து வந்த வந்தேறிகள்!
இங்கே சொல்லால் சொல்ல வருவது எது?
சமணம்,- பௌத்த மதங்களை வந்தேறி மதங்கள்!
ஏற்கனவே அண்டை மாநிலத்திலிருந்து குடியேறி தலைமுறை தாண்டி வாழ்ந்து வருபவர்களை ‘வந்தேறிகள்’...
- என்று வாய் கூசாமல் சொல்லி வருகிறார்.
தரவுகள் இல்லாமல் தற்குறி போன்று தடுமாறக் கூடாது.
* சைவமும் & வைணவமும் தமிழர்களுக்கு தாய் மதம் இல்லை! இல்லவே இல்லை!
* தமிழர்களுக்கென்ற தனித்த ‘மதம்‘ எதுவும் இல்லை.
*எந்த மதத்தையும் தனக்காக உருவாக்க வில்லை!
தமிழர்களின் பொருளாதார, சமூக, அர சியல், பண்பாட்டு வாழ்வை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து அறிய வேண்டும்.
அப்போது தான் தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றின் இயங்கு சக்தி எது? என்பதை கண்டறிய முடியும்.
இதை விட்டுவிட்டு “பூனை” கண்ணை மூடிக்கொண்டு சூரியனை “தேடுவது போன்று” தமிழர் வரலாறு தெரியாமல் உரத்துப் பேசுவது அரசியல் ஆதாயம் தேடுவது என்பது தான்.
தமிழர் வாழ்வியல் வரலாற்றின் இயங்கு சக்தி எது?
தமிழர்களுக்கு தொன்மையான பொருள் முதல்வாதக் கண்ணோட்டம் இருந்திருக்கிறது.
“முதல் எனப்படுவது நிலம்- பொழுது.
இரண்டின் மொழிப இயல்புணர்ந்தோ ரே”
-(தொல்காப்பியம்) நிலத்தையும் பொழுதை யும் முதல் பொருட்கள் என்று தமிழன் அறிந் திருக்கிறான் என்பதை இப்பாடல் விளக் குகிறது
தமிழரின் வாழ்வியல் என்பது நானிலம் & ஐந்திணை கோட்பாடு என்பதாகும்.
இவை நிலம் சார்ந்து இருப்பதால் ‘புவியியல் பொருளாதார வாழ்வு’ என்றும் இயற்கை சார்ந்து இருப்பதால் ‘இயற்கை பொருளாதார வாழ்வு’ என்றும் கூறலாம்.
பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் நிலம் எனும் பூமி இயங்குகிறது. என்ற ‘இயங் கியல்’ தமிழன் அறிந்திருக்கிறான்.
“மண் திணிந்த நிலமும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலை இய. தீயும்
தீ மு ரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல”....
(புறநானூறு)
பஞ்சபூதங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்தும், முரண்பட்டும், சேர்ந்தும் இயங்குகின்றன என்பதை இப்பாடல் விளக்குகிறது.
அச்சம்(பயம்), ஆச்சரியம் (வியப்பு), அறி யாமை ( அறிவியல் வளராத நிலை) காரணமாக ஏதோ ஒரு அபார சக்தி என்பது நம்பப்பட்டது.
என்றாலும் சங்கத்தமிழன் இயற்கையோடு இயைந்து வழிபட்டிருக்கிறான்.
“மாயோன் மேய காடு உரை உலகமும்
சேயோன் மேய வைகறை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெரு மணல் உலகமும்“ -
-(தொல்காப்பியம்)
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஆகிய நானிலங்களுக்கும் நிலம் அடிபடையில்...
மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்பதோடு கொற்றவை என்பதையும் சேர்த்து தமிழன் வழிபட்டுள்ளான் என்பதை பாடல் விளக்குகிறது..
தமிழன் பசி, பிணி, பகை இல்லாத அற வாழ்க்கை வாழ்ந்தான். ஊண், உடை உறை விடம் என்ற தேவையை நோக்கி முன்னே றினான்.
“அறநெறி புணர்ந்தே திறனரி செங்கோல்”
- (பொருநராற்றுப்படை)
பெரும் படைகள் சிறப்பாக இருந்தாலும் அற நெறியில் திகழ்வதே வேந்தனின் சிறப்பு என்று இப்பாடல் விளக்குகிறது.
சமூகத்தை ‘அகம்’ - ‘புறம்’ என்றும் தமி ழர்கள் பகுத்தார்கள்.
கணவன் மனைவி கூடி வாழும் வாழ்க்கை “அகவாழ்வு’ என்றும் இவர்கள் சமூகத்தோடு கூடி வாழும் வாழ்க்கை ‘புறவாழ்வு’ என்றும் கொண்டனர்.
‘அறம்- பொருள்- இன்பம்’ என்ற மூன்று கோட்பாடுகள் வகுத்த மரபு தமிழ் மரபு.
பின்பு இத்துடன் ‘வீடு’ என்பதையும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
தமிழர்களின் சிந்தனைக்கு எல்லை இல்லை. உலகளாவிய பார்வை இருந்திருக்கிறது.
... ஆதி பகவன் முதற்றே உலகு
(திருக்குறள்)
... உலகம் உவப்ப (திருமுருகாற்றுப்படை)
... உலகத்தீரே உலகத்தீரே (கபிலர்)
... அம்கண் உலகளித்தனர்
(இளங்கோவடிகள்)
... உலகெலாம் உணர்ந்து (சேக்கிழார்)
... மலர்தனை உலகின் மல்இருள் அகல
(நன்னூல்)
... உலகம் யாவவையும் (கம்பர்)
... மலர்தனை உலகத்து (நாற்கவி ராகநம்பி)
.... இதுபோன்று 200 இடங்களில் உலகம் என்ற சொல் பழந்தமிழில் வருகிறது. இவ்வாறு இருந்த தமிழனின் உலகப் பார்வை இன்று எங்கே போனது?
தமிழனின் மரபு முக்கியமாக சமத்துவப் பண்பு மரபாக விளங்கியிருக்கிறது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
(கணியன் பூங்குன்றனார்)
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்”
-(திருக்குறள்)
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்”
(திருக்குறள் )
-“எல்லாரும் எல்லா பெருஞ் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை” -(கம்பர் )
“சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்“
-(பாம்பாட்டிசித்தர்)
“மனிதரே உலகின் தலைவன்” -
(உலகாயத சித்தர்)
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”
-(திருமூலர்)
“அனைவருக்குமான ஆன்ம விடுதலை”
-(ராமானுஜர் )
“சாதி இரண்டொழிய வேறில்லை”
(ஔவையார்)
“சாதி குலம் என்றும் சமய மதம் என்றும் நீதி இயல் ஆச்சிரம நீட்டை ஓதுகின்ற பேயாட்டம் எல்லாம்“.
-(ராமலிங்க அடிகளார்)
இவை போன்று இன்னும் ஏராளமானவை தான், தமிழர்களின் பண்பு மட்டுமல்ல சமத் துவப் பண்பு ஆகும்.
இதுதான் தமிழர் வாழ்வியல் வரலாற்றின் இயங்கு சக்தி!
இதுதான் தடுக்கப்பட்டு உடைக்கப்பட்டு கிடக்கிறது.
தமிழரின் வேளாண்மை வளர்ச்சியில் உற்பத்தி மற்றும் உற்பத்திக் கருவிகளை தன தாக்கி வலிமை பெற்றுமன்னர்கள் உரு வாகினர்.
உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்ப ‘உழைப்புச் சுரண்டல்’ தீவிரமானது.
தமிழ்ச் சமூகம் உழைப்பைச் சுரண்டும் உடமை வர்க்கம் மற்றும் சுரண்டப்படும் உழைக் கும் வர்க்கம் இரு பிரிவுகளாகப் பிரிந்தன.
சங்க காலத்திலேயே ஆசீவகம், சமணம், பௌத்தம், வைதீகம் போன்ற மதங்கள் வடநாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்தன.
பொது மக்களை ஈர்த்து அதன் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் அரசின் ஆதரவைப் பெற முடியும் என்பதால் சமயங் களுக்கிடையே கடும் போட்டி நிலவியது.
இந்தப்போட்டியில் சமண &- பௌத்த சமயங் களுக்கு இணையாக வைதீக சமயம் போட்டியிட முடியவில்லை பின்னடைவைச் சந்தித்தது.
சமணமும் & பவுத்தமும் தமிழர்களின் பொருளாதார, சமூக, அரசியல், பண்பாட்டு வாழ்வோடு ஓரளவு இணைந்து செயல்பட்டன.
தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் தாக் கத்தை ஏற்படுத்தின.
குறிப்பாகச் சமணமும் & பவுத்தமும் உழைக் கும் மக்கள் பக்கம் நின்று அவர்களின் நலன் களை பிரதிபலித்தன என்று கூறலாம்.
வைதீகம் ஆளும், அதிகார வர்க்க நலன் களை பிரதிபலித்தது. இதிலிருந்துதான் தமிழ் பண்பாட்டு மரபு தடுக்கப்பட்டு, முடக்கப்பட்டது.
* பார்ப்பனியம், வைதீகம், சமஸ்கிருத ஆதிக்கம், வர்ணப் பாகுபாடு, சாதிய ஏற்றத் தாழ்வு, தீண்டாமை போன்ற பார்ப்பனிய கொள்கைகள்...
* மன்னர்களின் உழைப்புச் சுரண்டல், சொத்து குவித்தல், ஆட்சியில் நிலைத்தல், மக்கள் மீதான அடக்குமுறைகள், மன்னர்களின் போர்கள் போன்ற உடைமை வர்க்கத்தின் ஆதிக்க நலன் சார்ந்த கொள்கைகள்..
இவற்றிற்கு எதிராக சமண - பௌத்த மதங்கள் கடுமையாகப் போராடின.
பல்லவர், களப்பிரர்கள் ஆட்சியில் சமண, பௌத்த சமயங்கள் செழித்து வளர்ந்தன.
வேதம், யாகம், சமஸ்கிருதம், மந்திரம், சடங்குகள், ஊழ்வினை, சோதிடம், நல்ல நாள் குறித்தல் போன்றவை மூலம் வைதீகம் மன்னர்களின் ஆதரவைப் பெற்றது.
பதிற்றுப்பற்று பதிகங்களில் அரசர்கள் ஆற்ற வேண்டிய வேள்விகள் பற்றிய குறிப் புகள் உள்ளது.
பிற்காலப் பல்லவர்கள், பிற்காலப் பாண்டி யர்கள், பிற்காலச் சோழர்கள், விஜயநகர மன் னர்கள் ஆட்சிகளில்...
வைதீகம் மன்னர்களின் ஆதரவை முழுமை யாகப் பெற்று மன்னர்களின் மடியில் அமர்ந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தியது.
சமண-, பௌத்த சமயங்கள் மீது தாக்கு தலைத் தொடுத்தது.
பிராமணர்கள் இடையே ஏற்பட்ட பூசல்கள் காரணமாக இரு பிரிவாக பிரிந்தனர்.
தமிழ்நாட்டில் இருந்த சிவ வழிபாட்டில் ஒரு பிரிவினரும் திருமால் வழிபாட்டில் மற்றொரு பிரிவினரும் புகுந்தனர்.
அப்போது சிவ வழிபாடும், திருமால் வழி பாடும் சமயமாக உருவாகவில்லை.
சைவத்தில் 63 நாயன்மார்கள் முக்கியத் துவம் பெற்றவர்கள்.
அதில் பேரரசர்கள் 6, குறுநில மன்னர்கள் 5, பிராமணர்கள் 16, மரபற்றவர் 7, வணிகர் 6, வேளாளர் 13, இடைநிலை மற்றும் தாழ்ந்த சாதியினர் 10 பேர்.
இதுதான் சமூக சேர்க்கை. இதிலிருந்து சைவ நாயன்மார்களில் பிராமணர்கள் ஆதிக் கம் தெரிகிறதா?
