கே.சுப்பராயன் எம்.பி.யின் இடைவிடாத முயற்சி வெற்றி
நாடாளுமன்ற அவை நடவடிக்கை அனைத்தும் 22 மொழிகளிலும் உடனடி நிகழ்நேர இரு வழி மொழிபெயர்ப்பு!

நாடாளுமன்றத்தில் தற்போது எந்த மொழியில் பேசினாலும் உறுப்பினர்களுக்கு தெரிந்த மொழியில் அதற்கான மொழிபெயர்ப்பு உடனுக்குடன் கிடைக்கும் என்ற நிலை கே.சுப்பராயன் எம்பியின் தொடர் முயற்சியால் நிறைவேறியுள்ளது.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் இருந்து, 2004ல் வெற்றி பெற்று, தோழர் கே சுப்பராயன் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த போது, அங்கு ஆங்கிலம் அல்லது இந்தி ஆகிய இரு மொழிகளில் ஒன்றில்தான் பேசியாக வேண்டும்.
தமிழ் உள்பட தாய்மொழிகளில் பேச வேண்டும் என்றால், முன்னதாகவே தெரிவித்தால்தான் ஒரு மொழிபெயர்ப்பாளர் அமர்த்தப்பட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்ப்பார்.
இது நியாயமற்றது என்று தனது போராட்டத்தை அப்போதே தொடங்கினார் கே.சுப்பராயன்.
இரண்டாவது தடவையாக திருப்பூர் தொகுதியில் இருந்து 2019ல் தேர்வு செய்யப்பட்ட பின்பு, தனது போராட்டத்தை இன்னும் கூர்மையாக்கினார்.
2021 பிப்ரவரி 23ல் பிரதமர் மோடிக்கு, நாடாளுமன்றத்துக்குள் எந்த நேரத்திலும், அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ள 22 மொழிகளில், எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசவும், அதேபோல எந்த மொழியில் பேசினாலும், அந்த 22 மொழிகளிலும் மொழிபெயர்க்கப் படவும், இரு வழித் தொடர்பை உருவாக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார்.
“அவையில் நடைபெறும் விவாதங்கள், கேள்வி நேரம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் இருவழி மொழிபெயர்ப்பு அவசியம். மக்களால் தேர்வு செய்யப்பட்டு வரும் பிரதிநிதிகள், மொழித் தடையின் காரணமாக, தான் பேச நினைப்பதைப் பேசி, ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து தடுக்கப்படுவதை இன்னும் தொடரக்கூடாது. இதற்கு முன்பும் நாடாளுமன்றத்தில் பலமுறை இது பற்றி விவாதங்களில் பேசியிருக்கிறேன்.
இப்போது 22 மொழிகளில் எதில் வேண்டுமானாலும் பேச முடியும் என்ற நிலை வந்திருக்கிறது. ஆனால் எதில் பேசினாலும் இந்தியிலோ, ஆங்கிலத்திலோ மட்டுமே தான் மொழிபெயர்க்கப்படுகிறது. இது ஒருவழிப் பாதை ஆகும். இந்த இரண்டு மொழிகளும் தெரியாத மக்கள் பிரதிநிதி, நாடாளுமன்றத்தில் என்ன பேசப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளவும், தலையீடு செய்யவும் இயலாதவராக முடக்கப்படுவது சரியல்ல. ஞானமும், அறிவும், அனுபவமும் இருந்தும், புரியாத மொழியில் பேசுவதால், அந்த உறுப்பினர்கள் தமது சரியான பங்களிப்பை தர இயலாத நிலை ஏற்படுத்தப்படுகிறது. இது அந்தப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்களுக்கும், ஜனநாயகப் பண்பாட்டுக்கும் இழைக்கப்படும் துரோகமாகும்.”
