இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு கட்சியில் உறுப்பினராக சேரும் பொழுது கட்சிக்கு வயது 17.
15 வயதிலேயே நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தெருக்களிலே இந்திய விடுதலைக்கு முழக்கமிட்ட சின்னஞ்சிறு இளைஞர். அடிமைப்பட்டு கிடக்கும் இந்தியாவிற்கு என்று விடுதலை வரும் என்ற தாகம் நெஞ்சிலே தேங்கி கிடந்த நேரம், இளைஞர்களுடன் வீதிகளிலே மகாகவி பாரதியின்,
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? – கவிதையை பாடிக்கொண்டே செல்வாராம்.
கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டத்தில் முளைவிடத் தொடங்கும் போதே சதி வழக்குகள் பாய்ந்தன. மலையாள மண்ணிலிருந்து அமைப்பாளராக இராமச்சந்திர நெடுங்காடி வந்தார். அவர் மீதும் கழுகுமலை அழகிரி முத்தையா வஜ்ரவேல் போன்ற கம்யூனிஸ்ட் தோழர்கள் மீதும் நெல்லைச் சதி வழக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் 1940 ஆம் ஆண்டு போடப்பட்டது.
பாலதண்டாயுதம், ப.மாணிக்கம் , மீனாட்சிநாதன், பேராசிரியர் வானமாமலை, வழக்கறிஞர் என்.டி. வானமாமலை, வி.எஸ்.காந்தி, வேலுச்சாமி தேவர் போன்றவர்களால் ஈர்க்கப்பட்ட நல்லகண்ணு 1943-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். நாங்குநேரி, களக்காடு பகுதிகளில் கட்சியின் அமைப்பாளராக செயல்பட்டார். நெருக்கடியான தலைமறைவு வாழ்க்கையில் விவசாய சங்கத்தில் பணிபுரிந்தார். எண்ணற்ற போராட்டங்கள். 1946 ஆம் ஆண்டு ஜனசக்தியின் பணி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். தேச விடுதலைக்குப் பின் திரும்பி வந்து கட்சிப் பணிகளை தொடர்ந்தார். கட்சி மீண்டும் தடை செய்யப்பட்டது. தலைமறைவு வாழ்க்கையில் பட்ட இன்னல்கள் ஏராளம்.
1948 ஆம் ஆண்டு நெல்லைச் சதிவழக்கு 109 தோழர்கள் மீது போடப்பட்டது. ஒன்னறையாண்டு சிறைவாசத்திற்கு பிறகு 42 தோழர்கள் விடுவிக்கப்பட்டனர். 67 தோழர்கள் மீது வழக்கு நடந்தது. நல்லகண்ணுவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஏழாண்டாக குறைக்கப்பட்டது.
விடுதலைக்குப் பின்பு 1958ஆம் ஆண்டு பேராசிரியர் நா.வானமாமலை தலைமையில் திருமணம் நடைபெற்றது. ரஞ்சிதத்தை கரம்பிடித்தார். இரண்டு பெண் குழந்தைகள். அன்னை ரஞ்சிதம் ஆசிரியரானதால் குடும்பம் நடைபெற்றது.
1948 ஆம் ஆண்டிலேயே இளைஞர் ஆர். நல்லகண்ணு அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தலைவராக வருவார் என்று விவசாயிகள் இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர் பி.சீனிவாச ராவ் எழுதியுள்ளார்.
1990களின் நடுவில் சாதி கலவரம் தென் மாவட்டங்களில் தலைவிரித்து ஆடியது. சாதி மோதல்கள் நடைபெற்ற இடங்களுக்கெல்லாம் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கன்னியாகுமரியில் இருந்து மதுரைக்கு பிரச்சார இயக்கத்தை கட்சி மேற்கொண்டது. தலைமையேற்ற மாநிலச் செயலாளர் நல்லகண்ணு அவர்களுக்கு பி.ஏ.வாக பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
ஆர்என்கே, சட்டமன்றக்குழு தலைவர் ஜி. பழனிச்சாமி, நான் ஆகிய மூவரும் ஒரே காரிலேயே பயணம் செய்தோம். சாதி மோதல்களை குறைப்பது பற்றி ஜி.பழனிச்சாமியுடன் விவாதித்து போக்குவரத்து கழகங்களுக்கும், மாவட்டங்களுக்கும் வைக்கப்பட்டுள்ள பெயர்களை எடுத்துவிட்டால் சண்டைகள் ஓரளவு குறையும். ஆனால் எப்படி சொல்வது? சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? ஆர்என்கே தோழர் தீவிரமான ஆலோசனையில் இருந்தார். திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தக் கருத்தை வலியுறுத்திப் பேசினார்.
சங்கர் நகரை அடுத்த துறையூருக்கு சென்றோம். சாதி வெறியால் பாதிக்கப்பட்ட கிராமம். அப்பொழுது பிறந்த கைக்குழந்தையுடன் இளம் தாய் கதறி அழுதார். அவளுடைய கணவன் சாதீய வெறியால் கொல்லப்பட்டான். கண்களில் கண்ணீருடன் ஆறுதல் கூறினார். பயணம் தொடர்ந்தது. பல ஊர்களில் கலவரங்கள், கொல்லப்பட்ட சம்பவங்கள், ராஜபாளையம் துயரங்களை பார்வையிட்ட பிறகு மம்சாபுரத்திற்குச் சென்றோம்.