இதேபோன்று வைணவத்தில் 12 ஆழ் வார்கள் முக்கியத்துவம் பெற்றவர்கள்.
இவர்களில் சாதி பார்க்க கூடாதாம்!
ஆழ்வார்கள் இறைவனை நேரில் பார்த் தவர்கள் எனவே அவர்களின் குலம், சாதி பற்றி பேசவோ ஆராயவோ கூடாது என்று அவர்களின் பக்திப் பனுவல்களில் கூறப்பட் டுள்ளது.
இதையும் மீறி மதுரகவியாழ்வார் பிராமணர் என்றும் தொண்டரடிப் பொடியாழ்வார் தாழ்ந்த சாதி என்றும் தெரிய வருகிறது.
வைணவ ஆச்சாரியார்களில் ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஒப்புயர்வானவர். இவர் “யாரும் வரு ணாசிரமத்தை மீறக்கூடாது பிறப்பு முதல் இறப்பு வரை சாதி அப்படியே இருக்கும்“ -என்று வலியுறுத்தினார்.
ஆழ்வார்களுக்குள்ளேயே தீண்டாமை இருந்தது.
வைணவ சமயத்தின் பிராமணர்கள் ஆதிக் கம் தெரிய வருகிறதா?
பிராமண ஆதிக்கத்தின் கீழ் சமண & பௌத்த சமயங்களின் எதிர்ப்பைக் கூர்மை யாக்க சிவன்- & திருமால் வழிபாடுகள் சைவ சமயம்,- வைணவ சமயம் என்று மாற்றப்பட்டன.
இதில் வைதீக பார்ப்பனர்கள் முக்கியப் பங்காற்றினர்.
அரசர்கள் ஆதரவு, பக்தி இயக்கம், துறவு எதிர்ப்பு, பிற சமயக் கூறுகளைச் சுவீகரித்தல், அழித்தொழித்தல் போன்ற பல நடவடிக்கைகள் மூலம் சமண, பௌத்த சமயங்கள் வீழ்த்தப்பட்டன.
சைவம் (சிவன்), வைணவம் (திருமால்), காணபத்தியம (கணபதி), சௌரம் (சூரியன்), கௌமாரம் (முருகன்), சாக்தம் (சக்தி) ஆகிய ஆறு சமயங்களோடு...
வைதீகத்தையும், குல தெய்வ வழிபாடு களையும் மற்றும் சமண & பௌத்த கூறுகளையும் ஒருங்கிணைத்து உருவானதுதான் ‘இந்து மதம்.’
இதன் முரண்பாடுகளை தனித்து ஒருங் கிணைப்பதில் முக்கியப் பங்காற்றியவர் சங்கரர்.
இப்படி சூழ்ச்சி வலை, வஞ்சகம், ஏமாற்று, போன்றவற்றின் மூலம்தான் இந்து மதம் உரு வானது.
மேலே குறிப்பட்ட ஆறு சமயங்களும் இந்து மதத்தின் பிரிவுகள் அல்ல. முன்னோடிகளும் அல்ல.. உப நதியும்! அல்ல கிளை நதியும் அல்ல! செயற்கையாகக் கால்வாய் வெட்டப்பட்டுச் சேர்க்கப்பட்டிருக்கிறது.
எனவே..
அறியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு என்று பரப்பப்பட்டது.
சைவ சமயம், வைணவ சமயம் என்பவை தமிழர் மதங்கள் அல்ல.
தமிழர்களின் தாய் மதமும் அல்ல.
தமிழர்களால் உருவாக்கப்பட்ட மதமும் அல்ல.
தமிழர் மரபைப் பின்பற்றும் சமயங்களும் அல்ல.
தற்போது ஒவ்வொரு கட்டமாக தோண்டி எடுக்கப்படும் கீழடி அகழ்வாய்வுகள் தமிழர்களுக்கு மதம் இல்லை என்பதை மெய்ப்பிக்கிறது.
சைவம், வைணவம், வைதீகம் இந்த மூன்றும் பிராமணர்களால் உருவாக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்தப்பட்டவைதான்.
மூன்றுக்கும் ஒரே விதமான அடிப்படைகள் தான்.
சதுர் வர்ண அடிப்படையில் வைசியர், சூத் திரர் மீது பிராமணர், சத்திரியர் எதிர்ப்பு, பஞ்சமர் அடிமை
இந்த அடிப்படையை எப்போதும் விட்டு விடக் கூடாது. இதன்படி
* சமண, பௌத்த எதிர்ப்பு மற்றும் அழிப்பு .
* பார்ப்பன சமஸ்கிருத ஆதிக்கம்.
* வருணப் பாகுபாடு.
* சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமை.
* மூடநம்பிக்கை, பிற்போக்கு.
* வகுப்பு வெறி...
* அறிவியல் அணுகுமுறை இல்லை.
* சமத்துவ பண்புகள் கிடையாது.
* ஜனநாயகப் பண்புகள் துளியும் இருக்காது.
* அன்பு, அறம் உதட்டளவில் பேசப்படும்.
இத்தகைய அடிப்படைகள் கொண்ட இந்த மூன்று மதங்களும் தமிழர்களின் மதமாக எப்படி இருக்க முடியும்?
சைவம்-, வைணவம், வைதீகம் இந்த மூன்று மதங்களும் தமிழ் மரபில் புகுந்து தமிழ் மரபைச் சீரழித்திருக்கின்றன.
தமிழர் மரபு தடுக்கப்பட்டு முடக்கப்பட்டிருக் கின்றன. இதன் சூத்திரதாரி பார்ப்பனர்களும், ஆளும் வர்க்கமும்தான்.
* இன்று சத்திரியர் என்ற வருணம் இல்லை.
* சங் பரிவார், ஆட்சியில் கோலோச்சு கின்றனர்.
* கார்ப்பரேட் நலனுக்காக தங்களை அர்ப் பணித்துக் கொள்கின்றனர்.
* நெருக்கடியை திசை திருப்ப வகுப்பு வெறியை அறங்கேற்றுகின்றனர்.
இந்தக் கோரப்பிடியிலிருந்து தமிழகத்தை, தமிழர்களின் சமத்துவ பண்பாட்டு மரபை மீட் டெடுப்பது ஒன்றுதான் மரபு சார்ந்த கடமை.
வாய்ப் பேச்சு வீரரர்களின் வாய் அடைப் போம்!
தொடர்புக்கு: 8220468816
பாதுகாப்பான வீடு... கனவு நனவாகுமா?
- அ.பாஸ்கர்
அண்மையில் தொடங்கிய வட கிழக்கு பருவமழை தீவிரமாகி, தொடர் கனமழையாக,
வழக்கத்தை விட அதிகமாக கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களிலும், காவிரிப் பாசனப் பகுதிகளிலும் இயல்பான வாழ்க்கை நிலை பாதிக்கப் பட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக் களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், பேரி டர் பாதிப்புகளில் இருந்து மக்களை மீட் கும் பணிகளிலும், பாதிப்புகளை சீர மைத்து, ஒரு நிரந் தத் தீர்வுகாணும் முனைப் போடு மாண்புமிகு முதலமைச்சரும், அமைச்சர்களும், உயர் அதிகாரிகளுடன் களம் இறங்கி மக்களுக்கு நிவாரணம் வழங்கி அரவணைத்து ஆறுதல் கூறிவருவது மறுவாழ்வுக்கு நம்பிக்கையூட்டுகிறது.
காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களில் கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு, ஆய்வு செய்வதற்கும், அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் மூத்த அமைச்சர் தலைமையில் குழு அமைத்திருப்பது சிறப்பானதாகும்.
சென்னையிலிருந்து கன்னியாகுமாரி வரை பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலைவழிப் பயணம் செய்து, நேரில் பார்வையிட்டது மக்களிடம் எதிர்ப்பார்பையும், நம்பிக்கையினையும் அதிகப்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் ஏற்படும் இயற்கை பேரிடர்களில் காவிரி டெல்டா பகுதி மக்களின் வாழ்க்கையை பாதிக்கின்ற போது, மாநில அரசு வெள்ளச் சேதத்தை பார்வையிடவும், மதிப்பிடவும் அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் கொண்ட குழுவை அனுப்புவதும், குழு வயல்களின் வரப்பில் நின்று, நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிடுவதும், விதைத்த பயிர் வேர்கள் அழுகிய நிலையில் இருப்பதை விவசாயிகள் அதிகாரிகளிடம் காட்டி, கண்ணீர் மல்கக் கோரிக்கை வைப்பதும் ஒரு அரசு முறை நடவடிக்கையாகியுள்ளது.
சாகுபடி இழப்பு, சாலைகள், பாலங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதாரம் என ஒன்றுவிடாமல் ஆய்வு செய்வதும், தனது பரிந்துரையை அரசுக்கு கொடுப்பதும் வழக்கமான ஒன்றுதான்.
இயற்கை பேரிடரை மாநில அரசு மட்டுமே எதிர்கொள்ள இயலாது என்பதை யாரும் மறுக்க இயலாது. அதுவும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிவிதிப்பு முறைகளில் மாநில அரசின் நிதி ஆதாரத்தை ஒன்றிய அரசு பறித்துக் கொண்ட நிலையில், பேரிடர் நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசிடம் முறையிடுவது தவிர்க்க முடியாது.
மாநில அமைச்சர்கள், அனுபவ முதிர்ச்சி பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் வழங்கும் அறிக்கையை அப்படியே ஏற்பதில்லை. குறைந்தபட்சம் அவர்களோடு விவாதித்து தெளிவு பெற்று, நிதியொதுக்க ஒன்றிய அரசு முன்வருவதில்லை. ஒன்றிய அரசின் அதிகாரத்தை வழிநடத்தும், ஆளுங்கட்சியின் கொள்கைகளை விமர்சிக்கும், எதிர்க்கும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்றால் பாராமுகத்துடன் நடந்து கொள் வதும், வஞ்சித்து வதைப்பதும் வாடிக்கையாகி விட்டது.
இதனை மூடி மறைக்க பல்வேறு துறை உயர் அதிகாரிகளைக் கொண்ட “மத்திய குழு” வந்து சென்றுள்ளது. நமது கவலைகள் தீரும் நிவாரணம் கிடைக்கும் என மக்கள் காத்திருப்பார்கள். ஒன்றிய அரசிடம் பேரிடர் நிவாரண நிதி கேட்ட அளவில் 10% கூட வழங்குவது இல்லை என்பதும் அனுபவ உண்மையாகும்.
வழக்கம் போல் இவ்வாண்டும் அமைந்துவிடக் கூடாது என விவசாயிகள் கவலையோடு காத்திருக்கிறார்கள். இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களில் விவசாய தொழிலாளர்களும், கிராமத் தொழிலாளர்களும் எப்படி இருக்கிறார்கள் என்பது பற்றி சிந்திக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
பருவமழைக் காலங்களில் தொடர்ந்து வேலையை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு, மீன்பிடித் தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்குவது போல் ஓரிரு மாதங்கள் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது. இது ஏன் அரசின் கவனத்தைத் தொடவில்லை.?
ஆட்சியாளர்கள் எவரும் நம்மைப் பற்றி கண்டு கொள்வதோ, கவலை கொள்வதோ இல்லை என்ற ஏமாற்றம் சமுகத்தின் அடித்தட்டு மக்களான விவசாயத் தொழிலாளர்களிடம் நிலவி வருவதை அரசு உணர வேண்டும்.
தொடர் கனமழை காரணமாக
காவிரிப் பாசன மாவட்டங்களில் விளைந்து நின்ற குறுவை நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமலும் , நடவு செய்து 15 நாட்கள் கூட ஆகாத தாளடி பயிர்களும், சம்பா பயிர்களும் மழைநீரில் மூழ்கியுள்ளன ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடவு செய்த பயிர்களை இழந்து, வயல்களை சீரமைக்கும் வேதனைக்கு
ஆளாகி நிற்கும் விவசாயிகளுக்கு
நிவாரணம் வழங்குவதுடன் விவசாயத் தொழிலாளர் வாழ்க்கை நெருக்கடிக்கும் உதவுவது அரசின் கடமையாகும்.
