சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகள் மீது முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்
மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்
சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகள் மீது முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும், நிலைக் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் தொழில் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அடர்த்தியான மின் நுகர்வு நேர கூடுதல் கட்டணத்தை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும், மின்கட்டண பட்டி 3 ஏ 1 க்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அரசின் கவனத்தை குறிப்பாக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாண்புமிகு சிறு, குறு தொழில்துறை அமைச்சர், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசும் அரசின் அணுகுமுறை வரவேற்கத்தக்கது. இருப்பினும் தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு, பொருளாதார சுயசார்பு, பொருள் உற்பத்தி மற்றும் தயாரிப்பு போன்றவற்றில் பெரும் பங்களிக்கும் ஜவுளி, மின்பொருள் உற்பத்தி, எந்திரங்கள் தயாரிப்பு, உப பொருட்கள் தயாரிப்பு என பரந்தபட்ட அளவில் நடந்து வரும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மீதும், அதன் முதலீட்டாளர்களின் கோரிக்கைகள் மீதும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு பேசுவதும், தீர்வு காண்பதும் உடனடித் தேவையாகும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது என்று மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.