மாநில செயலாளர்

ருசி கண்ட பூனை

மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் எழுதும் கட்சிக்கடிதம்

ஒன்றிய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு கேட்க வக்கற்ற பாஜகவினர் – கலகத்தின் மூலம் காரியம் சாதிக்க துடியாய் துடிக்கின்றனர். இவர்களின் சூட்சுமத்தை நாம் அறிவது மட்டுமல்ல – நாட்டு மக்கள் அறிந்திட செய்திட வேண்டும்.

கட்சிக் கடிதம்

ருசி கண்ட பூனை

போர்க்குணம் மிக்க தோழர்களே!குஜராத்தில் வன்முறை கலவரம் செய்து, அப்பாவி மக்களான இஸ்லாமிய பெருமக்கள் மீது பழி சுமத்தி, கலவரம் செய்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து அரசியல் ஆதாயம் பெற்ற திருட்டுப் பூனை.

மணியான மாநிலமான மணிப்பூர் கலகத் தீயை கடந்த மே மூன்றாம் நாள் மூட்டியது.

மூட்டிய தீ இன்று வரை அணையவில்லை. மாறாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருக்கின்றது.

மாண்டு, மடிந்தோர்  எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

மணிப்பூர் சென்ற அமித்ஷா அங்கே மூன்று நாள் முகாமிட்டு வந்தார். என்ன ஆலோசனை வழங்கினார் என்பது அவரது ஆருயிர் கூட்டாளி, உடன்பிறவா சகோதரன் மோடிக்கு மட்டுமே தெரியும்.

ஒட்டுமொத்த நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பெரும் பொறுப்புடைய உள்துறை அமைச்சரின் மணிப்பூர் விஜயத்திற்கு பின்னரே வன்முறை மேலும் விஸ்வரூபம் எடுக்கிறது, வன்முறை என்றால் அதன் பொருள்தான் என்ன?

நயவஞ்சகம் சிறிதும் அறியா அப்பாவி பிரதமர் மோடியின் மௌன விரதம் வியப்பில் ஆழ்த்துகிறது.

கைகளை விரித்தும், உயர்த்தியும் சிங்கமாக கர்ஜிக்கும் கலையை நன்கறிந்த மனிதர் அசைவற்று கோமா நிலையில் இருப்பது ஏன்?

மணிப்பூர் மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை, துயரத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாரா?

சகோதரிகள் ஆடையின்றி அம்மணமாக்கப்பட்ட அநியாயத்தைக் கண்டு பதற்றத்தில் பயந்து போய்விட்டாரா?

ஊரெல்லாம் சுற்றுகிறார், வாரணாசிக்கு மக்கள் வெள்ளம் போல் வந்து குவிகின்றனர், அங்கிருந்து காசி விசுவநாதரை வணங்குகின்றனர் என்று பெருமிதத்தோடு காசியில் நின்று கர்ஜிக்கின்றார்.

இன்ன பிற மாநிலங்களுக்கும் செல்கின்றார்; – மகிழ்கின்றார்.

ஆனால் மணிப்பூர் மக்கள் கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக கதறி அழுகின்றார்கள், இந்திய குடிமக்களாகிய நாங்கள் அனாதைகளா? எங்கே எங்கள் பிரதமர் எனக் கேட்கின்றனர்.

அங்கும் இங்குமாக வானூர்தி வழியாக பறந்து பறந்து செல்லும் மோடியின் புனித பாதங்கள், மணிப்பூர் மண்ணில் மட்டும் பதிய மறுக்கின்றதே ஏன்?

அமெரிக்கா சென்று அங்குள்ள நாடாளுமன்றத்தில் சிங்கமென கர்ஜிக்கும் மாமன்னர், சொந்த நாட்டின் நாடாளுமன்றத்தை புறக்கணித்து அவமதிப்பது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது?