விவசாய வேலைகளிலும், உடல் உழைப்புப் பணிகளில் வாழ்வாதாரம் பெற்றுள்ளவர்களும், சமூகத்தின் அடித்தட்டு மக்களான விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமத் தொழிலாளர்களும், வசிப்பிடம் கூட இல்லாமல் வதைபடுவதை இதயம் உள்ளோர் பரிவுடன் பார்க்க வேண்டும்.
ஆற்றுக் கரையோரம் குடிசை கட்டி, எந்த ஆவணத்திலும் பதிவாகாமல் வாழ்ந்து வரும் விளிம்பு நிலை மக்கள் இந்தப் பேரிடர் காலங்களில் என்ன பாடுபடுவார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
நீர் தேக்கப் பகுதிகளில், நீர் வழிப் பகுதிகளில் ஆக்கிரமிப்புக் கூடாது என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. இப்பகுதி களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு சரிதான். ஆனால். பேரிடர் காலங்களில் குடிசை வீடுகள் நீரோட்டத்தின் திசைவழியை மாற்றுவதில்லை. அந்தப் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன என்பதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.
நில வியாபாரக் கும்பலும், அதிகாரக் செல்வாக்கு பெற்ற வர்களும் நீர் வழிப்பாதையை மறித்தும், ஒடுக்கியும் கட்டியுள்ள வலிமையான கட்டிடங்கள் பெருவெள்ளத்தை திசை மாற்றி, நகரத் தெருக்களை நீர்தேக்கங்களாக மாற்றி இருக்கின்றன. இதனை அணுகும் போது சட்டம் நெளிந்து, வளைத்து, கூனி, குறுகி கும்பிடு போடுகிறதே ஏன்?
உணவு உற்பத்தியின் உயிர்நாடியாக திகழும் விவசாயத் தொழிலாளர்களின் ஆயிரமாயிரம் குடும்பங்கள் “வீடு” என்பதை கனவாக மட்டுமே கண்டு வருகிறார்கள். பல நெருக்கடிகளை தாண்டி, குடிமனை பட்டா பெற்றவர்களுக்கு அரசு முழு மானியத்தில் வீடு கட்டித் தரும் திட்டங்கள் நீண்ட காலமாக அமலாக்கப்படுகின்றன.
கிராமப்புறத் தொகுப்பு வீடுகள் திட்டம், இந்திரா நினைவுக் குடியிருப்பு திட்டம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம், கலைஞர் கான்கிரீட் வீடுகள் திட்டம், முதலமைச்சர் பசுமை வீடுகள் திட்டம், ஒன்றிய - மாநில அரசுகளின் பங்களிப்புத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. கஜாபுயல் பாதிப்புகளை ஆய்வு செய்த அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி டெல்டா மாவட்டத்தில் ஒரு லட்சம் கான்கிரட் வீடுகள் கட்டித் தரப்படும் என ஆரவாரமாக அறிவித்தார். நடந்தது என்ன? உண்மை கசக்கும்.
நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்னர் அரசால் கட்டிக் கொடுக் கப்பட்ட வீடுகள் வயது மூப்பின் காரணமாக பலவீனப் பட்டுவிட்டன. இவைகள் தொடர்மழைக் காலங்களில் இடிந்தும், சரிந்தும், வசிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தொகுப்பு வீடுகளில் வசித்து வரு பவர்கள் வீடு எப்பொழுது விழும், இரவு தூங்கும் நாம் காலை யில் உயிரோடு இருப்போமா? என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தங்களின் பழுத டைந்த வீடுகளை இடித்து புதிய பாதுகாப்பான வீடுகள் கட்டித் தருமாறு வலியுறுத்தி வருகிறார்கள். இதன் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும். பழுதடைந்த வீடுகளை புதுப்பித்து, புது வீடுகள் கட்டித்தரும் புதிய திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
தற்போது இயற்கைப் பேரிடர் தாக்குதலில் பல வீடுகள் இடிந்து விழுந்து குடியிருப்போர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைகளில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. பெய்து வரும் கன மழையால் தொகுப்பு வீடுகள் முழுவதும் தண்ணீர் சொட்டி குடியிருக்க முடியாமல், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒன்றிய - மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம், முற்றிலும் இலவசமாக கட்டிக்கொடுக்கப்பட்டு, 20 ஆண்டுகளை கடந்த வீடுகளை நேரடி ஆய்வு செய்து, அதன் உறுதித்தன்மை கண் டறியப்பட வேண்டும். வசிக்க முடியாத நிலைக்கு பழுதடைந் துள்ள வீடுகளை முழுமையாக இடித்து விட்டு, அங்கு 400 சதுர அடி பரப்பளவில் தற்போதுள்ள திட்ட மதிப்பீட்டை திருத்தி குறைந்தபட்சம் ஐந்து லட்சம் ரூபாயில் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும்.
வெள்ளச் தேசத்தை பார்வையிட்டது போல் தொகுப்பு வீடு களை ஆய்வு செய்ய ஒரு முயற்சி செய்ய வேண்டும். அப்படி ஆய்வு செய்தால் விடியல் ஆட்சியின் வெளிச்சக் கீற்றுகள் பரவும். ஏழை மக்கள் துயரங்கள் குறையும் பாதுகாப்பான வீடு என்ற கனவு நனவாகும்.
தொடர்புக்கு: 9488488339
தோழர் நடேச. தமிழார்வன் படுகொலைக்கு கண்டனம்!
மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
தோழர். நடேச. தமிழார்வன் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம். படுகொலை செய்த சமூக விரோதக் கும்பலை முழுமையாக கைது செய்ய வேண்டும். கொலைக் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டிக்கப்பட வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில், இந் தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடா மங்கலம் ஒன்றியச் செயலாளர் நடேச. தமிழார்வன் நீடாமங்கலம் கடைத் தெருவில் சமூக விரோதக் கும்பலால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக் கைகளிலும், விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களை அவர்களுக்கு பெற்றுத் தருவதிலும் முனைப்புடன் செயல்பட்டு வந்த நடேச. தமிழார்வன், அனைத்துத் தரப்பு மக்களின் நன் மதிப்பை பெற்றுத் திகழ்ந்தவர். இவர் சமூக விரோத சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் பொது மக்களிடம் பதற் றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மிருகத்தனமான, கொடுங் குற்றச் செயலைக் கண்டித்தும், குற்றவாளிகள் அனைவரும் சட்டத் தின் பிடியில் இருந்து தப்பிவிடமால் கடுமையாக தண்டிக்கப்பட வலியு றுத்தியும், காவல் துறை நேர்மையான விசாரணையை உறுதிசெய்யக் கோரியும் தமிழ்நாடு முழுவதும் நவ. 11, 12 தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொண் டது. இவ்வாறு மாநில செயற்குழு சார்பில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளார். இதன் அடிப்ப டையில் தமிழகம் முழுவதும் நவ.11, 12 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தஞ்சாவூர்: தஞ்சை ரயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செய லாளர் முத்து உத்திராபதி தலைமையில் நடைபெற்றது. தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கண் டன உரையாற்றினார். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்டம்:
கோட்டூர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மாவட்டச்செயலாளர் வை.சிவ புண்ணியம், திருத்துறைப் பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரி முத்து, கோட்டூர் ஒன்றிய பெருந் தலைவர் மணிமேகலை முருகேசன், ஒன்றிய செயலாளர்(பொ) எம்.செந்தில் நாதன், வி.தொ.ச. ஒன்றிய செய லாளர் ஜெ.ஜெயராமன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா இலரா, மாதர்சங்க மாவட்ட தலைவர் ஆர்/ சுலக் சனா, ஆர்.உஷா, நல்ல சுகம் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.
மன்னார்குடி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாலா பாண்டியன், நகர செயலாளர் வி.கலைச்செல்வன், இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன் ஆகியோர் தலைமையில் பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய துணை பெருந்தலைவர் வனிதா அருள்ராஜன், என்.மகேந்திரன், எஸ்.பாப்பையன், ஆர்.பூபதி, ஜி.மீனாம் பிகை, எஸ்.பாலமுருகன், சிவ.ரஞ்சித், என்.தனிக்கோடி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப் பூண்டியில் காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.உலகநாதன் எக்ஸ்.எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழுவின் தலை வர் எம்.வையாபுரி, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அ.பாஸ்கர், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பி.வி.சந்திரராமன், ஒன்றிய செயலாளர் கே.பாலு, நகரச் செயலாளர் எம்.முருகேசன், மாவட்டக் குழு, ஒன்றிய, நகரக்குழு தோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
திருவாரூர்: திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.எஸ்.மாசிலாமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் ஒன்றிய செயலாளர் கே.புலிகேசி, நகர துணை செயலாளர் பி.சின்னதம்பி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
கோவை மாவட்டம்: கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார். மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் நா. பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் சி.சிவசாமி, மாவட்ட பொருளாளர் யூ.கே. சுப்பிரமணியன், ஆர்.ஏ.கோவிந்தராஜன், சி. தங்கவேல், பி.மௌனசாமி, ஜே.ஜேம்ஸ், சு. பழனிசாமி, கே.ரவீந்திரன், ஏ. சுப்பிரமணியன், ஏ. அஸ்ரப் அலி, பி. முருகன், எம். நிர்மலா, ஜி.நாராயணசாமி, கே.புருஷோத்தமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம்: விருதுநகர் மாவட்டம் சேத்தூரில் நகர செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் தி.இராமசாமி எக்ஸ் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் பி.லிங்கம், மாவட்ட துணை செயலாளர் எஸ்.பழனிக்குமார், இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் லி.பகத்சிங் ஆகியோர் பேசினர்.
வத்திராயிருப்பில் வட்ட செயலாளர் கோவிந்தன் தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் தி.இராமசாமி எக்ஸ் எம்எல்ஏ, மகாலிங்கம் உள்பட பலர் பேசினர்.
விருதுநகரில் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் எஸ்.பழனிக்குமார், மாநில குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், பாலமுருகன், மாவட்ட பொருளாளர் சமுத்திரம், இடைக்கமிட்டி செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இராஜபாளையத்தில் நகர செயலாளர் வி.இரவி தலைமை வகித்தார். துணை செயலாளர் விஜயன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சத்திரப்பட்டியில் ஒன்றிய செயலாளர் முத்து மாரி தலைமை வகித்தார். துணை செயலாளர் இராமச்சந்திரன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம்: சின்னமனூர் ஒன்றியக்குழு சார்பில் இரா.கதிரப்பன், தேனி நகரக்குழு சார்பில் எம்.எஸ்.பி.ராஜ்குமார், உத்தமபாளையம் ஒன்றியக்குழு சார்பில் வீ.பாண்டி, போடி நகர் ஒன்றியக்குழு சார்பில் எம்.முருகேசன், பெரியகுளம் தாலுகாகுழு சார்பில் இ.பி.காசிவிஸ்வநாதன், தேனி ஒன்றியக்குழு சார்பில் ஏ.கார்மேகம், ஆண்டிபட்டி ஒன்றியக்குழு சார்பில் பா.பிச்சைமணி, கடமலை-மயிலை ஒன்றியக்குழு சார்பில் பி.கே.ஆர்.குணசேகரன், கம்பம் நகர், ஒன்றியக்குழு சார்பில் எம்.வி.கல்யாணசுந்தரம் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஒன்பது மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.பெருமாள், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.திருமலைக்கொழுந்து, வே.பெத்தாட்சி ஆசாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்லன், என்.ரவிமுருகன், வே.பரமேஸ்வரன், இரா.தமிழ் பெருமாள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டு படுகொலைக்கு எதிராக முழக்கமிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம்: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் இர.மோகன்குமார் தலைமை தாங்கினார்.
