இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, தொழிலாளர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. சாமர்த்தியமான வார்த்தைகளில் அவர் பேசியிருந்தாலும் அதில் எஞ்சி நிற்பது லாப வெறி தான் என்பதும், இத்தனை ஆண்டு காலமாக அவர் போட்டிருந்த கருணை சார் முதலாளிய வேடம் கலைந்திருப்பதும் முக்கியமாகும்.
வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை:
இந்தியா முன்னேற அவசியமா?
“இது எனது நாடு. நான் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய விரும்புகிறேன் என்று இந்தியாவில் உள்ள இளைஞர்கள் சொல்ல வேண்டும்’’ என்கிறார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி. அவருடைய இந்தப் பேச்சுக்கு இந்திய கார்ப்பரேட் முதலாளிகள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் வளர்ச்சி, தேசப்பற்று போன்ற இனிப்புகளைத் தடவி போதித்தாலும், அதற்குள் இருப்பது கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டல், லாப வெறி மட்டும் தான். இத்தனை நாட்களாக கருணை சார் (Compassionate) முதலாளித்துவ கருத்துகளைப் பேசிவந்த இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்திக்கு, இனிப்புத் தடவி சாமர்த்தியமாகப் பேச சொல்லித்தர வேண்டுமா? என்ன? அவர் பேசியிருப்பதில் மூன்று முக்கியமான கருத்துகள் குறித்து சற்று ஆழ்ந்த நோக்கலாம்.
முதலாவது, “இளம் தொழிலாளர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும்“ என்று நாராயணமூர்த்தி கூறுவது எதன் அடிப்படையில்? அறிவியலுக்கும் ஆரோக்கியத்துக்கும் மருத்துவத்துக்கும் எதிரான ஒன்றை செயல்படுத்த அவர் நினைக்கிறார். மனித குலம் 100 ஆண்டுகளுக்கு முன்பே இப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டு முன்னேறி வந்துள்ளது. முதலாளித்துவ உலகமும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில்தான், சர்வதேச தொழிலாளர் தரநிலைகள் (International Labour Standards – ILS) மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation – ILO) விதிகளை, செயல் திட்டங்களை வகுத்துள்ளது.
இரண்டாவது, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளின் முன்னேற்றத்துக்கு வேலை நேரம் நீட்டிப்பு தான் காரணம் என்று நாராயணமூர்த்தி கூறியிருப்பது தவறானதாகும். அவர் கூறும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்வந்த காலத்தில், ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் அதிக அளவாக 9 மணி நேரத்திற்குத் தான் வேலைநேரம் மாற்றப்பட்டது என்பது வரலாறு.
மூன்றாவது, உற்பத்தித்திறன் அதிகரிப்பதற்கு வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று நாராயணமூர்த்தி கூறுகிறார். இப்படி வேலை நேரத்தை அதிகரிப்பதால் உற்பத்தித்திறன் அதிகரித்து விடாது. புதிய கண்டுபிடிப்புகளும் திறன்பெற்ற தொழிலாளர்களும் இருந்தால்தான் உற்பத்தித்திறன் அதிகரிக்கும்.
‘புதிய கண்டுபிடிப்பு’களுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவே முதலீடு செய்கின்றன. ஆனால், உற்பத்தித்திறனை அதிகரிக்கும் சுமையை தொழிலாளர்கள் மீது நாராயணமூர்த்தி தள்ளி விடுகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியை நாட்டின் முன்னேற்றம், தேசத்தின் வளர்ச்சி என்றும் அவர் முலாம் பூசுகிறார்.
வேலை நேரம் எவ்வளவு?
தொழிலாளர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்றால், ஒரு நாளைக்கு சராசரியாக 12 மணி நேரம் உழைக்க வேண்டும். இதைத்தான் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி கூறுகிறார்.
