2004 சுனாமி பேரிடர் நிகழ்ந்தை அடுத்து, ஒன்றிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் இயற்றப்பட்ட சட்டம்தான் பேரிடர் மேலாண்மைச் சட்டம்-2005. இந்தச் சட்டத்தின் பிரிவு 48(1) இன் கீழ் உருவாக்கப்பட்ட நிதி தான் மாநிலப் பேரிடர் நிவாரண நிதி. பிரிவு 47ன் கீழ் தேசிய பேரிடர் தடுப்பு நிதியும், பிரிவு 46 ன் கீழ் தேசிய பேரிடர் நிவாரண நிதியும் உருவாக்கப்பட்டன.
மாநில பேரிடர் நிவாரண நிதி
ஒவ்வொரு மாநிலமும் பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் நிலையாக இருக்கும் நிதியாகும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒன்றிய அரசால் அமைக்கப்படும் நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அந்த நிதியில் 75% ஒன்றிய அரசும், 25% அந்தந்த மாநில அரசும் நிதி ஒதுக்கிடு செய்ய வேண்டும்.
பேரிடர் நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும், ஒன்றிய அரசு தனது 75 விழுக்காடு தொகையை மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டியது கட்டாயம்.
தேசிய பேரிடர் மேலாண்மை நிதி
போதுமான நிதி மாநில பேரிட நிவாரண நிதியில் இல்லாத நிலையிலும், கடுமையாக பேரிடர் நிகழும் பட்சத்திலும், கூடுதல் நிதியை தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 46 கூறுகிறது.
இதனடிப்படையில், 15 ஆவது நிதிக்குழு பரிந்துரையின் பேரில், 2023-2024 நிதியாண்டுற்கு என தமிழ்நாட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட மாநில பேரிடர் நிவாரண நிதி 1200 கோடியாகும். இதில் 900 கோடியை 2 தவணைகளில் ஒன்றிய அரசு வழங்க வேண்டும். எஞ்சிய 300 கோடியை தமிழக அரசு பங்களிப்பு செய்யும்.
இந்தப் பின்னணியில், கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் சென்னை, செங்கற்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும், டிசம்பர் 16 முதல் 18 வரை துாத்துக்குடி, திருநெல்வேலி,தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மிக அதிக கன மழை காரணமாக வரலாறு காணாத பெரு வெள்ளம் பேரிடர் நிகழ்ந்தேறியுள்ளது.
பாதிப்பு மிக கடுமை என்பதால் பேரிடர் நிவாரண நிதி ரூ.21,692 கோடி தொகையை வழங்கிட ஒன்றிய அரசை தமிழக அரசு பன்முறை வேண்டியும் வலியுறுத்தியும் வருகிறது.
நிதிக்குழு பரிந்துரைப்படி, ஒன்றிய அரசு வழக்கமாக தரவேண்டிய வேண்டிய 900 கோடி ரூபாயை தந்துள்ளதே தவிர, தற்போது ஏற்பட்டுள்ள பெரும் பேரிடருக்கு என தனித்து எந்ததொரு நிதியும் வழங்கவில்லை. ஆனால், 2021 மே மாதத்தில் குஜராத் தாக்டே புயல் தாக்கிய காலத்தில், பிரதமர் குஜராத்திற்கு நேரில் சென்றார். தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்தார். பின்னர் கூடுதல் நிதியும் தந்தார்.
ஆனால் தமிழகத்திற்கு வெள்ள நேரத்தில் பிரதமர் மோடி வரவும் இல்லை. குஜராத்தை பின்பற்றி தேசிய நிவாரண நிதியும் வழங்கவும் இல்லை. மாறாக திருச்சி யில் இரண்டு விழாக்களில் பிரதமர் மோடி பங்கேற்ற போதும், அதன் பிறகும் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டிடம் மாற்றந்தாய் மனப்பான்மை காட்டுவது நியாயமா?
கட்டுரையாளர்: ‘
ந.சேகரன்
9443120051.