
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.
வஞ்சக மனத்தினனது பொய்யான நடத்தையைக் கண்டு, அவனுடம்பாக அமைந்து விளங்கும் ஐந்து பூதங்களும் தம்முள்ளே சிரித்துக் கொண்டிருக்கும் என்கிறது திருக்குறள். அதுபோலதான் பிரதமர் மோடியின் பேச்சும் நடத்தையும் அமைந்துவிடுகிறது.
சமீபத்தில் ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடி உதிர்த்த அரசியல் முத்துக்கள் ஒவ்வொன்றும் அவர் சுட்ட முந்தைய வடைகள் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது.திறந்து வைத்த பாலமும் உடனடியாகப் பழுதுபட்டு பேசுபொருளானது.
மீனவர்களின் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கும். மத்திய அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் 3700 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து தமக்குக் கடிதம் எழுதுபவர்களின் கையெழுத்து ஆங்கிலத்திலேயே உள்ளது. எனக்கு கடிதம் எழுதும் அரசியல் தலைவர்கள், கையெழுத்தையாவது தமிழில் போடுகள்.
வளர்ச்சியைடந்த பாரதம் நோக்கிய பயணத்தில், தமிழ்நாட்டுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் வல்லமை வளர்ச்சியைப் பொருத்து, பாரதத்தின் வளர்ச்சியும் விரைவாகும்.
தேசத்தின் அனைத்து இடங்களிலும் பாஜக தொண்டர்கள் மக்களுக்கு சேவை ஆற்றுவதைப் பார்த்து பெருமைப்படுகிறேன். சேவையாற்றும் கோடிக்கணக்கான பாஜக தொண்டர்களுக்கு நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். நன்றி, வணக்கம், மீண்டும் சந்திக்கிறேன் எனத் தனது உரையை பிரதமர் மோடி நிறைவு செய்தார்.
அரசு விழாவை எப்படியெல்லாம் சொந்தக் கட்சி அரசியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த முடியும் என்பதற்கு அதுவும் தேர்தல் காலம் என்றால் இதற்காகவே வருவதும், வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் எப்போதும் அவர் பின்பற்றுவது ஆகும்.
2014 க்கு முன்னர் வரையில் திமுக கூட்டணி ஆட்சியில் இருந்ததைவிட, கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது, தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கு அதிகளவில் ஒன்றிய அரசு உதவியுள்ளது என்று பேசியுள்ளார்.
தமிழ்நாட்டின் கட்டமைப்புதான், பாரத அரசின் முதன்மை. கடந்த 10 ஆண்டுகளிலே, தமிழ்நாட்டின் ரயில்வே துறை பட்ஜெட்டில் 7 மடங்குக்கும் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் செய்தபின்னரும் சிலர் அழுதுகொண்டே இருக்கின்றனர். அவர்களால் அழ மட்டுமே முடியும்; அவர்கள் அழுதுவிட்டுப் போகட்டும் என்று பேசியுள்ளார். அதிகம் வரி கொடுத்து அழுகிற காரணத்தால்தான் அதைத் திரும்பக் கேட்கிறார்கள் என்பது புரியாமல் பேசி உள்ளார்.
2014 ஆண்டுக்கு முன்னர் வரையில், ஒவ்வோர் ஆண்டும் ரயில் துறை திட்டங்களுக்காக வெறும் ரூ.900 கோடி மட்டுமே கிடைத்து வந்தது. அப்போதெல்லாம் கூட்டணியில் யார் ஆட்சி அமைத்திருந்தார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை. இந்தாண்டு, தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் ரூ.6,000 கோடிக்கும் அதிகம் என்று வானளாவிய முறையில் வர்ணித்துள்ளார்.ஆனால் உண்மை என்ன? கடந்த காலங்களில் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டு நடைபெற்று வரும் வேலைத்தொகையும் சேர்த்து இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதுதான் விந்தையிலும் விந்தை!
நிலுவையில் உள்ள ரயில் பாதைத் திட்டங்கள்
திண்டிவனம் – திருவண்ணாமலை (செஞ்சி வழியாக 70 கிலோமீட்டர்) புதிய ரயில் பாதை திட்டத்தின் மதிப்பு ரூ.900 கோடி. இந்தத் திட்டமானது 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை ரூ.72.87 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 4 பெரிய பாலங்கள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது வெறும் ரூ.1000 மட்டுமே.