ஒரு தொழிலாளி தன்னுடைய வீட்டிலிருந்து, வேலை செய்யும் இடத்துக்கு சென்று வர – போக்குவரத்து நெரிசல், பேருந்து வசதி போன்றவற்றைக் கணக்கிட்டால் – குறைந்தது 3 மணி நேரம் தேவைப்படும். சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். எஞ்சியிருப்பது இரண்டு மணி நேரம்தான். அதாவது ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்கும் தொழிலாளியின் ஓய்வுக்கு இந்த இரண்டு மணி நேரம்தான் கிடைக்கும். இந்த நேரத்தில் அந்தத் தொழிலாளி என்ன செய்ய முடியும்? இந்த இரண்டு மணி நேரத்தில் குடும்பத்தை கவனிப்பது, குழந்தைகளை கொஞ்சுவது, உறவினர்கள், நண்பர்களுடன் உறவாடுவது, படிப்பது சிந்திப்பது போன்றவற்றில் எதை செய்வது?
எந்திரம் போன்று இயங்கக்கூடிய, திறன்மிக்க தொழிலாளர்கள் வேண்டும் என விரும்புகிறீர்கள். அது சாத்தியமில்லை நாராயணமூர்த்தி அவர்களே. ரத்தமும் சதையுமான மனிதனுக்கு போதுமான ஓய்வும் உறக்கமும் சமூக உறவாடலும் அவசியம். தன்னைப் பற்றி, சமூகத்தைப் பற்றி, தொழில்நுட்பம் பற்றி, அதன் தேவைகள் பற்றி சிந்திப்பதற்கு தொழிலாளிக்கு நேரம் வேண்டும். அப்பொழுதுதான் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். சிந்திக்கவே நேரம் கொடுக்காமல் உழைக்க வேண்டும் என்கிறீர்கள். அப்படி கடினமாக உழைக்கும் தொழிலாளியின் உடல், மன நலன் என்ன ஆகும்? நாட்டிலுள்ள அத்தனை நோய்களும் அந்தத் தொழிலாளியை தேடி வராதா?
இந்தியாவில் வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. படித்த இளைஞர் கூட்டம் தகுந்த வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், 12 மணி நேர வேலை நடைமுறைக்கு வந்தால், வேலையின்மை மேலும் அதிகரிக்கும். படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள் அதிகமாக இருக்கிறார்களே என்பதற்காக, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முதலீடு போடாமலும், தொழில் நிறுவனங்களை தொடங்காமலும் இருப்பது ஏன்?
வேலை நேரம் குறைகிறதா? அதிகரிக்கிறதா?
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி கூறியிருப்பதற்கு நேர் மாறாகவே முன்னேறிய நாடுகளின் அனுபவங்கள் உள்ளன. கடந்த 150 ஆண்டுகளில் முன்னேறிய நாடுகளின் தொழிலாளர்கள் வேலை செய்யும் நேரம் குறைந்து கொண்டே வருகிறது.
ஜெர்மன் நாட்டில், தொழிலாளர்களின் வாராந்திர உழைப்பு நேரம் ஏறத்தாழ 59 விழுக்காடு குறைந்துள்ளது. அதாவது, 1870 ஆம் ஆண்டு வாரத்திற்கு 68 மணி நேரமாக இருந்த தொழிலாளர்களின் உழைப்பு நேரம், 2017ல் 28 மணி நேரமாக குறைந்துள்ளது.
ஜப்பான் நாட்டில் 1961 ஆம் ஆண்டு வாரத்துக்கு 44 மணி நேரமாக இருந்த உழைப்பு நேரம், தற்போது வாரத்துக்கு 35 மணி நேரமாக குறைந்துள்ளது.
