ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி எட்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி உள்ளது இந்தியக் கிரிக்கெட் அணி. ஆட்ட நாயகன் பந்து வீச்சாளர் மொஹமத் சிராஜ்.
சிராஜ் தனது நான்காவது ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் இந்த இறுதிப் போட்டியின் முக்கிய அம்சம். மொத்தம் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்தியா இலங்கையை 15.2 ஓவர்களில் வெறும் 50 ரன்களில் சுருட்ட முடிந்தது. எனவே இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணிக்கு வெற்றிக்கான இலக்கு மிகவும் எளிதாகியது. வெற்றி கிட்டியது.
ஆட்டத்தில் மட்டுமல்ல. எந்த ஆட்டக்காரரும் செய்யாத ஒன்றை செய்திருக்கிறார் இந்த இந்திய கிரிக்கெட் வீரர்.
தனது அபாரமான கோப்பையை வெல்லும் பந்து வீச்சிற்காக வெகுமதியாகக் கிடைத்த ஆசியக் கோப்பையின் இறுதி ஆட்டக்காரர் பரிசான 5,000 அமெரிக்க டாலர்களை (இந்திய நாணய மதிப்பில் 4,16,450 ரூபாய்) இலங்கை ஆடுகளத்தின் மைதான ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார். அவர்களுடைய அயராத கடும் உழைப்பே இறுதி ஆட்டம் நடைபெறுவதை சாத்தியப்படுத்தியது என்கிறார் சிராஜ்.
அனேகமாக கிரிக்கெட் வரலாற்றிலேயே மைதானத் தொழிலாளர்களின் அரும்பணியை அங்கீகரித்துத் தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையை முழுதும் கொடுத்து பாராட்டியவர் சிராஜ் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
இந்திய கிரிக்கெட் அணிக்குப் பாராட்டுக்கள் குவிகின்றன. அதற்கு முக்கிய காரணமான மொகமது சிராஜை கொண்டாட ‘பாரதம்’ தயங்குவது ஏன் என சொல்லித் தெரிய வேண்டியதில்லை.