நாடாளுமன்றத்தை மதித்து, போற்றி அதன் படிக்கட்டுகளை தொட்டு வணங்கி போஸ் கொடுத்த பெரிய மனிதர், நாட்டில் இதுவரை எந்த பிரதமரும் மேற்கொள்ளா புனிதப் பணியை மேற்கொண்டவர் நாடாளுமன்ற படிக்கட்டுகளை மதிக்காமல் இன்று பாராமுகமாக செல்வது தான் ஏனோ?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வராமல் புறக்கணித்தால் அவர்களை சமாதானப்படுத்தி சபைக்கு அழைத்திட வேண்டிய பிரதமரை, சபை உறுப்பினர்கள் வாருங்கள், வாருங்கள். அவைக்கு வாருங்கள் என்று நாடாளுமன்றம் தொடங்கிய நாள் முதல் அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளனர்.

மாமன்னரோ மறந்தும் கூட அவையை திரும்பிக்கூட பார்க்கவில்லையே, -ஏன்?

மணிப்பூரில் கலவரம் தொடர்கின்றது –  தொடரட்டும்! மற்றொரு குஜராத் அவர்களுக்கு லட்டு போல் கிடைத்துவிட்டது.

இது மட்டும் போதுமா? போதாது இன்னும் இன்னும் இவர்களுக்கு கலகம் என்கின்ற லட்டு கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மணிப்பூரை அடுத்து இரட்டை எஞ்ஜின் ஆட்சி நடைபெறும் அரியானா கிடைத்துவிட்டது.

அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பேரணி நடத்துவது மக்கள் பிரச்சனைகளுக்காக – ஆனால் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் பேரணி நடத்துவது கலகம் உருவாக்குவதற்காக!

அமீனா புகுந்த வீடும், ஆமை புகுந்த வீடும் உருப்படாது என்கிற பழமொழி உண்டு.

ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் பேரணி செனறால் கலகம் நடக்கப் போகின்றது – வீதிகளிலும், கடைகளும், மசூதிகளும் தீப்பற்றி எரியப் போகின்றன, மனித உயிர்கள் பலியாகப் போகின்றன என்று பொருளாகும்.

அரியானாவின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கரங்களாக செயல்படும் விஷ்வ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் ஊர்வலம் நடத்தின.

இவர்களின் ஊர்வலம் எத்திசை நோக்கிச் செல்லும் என்பதும், எத்தகைய முழக்கங்களை எழுப்புவார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே!

இவர்களின் வன்முறை ஊர்வலத்தால் ஊர் காவல் படையை சேர்ந்தவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். வீடுகளும், வணிக நிறுவனங்களும், மசூதிகளும் தீக்கு இரையாகின. பலர் காயமுற்றனர். ஐந்து மாவட்டங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 176 பேர் வரை கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

ஆனாலும் வன்முறைகள் தொடர்கின்றன – மத வன்முறையாக மாறி தொடர்கின்றது.

இச்சம்பவம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

இரட்டை எஞ்ஜினில் ஒரு எஞ்சினான மாநிலத்தின் மாண்புமிகு முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், மிகவும் பொறுப்புணர்ச்சியின்றி கூறுகின்றார். ஒவ்வொருவருக்கும் அரசு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறி தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தார்.

நூஹ் மாவட்டத்தில் உள்ள  நவுரு நகரில் குடியிருந்து வரும் இஸ்லாமியர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக இடிக்கப்பட்டு வருகின்றது. மருந்து கடைகள் உட்பட 250க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாக தகர்த்தெறியப்பட்டன – மேலும் இப்பணிகள் தொடரும் என அதிகாரிகள் திமிராக தெரிவித்துள்ளனர்.

வன்முறையாளர்கள் வீடுகளுக்கும், மசூதிகளுக்கும் தீ வைத்தது குறித்து, அங்கே தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பது குறித்து வாய்மூடி மௌனியாக உள்ளனர். ஏனெனில் இத்தகைய கொடூரச் செயலை செய்த கொடியவர்கள் யார் என்பது பட்டவர்த்தனமாக முதலமைச்சருக்குத் தெரியும்.

அவர்கள் காப்பாற்றப்பட வேண்டியவர்கள் என்பதால் அதனை மூடி முக்காடிட்டு மறைத்து விட்டு – வன்முறைக்கு காரணம் இஸ்லாமியர்கள் என முதல்வர் கூறுகின்றார் – இதுதான் குஜராத் மாடல்.