19ஆம் நூற்றாண்டிலேயே அதிக நேரம் வேலை செய்வது தொழிலாளர்களின் ஆரோக்கியத்திற்கும், அவர்களின் குடும்பத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும்; உற்பத்தித் திறன் பாதிக்கும் என்பது அறிவியல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 1919 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) முதல் மாநாடு இதனை ஏற்றுக் கொண்டுள்ளது. வரையறுக்கப்பட்ட வேலை நேரமும்; ஓய்வு எடுப்பதற்கு போதுமான கால அவகாசமும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றைக்கு, வரையறுக்கப்பட்ட வேலை நேரம்; தினசரியும் வாராந்திரமும் ஓய்வெடுப்பதற்கான காலம்; ஆண்டுக்கு தரப்பட வேண்டிய விடுமுறைகள் என பின்பற்ற வேண்டிய தரநிலைகளை (Standards) சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிவித்துள்ளது. இவை உற்பத்தித்திறனை அதிகரிப்பதுடன் தொழிலாளர்களின் உடல், மன ஆரோக்கியத்தை பாதுகாக்க கூடியது என்றும் ஐஎல்ஓ உறுதிபடக் கூறுகிறது.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு, அதன் எதிர்கால வளர்ச்சிக்கு மிக முக்கியமான சொத்து இளைஞர்கள் தான். இந்தியாவில் இருக்கும் பெரும் எண்ணிக்கையிலான இந்த இளம்தொழிலாளர்கள், வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறுவது அவர்களின் ஆற்றலை அழிக்கும் செயலன்றி வேறல்ல.
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின், அதன் தலைவர்களின் உள்ளார்ந்த விருப்பத்தையே, இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பேச்சு வெளிப்படுத்தி இருக்கிறது. ஒரு நாட்டினுடைய உற்பத்தித்திறனின் அளவு, அந்த நாட்டின் புதுப்புனைவுகளை உருவாக்கும் அமைப்பின் (Innovation System) பலத்தை பொறுத்தது என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தெரியாதா, என்ன?
ஆராய்ச்சியில் தனியார் பங்கு
ஒன்றிய அரசின் நிதி ஆயோக், புதுப்புனைவுகளின் குறியீடு – 2021 (India Innovation Index) வெளியிட்டுள்ளது. இந்தியாவின் எதார்த்தம் எப்படி இருக்கிறது என்பதை அந்த அறிக்கை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
புதுப்புனைவுகள், கண்டுபிடிப்புகள் என்பது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) பணிகளால் வரக்கூடியது. நாட்டினுடைய மொத்த உற்பத்தியான – ஜிடிபியிலிருந்து ஆராய்ச்சிக்காக எவ்வளவு செலவிடப்படுகிறது என்பது கணக்கிடப்படும். இதனை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மொத்த செலவு (Gross domestic expenditure on R&D – GERD) என்று குறிப்பிடுவர்.
இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மொத்தச் செலவு 0.65 விழுக்காடாக இருந்தது. இது உலகிலேயே மிகக் குறைவான தொகையாகும். இந்தத் இந்தத் தொகையும் கூட 2020 – 21 ஆம் ஆண்டில் 0.64 விழுக்காடாக குறைந்துவிட்டது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) பணிகளுக்காக இந்தியாவில் செலவிடப்படும் நிதியில், 2020-21 ஆம் ஆண்டு தனியார் துறையின் பங்கு 41 விழுக்காடு ஆகும். இதுவே 2012 -13 ஆம் ஆண்டு 45 விழுக்காடாக இருந்தது. ஆராய்ச்சிக்காக தனியார் துறை செலவிடும் நிதி குறைந்து வருவதையே வெளிப்படுத்துகிறது.
இந்தியாவுடன் ஒப்பிடும்போது, வலுவான ஆராய்ச்சி அமைப்புகளை கொண்ட நாடுகளில் தனியார் துறைகள் ஆராய்ச்சிக்காக அதிகமான நிதியை செலவிடுகின்றன. பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சிக்காக செலவிடப்பட்ட நிதியில் தனியார் துறையின் பங்கு குறித்த 2020 ஆம் ஆண்டு விவரம் வருமாறு:
ஜப்பான் – 79%
கொரியா – 79%
சீனா – 77%
அமெரிக்கா – 75%
ஜெர்மனி – 67%
இங்கிலாந்து – 67%
இந்தியா – 41%
ஆராய்ச்சிக்காக செலவிடாமல்; ஆய்வுகளை மேற்கொள்ளாமல் புதிய கண்டுபிடிப்புகள், புதுப்புனைவுகள் வெளிவராது. புதிய கண்டுபிடிப்புகள் வெளிவராமல் உற்பத்தித் திறன் அதிகரிக்காது.