திண்டிவனம் – நகரி திட்டம் (179 கிலோ மீட்டர்) 2008 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தற்போதைய மதிப்பு ரூ.3631 கோடி. இந்தத் திட்டத்திற்கு ரூ.806 கோடி இதுவரை செலவிடப்பட்டது. இதற்குத் தேவையான 594 ஹெக்டர் நிலத்தில் 510 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலம் கையகப்படுத்தபட்ட பின்னரே திட்டத்தின் பணிகள் தொடரும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கு ரூ.153.27 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது.
மதுரை-தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழியாக) (143.5 கி.மீ.) திட்டம் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தற்போதைய மதிப்பு ரூ.2053 கோடி. இதற்கு 771 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது. 90 ஹெக்டர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு பட்ஜெட்டில் வெறும் ரூ.18.72 கோடி ஒதுக்கப்பட்டது.
மொரப்பூர் – தருமபுரி ரயில் பாதைத் திட்டம் (36 கி.மீ). இதன் தற்போதைய மதிப்பு ரூ.358.95 கோடி. ஆனால் இதற்கு வெறும் ரூ.49.69 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமும் நிலுவையில் உள்ளது.
காரைக்கால் துறைமுகம் – பேரளம் திட்டம். இது 24 கிலோ மீட்டர் தொலைவில் அமையவுள்ளது. இது அகலப் பாதைத் திட்டத்தின் கீழும் வருகிறது. இதற்கு பிஜேபி கூட்டணி புதுச்சேரி அரசு நிலம் தரவில்லை. எனவே, இத்திட்டமும் நிலுவையில் உள்ளது.
நிலுவையில் உள்ள அகலப்பாதைத் திட்டங்கள்
நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி- வேளாங்கண்ணி திட்டம். இந்தத் திட்டத்திற்கு 100 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் 11 பாலங்கள் 172 சிறிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. இது காரைக்கால் துறைமுகம் – பேரளம் திட்டத்தோடு இணைகிறது. இந்தத் திட்டமும் நிலுவையில் உள்ளது.
மன்னார்குடி – பட்டுக்கோட்டை திட்டம் 2011 -12 நிதியாண்டில் துவங்கப்பட்டது. இதற்கு 152 ஹெக்டர் நிலம் இன்னும் கையகப்படுத்தாமல் இருப்பதால் இத்திட்டம் நிலுவையில் உள்ளது.
தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை அகலப்பாதை திட்டம் 2012 – 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.957.87 கோடி. இதைச் செயல்படுத்துவதற்கு 196 ஹெக்டர் நிலம் தேவை. மத்திய அரசின் உள்கட்டமைப்பு மற்றும் திட்டக் கண்காணிப்புத் துறை மாதாந்திரத் திட்ட முன்னேற்றம் தொடர்பான அறிக்கையில் இவ்விரு திட்டங்களுக்கும் விரிவான திட்ட மதிப்பிற்கு இதுவரை தொகை அளிக்கவில்லை. இதுதான் பாஜகவின் வளர்ச்சி முகம்! வாரி அளிக்கும் முறை!
ஓரவஞ்சனையில் ஒன்றிய அரசு
ஒன்றிய அரசு நிதி தராததால் தமிழ்நாட்டில் 19,000 வீடுகளைக் கட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு ரூ.847 கோடி நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்த காரணத்தால், தமிழக மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு எடுத்துக் கொடுத்துள்ளது.
இது அப்பட்டமான மிரட்டல். இந்திய வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும், ஒரு மாநிலத்திற்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையாக, கல்வியை அணுகுவதற்கான வாய்ப்புகளை நெரிக்கும் செயலைச் செய்ததில்லை. தங்கள் உரிமைகளுக்காக எதிர்த்து நின்றமைக்காக தமிழக மாணவர்களை மத்திய அரசு தண்டித்துள்ளது, இருந்தும் தமிழில் கையெழுத்து போடவில்லை என்று தமிழுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்!
தொடர்ந்து கிராமப்புற உழைப்பாளி மக்கள் போராடி வரும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அளிக்கப்படாததால் இன்னும் பலருக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.
பொய்ச் செய்திகள் பரப்புரை!
14,200 கோடி திட்டங்களின் பட்டியல்!
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என்னென்ன திட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது என மாநில பாஜகவினர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பட்டியலைப் பகிர்ந்து வந்தனர். அதில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம், சென்னை – விசாகப்பட்டினம் தொழில் வளர்ச்சித் திட்டம், சென்னை கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உட்பட அந்தப் பட்டியலில் உள்ள திட்டங்களின் விவரங்களைக் குறிப்பிட்டு, அந்தப் பட்டியல் பொய்யானது என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு மறுப்பு வெளியிட்டுள்ளது.