பி.ஆறுமுகம், ப.ராதாகிருஷ்ணன், அ.சண்முகம், அ.சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் இரா.தங்கராஜ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் அ.கி.அரசு ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.
திருச்சி மாநகர் மாவட்டம்: திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.கே.திராவிடமணி தலைமையில், கிழக்குப் பகுதி செயலாளர் அன்சர்தீன் முன்னி லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் மாநில நிர்வா கக் குழு உறுப்பினர் செல்வராஜ், திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொதுச்செயலாளர் க.சுரேஷ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கே.அண்ணாதுரை, எஸ்.சிவா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.
தஞ்சை மாவட்டம்: அம்மாபேட்டை கடைத்தெருவில் சிபிஐ ஒன்றியச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வி.தொ.ச. மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.பாலு, சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.எம்.குருமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் பி.தாமரைச்செல்வி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கரூர் மாவட்டம்: கரூர் பேருந்து நிலையம் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் எம்.ரத்தினம் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர்கள் கே.சண்முகம், எஸ்.மோகன்குமார், ஒன்றிய, நகர செயலாளர்கள் கே.எஸ்.நேதாஜி, பி.சக்திவேல், எஸ்.வி.தனபால், ஆர்.ராமசாமி, மாவட்ட நிர்வாக குழு கே.சுப்பிரமணி, மாவட்ட குழு ஆர்.ராஜேந்திரன், உடையவர் மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Nov 21 – Nov 27 – Page 2
பாசறை நோக்கி படைகள் திரும்பட்டும்! - 9
பேரன்புமிக்க தோழர்களே!
நமது நாட்டின் எல்லையைப் பாதுகாக்க அணி வகுத்து நிற்கும் நமது இராணுவம் மிகுந்த சுகத்தோடு களம் காணவில்லை.
கொட்டுகிற பணியில், மிகக் கடுமையான குளிரைத் தாங்கிக்கொண்டு, வெப்பம் ஆனாலும், கடுமையான மழையானாலும், குளிரானாலும் எவை குறித்தும் கவலை கொள்ளாது எனது தாய்நாடே எனக்கு முக்கியம் என்று நெஞ்சுறுதியோடு களம் காண்கிறார்கள்.
தாய், தந்தை, மனைவி, மக்கள், வீடு, நிலம், சொத்து என்று எதனைப் பற்றியும் கவலை கொள்ளாது தாய் நாட் டிற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தேசபக்தர்கள்.
சீனா படையெடுத்து வந்த போதும், பாகிஸ்தான் பலமுறை பகை கொண்ட போதும், பங்களாதேஷ் யுத்தம் வந்த போதும், நமது படை வீரர்கள் அதனை எதிர்கொண்டு வீர சாகசம் புரிந்து நமது நாட்டையும், நமது மக்களையும் பாதுகாத் திட்ட மகத்தான வீரர்கள் ஆவர்.
எந்நேரமும் தடித்த உடையுடன், கனத்த பூட்ஸ்களும் அணிந்து தோளில் துப்பாக்கியுடன் வலம் வரும் அர்ப்பணிப்பு மிக்க மிகச்சிறந்த தேசபக்தர்கள்.
எல்லையை காக்க எதிரிகளை களம் கண்டு வெற்றிவாகை சூடிய மகத்தான போர்வீரர்கள்.
எல்லையைக் காத்தோம், மண்ணைக் காத்தோம், தம் தாய்நாட்டின் மக்களைக் காத்தோம், எதிரிநாட்டின் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தோம், வெற்றி, வெற்றி என்று வீர முழக்கமிட்டு, வெற்றி பெருமிதத்துடன் நமது ராணுவ வீரர்கள் பாசறையை நோக்கி திரும்பினர்.
பாசறை என்பது என்ன? இராணுவ முகாம் ஆகும்.
கூடாரம் அமைத்து, அத்தகைய கூடாரத்திற்கு படைகள் தற்போது திரும்பிவிட்டன.
எதற்காக திரும்புகின்றன? ஓய்வு எடுப்பதற்காகவா? உண்டு மகிழ்ந்து இன்புற்று இருக்கவா? மனைவி, மக்களோடு கொஞ்சி குலாவிடவா? இல்லை, இல்லவே இல்லை ஒரு போதும் அவைகளுக்காக அல்ல!
பின் எதற்காக பாசறைக்கு திரும்பினார்கள்?
ஆம் நடந்திட்ட போர், அம்மகத்தான போரில் கிடைத்திட்ட வெற்றி, தோல்விகள் கற்றுத்தந்த அனுபவம் என்ன? போர் என்றால் இருபக்கமும் இழப்பு ஏற்படத் தானே செய்யும்?
யாருக்கு இழப்பு அதிகம்? நமது படைக்கா? அல்லது எதிரிப்படைக்கா?
நமது வியூகத்தில் குறைபாடா? என்பது குறித்த ஆய்வு நடத்திட நாம் பயன்படுத்திட்ட ஆயுதங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றனவா? பழுதுபட்டு உள்ளதா? அவ்வாறு எனில் உடன் அதனை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு மீண்டும் பயன்படுத்திட என்ன செய்ய வேண்டும்?
மேலும் எவ்வளவு ஆயுதங்கள் தேவை? அவை குறித்து பட்டியலிட்டு, உடனடியாக நமது மேலதிகாரிகளுக்கு தெரிவித்து, அவைகளை பெற்றிட நடவடிக்கை எடுத்திடல் வேண்டும்.
தேவையான அளவிற்கு உணவு மற்றும் மருத்துவ கருவிகள், மருந்து மாத்திரைகள் உள்ளனவா? இவை போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து மீண்டும் களத்திற்கு சென்றிட, அனைத்து ஆயத்தங்களையும் மேற்கொள்ளவே இராணுவம் பாசறை நோக்கி வருகின்றது.
தங்களை சரி செய்து கொண்டு மீண்டும் களத்திற்கு சென்று, முன்னைக் காட்டிலும் வேகமாக துடிப்பாற்றல் மிக்க படையாக அணிவகுத்து எல்லையில் நிற்கின்றது.
ஒரு பட்டாலியன் எல்லைக்கு செல்ல, மறு பட்டாலியன் பாசறைக்கு திரும்புகின்றது; தன்னை தயார்படுத்திக் கொள்கின்றது.
ஒன்றா? இரண்டா? இல்லை, இல்லை. பல பட்டாலியன்கள். இவைகள் களம் காணவும், முகாமிற்கு திரும்பவும், மீண்டும் செல்லவும் என தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
நாட்டில் எங்கே இயற்கைச் சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டாலும், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க, அழைத்திட்ட சில மணி நேரங்களில் மின்னல் வேகத்தில் நமது படை அங்கே சென்று, மக்களைப் பாதுகாத்து இடர்பாடுகளை ஆச்சரியப்படத்தக்க விதத்தில் சரி செய்து சாதனை படைத்து வருவதை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.
தோழர்களே இராணுவப் படை வீரர் களுக்கும், நமக்கும் வேறுபாடு உண்டா?
ஒருபோதும் இல்லை& இராணுவம் கண் துஞ்சாது கடமையாற்றி, நாட்டை பாதுகாத்து வருகின்றது, அவ்வாறு நாமும் களத்தில் நிற்கின்றோம்.
அன்னிய நாட்டு படைகள் படை யெடுத்து, நமது நாட்டை அபகரிக்க முயல்வது போன்று, நம்மை ஆட்சி புரியும் ஆட்சியாளர்கள் நமது நாட்டு மக்களை சூறையாடி வருகின்றார்கள்.
நமது விவசாயிகளை, தொழிலாளர் களை, விவசாயத் தொழிலாளர்களை, பெண்களை, நமது எதிர்கால சிற்பிகளான மாணவர்களை, இளைஞர்களை, குழந் தைகளை இரக்கமற்ற முறையில் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றனர்.
மக்கள் பெரும் நம்பிக்கையுடன் வாக் களித்தார்கள்.
படித்து பட்டங்கள் பெற்று படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும், நல்ல ஊதியம் கிடைக்கும், நம்மை வளர்த்து ஆளாக்கி வறுமையிலும், நம்மை படிக்க வைத்து அழகு பார்த்த பெற்றோருக்கு உதவிட முடியும், கொடிய வறுமையிலிருந்து தமது குடும்பத்தை கட்டிக்காக்க முடியும். திருமணம் செய்து மனைவியோடு, குடும் பத்தினருடன் மகிழ்ச்சி பொங்கிட தம்மையும், தமது குடும்பத்தையும் வறுமையின் காரணமாக, குடிசை வீடு காரணமாக, ஏளனம் செய்தோர், எள்ளி நகையாடியோர் வியக்கும் வண்ணம், அரசியலமைப்புச்சட்டம் கூறியிருப்பது போன்று, பிறர் மதிக்கத்தக்க வாழ்க்கையை வாழ்ந்து காட்டிட முடியும் என்ற நம்பிக்கையோடு, வேலை கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்ந்த இளைஞர்களை காந்தம் போல் கவர்ந்திட, ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்றனர்.
நம் நாட்டு பெருமுதலாளிகள் கொள்ளை கொண்ட, கணக்கில் காட்டாத கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார்கள். அத்தகைய கருப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும், ரூபாய் பதினைந்து அல்ல, பதினைந்தாயிரம் அல்ல, பதினைந்து லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைப்போம் என்று கூறினார்கள்.
விவசாயப் பெருங்குடி மக்களின் இன்னல்கள் போக்கிட, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின், அறிக்கையை ஏற்று, உற்பத்தி செலவை கணக்கிட்டு அதனை விட ஐம்பது சதவீதம் கூடுதலாக, விவசாய உற்பத்தி விளை பொருட்களுக்கு விலை நிர்ணயித்து வழங்கப்படும் என்றார்கள்.
மீனவ பெருமக்களுக்கு அண்டை நாடுகளால் ஏற்படும் துன்ப துயரத்தில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்கள்.
நாட்டின் வளர்ச்சி என்ற ஒற்றை குறிக்கோளுடன் அரசு செயல்படுமென்று உறுதியளித்தார்கள்.
இவைபோன்று இன்னும் எண்ணற்ற உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை நா கூசாமல் நாடு முழுவதும் வாரி, வாரி வழங்கிட்ட மோடி மற்றும் அவரது சகாக்கள் கடந்த ஏழாண்டு காலத்தில் சாதித்தது என்ன?
வேலையின்மையை போக்கி வேலை கொடுப்பதற்கு, கொடுத்திட்ட வாக்குறுதிக்கு மாறாக, வேலையில் இருப்போர் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
தொழிலாளி வர்க்கம் நூறாண்டுகால போராட்டத்தால், தியாகத்தால், சிந்திட்ட ரத்தத்தால், பெற்றிட்ட சட்டங்களும், உரிமைகளும் பறிக்கப்பட்டு, 44 சட்டங்கள், நான்காக சுருக்கப்பட்டு விட்டன.
பன்னெடுங்காலமாக மறுக்கப்பட்ட கல்வி தற்போதைய ஆட்சியாளர்களால் விற்பனை சரக்காக்கி மீண்டும் மறுக்கப் படுகின்றது.
மனுதர்ம கல்வி மீண்டும் வஞ்சமாய் திணிக்கப்படுகின்றது.
இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகின்ற வரையில் இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று நாட்டின் முதல் பிரதமர் நேரு அளித்திட்ட வாக்குறுதிக்கு எதிரான முறையில் இன்றைய மோடி அரசு செயல்படுகின்றது.
அனைத்து மொழிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்க மறுத்து, இந்தி, சமஸ்கிருதம் என இரு மொழிகளுக்கு மட்டுமே சலு கைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பதினைந்து லட்சம் ரூபாய் தருவதாக கூறியவர்கள், உயர் மதிப்பு நோட்டு செல்லாது என்று திடீரென்று அறிவித்து ஏழை, எளிய அப்பாவி மக்களின் உயிரையும், இரக்கமற்ற முறையில் பழி வாங்கினார்கள். உயர் பொறுப்பில் இருந்த அரசியல் செல் வாக்கு படைத்தவர்களும், அரசியல் செல்வாக்கு செலுத்திடக் கூடிய நபர்களும், பெரும் தொழிலதிபர்களும், தங்களது கருப்பு பணத்தை சட்டபூர்வமாக வெள்ளை பணமாக மாற்றிக் கொள்ளையடித்திட வழிவகை கண்டார்கள்.
