அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
இது தொடர்பாக மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நல்லதோர் தீர்ப்பு என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி. கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதிகள் சுகனேஸ்வரர் கோயிலில் ஆகம விதிகள் அடிப்படையில் இல்லை என கூறப்பட்டது.
மேலும் இந்து அறநிலையத்துறை சார்பில் குறிப்பிட்ட கோயில்களில் பின்பற்றக் கூடிய மரபை முடிவு செய்ய அந்த கோயில் அர்ச்சகரிடமிருந்து தகுதி சான்றிதழ் பெற்று விண்ணப்பதாரர்கள் சமர்பிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம். குறிப்பிட்ட ஆகமம் – மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் சாதிக்கு எந்த பங்கும் இல்லை என்று சமூகநீதிமிக்க தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பையும் எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா புர்வாலா, நீதிபதி ஆதிகேசவர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆகம கோயில்களில் அர்ச்சகர்கள் பரம்பரையாகத்தான் நியமிக்க வேண்டும் என்றும், தனி நீதிபதியின் உத்தரவு உச்சநீதிமன்றத்திற்கு எதிரானது என்றும் வாதிடப்பட்டது. இடைக்காலத் தடையும் கோரப்பட்டது.
இந்நிலையில் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டனர். இத்தகைய சூழலில் மேல்முறையீட்டு மனுவாக, உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்தது. கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
இத்தகைய தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்பதோடு, சமூகநீதிக்கான மிக சரியான உறுதிப்பாடு என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. மேலும் இத்தீர்ப்பை அமுல்படுத்த உரிய முயற்சிகளை மேற்கொள்ள தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.