
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
‘‘நல்ல அரசன் அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமல் போகும் என்கிறது திருக்குறள்.-
கோழைகளே சர்வாதிகாரிகளை உருவாக்குகிறார்கள் என்றார் மார்க்சிம் கார்க்கி அந்த வகையில்தான் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் மனிதாபிமானம் அற்ற முறையில் அமெரிக்க அரசால் கை விளங்கிட்டு, கால் விளங்கிட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போதும் அது வழக்கமான நடவடிக்கை தான் என்று மோடியால் பாஜக அரசாங்கத்தால் ஜாலம் பேச முடிகிறது. அதுவும் வெளிநாடுகளில் குறிப்பாக பாகிஸ்தான், பங்களாதேசில் இந்துக்கள் தாக்கப்பட்டால் பொங்கி ஏழும் சங்கீகள் இதில் நவ துவாரங்களையும் அடைத்து அமைதி காத்தனர்.
மோடியின் நண்பர் ட்ரம்ப்!
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் சட்ட விரோதமாக, ஆவணங்களின்றி குடியேறியவர்களை திருப்பி அனுப்புவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறார்.
சட்ட விரோத குடியேறிகளைத் திருப்பி அனுப்புவது, டிரம்பின் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. அதிபரான முதல் நாளில் டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவுகளில் குடியேற்றம் சம்பந்தப்பட்ட உத்தரவுகளும் அடங்கும்.
கடந்த பிப்ரவரி 4 ம் தேதி இரவு டெக்சாஸ் மாகாணத்திலிருந்து சி17 போர் விமானம் புறப்பட்டது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்தத் தகவலின்படி, இந்த விமானத்தில் 104 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ்ஜி சர்வதேச விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்கியது.
இந்திய குடிமக்கள் நாடு கடத்தப்படுவது இதுவே முதல் முறை. விமானத்தில் இருந்தவர்கள் கைவிலங்கிடப்பட்டு இருந்த காணொளி சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளானது, இந்தியாவில் சர்ச்சையையும் கிளப்பியது.
இப்படி முதல் கட்டமாக நாடு கடத்தப்பட்டவர்களில், ஹரியானா -35, குஜராத் 33, பஞ்சாப் – 31, உத்தரப்பிரதேசம் -3, மகாராஷ்டிரா 2 என்ற எண்ணிக்கையில் அமைந்தது.
தேனாறும், பாலாறும் ஓடும் பாஜக ஆட்சி செய்யும் குஜராத்தில் வேலையின்மையால் வாட்டமுற்ற பலர் தங்களது உயிரை பணயம் வைத்து கடந்த சில ஆண்டுகளாக 50 லட்சம் முதல், 1 கோடி ரூபாய் வரை செலவழித்து அமெரிக்காவிற்கு ஆவணங்கள் இன்றி சென்ற நிலையில்தான் இன்று இப்படி மீண்டும் நாடு கடத்தப்பட்டு திரும்பி உள்ளனர். இனியும் பல விமானங்கள் இந்தியாவிற்கு வரலாம்.
அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடி தந்த யு.பி.ஏ அரசாங்கம்!
கடந்த 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இந்திய தூதர் தேவயானி கோப்ரகடே “கைவிலங்கு செய்யப்பட்டு, ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டபோது” ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இந்தியா அளித்த பதிலடி அப்போதைய வெளியுறவுச் செயலாளர் சுஜாதா சிங், அப்போதைய இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் நான்சி பவலுடன் கடுமையான தனது எதிர்ப்பைப் பதிவு செய்ததார்.
முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார், ராகுல் காந்தி மற்றும் சுஷில் குமார் ஷிண்டே போன்ற காங்கிரஸ் தலைவர்கள் அந்த நேரத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க காங்கிரஸ் குழுவை சந்திக்க மறுத்ததையும், அமெரிக்க தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பல சலுகைகளை இந்திய அரசு திரும்பப் பெற்றதையும் பெருமையோடு சொல்லலாம். ஆனால், இன்று இந்தியா ஏன் இப்படி பல்லிலுத்து நிற்கிறது?
தொடரும் படலம்!
இதுவரை சுமார் 18,000 இந்தியர்களை அனுப்புவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. மேலும் 3,000 இந்தியர்கள் ஏற்கனவே முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 20,000 இந்தியர்கள் உடனடியாக நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர். நீதிமன்ற விசாரணைகள் இல்லாமலேயே அவர்கள் நாடு கடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
எது எப்படி போனாலும் சட்டவிரோதமாக ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் வாழ்ந்தாலும் அவர்கள் குற்றவாளிகளாக இருந்தாலும், இவர்களை நம் நாட்டோடு பரிமாறிக் கொள்ள தனித்த ஒப்பந்தங்கள் இருந்தும் ஐக்கிய நாடுகள் சபையால் மனித உரிமைகள் குறித்து தெளிவாக வரையறுக்கப்பட்டாலும், அவற்றை எல்லாம் அடாவடித்தனமாக மீறுவதுதான் அமெரிக்காவின் வாடிக்கை அந்த நாட்டிற்கு அடிமை ஊழியம் செய்வதற்கே தாங்கள் அவதரித்ததாக கூறிக்கொண்டு அரசியல் நடத்தும் பாசிச பாஜக இன்று வெளிரிப் போய் குட்டு வெளிப்பட்டு நிற்கிறது.