வேளாண் மக்களுக்கு இரட்டிப்பாக பணம் வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள்& இன்று விவசாயப் பெருங் குடி மக்களை முற்றிலுமாக நிலத்தை விட்டு வெளியேற்றிட மூன்று சட்டங்களை நிறைவேற்றி முடித்துவிட்டார்கள்.
மின்சார திருத்தச் சட்டத்தின் மூலமாக தனியாரிடம் ஒப்படைக்க உறுதிபூண்டுள்ளார்கள்.
நம் நாடு அன்னிய நாட்டுக்கு அடிபணியாது, சொந்தக் காலில் தலை நிமிர்ந்து நிற்க உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றன்பின் ஒன்றாக தனியாருக்கு தாரை வார்த்து, அதானியும், அம்பானியும், டாட்டாவும் இன்னபிற பெரும் முதலாளிகளும் கொள்ளை லாபம் ஈட்டி மேலும், மேலும் லாபம் ஈட்டி உலக செல்வந்தர்களாக உருவாகிட சட்டபூர்வமாக வழிவகை கண்டுள்ளார்கள்.
இவை போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை, மக்களுக்கு விரோதமான முறையில் ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகின்றது.
இத்தகைய நடவடிக்கைகளை நாம் கண்டும், காணாமல் இருந்தோமா? எது நடந்தால் நமக்கென்ன என்று பொறுப்பற்ற முறையில் அமைதி காத்தோமா? இவர்களை எதிர்த்தால் நம் மீது வழக்கு போட்டு சிறையில் அடைப்பார்கள், பழி தீர்த்து விடுவார்கள் என்று அஞ்சி நடுங்கி ஓரஞ்சாரமாக ஒளிந்து கொண்டோமா?
நாட்டை இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண் டால் என்ன? நமக்கு ஏன் வெட்டி வம்பு என்று பொறுப்பற்ற முறையில் ஒதுங்கிக் கொண்டோமா?
இல்லை! இல்லை! இல்லை! அஞ்சி நடுங்கும் தொடை நடுங்கிகள் அல்ல நாம்!
என்னதான் செய்தோம்,
அடுத்த வாரம் சந்திப்போம். வணக்கம்.
தோழமைமிக்க
இரா.முத்தரசன்
தத்துவார்த்தம்- 5
எஸ். தோதாத்ரி
பொருள்
மார்க்சியப் பொருள்முதல்வாதத்தை நமது மொழியில் கூறினால் அது உலகாயத வாதம் ஆகும். எனவே பொருள் பற்றிக் காண வேண்டியுள்ளது. பொருள் பற்றி மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் பல இடங்களில் பேசியுள்ளனர்.
இருப்பினும் லெனின் பொருள் பற்றிக் கூறியுள்ளது மிகவும் தெளிவான ஒன்றாகும். லெனினைப் பொறுத்த மட்டிலும், பொருள் என்பது ஒரு தத்துவக் கருத்தமைப்பு. தத்துவவாதிகள் பொருளையும் பொதுமைப் படுத்துவதற்காக உருவாக்கியக் கருத்தாக்கம் இது.
இதன்படி பொருள் என்பது புறவயமானது. அது நமக்கு வெளியே சுதந்திரமாக உள்ளது. நமது புலன்களின் மூலமாக அது பிரதிபலித்து நமது மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறது.
இதன் மூலம் பொருள் பற்றிய ஒரு கருத்தமைப்பை நாம் உருவாக்குகிறோம். இது அறிதலின் பாற்படும். இதன் மூலம் புறவுலகைப் புரிந்து கொள்கிறோம். இதனை வள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்:
“சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு”
பொருளை புலன்கள் மூலம் உணர்பவன் மட்டுமே உலகைப் புரிந்துகொள்ள முடியும் என்று வள்ளுவர் கூறுகிறார். இந்த வரையறை விஞ்ஞான ரீதியானது.
பொருள் என்பது புறத்தே உள்ளது. அது மட்டுமல்ல, அது எல்லா இடங்களிலும் உள்ளது. அதன் இருப்பு என்பது பரந்துபட்டது. இறைவனைக் கூறும் பொழுது “பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூர ணாநந்தமே” என்று கூறுவர். இதனை நாம் பொருளுக்கு பொருத்தி “நீக்கமற நிறைந்திருக்கும் பொருளே” என்று கூறலாம்.
உலகாயதச் சித்தர் என்பவர் கூறுகிறார்.
“பொருளே உலகத்தின் சாகா உயிர்கள் & அந்தப் பொருளின் இயக்கமே வையப் பயிர்கள்”
இந்தப் பொருள் எப்பொழுது தோன்றியது? எப்போது மறையும் என்று யாராலும் கூற முடியாது. அது அதுவாகவேத்தான் இருக் கும். அதன் தாக்கம் காரணமாக பழுத்த ஆன்மிகவாதிகள் கூட அதன் இருப்பை ஏற்றுக் கொள்கின்றனர்.
சைவ சித்தாந்தத்தில் பதி, பசு, பாசம் என்பன பேசப்படு கின்றன. இதில் பாசம் என்பது பொருள் சம்பந்தமானது. ஆனால், அது கீழ் நிலையில்தான் வைக்கப்பட்டுள்ளது. இராமா னுசர் சடப்பொருளை ஆன்மாவின் உடல் என்று கூறுகிறார். சங்கரர் ஒருவர்தான் பொருளை முற்றிலுமாக மறுத்தவர்.
இந்தியத் தத்துவத்தில் சாங்கியம், வைசேடிகம் ஆகியன பொருள் பற்றிப் பேசுகின்றன. பௌத்தமும், சைனமும் பொருளை மறுக்கவில்லை. ஆனால், இவர்கள் உலகாயதவாதிகளை போல் பொருள் மட்டும்தான் உண்டு என்ற நிலைப்பாட்டினை மேற்கொள்ளவில்லை.
பல ஆன்மிகக் கருத்துக்களை கலந்தே இவர்கள் பொருள் பற்றிக் கூறியுள்ளனர். உலகாயதவாதி மட்டும்தான் “பொருளன்றி மற்றொன்றும் இல்லை” என்று கூறுகிறான்.
பொருளானது மாறுகிறது என்பது மார்க்சியம். மாறிக் கொண்டே இருந்தால் பொருள் நிலைத்து இருக்காதா என்ற கேள்வி எழலாம். பொருள் மாறவும் செய்கிறது; நிலைத்தும் இருக்கிறது.
நாம் நாற்காலியில் அமர்ந்திருக்கிறோம் அது மாறுகிறது, அது பூமியின் மேல் இருக்கிறது, பூமியும் மாறுகிறது. இதில் நிலைத்து இருப்பது என்பது சார்பு தன்மை உள்ளது. நாற்காலி பூமியை சார்ந்து நிலைத்து உள்ளது. பூமி சூரியனை சார்ந்து நிலைத்து உள்ளது. இவ்வாறு மாறுதலும், நிலைத்து இருத்தலும் பொருளின் பண்புகளாகும்.
நிலைத்து இருத்தலை மட்டுமே கண்டால் அது இயக்க மறுப்பியல் ஆகிவிடும். மாறுதலை மட்டுமே கண்டால் அது சூன்யவாதம் ஆகும். புத்த மதத்தின் ஒரு பிரிவினர், மாறுதல் மட்டுமே உண்டு வேறு எதுவும் இல்லை என்று கூறினார்கள். இவர்கள் சூன்யவாதிகள் எனப்படுகின்றனர்.
இது சங்கரரது மாய வாதத்திற்கு அடிப்படையாக இருந்தது எனலாம். எனவே கருத்து முதல்வாதிகள் உட்பட பொருளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இல்லை எனலாம். திருமூலர் கூட, “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்று கூறுகிறார்.
பொருள் மாறுகிறது. அது பல வகையாக உள்ளது. பல வடிவங்களில் உள்ளது. கண்ணுக்குத் தெரியாத துகள்களில் இருந்து மிகப்பெரிய கிரகங்கள் வரை பொருள்தாம். இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இவை உயிர்ப்பொருள் (சித்து), சடப் பொருள் என்று இரு பெரும் பிரிவாக உள்ளன. மனிதன் உள்ளிட்ட விலங்குகள், செடிகள் அனைத்தும் உயிர்ப் பொருள்.
மலைகள், மண் போன்றவை சடப்பொருள். ஆனால் சடப்பொருளில் இருந்துதான் உயிர்ப்பொருள் தோன்றுகின்றன. இது விஞ்ஞானம்.
பொருளின் மற்றொரு பண்பு “காலமும் இடமும்” ஆகும். பொருள்கள் இடத்தில் இருக்கின்றன. பொருள் மறையும் பொழுது இடமும் மறைகிறது. பொருள்கள் கால அளவு கொண்டவை. அவை மறையும் பொழுது காலமும் மறைகிறது.
இதனை கருத்துமுதல்வாதிகள் மறுப்பர்; காலம் அலாதியானது என்று கூறுவர். அதேபோல் இடம் எல்லையற்றது என்றும் கூறுவர். அதேபோல் பொருள் இல்லாத பால்வெளி என்றும் கூறுவர். இவை பொருள்முதல் வாதத்திற்கு நேர் எதிரானவை ஆகும்.
தொடர்புக்கு: 98947 83657
Nov 21 to 27 page 4
மக்கள் பட்டினியும் கார்ப்பரேட் நன்கொடையும்
ஜனசக்தி
மலர் 84 இதழ் 33
மக்கள் பட்டினியும் கார்ப்பரேட் நன்கொடையும்
கடும் பட்டினி நிலையில் உள்ள மக்களை காப்பாற்றுவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தியத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ். போப்பண்ணா, ஹீரா ஹோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, நவம்பர் 16 ஆம் தேதி வழக்கை விசாரித்தது.
“பட்டினி போக்குவது பற்றி ஒருங்கிணைந்த கொள்கையை உரு வாக்குவதாக நீங்கள் வாக்களித்தீர்கள். ஆனால் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் அது பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. அதிலும் ஒரு கீழ்நிலை அதிகாரி இந்த பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறார். கர்வம் தலைக்கேறிய அரசு செயலாளர், உச்சநீதிமன்றத்துக்கு துளியும் மதிப்பளிக்கவில்லை. இந்தப் பத்திரத்தை நாங்கள் ஏன் வீசி எறியக் கூடாது” என்று கோபமாக நீதிமன்றம் கேட்டுள்ளது.
“நாட்டில் 6.63 லட்சம் கிராமங்களும் 2.5 லட்சம் பஞ்சாயத்துகளும் உள்ளன. இங்கு மூன்று அடுக்கு அரசு - ஒன்றிய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அரசு- உள்ளது. ஒரே திட்டத்தை அமலாக்கினால் அது அரசியல் சாசனத்தின் விதிகளை மீறியதாகிவிடும்“ என்று அரசின் சார்பில், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன் றத்தில் பதில் அளித்துள்ளார்.
வேறுபட்ட தன்மைகள் கொண்ட பல மாநிலங்களை உள்ளடக்கியது இந்தியா. சமைத்த உணவை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்ற ஒரு திட்டத்தை மாநிலங்களின் மேல் திணிக்க முடியாது என்று அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் மாத்வி திவான் வாதிட்டிருக்கிறார்.
ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே தேர்தல், ஒரே அரசு என்றெல்லாம் தினமும் முழங்கி, மாநிலங்களிடமிருந்து, வரி, கல்வி, விவசாயம், கூட்டுறவு உள்ளிட்ட பல உரிமைகளை மோடி அரசு பறித்துக் கொண்டே இருக்கிறது.