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் குறைந்த உற்பத்தித்திறன் காரணமாக உலகச் சந்தையில் போட்டியிடும் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. இளம் தொழிலாளர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் பணியாற்றினால் இந்த பிரச்சனை தீர்ந்து உற்பத்தித் திறன் உயர்ந்துவிடும் என்று கார்ப்பரேட் முதலாளிகள் எப்படி கூறுகின்றனர்? இளம்தொழிலாளர்கள் மீது இந்தச் சுமையை தள்ளிவிடுவது சரியானதா?
சர்வதேச தொழிலாளர் தரநிலை
ஐ.நா. சபையின் ஒரு அங்கம் தான் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ). 187 நாடுகளின் அரசுகள், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் உறுப்பினர்களாக இருக்கும் முத்தரப்பு அமைப்பு இது. சர்வதேச தொழிலாளர் தரநிலைகள் (Labour Standards) மற்றும் கொள்கைகளை உருவாக்குவது, அனைத்து பெண்களும் ஆண்களும் கண்ணியமான வேலைகளைப் பெறுவதற்கான திட்டங்களை வகுப்பது இதன் பணியாகும்.
நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களின் போது ஐஎல்ஓ வகுத்துள்ள சர்வதேச தொழிலாளர் தரநிலைகள் (ILS) பின்பற்றப்படுகிறதா என்பதும் நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கும்.
வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை என இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி முன்மொழிந்திருப்பதும் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் அதனை ஆதரித்திருப்பதும் சர்வதேச தொழிலாளர் தரநிலைக்கு எதிரானதாகும். 1919ல் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முதல் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மாறானதாகும்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனுடன் இந்தியா நடத்தி வரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான (FTA) பேச்சுவார்த்தையில், சர்வதேச தொழிலாளர் தரநிலைகளும் (ILS) இடம்பெற்றுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச தொழிலாளர் தரநிலைகளைப் பின்பற்றுவது குறித்த ஒரு அத்தியாயமும் உள்ளது.
அமெரிக்கா தலைமையிலான இந்தோ-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பில் (ஐபிஇஎஃப்) இந்தியாவும் உறுப்பினராக உள்ளது. இந்த கூட்டமைப்பு நாடுகளுடன் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் வணிகம் செய்வதற்கு ஐஎல்ஓ வகுத்துள்ள சர்வதேச தொழிலாளர் தரநிலைகளை (ஐ.எல்.எஸ்) பின்பற்றுவது அவசியமாகும்.
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிலாளர் உரிமைகளை மதிக்காவிட்டால், அவற்றின் வணிக வாய்ப்புகளும் வளர்ச்சியும் பாதிக்கும். இதனால் தான் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வெறியை மறைப்பதற்காக இந்திய நலன், தேசத்தின் வளர்ச்சி என்ற பெயரில் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி முலாம் பூசுகிறார்.
இதுவரை ‘கருணை சார்’ (Compassionate) முதலாளிய வேடமிட்டிருந்த நாராயண மூர்த்தியின் சுரண்டல், லாப வெறி மீண்டும் அம்பலமாகி இருக்கிறது.
இன்போசிஸ் நிறுவனத்தை வளர்ப்பதற்காக கருணை சார் முதலாளிய வேடமிட்ட நாராயணமூர்த்தி, தொழில் நிறுவனத்தில் ஊழியர்களும் பங்குதாரர்கள் (ESOP) என்று கூறி நிரந்தர சுரண்டல் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இதன் மூலம் ஊழியர்களின் நிறுவனத் தேர்வு சுதந்திரத்தை முடக்கினார்.
இன்று இன்ஃபோசிஸ் உலகளாவிய நிறுவனமாகி விட்டதால், ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்கிறார். சாமர்த்தியமான வார்த்தைகளின் மூலம் லாப வெறியை, சுரண்டல் நலனை நாராயண மூர்த்தியும் கார்ப்பரேட் முதலாளிகளும் மூடி மறைக்க முயல்கின்றனர். அது சாத்தியமில்லை என்பதை இளம் தொழிலாளர்கள் உணர்த்துவர்.
கட்டுரையாளர்:
வ.மணிமாறன்
பத்திரிகையாளர்
manimaran2@gmail.com