உலக வங்கி போன்ற வெளி நிதி நிறுவனங்களிடமிருந்து கடனைப் பெற்றுத் தருவதற்கான இணைப்பாக மட்டுமே மத்திய அரசு செயல்படுகிறது என்றும், இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கவில்லை. பட்ஜெட்டில் தமிழ்நாடு அல்லது சென்னை என்ற பெயரில் உள்ள வெளிநாட்டு நிதியுதவி பெறும் மாநில அரசு திட்டங்களை எடுத்து அவை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கிய திட்டங்கள் எனப் பொய்யான தகவலைப் பரப்புகின்றனர் என்றும் தமிழ்நாடு உண்மை அறியும் குழு சுட்டிக்காட்டுகிறது.
மேலும், “சென்னை மெட்ரோ ரயில் (இரண்டாம் கட்டம்) மாநில அரசின் திட்டமாகத் தொடங்கப்பட்டு, மிகுந்த காலதாமத்திற்குப் பின்னர் தொடர் கோரிக்கைகளின் மூலம் ஒன்றிய அரசின் உதவி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கூட, மாநில அரசு நிதி மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கடன் போக ஒரு சிறு பகுதியைத்தான் ஒன்றிய அரசு வழங்குகிறது என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மை ஒருநாள் வெளியாகும் அதில் பொய்யும் புரட்டும் வழியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது!
நிதிக் கூட்டாட்சிக்கு எதிரான சதி!
நிதி ஆணையம் சமமான வரிப் பகிர்வு, இலக்கு மானியங்கள் மற்றும் நிதி ஒருங்கிணைப்பு ஆகியவற்றைப் பரிந்துரைப்பதன் மூலம் நிதிக் கூட்டாட்சியை ஊக்குவிக்கிறது. எதிர்காலத்தில், சீர்திருத்தங்கள் மாநிலங்களின் வருவாய்ப் பங்கை அதிகரிப்பது, ஒன்றிய மாநிலத் திட்டங்களை மறுசீரமைத்தல், ஜி.எஸ்.டி பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் உள்ளூர் அரசாங்கங்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறது.
ஆனால் 42 சத நிதிப் பகிர்வை அளிப்பது போல் பாசாங்கு செய்கிறது. உண்மையில் 30 சதம் நிதிதான் மாநிலங்களுக்குப் பகிரப்படுகிறது. கடந்த யுபிஏ அரசை விட பல மடங்கு நாங்கள் பகிர்ந்தளிக்கிறோம் என்கிறார்கள். யுபிஏ அரசு காலத்தில் ஜிஎஸ்டி இல்லை மாநிலங்களின் சொந்த வரி விதிப்பு பெரும் ஆதாரமாய் இருந்தது. அதில் பாதியைத் தட்டிப் பறித்த ஒன்றிய அரசு இப்போது அள்ளிக் கொடுப்பதாய் நாடகமாடுகிறது.
நிதி வருவாய்ப் பங்குகளில் சரிவு
நிதி வளங்களை அரசியல் ரீதியாக கையாளுதல்: ஆளும் கட்சியுடன் இணைந்த மாநிலங்களுக்கு வெகுமதி அளிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துவது சமமான வளர்ச்சியைத் தடுக்கிறது.
மொத்த வரி வருவாயில் மாநிலங்களின் பங்கு கடந்த 2015–&16 ஆம் ஆண்டில் 35% இல் இருந்து 2023&-24 ஆம் ஆண்டில் 30% ஆகக் குறைந்துள்ளது. கூடுதலாக, அதே காலகட்டத்தில் மானிய உதவி ரூ.1.95 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.65 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.
மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படாத செஸ் மற்றும் சர்சார்ஜ்களின் பங்கு, 2015-&16 ஆம் ஆண்டில் ரூ.85,638 கோடியிலிருந்து (மத்திய அரசின் வரி வருவாயில் 5.9%) 2023-&24 ஆம் ஆண்டில் ரூ.3.63 லட்சம் கோடியாக (10.8%) அதிகரித்துள்ளது.
2023-24 பட்ஜெட்டில், மத்திய அரசு மற்றும் மத்தியத் துறைத் திட்டங்களுக்கான மொத்த ஒதுக்கீட்டான ரூ.19.4 லட்சம் கோடியில், ரூ.4.25 லட்சம் கோடி மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டில் பெரும் சரிவைப் பார்க்கலாம்.
இப்படி மாநிலங்களின் உரிமையெல்லாம் அழித்துவிட்டு ஏதோ இவர்கள்தான் நாட்டையே ரட்சிக்க வந்தவர்கள் போல பேசி வருவது பாரதி சொன்ன வெறும் வாய்ச்சொல் வீரர் என்பதைத்தான் நினைவுபடுத்துகிறது.