மக்களை காப்பாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டதும், இந்தியா வெவ்வேறு தன்மைகளை, வெவ்வேறு மொழிகள், பண்பாடுகளைக் கொண்ட நாடு என்று அரசுக்கு அபூர்வ ஞானம் திடீரெனப் பிறந்து விட்டது.
“மக்களின் பசியைப் போக்குவதற்கு அரசியல் சாசனமும் அல்லது எந்த ஒரு சட்டமும் எதிராக நிற்காது; தடுக்காது. மூன்று வாரங் களுக்குள் மாநிலங்களைக் கூட்டி உரிய திட்டம் வகுக்க வேண்டும்“ என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
“பல்வேறு மாநிலங்கள், பொதுச் சமையலறை மூலம் மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றன. இனிமேல் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கிற, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு மட்டுமே உணவைத் தரவேண்டும் தரவேண்டும் என திட்டங்களை மாற்றி யமைக்கச் சொல்கிறோம்“ என்று நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட் டுள்ளது!
நன்மை செய்வதாகவே கூறி தீமைகள் புரிவதில் கை தேர்ந்தது அல்லவா மோடி அரசு! அதனால், தமிழக அரசு நடத்தும் அம்மா உண வகங்களில், இனிமேல் ஆதார் அட்டையும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வருமானம் உள்ளவர் என்ற சான்றிதழும் கொண்டு வந்தால்தான் உணவு தரவேண்டும் என்று கூட மோடி அரசு உத்தரவிட்டு விடலாம்!
முன்பு தேர்தலுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை அளிப்பவர்கள் பெயரை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்றும், ஒரு நிறுவனம் தனது வருவாயில் 10 சதத்திற்கு மேலாக தேர் தல் நன்கொடைகள் வழங்கக்கூடாது என்றும் விதி இருந்தது. தேர்தல் நன்கொடைகளை முறைப்படுத்தப் போவதாக மோடி அரசு, ‘தேர்தல் பத்திரம்‘ முறையைக் கொண்டுவந்தது. இதன்படி யார், எவ்வளவு நன் கொடை தந்தார் என்பது குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை. என்ன அருமையான கட்டுப்பாடு!
2019-& 20 ஆண்டுகளில் எங்கிருந்து வசூலிக்கப்பட்டது என்ற விவரம் இல்லாமல் தேசியக் கட்சிகள், பெற்றுள்ள வருவாய் ரூ. 3377.41 கோடிகளாகும். இதில் பிஜேபிக்கு மட்டுமே 78%க்கும் அதிகமாக, அதாவது ரூ.2642.63 கோடி வந்துள்ளது. அடுத்து காங் கிரஸ் 526 கோடி ரூபாய் (15.57%) வந்துள்ளது. இரண்டும் சேர்ந்து 94% ஆகும்.
தேர்தல் நன்கொடைக்கும், அதன் பின்பு தேர்வுபெறும் அரசு வகுக் கும் கொள்கைகளுக்கும் நெருங்கிய உறவு உள்ளது. இந்தியாவில் மக் கள் மீது போடப்படும் வரி அதிகரிக்கிறது. 32 ரூபாய் பெட்ரோலுக்கு 58 ரூபாய் வரி!
ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு விதிக்கப்பட்ட வரி 30% இருந்து 22%ஆக குறைக்கப்பட்டு விட்டது.
பெரும் பணக்காரர்கள் அரசியல் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டுமானால் கார்ப்பரேட் தேர்தல் நன்கொடைகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். அப்போது தான் ஜனநாயகமும் காப்பாற்றப்படும், பட்டினி கிடக்க வேண்டிய அவல நிலையும் மக்களுக்கு வராது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் மீது இப்போது தாக்குதல்
நியூஏஜ்
நவ - 14 - நவ.20
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் மீது இப்போது தாக்குதல்
நாட்டின் முழு உற்பத்தித்துறையையும் பொருளாதார நெருக்கடி பாதித்தபோது பட்டினியில் தள்ளப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணமளிப்பதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்ட திட்டம் முதன்மையான திட்டமாக விளங்கியது.
தேசியப் புள்ளிவிவரத் துறை தரவுகளின்படி தொற்றுக்கு முன்பே, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களில் குறைந்தது 57 சதவீதத்தினர் கடனில் இருந்தனர். தொற்றின்போதோ ஆலைகளின் கதவடைப்புகளோடு அதிகரித்த வேலையின்மை, தொற்றின் இரண்டாவது அலை மற்றும் விலைவாசி ஏற்றத்தின் கடும் உயர்வால் இளைஞர்கள் மிக மோசமாக வேலைகளை இழந்தார்கள். 2016-&17ல் 15 சதவீதத்திற்குச் சற்றுக் கூடுதலாக இருந்த வேலையின்மை, 2021ல் 32.03 சதவீதமாக அதிகரித்தது. வேலைதேடி துன்பப்படுபவர்களைக் கட்டாய உழைப்பில் தள்ளி கூலியையும் தாமதித்து மேலும் தொல்லைபட்டனர்.
பணி நேரம் நீட்டிக்கப்பட்ட நிர்பந்தம் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தைவிட கூலியும் குறைவு. இதன் விளைவு உலகப் பட்டினிக் குறியீடு பட்டியலில் இடம்பெற்ற 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் தள்ளப்பட்ட அவலம். இதன் உண்மையான பொருள், இந்திய மக்களின் உடல்நலன் சார்ந்த சர்வதேச அளவீடுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிற காரணிகளிலும் நிலைமை மோசமாகியுள்ளது என்பதே.
குழந்தைகள் பொதுவாக வயதிற்கேற்ற வளர்ச்சி பெறாமல் போவது மற்றும் வளர்ச்சி கட்டத்தில் நோய்கள் பாதிப்பின் விகிதமும் அதிகரித்துள்ளது. நிலைமை மோசமாக உள்ள 31 நாடுகளில் இந்தியாவும் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு, எடை குறைவு, ஐந்து வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளின் வயதிற்கேற்ற வளர்ச்சியின்மை போன்றவை அதிகமாக உள்ளன. இதனால் 2015&16 ஆண்டிலிருந்தே ஏழைகளின் வாழ்க்கைத்தரம் தொடர்ச்சியாகச் சரிவடைந்ததால், பெருந்தொற்று பாதித்தபோது நம்நாடு அதற்கு எளிதாக பலியானது.
தற்போது கிராமப்புற வேலைவாய்ப்பு வழங்குவதிலும் இத்திட்டம் நிதிப் பற்றாக்குறையில் உள்ளது. நடப்பு நிதியாண்டில் பாதிதான் கடந்துள்ளது; துணை பட்ஜெட் ஒதுக்கீடு அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கிய பிறகுதான் நிதியை விடுவிக்கும். மகாத்மா காந்தி ஊரகத் திட்ட நிதியில் இருக்கும் நிகர இருப்புத் தொகை தற்போது எதிர்மறையில் ரூ8,686 கோடி பற்றாக்குறையில் உள்ளது; அவ்வாறெனில், அந்த உறுதி அளிப்புத் திட்டத்தில் பாடுபட்டு உழைத்த கிராமப்புறத் தொழிலாளர்களுக்குப் பட்டுவாடா செய்ய வேண்டிய ஊதியம், பட்டுவாடா செய்யப்படாமல் தாமதிக்கப்படுவது மட்டுமில்லாமல் பொருட்கள் வழங்கியதற்கான தொகையும் நிலுவையில் நிற்கிறது என்பதே அதன் பொருள். இந்த முட்டுக்கட்டை நிலைமையை மாநிலங்கள் தங்கள் சொந்த கஜானாவைத் திறந்தால் மட்டுமே தீர்க்க முடியும் என்பது ஒன்றிய அரசின் நிலைபாடு. இது பொறுப்புக்களைத் தட்டிக் கழித்து அடுத்தவர்களைக் கை காட்டுவதுதான்.
கடுமையான பொருளாதார நெருக்கடியின்போது, கோரிய நிதி குறித்து ஒன்றிய அரசு, இது “மாநிலங்கள் செயற்கையாக ஏற்படுத்தியது” என்றுகூட முத்திரை குத்தியது.
மக்கள் தொடர்ந்து சந்தையில் பொருட்களை வாங்கும் சக்தியுடன் இருப்பதை உறுதி செய்யவே மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டம் பிறந்தது. சந்தையில் பொருட்களை வாங்குவதற்குத் தேவையான வருவாயைக் கிராமப்புறக் குடும்பங்கள் நெருக்கடி காலங்களில் பெறுவதற்காக, தொழில் திறன் தேவைப்படாத 100 பணி நாட்கள் வேலைகளை வழங்க அந்தத் திட்டம் சட்டப்படி உறுதியளித்தது. இருப்பினும் ஊரடங்கு நாட்களில் தேசிய ஊரகத் திட்டத்திற்கு உச்சபட்சமாக பட்ஜெட்டில் 1.11 லட்சம் கோடி அனுமதிக்கப்பட்டதாகப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அது 11 கோடி பாட்டாளிகளுக்கு வேலை வழங்கி, வாழ்விற்கு ஜீவனை அளித்த செயல்.
ஆனால் 2021 -&-22 காலத்திற்கான இத்திட்டத்திற்குச் சுமார் வெறும் 73,000 கோடி மட்டுமே பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் ஊரடங்கு முடிவுக்கு வரும்போது நிதி நெருக்கடி இருக்குமானால் அப்போது கூடுதல் துணை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யலாம் என ஒன்றிய அரசு கூறுகிறது. அக்டோபர் 29ம் தேதியில் பட்டுவாடா செய்ய வேண்டிய பாக்கித் தொகை உட்பட மொத்த செலவு இத்திட்டத்தில் ஏற்கனவே ரூ79,810 கோடியை எட்டியுள்ளது - அதாவது திட்டம் அபாய கட்டத்தை அடைந்துள்ளது என்பதற்கான எச்சரிக்கை. இத்திட்டத்தில் நிகர இருப்பு ஏற்கனவே எதிர்மறையாக பற்றாக்குறையில் செல்லும் 21 மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் பற்றாக்குறை மிக மோசமாக உள்ளது - அதாவது உழைத்து பணி முடித்தவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது உள்ளது.
ஆனால் நடைமுறை எதார்த்தத்தில் 13 சதவீதமான குடும்பங்கள் இன்னும் வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறார்கள்; பணி தர வேண்டுகோள் விடுத்தும், அவர்களைத் தவிக்கவிட்டு அவர்கள் பெயர்களைப் பதியக்கூட இல்லை. இந்த விவரமும்கூட பகுதியளவே சரியானது. ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால், மாநிலங்கள் நிதி வருவதற்கு ஏற்பவே பணியிடங்களை ஏற்படுத்துகின்றன; ஆனால் ஒன்றிய அரசோ அதனது பட்ஜெட் ஒதுக்கீடுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதியளிப்பு சட்டத்தின்படியான இத்திட்டத்திற்கான மதிப்பீட்டு (எஸ்டிமேட்) தொகையை வெட்டி, 2020--&2021ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடு அறிக்கைகளில் நிதி ஒதுக்கீடு 34 சதவீதத்திற்கும் மேல் குறைவாக அளித்துள்ளது.
கிராமப்புற மக்கள் மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சியில் அரசமைப்பு சட்டத்தின்படியான மகாத்மா காந்தி பெயரில் அமைந்த திட்டமும்கூட பட்டினியில் தவிக்க விடப்பட்டுள்ளது.
--தமிழில்: நீலகண்டன்
Nov 21 – Nov 27 pag 5
பாதுகாப்பான வீடு... கனவு நனவாகுமா?