தந்தை கொல்லப்பட்டதால் இரண்டு சிறுவர்கள் மொட்டை அடித்திருந்த காட்சியைப் பார்த்தார். கண்ணீருடன் ஆறுதல் கூறினார். இந்தக் காட்சிகள் கல்லுக்குள் ஈரம் இருப்பதை உணர்த்தியது. எப்பொழுதும் உணர்ச்சிகளை அடக்கி தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் நல்லகண்ணு, தன்னை அறியாமல் வெளிப்படுத்திய கண்ணீர் நம்மை கலங்கச் செய்தது.
தனது மாமனார் கொல்லப்பட்ட போது வெளிப்படுத்தப்படாத துக்கம், சாதி கலவரத்தின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதை பார்த்தவுடன் பொங்கிய கண்ணீரை நம்மால் இன்றும் மறக்க இயலாது.
அன்றைய முதலமைச்சர் கலைஞர் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்திலும் மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்களை எடுத்து விடுங்கள் என்ற கருத்தைச் சொன்னார். அரசும் ஏற்றுக் கொண்டது. பெயர்கள் நீக்கப்பட்டன. அமைதி திரும்பியது.
தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையடிப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். மதுரை உயர்நீதிமன்றத்தில் தானே ஆஜராகி வாதங்களை எடுத்துரைத்தார். 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் மணல் அள்ளக் கூடாது என தீர்ப்பு வந்தது. ஆனாலும் கொள்ளையர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட மணலைக்கூட விட்டு விடவில்லை. இந்தக் குற்ற சம்பவங்கள் நடைபெற்ற போது மனம் வெதும்பி பேசிய தலைவரின் வேதனையான முகம் நினைவுக்கு வருகிறது.
சிறையில் இருந்த காலத்தில் புலவர் பட்டம் பெற்றார். இலக்கியத்தில் ஆழ்ந்த இரசனை உண்டு. நல்லகண்ணு நல்ல கவிதைகளை எழுதி உள்ளார்.
கட்டுரைகள் சிறப்பாக இருந்தது என்றால், மனம் விட்டு பாராட்டத் தயங்க மாட்டார். அதே நேரம் தவறுகளை கண்டால் மென்மையாகக் கூறி சுட்டிக் காட்டுவார் . நெல்லை ஆய்வு குழு கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துக்களையும் எடுத்துச் சொல்லியுள்ளார். இலக்கிய ஆளுமைகள் நா.வா. தொமுசி ரகுநாதன், தி.க.சி உட்பட பலருடன் நெருங்கிய நட்பை பேணி இருந்தார். அவர்கள் நடத்துகின்ற இலக்கிய விவாதங்கள் கேட்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் எட்டயபுரத்தில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் நடத்துகின்ற பாரதி விழாவுக்கு அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் இரண்டு நாட்களும் முழுமையாக இருந்து விழாவை கண்டு ரசிக்கின்ற மாமனிதர்.
ஜீவாவால் ஆணையிடப்பட்டு சோ. அழகர்சாமி மற்றும் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தால் தொடங்கப்பட்ட மகாகவி பாரதி விழா நின்று விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையும் கவனமும் கொண்டவர். அனேகமாக ஜூலை மாதமே செப்டம்பர் மாத விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அன்பான ஆணையிடுவார். பாரதியின் மீது தீராத காதலன் ஆர்.நல்லகண்ணு.
கவிஞர் தமிழ்ஒளியை மக்களுக்கு அறிமுகம் செய்ய ஒரு நூலையே எழுதியவர். சிறந்த எழுத்தாளர், கட்டுரையாளர்.
தொமுசி ரகுநாதன் மறைந்தவுடன் இறுதி நிகழ்வு நடத்தி முடித்த பிறகு நெல்லை கட்சி அலுவலகத்தில் பொன்னீலன் தொமுசியை பற்றிய பேட்டி எடுக்கும் போது பிரிவுத் துயர் தாங்காமல் குலுங்கி குலுங்கி அழுத காட்சிகளை நம்மால் மறக்க இயலவில்லை.
தோழர் நல்லகண்ணு பொது வாழ்வுக்கு எடுத்துக்காட்டு. இன்றைக்கும் நம்மோடு வாழ்கின்ற மகத்தான மக்கள் தலைவர்.
தோழர் ஆர்என்கே காலத்தில் நாங்களும் வாழ்கிறோம்! எங்களுக்குப் பெருமை! கம்யூனிஸ்ட் பேரியக்கத்துக்குப் பெருமை! உங்களால் நாங்கள் மதிப்பு பெறுகிறோம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வயது 99, தோழர் நல்லகண்ணுவுக்கும் வயது 99.
கட்டுரையாளர்:
எஸ்.காசிவிஸ்வநாதன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஏஐடியுசி