
மக்கள்தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள்.
மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் மக்களோடு கரைந்து நின்று கற்றுக்கொண்டு, அந்த அனுபவத்தின் மூலம், அவர்கள் சேர வேண்டிய இலக்கை அவர்களுக்குக் கற்றுத் தந்து, சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
மக்களிடம் உண்மையைப் பேசுவதும், நேர்மையாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்வதும், தன்னல மறுப்பும் தலைவர்களின் அடையாளமாக இருக்க வேண்டும்.
அதிகரித்து வரும் நிதி மூலதனக் குவிப்பு, வேறொரு புதிய சூழலை உருவாக்குகிறது. தமது பெரும் மூலதனக் குவிப்புக்கு உதவுகிற, எந்த வகையிலும் தடை செய்யாத அரசுகள் அவற்றுக்கு அவசியமாகின்றன.
ஜனநாயக நெறிமுறைப்படி, தேர்தல்களில் வாக்களித்து அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். தேர்தல் நேரத்தில் பணம் வெள்ளமெனக் கரைபுரண்டு ஓடுவது இரகசியமானது அல்ல. அதை அள்ளித்தரும் காமதேனுக்களான கார்ப்பரேட்டுகள், ஆட்சிக்கு யார் வந்தாலும், தமது இலக்குகளை நிறைவேற்றித் தரும் வகையில் அவற்றை ஆட்டுவிக்கின்றன.
உலகத்தில் அதிக ஏழைகளைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. தமது சாதாரண அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத அவலத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். அதற்கான காரணங்கள் என்ன, அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் என்ன என்பதை விவாதிப்பதே அரசியலாகும்.
பழைய தகவல் தொடர்பு முறைகளை அறிவியல் வளர்ச்சி மாற்றிவிட்டது. மக்களோடு மக்களாகச் சேர்ந்திருந்து தகவல்களையும் கருத்துகளையும் சொல்வதற்கும், அவர்களோடு விவாதித்து கருத்துகளைப் பெறுவதற்குமான வெளியை இப்போது ஊடகங்கள் கைப்பற்றி விட்டன. கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஊடகங்கள் உள்ளன.
உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்பி, அவர்களது கவனத்தை வேறு இடங்களுக்கு மடை மாற்ற பரபரப்பான செய்திகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன.
சென்னை புத்தகத் திருவிழாவில் ஒரு புத்தகத்தை வெளியிட வந்த சீமான் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுகிறார். இன்றைய, முந்தைய முதல்வர்கள் மீது அவதூறுகளை அள்ளிப் பொழிகிறார். அதுவே விவாதப் பொருளாகிறது.
சர்ச்சைகளை உருவாக்காமல் பேசுவதற்கு நான் ஏன் அங்கு செல்ல வேண்டும் என்று விளக்கமும் சொல்கிறார். திட்டமிட்டே நடக்கிறது.
ஊடக வெளிச்சத்தைப் பெறுவதற்கும், அதன் மூலம் தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்கும் எதிர்மறையாகப் பேசுவதே வழி என்றாகிவிட்டது.
சட்டப்பேரவைக் கூட்டத்தை புத்தாண்டில் துவக்கி வைத்து, அமைச்சரவை எழுதித் தந்த உரையைப் படிக்க வேண்டியது ஆளுநரின் கடமை என அரசியல் சாசனம் வரையறுக்கிறது.
இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையே கூட்டாட்சி முறைமையாகும். மாநிலங்களின் உரிமைகளையும் அதிகாரத்தையும் மறுத்து ஒடுக்கி தன் வயப்படுத்தவும், தனது கண்ணசைவுக்கு கட்டுப்பட மறுக்கிற, மாற்றுக் கருத்துகளை முன்வைக்கிற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடக்கிப் போடவும் ஆர்எஸ்எஸ்ஸின் மோடி அரசு முயல்கிறது.
அதன் முகவராகி, தனது அரசியல் சாசனக் கடமைகளை ஆளுநர் துறக்கிறார். மக்கள் தேர்ந்தெடுத்த அரசு தருகிற உரையைப் படிக்க அவருக்கு விருப்பமில்லை. அந்த உண்மையை நேரடியாகச் சொல்வதற்கு சட்டப்படி வழியும் இல்லை, நெஞ்சில் துணிவும் இல்லை.
எனவே சட்டப்பேரவைக்குச் சென்று, தேசிய கீதத்தை இரண்டு முறை பாட வேண்டும் என்று சின்னக் குழந்தையாய் அடம்பிடிக்கிறார். முதலில் தமிழ்த் தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் இசைக்கப்படும் நீண்டகால மரபை மாற்ற வேண்டும் என்கிறார். தேசிய கீதம் அவமதிக்கப்பட்டு விட்டதாக அழிச்சாட்டியம் செய்து, பேரவையை விட்டு வெளியேறுகிறார்.
சில நிமிடங்களிலேயே விளக்க அறிக்கை வெளியிடப்படுகிறது. வெளியேறியதற்காக அறிக்கை தயாரிக்கப்பட்டதா அல்லது முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கேற்ப அவர் வெளியேறினாரா?
ஒரு கல்லூரி விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, கம்யூனிஸ்டுகள் சுயநலவாதிகள் என்கிறார். சோவியத்தின் ஸ்டாலின் நீர்த்துப்போன கம்யூனிஸ்ட் என்று சாடுகிறார். ஸ்டாலின் நீர்த்துப்போன சுயநலமி என்றால், கலைஞர் ஏன் தன் மகனுக்கு அந்தப் பெயரைச் சூட்ட வேண்டும் என்று அவர் யோசிக்கவில்லை.
பேச்சுவாக்கில் வெளியிடப்பட்ட கருத்து அல்ல அது; அதனையே அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பேச்சு.
ஊடகத்தில் பெயர் அடிபட வேண்டும் என்றால், பொருளற்ற சர்ச்சைகளை எழுப்புகிற எதிர்மறைப் போக்கு வழக்கமாகிறது. மக்களின் கவனத்தைத் திசைதிருப்புகிற திட்டம் வெற்றிகரமாக அமலாகிறது.
ஆனால் மக்களின் நியாயமான தேவைகளும், அவற்றை எட்ட முடியாததால் ஏற்படும் கவலைகளும் பிரச்சனைகளும் நிதர்சனமானவை. இந்த ஊடக மயக்க மருந்துகளால் நீண்ட காலத்திற்கு அவர்களை நிலைகுலையச் செய்ய முடியாது!