- அ.பாஸ்கர்
அண்மையில் தொடங்கிய வட கிழக்கு பருவமழை தீவிரமாகி, தொடர் கனமழையாக, வழக்கத்தை விட அதிகமாக கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களிலும், காவிரிப் பாசனப் பகுதிகளிலும் இயல்பான வாழ்க்கை நிலை பாதிக்கப் பட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக் களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், பேரி டர் பாதிப்புகளில் இருந்து மக்களை மீட் கும் பணிகளிலும், பாதிப்புகளை சீர மைத்து, ஒரு நிரந் தத் தீர்வுகாணும் முனைப் போடு மாண்புமிகு முதலமைச்சரும், அமைச்சர்களும், உயர் அதிகாரிகளுடன் களம் இறங்கி மக்களுக்கு நிவாரணம் வழங்கி அரவணைத்து ஆறுதல் கூறிவருவது மறுவாழ்வுக்கு நம்பிக்கையூட்டுகிறது.
காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களில் கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு, ஆய்வு செய்வதற்கும், அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் மூத்த அமைச்சர் தலைமையில் குழு அமைத்திருப்பது சிறப்பானதாகும்.
சென்னையிலிருந்து கன்னியாகுமாரி வரை பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலைவழிப் பயணம் செய்து, நேரில் பார்வையிட்டது மக்களிடம் எதிர்ப்பார்பையும், நம்பிக்கையினையும் அதிகப்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் ஏற்படும் இயற்கை பேரிடர்களில் காவிரி டெல்டா பகுதி மக்களின் வாழ்க்கையை பாதிக்கின்ற போது, மாநில அரசு வெள்ளச் சேதத்தை பார்வையிடவும், மதிப்பிடவும் அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் கொண்ட குழுவை அனுப்புவதும், குழு வயல்களின் வரப்பில் நின்று, நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிடுவதும், விதைத்த பயிர் வேர்கள் அழுகிய நிலையில் இருப்பதை விவசாயிகள் அதிகாரிகளிடம் காட்டி, கண்ணீர் மல்கக் கோரிக்கை வைப்பதும் ஒரு அரசு முறை நடவடிக்கையாகியுள்ளது.
சாகுபடி இழப்பு, சாலைகள், பாலங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதாரம் என ஒன்றுவிடாமல் ஆய்வு செய்வதும், தனது பரிந்துரையை அரசுக்கு கொடுப்பதும் வழக்கமான ஒன்றுதான்.
இயற்கை பேரிடரை மாநில அரசு மட்டுமே எதிர்கொள்ள இயலாது என்பதை யாரும் மறுக்க இயலாது. அதுவும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிவிதிப்பு முறைகளில் மாநில அரசின் நிதி ஆதாரத்தை ஒன்றிய அரசு பறித்துக் கொண்ட நிலையில், பேரிடர் நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசிடம் முறையிடுவது தவிர்க்க முடியாது.
மாநில அமைச்சர்கள், அனுபவ முதிர்ச்சி பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் வழங்கும் அறிக்கையை அப்படியே ஏற்பதில்லை. குறைந்தபட்சம் அவர்களோடு விவாதித்து தெளிவு பெற்று, நிதியொதுக்க ஒன்றிய அரசு முன்வருவதில்லை. ஒன்றிய அரசின் அதிகாரத்தை வழிநடத்தும், ஆளுங்கட்சியின் கொள்கைகளை விமர்சிக்கும், எதிர்க்கும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்றால் பாராமுகத்துடன் நடந்து கொள் வதும், வஞ்சித்து வதைப்பதும் வாடிக்கையாகி விட்டது.
இதனை மூடி மறைக்க பல்வேறு துறை உயர் அதிகாரிகளைக் கொண்ட “மத்திய குழு” வந்து சென்றுள்ளது. நமது கவலைகள் தீரும் நிவாரணம் கிடைக்கும் என மக்கள் காத்திருப்பார்கள். ஒன்றிய அரசிடம் பேரிடர் நிவாரண நிதி கேட்ட அளவில் 10% கூட வழங்குவது இல்லை என்பதும் அனுபவ உண்மையாகும்.
வழக்கம் போல் இவ்வாண்டும் அமைந்துவிடக் கூடாது என விவசாயிகள் கவலையோடு காத்திருக்கிறார்கள். இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களில் விவசாய தொழிலாளர்களும், கிராமத் தொழிலாளர்களும் எப்படி இருக்கிறார்கள் என்பது பற்றி சிந்திக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
பருவமழைக் காலங்களில் தொடர்ந்து வேலையை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு, மீன்பிடித் தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்குவது போல் ஓரிரு மாதங்கள் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது. இது ஏன் அரசின் கவனத்தைத் தொடவில்லை.?
ஆட்சியாளர்கள் எவரும் நம்மைப் பற்றி கண்டு கொள்வதோ, கவலை கொள்வதோ இல்லை என்ற ஏமாற்றம் சமுகத்தின் அடித்தட்டு மக்களான விவசாயத் தொழிலாளர்களிடம் நிலவி வருவதை அரசு உணர வேண்டும்.
தொடர் கனமழை காரணமாக
காவிரிப் பாசன மாவட்டங்களில் விளைந்து நின்ற குறுவை நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமலும் , நடவு செய்து 15 நாட்கள் கூட ஆகாத தாளடி பயிர்களும், சம்பா பயிர்களும் மழைநீரில் மூழ்கியுள்ளன ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடவு செய்த பயிர்களை இழந்து, வயல்களை சீரமைக்கும் வேதனைக்கு
ஆளாகி நிற்கும் விவசாயிகளுக்கு
நிவாரணம் வழங்குவதுடன் விவசாயத் தொழிலாளர் வாழ்க்கை நெருக்கடிக்கும் உதவுவது அரசின் கடமையாகும்.
விவசாய வேலைகளிலும், உடல் உழைப்புப் பணிகளில் வாழ்வாதாரம் பெற்றுள்ளவர்களும், சமூகத்தின் அடித்தட்டு மக்களான விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமத் தொழிலாளர்களும், வசிப்பிடம் கூட இல்லாமல் வதைபடுவதை இதயம் உள்ளோர் பரிவுடன் பார்க்க வேண்டும்.
ஆற்றுக் கரையோரம் குடிசை கட்டி, எந்த ஆவணத்திலும் பதிவாகாமல் வாழ்ந்து வரும் விளிம்பு நிலை மக்கள் இந்தப் பேரிடர் காலங்களில் என்ன பாடுபடுவார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
நீர் தேக்கப் பகுதிகளில், நீர் வழிப் பகுதிகளில் ஆக்கிரமிப்புக் கூடாது என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. இப்பகுதி களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு சரிதான். ஆனால். பேரிடர் காலங்களில் குடிசை வீடுகள் நீரோட்டத்தின் திசைவழியை மாற்றுவதில்லை. அந்தப் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன என்பதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.
நில வியாபாரக் கும்பலும், அதிகாரக் செல்வாக்கு பெற்ற வர்களும் நீர் வழிப்பாதையை மறித்தும், ஒடுக்கியும் கட்டியுள்ள வலிமையான கட்டிடங்கள் பெருவெள்ளத்தை திசை மாற்றி, நகரத் தெருக்களை நீர்தேக்கங்களாக மாற்றி இருக்கின்றன. இதனை அணுகும் போது சட்டம் நெளிந்து, வளைத்து, கூனி, குறுகி கும்பிடு போடுகிறதே ஏன்?
உணவு உற்பத்தியின் உயிர்நாடியாக திகழும் விவசாயத் தொழிலாளர்களின் ஆயிரமாயிரம் குடும்பங்கள் “வீடு” என்பதை கனவாக மட்டுமே கண்டு வருகிறார்கள். பல நெருக்கடிகளை தாண்டி, குடிமனை பட்டா பெற்றவர்களுக்கு அரசு முழு மானியத்தில் வீடு கட்டித் தரும் திட்டங்கள் நீண்ட காலமாக அமலாக்கப்படுகின்றன.
கிராமப்புறத் தொகுப்பு வீடுகள் திட்டம், இந்திரா நினைவுக் குடியிருப்பு திட்டம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம், கலைஞர் கான்கிரீட் வீடுகள் திட்டம், முதலமைச்சர் பசுமை வீடுகள் திட்டம், ஒன்றிய - மாநில அரசுகளின் பங்களிப்புத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. கஜாபுயல் பாதிப்புகளை ஆய்வு செய்த அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி டெல்டா மாவட்டத்தில் ஒரு லட்சம் கான்கிரட் வீடுகள் கட்டித் தரப்படும் என ஆரவாரமாக அறிவித்தார். நடந்தது என்ன? உண்மை கசக்கும்.
நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்னர் அரசால் கட்டிக் கொடுக் கப்பட்ட வீடுகள் வயது மூப்பின் காரணமாக பலவீனப் பட்டுவிட்டன. இவைகள் தொடர்மழைக் காலங்களில் இடிந்தும், சரிந்தும், வசிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தொகுப்பு வீடுகளில் வசித்து வரு பவர்கள் வீடு எப்பொழுது விழும், இரவு தூங்கும் நாம் காலை யில் உயிரோடு இருப்போமா? என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தங்களின் பழுத டைந்த வீடுகளை இடித்து புதிய பாதுகாப்பான வீடுகள் கட்டித் தருமாறு வலியுறுத்தி வருகிறார்கள். இதன் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும். பழுதடைந்த வீடுகளை புதுப்பித்து, புது வீடுகள் கட்டித்தரும் புதிய திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
தற்போது இயற்கைப் பேரிடர் தாக்குதலில் பல வீடுகள் இடிந்து விழுந்து குடியிருப்போர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைகளில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. பெய்து வரும் கன மழையால் தொகுப்பு வீடுகள் முழுவதும் தண்ணீர் சொட்டி குடியிருக்க முடியாமல், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஒன்றிய - மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம், முற்றிலும் இலவசமாக கட்டிக்கொடுக்கப்பட்டு, 20 ஆண்டுகளை கடந்த வீடுகளை நேரடி ஆய்வு செய்து, அதன் உறுதித்தன்மை கண் டறியப்பட வேண்டும். வசிக்க முடியாத நிலைக்கு பழுதடைந் துள்ள வீடுகளை முழுமையாக இடித்து விட்டு, அங்கு 400 சதுர அடி பரப்பளவில் தற்போதுள்ள திட்ட மதிப்பீட்டை திருத்தி குறைந்தபட்சம் ஐந்து லட்சம் ரூபாயில் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும்.
வெள்ளச் தேசத்தை பார்வையிட்டது போல் தொகுப்பு வீடு களை ஆய்வு செய்ய ஒரு முயற்சி செய்ய வேண்டும். அப்படி ஆய்வு செய்தால் விடியல் ஆட்சியின் வெளிச்சக் கீற்றுகள் பரவும். ஏழை மக்கள் துயரங்கள் குறையும் பாதுகாப்பான வீடு என்ற கனவு நனவாகும்.
தொடர்புக்கு: 9488488339
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குக!
பாபநாசம் அருகே அம்மாபேட்டை ஒன்றியத்தில் பல்லவராயன்பேட்டை, புத்தூர், உக்கடை, வடபாதி, அருமலை கோட்டை, கள்ளிமேடு, அன்னப்பன்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி குளம் போல் காட்சி அளிக்கின்றது. இதனால் மிகப்பெரிய பாதிப்பை விவசாயிகள் சந்தித்துள்ளனர். இந்த இடங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் ஆர் .செந்தில்குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் சாமு .தர்மராஜ், ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.திருநாவுக்கரசு, எஸ்.உத்திராபதி, எம் ராஜமாணிக்கம், டி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
வடிகால் வாய்க்கால்கள் முழுவதும் தூர்ந்து போனதால் தண்ணீர் வடிவதில் சிரமம் உள்ள நிலையில் பயிர்கள் மூழ்கியுள்ளன. பயிர் இன்சூரன்ஸ் நவம்பர் 15 க்குள் விவசாயிகள் கட்டவேண்டும் என்ற நிபந்தனைகளை தளர்த்தி, நவம்பர் 30 வரை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பாதிப்பிற்காளான பகுதிகளை வருவாய்த் துறை, வேளாண் துறை ஆய்வுச் செய்து உரிய இழப்பீடு வழங்கவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
Nov 21 – Nov 27 page 6
முரண்பாடுகள் தீரும் வரை தொடரும் துயரம்...