கொலம்பியாவின் தன்மான உணர்ச்சி!
அதிபராக பதவியேற்றதும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் எனக் கூறி, கொலம்பியா நாட்டைச் சேர்ந்த சிலரை ராணுவ விமானத்தில் டிரம்ப் அரசு திருப்பி அனுப்பியது. கைகள் கட்டப்பட்டு ராணுவ விமானத்தில் வந்தவர்களை கொலம்பியா அரசு ஏற்க மறுத்தது. சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்ணியத்துடன் அனுப்ப வேண்டும், ராணுவ விமானத்தில் அனுப்பக் கூடாது எனக் கூறிய கொலம்பியா அதிபர், அமெரிக்க ராணுவ விமானம் தரையிறங்க அனுமதி மறுத்துவிட்டார்.அதன் பின்பு தங்கள் நாட்டு பயணிகள் விமானத்தை அமெரிக்காவிற்கு அனுப்பி அவர்களை திரும்ப அழைத்து வந்தது கொலம்பிய இடதுசாரி அரசாங்கம். சின்னஞ்சிறு நாடான அந்த நாட்டின் அதிபருக்கு இருக்கும் நெஞ்சுரம் 56 இன்ச் பரப்பளவு உள்ள நெஞ்சுக்கு சொந்தக்காரரான மோடிக்கு இல்லாமல் போனது.
அமெரிக்க அடிமை மனநிலையில் இந்தியா!
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இந்தியர்களைக் கைவிலங்கிட்டு அழைத்து வந்த விதம் மனிதத்தன்மையற்றது, இதை பாஜக அரசு தவிர்க்க நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று கூறி நாடாளுமன்றம் கூடியபோது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
காங்கிரஸ், சமாஜ்வாதி, இந்தியக் கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால் அமளி தொடர்ந்ததால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மாநிலங்களவையில் இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.
அப்போது இப்படி அனுப்பப்படுவது புதிதல்ல வழக்கமான முறை தான் என்று அமெரிக்காவிற்கு வக்காலத்து வாங்கியது. எந்த வகையில் நியாயம்?
சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை எனக் கூறி, ஆண்டுவாரியாக ஜெய்சங்கர் ஒரு பட்டியலை வழங்கினார்.
அதன்படி, 2009ல் 734 பேர், 2010ல் 799 பேர், 2011ல் 599 பேர், 2012ல் 530 பேர், 2013ல் 515 பேர், 2014ல் 591 பேர், 2015ல் 708 பேர், 2016ல் 1303 பேர், 2017ல் 1024 பேர், 2018ல் 1180 பேர், 2019ல் 2042 பேர், 2020ல் 1,889 பேர், 2021ல் 805 பேர், 2022ல் 862 பேர், 2023ல் 617 பேர், 2024ல் 1,368 பேர், 2025ல் 104 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் நாடு கடத்தலை அந்நாட்டின் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை செய்வதாக குறிப்பிட்ட ஜெய்சங்கர், அதற்கான நிலையான நடைமுறை 2012 முதல் அமலில் இருப்பதாக குறிப்பிட்டு அதனை நியாயப்படுத்தி உள்ளார்.
தனது குடிமக்களுக்கு அமெரிக்கா அநீதி இழைத்த போது பொங்கி எழுந்த சின்னஞ்சிறு நாடான கொலம்பியா எங்கே? கனடா எங்கே? இந்த இந்திய தே(வே)சபக்தர்கள் எங்கே?
எவ்வளவு இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் உள்ளனர்?
அமெரிக்க அரசின் புள்ளிவிவரங்களின்படி, ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளனர். அதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியர்கள் என்கின்றனர்.
எனினும், இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து மாறுபட்ட கருத்துகள் உள்ளன.
பியூ ஆய்வு மையத்தின் புதிய தரவுகள் 2022-ல் 7,25,000 இந்தியர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் இருப்பதாக கணக்கிடுகிறது. இந்த தரவுகள் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள மொத்த சட்டவிரோத குடியேறிகள் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஆனால், இதற்கு மாறாக மைகிரேஷன் பாலிஸி இன்ஸ்டிட்யூட் இந்த எண்ணிக்கையை 3,75,000 என கணக்கிடுறது. இந்தத் தரவுகளின்படி, அமெரிக்காவில் உள்ள மொத்த சட்டவிரோத குடியேறிகள் வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
எப்படி நமது உள்நாட்டு கிராமப்புற மக்கள் வயிற்றுப் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி படையெடுக்கிறார்களோ அப்படித்தான் இவ்வளவு பேர் வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
போலி முழக்கங்களை மட்டும் முன்வைத்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்காத மோடி அரசின் விளைவுதான் இந்த இடப்பெயர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கிறது. அதற்கான எந்த முயற்சியும் எடுக்காதவர்கள் எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி அமைதி காக்கத்தானே செய்வார்கள்! ஆனால், நாடு அமைதியாக இருக்காது!