வன்முறை நடைபெறும் என உளவுத்துறை முன்கூட்டியே தகவல் அறிவித்ததாக குற்ற புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் ஒருவர் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தது, சமூக ஊடகங்களிலும் பரவிய நிலையில், அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் சிங் எந்த தகவலும் அரசுக்கு வரவில்லை என மறுக்கின்றார். இதுதான் குஜராத் மாடல்

குஜராத்தில் ருசி கண்ட திருட்டுப் பூனை, நாடு முழுவதும் ருசி காண துடிக்கின்றது.

மதத்தீ, சாதித்தீ, கடவுள்தீ மட்டும் போதுமா? போதாது. மொழித் தீயையும் பற்றவைக்க வேண்டுமல்லவா?

வன்முறைக்கு, கலவரத்திற்கு பெயர் பெற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா தன் மிரட்டும் விழிகளை அகல விரித்தவாறு கூறுகின்றார், தமிழ் உள்ளிட்ட மொழிகள் அனைத்தும் உள்ளூர் மொழிகள். காலப்போக்கில் அனைவரும் இந்தி மொழியை ஏற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கின்றார்.

எங்கோ அல்ல, நாடாளுமன்ற அலுவல் மொழிகளுக்கான கூட்டத்திற்கு தலைமை ஏற்று உரையாற்றுகின்றார். அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியல் இடப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளை கூச்சநாச்சமின்றி உள்ளூர் மொழி என அகம்பாவத்துடன் கூறுகின்றார். காலப்போக்கில் இந்தியை அனைவரும் ஏற்கும் சூழலை உருவாக்க வேண்டும் என கொக்கரித்துள்ளார்.

எட்டாம் அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் சமமாக பாவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து, பாஜக தடம்புரண்டு வெகு நாட்களாகி விட்டன.

மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியில் பாரபட்சம். தமிழ் மொழிக்கு குறைவு – இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு அதிக நிதி – ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலையை தான் பாஜக அரசு மேற்கொள்கிறது.

ஒரே நாடு, – ஒரே மொழி – அது எந்த மொழி? இந்தி மொழி – இதுதான் பாஜகவின் கொள்கை.

இந்தக் கொள்கையை வெளிப்படுத்துவதன் மூலம், மொழி மோதல் உருவாக வேண்டும் – அம்மோதலின் மூலம் அற்பத்தனமான அரசியல் ஆதாயம் பெற வேண்டும். இதுவே அமித்ஷாவின் குறிக்கோள்.

இவை எல்லாம் இவர்கள் அறியாமல் செய்யும் பிழையல்ல; –  மாறாக தெரிந்தே, திட்டமிட்டே மேற்கொள்கிறார்கள். தங்களது அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு கேட்க வக்கற்றவர்கள் – கலகத்தின் மூலம் காரியம் சாதிக்க துடியாய் துடிக்கின்றார்கள்.

இவர்களின் சூட்சுமத்தை நாம் அறிவது மட்டுமல்ல – நாட்டு மக்கள் அறிந்திட செய்திட வேண்டும். மக்கள் மத்தியில் ஏற்படும் விழிப்புணர்ச்சிதான், நாட்டிற்கு ஏற்படவுள்ள பேராபத்தை தடுத்து நிறுத்திட முடியும்.

பா.ஜ.க அதிகார பீடத்தில் அட்டை போல் ஒட்டிக்கொள்ள 2024 தேர்தலுக்கு முன்பாக எத்தகைய தீங்கும் விளைவிக்கும்.

இத்தகைய அபாயத்தை அடையாளம் கண்டு – மக்களிடம் எடுத்துச் சொல்ல களப்பணிகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

குஜராத்தில் ருசி கண்ட திருட்டுப் பூனை; நாட்டையே தீக்கிரையாக்க முயல்கின்றது. நாடு காக்கப்பட –  ஜனநாயகம் காக்கப்பட நமது போர் முழுக்கம் எட்டு திசையும் எதிரொலிக்கட்டும்.

மீண்டும் சந்திப்போம். வணக்கம்

தோழமைமிக்க,

(இரா.முத்தரசன்)

மாநிலச் செயலாளர்

(ஜனசக்தி ஆகஸ்ட் 13-19 இதழ்)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button