“அரசியல் சாசனத்தின் 120வது பிரிவு, ஆங்கிலம் மற்றும் இந்தியை நன்கு அறிந்திடாத எம்.பி.க்கள் தங்களது தாய் மொழியில் பேசலாம் என உறுதிப்படுத்துகிறது. ஆனால் 70 ஆண்டுகள் கடந்த பின்னும் அதை நிறைவேற்றவில்லை. இன்றுள்ள சூழலில் நாடாளுமன்றத்தில் நடப்பது அனைத்தையும் புரிந்து கொள்ளவும், தாமும் பங்கேற்கவும் வழி செய்வது அவசியமானது. இந்திய நாட்டைப் போலவே, இந்திய நாடாளுமன்றமும் பல மொழிகளில் இயங்கியாக வேண்டும்.
தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி பெறும் இன்றைய காலத்தில், அரசியல் சாசனம் பட்டியலிட்டுள்ள 22 மொழிகளிலும் மொழிபெயர்த்து தருவது ஒன்றும் கடினமான செயல் அல்ல. இரு வழி மொழி பெயர்ப்பைத் தர வேண்டும் என்று அரசு முடிவு செய்துவிட்டால், அதை தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு நிறைவேற்றிவிட முடியும். நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள், அரசியல் சாசனப்படி தமது கடமைகளை நிறைவேற்ற அவர்களுக்கு முழு சுதந்திரமும், வெளியும் உருவாக்கித் தருவது இன்னும் தள்ளி போட முடியாததாகும்” என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.
2021 மார்ச் மாதம் 9ம் தேதியன்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் நாடாளுமன்ற விவகார துறைக்கு அனுப்பப்பட்டு, அதன் நகல் சுப்பராயனுக்கு தரப்படுகிறது. “இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் கடிதம் அனுப்பி இருக்கிறார். இதனை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அவர்களின் பார்வைக்கு வைக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்ள நான் பணிக்கப்பட்டுள்ளேன்” என்று அந்த கடிதம் கூறுகிறது. எவ்வளவு தகிடு தத்தமான எழுத்து நடை பாருங்கள்! அந்தக் காகிதம் பூராவும் பல மேசைகளுக்கு அது நகர்த்தப்பட்டதன் அடையாளமாக பல கையெழுத்துக்கள் உள்ளன.
2021 மார்ச் 17ஆம் நாள், கே சுப்பராயன் கடிதத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை செயலாளர் ஆர்.எஸ்.சுக்லா பதில் தருகிறார். பிரதமர் அலுவலகம் தன்னிடம் தள்ளிவிட்ட பொறுப்பை, இவர் மக்களவை செயலகத்திற்கு தள்ளி விடுகிறார்.
“நீங்கள் கூறியுள்ள விவரங்களை நிறைவேற்றித் தர வேண்டியது, மக்களவைச் செயலகத்தினுடைய நிர்வாக வேலை என்பதால், பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்” என்று கூறி, மக்களவைச் செயலகத்துக்கு அனுப்பிய கடிதத்தின் நகலையும் இணைத்து இருக்கிறார்.
அதோடு சரி. விஷயம் கிணற்றில் போட்ட கல்லாக இருப்பதைக் கண்டு, கே. சுப்பராயன் எம்.பி மீண்டும் வினாக்கணை தொடுக்கிறார்.
2021 அக்டோபர் 8ம் தேதி அன்று, மீண்டும் பிரதமருக்கு ஒரு கடிதத்தை அவர் எழுதுகிறார். மேலேசொன்ன கடிதங்களை எல்லாம் குறிப்பிட்டு விட்டு, “நடவடிக்கை எடுக்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, உள்கட்டமைப்பு உருவாக்கப்படவும் இல்லை. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்குள் கட்டமைப்பை உருவாக்கி 22 மொழிகளிலும் இரு வழி மொழி பெயர்ப்பை துவக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் நகல், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருக்கு அனுப்பப்படுகிறது.
