மார்க்சியத்தை தமிழ் பண்பாட்டுக்கு பயன்படுத்தியவர் நா.வானமாமலை
எஸ்.தோத்தாத்திரி, மார்க்சிய ஆய்வாளர்
தமிழக பொதுவுடமை இயக்கத்தில் இரு வானமாமலைகள் உண்டு. இருவரும் பொதுவுடமைவாதிகளே. சாதி காரணமாக அவர்களைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. இது ஒரு தவறான போக்காகும். பொதுவுடமைக் கட்சிகள் என்று பல இருந்தாலும், கட்சிக்குள் வந்த பிறகு சாதிகளை மறக்க வேண்டும் என்ற உணர்வு வந்தால் தான் இந்தப் பார்வை நீங்கும். ஏனென்றால் இடதுசாரி கட்சிகள் எத்தனை இருந்தாலும் அவை மார்க்சியத்தை அடித்தளமாகக் கொண்டுதான் இயங்குகின்றன. ஒரு மார்க்சியவாதிக்கு இனம், மதம், மொழி இல்லை என்று கூறுவார்கள். இதைத்தான் வைணவரான பெரியாழ்வார் பின்வருமாறு கூறுவார்.
“தொண்டைக் குலத்திலுள்ளார் வந்தடி தொழுது
ஆயிரம் நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்த்து
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே”
இதன் பொருள், ஒருவன் வைணவனாகிவிட்டால் அவனுடைய பழைய சாதிய முறையை விட்டு விட வேண்டியதாகும். இந்தக் கூற்று பொதுவுடமை வாதிகளுக்கும் பொருந்தும். இதனால் மதத்தை நாம் ஆதரிக்கிறோம் என்று ஆகிவிடாது. அதன் மனிதநேயக் கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
பிறப்பால் மேல் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த இரு வானமாமலைகளும் தங்கள் குலத்தை மறந்து பொதுவுடமை இயக்கத்தில் சேர்ந்து பல சாதனைகளைப் புரிந்துள்ளனர்.
பேராசிரியர் நா.வானமாமலை 1917 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள நான்குநேரியில் பிறந்தார். அவரது தகப்பனார் தெற்கு நான்குநேரி கிராம முன்சீப்பாக இருந்தவர். அவரது குடும்பத்தார் அனைவரும் தீவிரமான வைணவர்கள். நான்குநேரி முன்பு ஸ்ரீவரமங்கல நகர் என்று அழைக்கப்பட்டது. இது வைணவ மரபில் உள்ள 108 திருத்தலங்களில் ஒன்று. வைணவர்களுக்கு குருநாதர் என்ற கருதப்படும் நம்மாழ்வார் இதனைப் பற்றி பாடியுள்ளார். இது வைணவ மரபில் மங்களா சாசனம் என்று அழைக்கப்படுகிறது.
நா.வானமாமலை பள்ளிப் படிப்பை ஜில்லா போர்டு பள்ளியில் முடித்தார். அந்த காலத்து இன்டர்மீடியட் படிப்பை நெல்லை இந்து கல்லூரியில் முடித்தார். பட்டப்படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முடித்தார். ஆசிரியர் பயிற்சிப் படிப்பை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முடித்தார். சிறிது காலம் பல உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் தனித்தேர்வராக இருந்து தமிழில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.
மடத்திற்கு எதிராகப் போராட்டம்
இதே காலகட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு காரணமாக ஒரு முழு நேர கம்யூனிஸ்ட் ஆக மாறினார். அதன் காரணமாக அவரது வேலையை விட்டார். இந்தக் கட்டத்தில் அவர் தோழர் இரா.நல்லகண்ணு ஆகியோருடன் இணைந்து ஹரிஜனங்களை அழைத்துக் கொண்டு மடத்திற்கு எதிராக நடத்திய போராட்டம் குறிப்பிடத்தக்கது. அப்பொழுது அவர் தாக்கப்பட்டார். அந்த நேரத்தில் விவசாய சங்கத்தின் சார்பாக பல துண்டுபிரசுரங்களையும் வெளியிட்டார். அவை இன்று கிடைக்கவில்லை. பிறகு அங்கிருந்து நெல்லை சென்றார். ஜீவனத்திற்காக ஒரு தனிப் பயிற்சிக் கல்லூரி ஆரம்பித்தார். அதன் பிறகு அவரது வாழ்க்கை முழுவதிலும் பண்பாட்டு விஷயங்களில் கவனம் செலுத்தினார்.
