ஏழைகளின் இதயம் நீ!
இருள்காலை உதயம்நீ!
தோழர்களின் துணைவன் நீ!
தொண்டறத்தின் சிகரம் நீ!
எளியோரின் இலக்கியம் நீ!
எளிமைக்கும் இலக்கணம் நீ!
தூய்மையின் இருப்பிடம் நீ!
தோற்காத இலட்சியம் நீ!
தனிவுடைமை சிதைப்பவன் நீ!
தலைநிமிர்ந்த இமயம் நீ!
என்று எழுதினார் பாவலர் பல்லவன். பொதுநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பொதுவுக்காய் வாழும் பொதுவுடமைத் தலைவர் தோழர் நல்லகண்ணு நூற்றாண்டு விழா காண்கிறார் இன்று. (டிசம்பர் 26)
இந்தியாவின் ஆட்சியைக் கவிழ்த்து கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை நிறுவ முயற்சிப்பதாக 1948 காலக்கட்டத்தில் பல்வேறு ஊர்களில் கம்யூனிஸ்ட் தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். பலரும் தலைமறைவு ஆனார்கள். பலரும் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட தோழர்களில் ஒருவர் நல்லகண்ணு,
இரண்டு ஆண்டு காலம் தலைமறைவில் இருந்த தோழர் நல்லகண்ணு 1949 டிசம்பர் 20 அன்று கைது செய்யப்பட்டார். எந்தப் பண்ணையார்களை எதிர்த்து நீதி கேட்டாரோ அந்தப் பண்ணையார்கள் முன்பாகவே அடித்து சித்திரவதை செய்யப்பட்டார். கையும் காலும் கட்டப்பட்டு முச்சந்தியில் போட்டு அடித்தார்கள். அவரது மீசையை சிகரெட் நெருப்பால் சுட்டார்கள். மலை உச்சிக்கு தூக்கிச் சென்று. ‘இதில் இருந்து தான் பலரையும் தூக்கிப் போட்டேன். இப்போது உன்னையும் போடப் போகிறேன்’ என்றார் போலீஸ்காரர். அப்போதும் வாயைத் திறக்காமல் நெஞ்சுரத்தோடு இருந்தவர்தான் நல்லகண்ணு.
“கம்யூனிஸ்ட்டுகளான எங்களைப் போன்றோர். விடுதலை இந்தியாவில் வறுமை ஒழிக்கப்பட வேண்டுமென்று விரும்பினோம். அந்நிய அதிகாரிகளுக்கு அடுத்தபடியாக மக்களை அடக்கி வந்த ஜமீன்தார்கள். மிராசுதார்களிடமிருந்து கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமென்று கருதினோம். ஜமீன் தார்களையும் மிராசுதார்களையும் மடாதிபதிகளையும் எதிர்த்து உழவர்களை ஒன்று திரட்டினோம். அணு அணுவாய்ப் போராடி உரிமைகளைப் பெற்றோம் என்பதை விட உரிமைகளைப் பறித்தோம்” என்று சொன்னார் நல்லகண்ணு.
ஏழு ஆண்டுகள் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகும், முன்னிலும் உரம் பெற்று உழைத்தார். சுதந்திர இந்தியாவில் பொதுவுடமைத் தத்துவம் தமிழ்நாட்டில் வளர உழைத்ததில் தோழர் நல்லகண்ணுவின் பங்கு பெரும்பங்கு ஆகும். வரலாற்றில் தனிமனிதர்களின் பங்கை ஒப்புக் கொண்ட தத்துவம்தான் மார்க்சியம். அதன்படி வரலாற்றில் பெரும்பங்கு தோழருக்கும் உண்டு.
இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் சாய்நாத். தோழர் நல்லகண்ணுவிடம் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கேள்வியைக் கேட்டார். உங்கள் வாழ்க்கையில் சோர்வே ஏற்படவில்லையா?” என்று!
“நாங்கள் எச்சரிக்கைகள், மிரட்டல்கள் தாண்டி எழுந்து நின்றோம். அதனால்தான் நாங்கள் இன்றும் இங்கிருக்கிறோம்” என்றார் நல்லகண்ணு.
இப்போது தோழர் நல்லகண்ணு. பொதுவுடமைத் தத்துவத்தின் அடையாளமாக நம் முன் காட்சியளிக்கிறார். பொதுவுடமை என்பது எது என்பதன் அடையாளமும் அவர் தான். மார்க்ஸ் – அம்பேத்கர் பெரியார் ஆகிய மூன்றின் கூட்டுத் தத்துவமாக தமிழ்நாட்டில் பொதுவுடமைச் சிந்தையை வளர்த்த வார்ப்பித்த ஆளுமைகளில் ஒருவர்தான் தோழர் நல்ல கண்ணு. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் நீட்சியாக, மாவீரர் ஜீவாவின் தொடர்ச்சியாக இருப்பவர் தோழர் நல்லகண்ணு,
அன்றைய காலனியாதிக்க காலம் முதல் – இன்றைய மதவாத எதேச்சதிகார காலம் வரை எதை – எப்போது மிகச் சரியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் கணித்து அதை. அப்போதே எதிர்த்து அரசியல் களம் அமைப்பதில் நேரிய சிந்தனை கொண்ட நேர்மையாளராக வலம் வந்தவர் அய்யா நல்லகண்ணு அவர்கள்.
பொதுவுடமை – சமூகநீதி – சாதி ஒழிப்பு – மதவாத எதிர்ப்பு தேசிய இனப்பிரச்சினை – தமிழுக்குச் சிறப்பு-தமிழின மேம்பாடு-ஆகிய அனைத்துக்கும் சரிசமமான முக்கியத்துவம் கொடுத்து உழைத்தவர் தோழர் நல்லகண்ணு. உழைக்க வழிகாட்டியவரும் அவரே!
“சுதந்திரமும் சோசலிசமும் பிரிக்க முடியாதவை. சுதந்திரத்திலிருந்து சோசலிசத்தையோ. சோசலிசத்திலிருந்து சுதந்திரத்தையோ பிரித்தால் எஞ்சுவது சூனியம்தான். வெற்றி என்பது ஓர் இயக்கத்துக்கு, இலட்சியத்துக்கு. கட்சிக்கு இறுதி நிகழ்ச்சியல்ல. முந்திய தலைமுறை விட்ட இடத்திலிருந்து புதிய தலைமுறை தொடர்ந்து இயங்க வேண்டும். வேலைத் திட்டம் என்பது பசி. வெற்றி என்பது அதற்குக் கிடைக்கும் உணவு. உணவு கிடைத்துவிட்டது என்பதால் பசி நின்று விடாது. பசியும் உணவும் தொடர வேண்டும்” என்றவர் தோழர் நல்லகண்ணு.
வாழ்க்கையில் இறுதி வெற்றி என்று எதுவுமில்லை. வாழ்க்கை முழுக்கவே போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று கற்பித்த தோழர் நல்லகண்ணு. 100 ஆண்டுகள் கடந்த பின்னும் போராடிக் கொண்டே இருக்கிறார். போராட்டம்தான் வாழ்க்கை என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கும் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ‘தகை சால் தமிழர்’ விருது வழங்கிப் பாராட்டி இருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தலைதாளாத ‘தகை சால் தமிழர்’ தோழர் நல்லகண்ணு வாழ்க!