2021 அக்டோபர் 20 ஆம் நாள் அன்று, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஒரு கடிதம் எழுதி, உங்கள் கடிதத்தை நான் பெற்றுக் கொண்டேன் என்று ஒப்புகை தருகிறார். அவ்வளவே!
2021 டிசம்பர் 28ஆம் தேதி அன்று மக்களவை செயலகத்தில் துணைச் செயலாளர் சவுதா காலியா தந்துள்ள பதிலில், அரசியல் சாசனத்தில் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் இரு வழி மொழிபெயர்ப்பை மேற்கொள்வதற்காக பொருத்தமான உள்கட்டமைப்பை மக்களவையில் ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
ஒரு வழியாக கோரிக்கை ஏற்கப்பட்டது, அதனை நிறைவேற்ற நடவடிக்கைகள் துவங்கப்பட்டு விட்டன என்பதைக் கடிதம் கோடிட்டுக் காட்டுகிறது.
2022 ஏப்ரல் 13ஆம் தேதி அன்று, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் சத்திய பிரகாஷ், கே சுப்பராயன் எம்பி-க்கு மீண்டும் கடிதம் எழுதுகிறார்.
ஒன்றிய அரசிடமிருந்து வரும் எல்லா கடிதங்களிலும், சுப்பராயன் எம்பி-யின் கடிதத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் அவர்களும் திரும்பச் சொல்லி இருப்பார்கள். ஆனால் அதன் மீது என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் திட்டமான சொற்களில் இருக்காது.
ஆனால் இந்தக் கடிதத்தில், கதை எல்லாம் சொல்லிவிட்டு கடைசியாக, அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் கண்ட 22 மொழிகளிலும் இரு வழி மொழிபெயர்ப்பு மேற்கொள்வது சம்பந்தமாக மக்களவை செயலகம் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறியிருப்பதாக உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். அதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து அவர்கள் ஒரு கடிதமும் எழுதி இருக்கிறார்கள் என்று சொல்லி, அதன் நகல் அனுப்பப்படுகிறது.
2023 அக்டோபர் 27ல் கே.சுப்பராயன் எம்.பி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருக்கு மீண்டும் கடிதம் எழுதுகிறார்.
அதில் மக்களவை செயலகத்தின் கூடுதல் செயலாளர் தனக்கு எழுதிய கடிதத்தில், 22 மொழிகளிலும் மொழிபெயர்ப்பதற்கான ஆயத்த நடவடிக்கைகள் துவங்கி விட்டதாக கூறியிருந்த போதிலும், அந்த திசையில் எதுவும் செய்யப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
திரும்பத் திரும்ப இந்த விஷயத்தை வலியுறுத்தி வருவதை எடுத்துக்காட்டியதோடு, “அவையில் விவாதிக்கப்படும் அனைத்தையும் அவை உறுப்பினர் அறிந்திருப்பதுதான் ஜனநாயகத்தின் அடித்தளமாகும். 75 ஆண்டுகளாக இதனை செய்யாமல் இருப்பது பெரும் தோல்வியாகும். இப்போதாவது இது சரி செய்யப்பட வேண்டும். புதிய மக்களவை கட்டிடம் கட்டி முடித்து துவக்கப்பட்டு விட்டது. “விடுதலையின் அமுதப் பெருவிழா” என அரசு கொண்டாடும் இந்த நேரத்தில், அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பதற்கான அரசியல் சாசன ஆணை நிறைவேற்றப்பட்டாக வேண்டும். உடனடியாக இதனை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2023 டிசம்பர் 18ஆம் நாள், நாடாளுமன்ற விவகார துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளர் டாக்டர் சத்திய பிரகாஷ், மக்களவை செயலகத்தின் பொதுச்செயலாளர் உத்பல் குமார் சிங் என்பாருக்கு எழுதிய அலுவலக கடிதத்தில், கே சுப்பராயன் எம்.பியின் கடிதத்தை சுட்டிக்காட்டி, “எது பொருத்தமானதோ அதனை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுக்குமாறு” வழிகாட்டுகிறார்.