நா. பெரியசாமி
காட்ச்ரோலியில் 26 நக்சல்கள் கொல்லப்பட்டனர். இது பத்திரிகை செய்தியின் தலைப்பு.. இந்தச் செய்தியின் அருகில் அசாம் ரைஃபிள் அதிகாரியும், அவரது குடும்பத்தினரும் மணிப்பூரில் பதுங்கியிருந்து தாக்கப்பட்டதில் கொல்லப்பட்டனர்.
இந்த இரு செய்திகளும் எமது சிந்தனையில் ஏற்படுத்திய தாக்கம் வெகுநேரம் நீடித்தது.
கட்ச்ரோலி சம்பவத்தை விபரிக்கும். அந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அன்கிட் கோயல் “ கட்ச் ரோலி மாவட் டம், கோரச்சி அருகில் உள்ள மர்தின்தொலா (விணீக்ஷீபீவீஸீtஷீறீணீ) வனப் பகுதியில் ஏ சி 60 காவல் கமாண்டோ குழுவின் தேடுதல் வேட்டை (?) யின் போது, ஏற்பட்ட (போலி) மோதலில் 26 நக்ஸல்கள் கொல்லப்பட்டனர்” என்று கூறுகிறார்.
இந்தப் பெரும் மோதலில் (?) மூன்று காவல் அலுவலர்கள் காயமடைந்து, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, உயிராபத்து இல்லை என்ற நிலையில் (!) சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்த 26 நக்சல்களின் உடல்களை காவல்துறையினர் கண்டறிந்து (!) கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் செய்தியை நாளிதழ் விவரிக்கும் போது 2018 மார்ச் மாதத்தில் சுக்மா(சத்தீஸ்கர்) மாவட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர்.
2019 மே மாதத்தில் கட்ச்ரோலி மாவட்டத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் 15 காவலர்களும், ஒரு ஓட்டுநரும் கொல்லப்பட்டனர்.
2020 மார்ச் மாதத்தில் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட் டத்தில் நக்சல்களுடன் நடந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் 17 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தப் பட்டியலை படிக்கும் போது தொடர் கொலை நடவடிக் கைகளில் ஈடுபட்டு வரும் நக்சல்கள் கொல்லப்பட்டது நியாயம் தானே. என்ற ஒப்புதல் பெறும் நோக்கம் கொண்டிருக்கிறது.
எந்தவொரு உயிரையும் பறிக்க. யாரொருவருக்கும் உரிமையில்லை. அது நாகரிக வளர்ச்சியின் அடையாளமும் அல்ல என்பதே அனைவரின் உறுதியான கருத்து நிலை.
போலி மோதலில் (ணிஸீநீஷீuஸீtமீக்ஷீ) கொல்லப்பட்ட அனைவரும் மனிதர்களே. அவர் நக்சல் என்ற பெயரில் வாழ்ந்தவர் ஆயி னும், அவர்களை வேட்டையாடும் பாதுகாப்புப் படைகளில் பணிபுரியும் காவலர்கள். அதிகாரிகள் யாராயினும் சரி. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள்தான்.
பிறந்த குழந்தைகள் வாழும் நிலையில், வளரும் சூழலில் அவரவர் மேற்கொள்ளும் பயண வழி மாறுபடுகிறது. முரண்படுகிறது. இந்த முரண்பாடும், மாறுபாடுகளும் சமூக அமைப்பில் மனிதாபிமானம் இல்லாத வர்க்க சார்பு இருக்கும் வரை நீடித்துக் கொண்டே இருக்கும்.
இந்தியாவில் பிறந்த ஒரு குடிமகன்
தனது 4 உறுப்பினர்கள் கொண்ட குடும்பம் வசிக்க 27 அடுக்கு மாடி வீடு கட்டுவதும், பிறந்த நாட்டில் நோய்த்தொற்று பரவல் அச்சுறுத்தினால் அயல்நாட்டில் (அமெரிக்கால்) மில்லியன் டாலர் கணக்கில் புதிய மாளிகை வாங்கி அதனை மேலும் புதுப்பித்து. பாதுகாப்பாக
வாழ முடியும் என்பதும்...
வழிவழியாக வாழ்க்கையின் ஆதாரமாக இருந்து வரும் நிலத்தை, வனத்தை விட்டு, அரசின் ஆயுதப்படைகள் உதவியோடு பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், வாழும் உரிமைக்காக, போராட வேண்டிய நிராயுதபாணிகளின் நிர்பந்த நிலையும் ஒன்றாகிவிட முடியுமா?
நமது நாட்டில் மக்களின் வாழ்க்கை நிலை வறுமைக் கோட்டை அடிப்படையாகக் கொண்டு கீழே, மேலே என வரை யறுக்கப்படுகிறது. இந்த வறுமைக் கோடு நிர்ணயிப்பதில் கற் றறிந்த பொருளாதார நிபுணர்களே ஒரு இணக்கமான முடிவு காண முடியவில்லை. ஏதாவது ‘ ஒன்றை அடிப்படையாகக் கொள்வது அவரவர் விருப்பம் சார்ந்து அமைகிறது. அது இருக்கட்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட் டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் செய்து முடித்த வேலைக்கான ஊதியத்தை பெறுவதற்கு போராட வேண்டிய அவல நிலை இருக்கும் போது, ஒருவர் நானொன்றுக்கு 1000 கோடி ரூபாயுக்கும் மேலாக வருமானம் பெறுவதை பார்த்தால் ஆதங்கமும், ஆத்திரமும் ஏற்படுவது இயல்புதானே.
வீடு, ஊதியம் என்பது பெரும் எண்ணிக்கையினர் கோரிக் கையாக சமூகத்தில் முன்வரும் போது, மனிதர்கள் புறக் கணிக்கப்படுவது போல் சில பகுதிகள் புறக்கணிக்கப்படும் போது அது, அந்தப் பகுதி மக்களின் கூட்டு உரிமையாகிறது. இந்த உரிமைப் போராட்டத்திற்கான அமைப்புகள் உருவா கின்றன. சில அமைப்புகள் புறநிலை வளர்ச்சி பற்றி எந்த மதிப்பீடும் இல்லாமல் அக உணர்வு கொந்தளிப்பில் இருந்து வழிதவறிப் பயணிக்கின்றன. இவைகள் ஜனநாயக இயக் கத்துக்கு நெருக்கடியும், ஆளும் வர்க்கத்துக்கு வாய்ப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன.
1950 ஜனவரி 26 நமக்கு நாமே நம்மால் ஏற்றுக் கொள்ளப்பட் டிருக்கும் அரசியலமைப்புச் சட்டம் சமூக உறவுகளுக்கும். தனிநபர் உரிமைகளுக்கும், நீடித்த அமைதிக்கும் உறுதிய ளிக்கிறது. வாக்களித்து நாடாளுமன்றத்தையும், சட்டமன்றங் களையும் அமைத்துக் கொள்ளும் அரசியல் உரிமை குடி மக்களுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது இதன் அடிப் படையில் சமூகத் தளத்திலும், பொருளாதார வாழ்விலும் நிலவியும், வளர்ந்தும் வரும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் கடமைப் பொறுப்பு ஆட்சிப் பொறுப்பேற்பவர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தினசரி ரூ 1000 ம் கோடிக்கும் மேல் வருமானம் பெறுவதற்கும், பல மாடிகள் கொண்ட வீடுகள் வேண்டும் என்று கேட்பதாக குதர்க்கம் செய்யக் கூடாது. ஒவ்வொரு மனிதரும் சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் வாழும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான முறையில் பொழுது விடிந்து பொழுது போனால் தவறாது வேலை வழங்க வேண்டும். செய்யும் வேலைக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும். கல்வியும். மருத் துவமும் இலவசமாகக் கிடைக்க வேண்டும். உழுவடை நிலம் பறிபோகமல் பாதுகாக்கப்பட வேண்டும். விவசாயிகள் விரோத சட்டங்கள் திரும்பப் பெற வேண்டும். அவரவர். நம்பிக்கைக்கு தக்கபடி வழிபடும் உரிமையும், பகுத்தறிவுப் பரப்புரை செய்யும் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். இன்னும் இது போன்ற கோரிக்கைகளை திறந்த மனதோடு அணுகி தீர்வு காணும் மதச்சார்பற்ற ஜனநாயக அரசு அமைய வேண்டும்.
அதுவரையிலும் மரணித்தவர்களுக்கு நாம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பது,
ஒரு சம்பிரதாயமாகவே தொடரும்...
தொடர்புக்கு: 9443118544
திருத்துறைப்பூண்டியில் கனமழை: பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் இரா.முத்தரசன்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தற்போது பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஆறுகள், வாய்க்கால்கள் உடைப்பு ஏற்பட்டு வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிச்சன் கோட்டகம், தென்பாதி, மேலமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த பயிர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், தற்போது பெய்த கன மழையினால் சம்பா, தாளடி பயிர்கள் முழுவதும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 30 ஆயிரம் வழங்க வேண்டும். அதேபோல் மீன்பிடி தடை காலங்களில் கடலுக்கு செல்லாத மீனவர்களுக்கு வழங்கப்படுகிற உதவித்தொகை போல் விவசாய தொழிலாளர்கள் அனைவருக்கும் இதுபோன்ற மழை காலங்களில் வேலைக்கு செல்லாத நிலை உள்ளது. அதனால், குடும்பம் ஒன்றிற்கு ரூபாய் 10,000 வழங்கிட வேண்டும்.
10ஆண்டுகள் முடிந்த தொகுப்பு வீடுகள் அனைத்தும் முழுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் சேதமடைந்த தொகுப்பு வீடுகள் அனைத்திற்கும் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும். சென்ற ஆட்சிக்காலத்தில் பல கோடி ரூபாய் செலவில் வளவனாறு சுத்தம் செய்தல் மற்றும் கட்டுதல் அதில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் மேற்கண்ட பணிகள் சரிவர செய்யப்படாததால் கரைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக அரசு தலையிட்டு அந்த வளவனாற்று கரையை பலப்படுத்தி சாலை அமைத்து தர வேண்டும் என கூறினார். விவசாய தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் நா.பெரியசாமி, கட்சியின் மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியம், சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், ஒன்றிய பெருந்தலைவர் அ.பாஸ்கர், கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.பாலு, வி.தொ.ச. ஒன்றிய செயலாளர் ம.மகாலிங்கம், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் ஜி.சரவணன், ஊராட்சி தலைவர் திருமதி.சுசிலா மகாலிங்கம், ஒன்றியக் குழு உறுப்பினர் மு.மாரியம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.
Nov 21 – Nov 27 page 7
தத்துவார்த்தம்- 5
Nov 21 - Nov 27 page 6
பொருள் மாறுகிறது
பொருள் மாறுகிறது
Nov 21 – Nov 27 page 8
பாசறை நோக்கி படைகள் திரும்பட்டும்! - 9
பாசறை நோக்கி படைகள் திரும்பட்டும்! - 9
Nov 21 – Nov 27 page 9
Nov 21 – Nov 27 page 10
Nov 21 – Nov 27 page 11
பாசறை நோக்கி படைகள் திரும்பட்டும்! - 9
Nov 21 - Nov 27 page 10
Nov 21 – Nov 27 page 12
தத்துவார்த்தம்- 5
தத்துவார்த்தம்- 5
Nov 21 – Nov 27 page 13
பொருள்
Content
Nov 21 – Nov 27 page 14
பாசறை நோக்கி படைகள் திரும்பட்டும்! - 9
Content
Nov 21 – Nov 27 page 15
பொருள்
Content
Nov 21 – Nov 27 page 16
பாசறை நோக்கி படைகள் திரும்பட்டும்! - 9
Content