நா.வானமாமலையின் பங்களிப்புகளில் மிக முக்கியமானது மார்க்சிய கல்வியை ஒழுங்குபடுத்தியது. இவருக்கு முன்னால் கட்சி கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகி இருந்ததால் மார்க்சியம் பற்றி ஒரு ஒழுங்கான முறையில் பேச முடியாமல் இருந்தது. ஆங்காங்கே கட்சித் தலைவர்கள் இது பற்றிப் பேசவும் கற்கவும் முற்பட்டனர். ஆனால் விடுதலை பெற்ற பிறகு நிலைமை சற்று மாறியது. சோவியத் யூனியன் உறவு ஏற்பட்ட பிறகு நூல்கள் தாராளமாக கிடைக்க ஆரம்பித்தன. கட்சிக் கல்வி பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கல்வியை ஒழுங்குபடுத்தி அவரே வகுப்புகளை எடுக்கவும் தொடங்கினார். அவரைப் பின்பற்றி பலர் வகுப்புகளை எடுக்கவும் ஆரம்பித்தனர். அவரது வகுப்புகளின் சிறப்பான அம்சம் சரளமான தமிழ், எளிமையான உதாரணங்கள், தெளிவு ஆகியனவாகும்.
அது மட்டுமல்லாமல், மார்க்சியத்தை ஒரு பட்டயப் படிப்பாக நடத்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மூலம் ஏற்பாடு செய்தவரும் அவரே.
பேராசிரியர் நா.வா என்றவுடன் பண்பாட்டுத் துறையில் அவர் செய்த பணி மிகவும் முக்கியமானது. அதே சமயத்தில் பண்பாட்டுப் போராட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு அடிப்படையான போராட்டத்தைப் புறக்கணிக்கும் போக்கு அவரிடம் கிடையாது. ஆரம்ப காலத்தில் அவர் சரஸ்வதி, தாமரை ஆகியவற்றில் கட்டுரைகள் எழுதினார். அவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு கட்டுரை நந்தனார் பற்றியது. இதில் வர்க்கப் போராட்டம் ஒளிந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராகவும் இருந்தார். ஜீவாவிற்கு பிறகு அதன் கொள்கை அறிக்கையை தயாரித்தவரும் அவரே.
நெல்லை ஆய்வுக்குழு
எட்டயபுரம் பாரதி விழாவுடன் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்து, அதன் மூலம் பல இடதுசாரி ஆய்வாளர்களை ஒன்று சேர்த்த வரும் அவரே. இந்தக் கருத்தரங்கம் தான் பின்னால் நெல்லை ஆய்வுக்குழு என்ற ஒன்றை உருவாக்கக் காரணமாக இருந்தது. இந்த ஆய்வுக்குழு முதலில் அவரது வீட்டில் கூடியது. பின்னர் அவரது தனிப் பயிற்சிக் கல்லூரியில் நடந்தது. இதில் யாரும் உறுப்பினராகலாம். கட்டணம் எதுவும் கிடையாது. இதன் காரணமாக பல இளம் ஆய்வாளர்கள் உருவாகினார். சில நேரங்களில் அவரே கட்டுரை படிப்பார். மற்ற நேரங்களில் பலரை படிக்கச் செய்வார். அதன் மீது விவாதங்கள் நடைபெறும். இந்த வாதங்களின் அடிப்படையில் கட்டுரை திருத்தி அமைக்கப்படும். அந்தக் கட்டுரைகளை வெளியிடுவதற்கு ஒரு சாதனமாக ஆராய்ச்சி என்ற பத்திரிக்கையை தொடங்கினார். இப்பத்திரிகை மூலம் பல புதிய இடதுசாரி ஆய்வாளர்கள் உருவாயினர்.