2023 டிசம்பர் 19ஆம் தேதியன்று, மேற்சொன்ன கடிதத்தை இணைத்து, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகத்தின் செயலாளர் உமாங் நருலா, கே சுப்பராயன் எம்பி-க்கு கடிதம் எழுதுகிறார். அதில் மக்களவை செயலகத்தை தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
18வது மக்களவைக்கான தேர்தல் 2024 இல் நடத்தப்பட்டு, திருப்பூர் தொகுதியில் இருந்து மீண்டும் கே.சுப்பராயன் தேர்வு செய்யப்படுகிறார். இதன்பின்பு, 22 மொழிகளிலும் ஒரே நேரத்தில் இருவழி மொழிபெயர்ப்பும் செய்வதற்கான நடவடிக்கையை அரசு துவக்குகிறது. இதற்கு நன்றி கூறி, விரைவில் செயல்பாட்டை துவங்குமாறு வலியுறுத்தி அடுத்த கடிதத்தை கே.சுப்பராயன் எம்.பி எழுதுகிறார்.
2024 ஜூலை 29ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதம் பின்வருமாறு கூறுகிறது.
“இருவழி நிகழ்நேர மொழிபெயர்ப்பு தொடர்பான எனது இடைவிடாத வேண்டுகோள்கள் சாதகமாகக் கவனிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். புதிய நாடாளுமன்றத்தில் உள்கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற அலுவல்களை ஒரே நேரத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் புரிகிற மொழியில் கொடுப்பது பொருள் பொதிந்த கடமையாகும். நாடாளுமன்ற அலுவல்களை உண்மையான அர்த்தத்தில் உள்ளடக்கியதாக ஆக்குகிறது. இந்த மிக மிக இன்றியமையாத ஏற்பாட்டை உறுதி செய்ததற்கு நன்றி.
அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணையின் கீழ் உள்ள 22 மொழிகளில், தற்போது எத்தனை மொழிகள் நிகழ்நேர மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்கிறது அந்தக் கடிதம்.
இரண்டு மொழிகளில் மட்டுமே பேசவும் கேட்கவும் முடியும் என்ற பழைய நிலையை உடைத்து எறிந்து, பிறகு எந்த மொழியில் பேசினாலும், ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்ற நிலைக்கு வந்து, இப்போது எந்த மொழியில் பேசினாலும் உறுப்பினருக்கு தெரிந்த மொழியில் அதற்கான மொழிபெயர்ப்பு உடனுக்குடன் கிடைக்கும் என்ற நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
தமிழில் பேசவும் கேட்கவும் மட்டுமல்ல, இந்திய அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ள அத்தனை மொழிகளிலும் ஒரே நேரத்தில் இரு வழி மொழிபெயர்ப்பு என்பதை கொண்டு வர கே.சுப்பராயன் எம்.பி எடுத்த நடவடிக்கைகள் இப்போது பயனளித்துள்ளன.
இந்தியை எல்லா இடங்களிலும் திணிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று பகிரங்கமாக பேசும் ஒரு அரசாங்கத்தை, திரும்பத் திரும்ப வலியுறுத்தி, நாடாளுமன்ற அலுவல்களை அனைத்து மொழிகளிலும் கேட்கவும், தனக்கு வசதியான மொழியில் பேசவும் உரிய கட்டமைப்பை உருவாக்க, இடைவிடாது முயற்சித்து வெற்றி கண்டுள்ள தோழர் கே.சுப்பராயன் எம்.பி அவர்கள் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
தமிழின் உன்னதம் பற்றியும், வேறு மொழியைத் திணித்து அதன் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் பற்றியும் விரிவாகப் பேசும் ஊடகங்கள், இடைவிடாது முயன்று பெற்றுள்ள இந்த வெற்றியைத் தமிழ்ச் சமூகத்திற்குக் கொண்டு சேர்ப்பது அவசியமானதாகும்.