ஆராய்ச்சி பத்திரிகையில் மார்க்சியம், மானுடவியல், தொல்லியல், கல்வெட்டியல், தற்கால இலக்கியம், பண்டையத் தமிழ் இலக்கியங்கள், நாட்டார் வழக்காற்றியல் ஆகியன பற்றிய கட்டுரைகள் வெளியாயின. இந்த கட்டுரைகளில் பல அந்த துறையில் முதல் முதலாக வெளிவந்தவை. அவற்றுக்கு முன்னோடிகள் இல்லை. இந்தப் பத்திரிக்கை தமிழக பண்பாட்டு துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பேராசிரியர் நா.வா.வினுடைய மற்றொரு முக்கியமான பணி பல விஞ்ஞான நூல்களை மொழிபெயர்த்ததாகும். ஆனால் அவர் இதைத் தொடரவில்லை. அதே காலகட்டத்தில் சிறுவர்களுக்கான விஞ்ஞான நூல்களையும் எழுதினார். அதையும் அவர் தொடரவில்லை. பி.சி.ஜோசி அவர்களின் தூண்டுதல் காரணமாக அவர் நாட்டார் வழக்காற்றியல் நோக்கித் திரும்பினார். மிகப்பெரிய முயற்சிக்குப் பின் நாட்டுப்புறப் பாடல்களை சேகரித்து, அவற்றை வரிசைப்படுத்தி அவற்றுக்கு குறிப்புகளும் முன்னுரையும் எழுதி பெரிய தொகுப்பினை கொண்டு வந்தார். அது பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற தொகுப்பாக விளங்குகிறது.
பின்னர் தார்வார் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு காலம் ஆய்வு நிகழ்த்தச் சென்றார். இந்த ஆய்வின் முடிவுகளை “The Folk Life of Tamilnadu” என்ற நூலாக வெளியிட்டார். இது சர்வதேச அளவிற்கு அவரை உயர்த்தியது. சிறு சிறு பாடல்களைத் தொகுத்து வெளியிட்ட பிறகு, அவரது கவனம் நெடுங்கதைப் பாடல்களை நோக்கி திரும்பியது. கட்டபொம்மு கதை, கட்டபொம்மு கூத்து, முத்துப்பட்டன் கதை, காத்தவராயன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, கான்சாகிப் சண்டை ஆகியன இந்தப் பாடல்கள். இவற்றுக்கு எழுதிய ஆராய்ச்சி முன்னுரை நாயக்கர் காலத்திய தமிழக சமுதாய வரலாறு பற்றிய ஒரு மார்க்சிய விளக்கமாக இருக்கின்றன. இவை அனைத்தும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வெளியீடாக வந்தன.
நா.வா. செய்த மிகப்பெரிய காரியம் குமரி மாவட்டத்தில் கீரிப்பாறை என்ற இடத்தில் அவர் தொடங்கிய பயிற்சி முகாம் ஆகும். இங்கு மார்க்சிய அழகியல், பல்வேறு வகையான இலக்கிய கோட்பாடுகள், இந்தியத் தத்துவம் ஆகியன பற்றிய உரைகள் இடம்பெற்றன. இவற்றில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அவர் அதிகமாக உரை நிகழ்த்தவில்லை என்பதுதான். ஒவ்வொரு முகாமையும் திட்டமிடும் வேலையை அவர் மேற்கொண்டார். இன்று அந்த முகாம் நடைபெறவில்லை.
தமிழ்நாட்டின் பிளெக்கானவ்
நா.வா. 1980 ஆம் ஆண்டு மறைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் டி.லிட் (D.Lit.,) பட்டம் கொடுத்து கௌரவித்தது. அவரது நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிடலாம்.
- தமிழர் பண்பாடும் தத்துவமும்
- வேத மறுப்பு பௌத்தமும் இந்திய நாத்திகமும்
- இந்திய தத்துவமும் மார்க்சிய இயங்கியலும்
- மார்க்சிய அழகியல்
- இலக்கியத்தில் உருவமும் உள்ளடக்கமும்
- கலைகளின் தோற்றம்
- புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்
- மார்க்சிய சமூகவியல் கொள்கை
இவை அனைத்தும் இடதுசாரி சிந்தனையாளர்கள் தங்களது குழு மனப்பான்மையை புறக்கணித்துவிட்டு கற்கவேண்டிய நூல்களாகும். இத்தகைய முறையில் மார்க்சியத்தை தமிழக பண்பாட்டுக்கு பயன்படுத்தியதன் காரணமாக அவரை தமிழ்நாட்டின் பிளெக்கானவ் என்று கூட அழைக்கலாம்.
கட்டுரையாளர்: எஸ். தோத்தாத்திரி
மார்க்சிய ஆய்வாளர்
(பிப்ரவரி – 2 நா.வானமாமலை நினைவுநாளையொட்டி இந்தக் கட்டுரை எழுதப்பட்டது)