நிதி ஒதுக்கீடு செய்வதில், ஒன்றிய அரசு தமிழ்நாட்டை எவ்வாறு வஞ்சித்து வருகிறது என்பதை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார். தெளிவான புள்ளிவிவரங்களை தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாட்டிலிருந்து நேரடி வரியாக ஒன்றிய அரசு வசூலிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும், மாநில அரசின் பங்கீடாக வெறும் 29 பைசா மட்டுமே திரும்பத் தரப்படுகிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஆளுகிற உத்தரப்பிரதேசத்தில், ஒன்றிய அரசு ஒரு ரூபாய் நேரடி வரி வசூல் செய்தால், அந்த மாநிலத்திற்கு நிதிப் பங்கீடாக ரூபாய் 2.73 திரும்பத் தரப்படுகிறது.
2014-15 நிதியாண்டு முதல் 2021-22 வரையில், நேரடி வரியாக தமிழ்நாட்டிலிருந்து 5.16 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதில் நிதிப் பங்கீடாக தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது 2.08 லட்சம் கோடி மட்டுமே. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் இதே ஆண்டுகளில் நேரடி வரியாக ரூபாய் 2.24 லட்சம் கோடி வசூலானது. ஆனால் பங்கீடாக திருப்பித் தரப்பட்டதோ ரூபாய் 9.04 லட்சம் கோடிகள் ஆகும். அதாவது வசூலித்ததை விட கொடுத்தது 4 மடங்குக்கும் கூடுதலாக உள்ளது.
ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு என்ன இருக்க முடியும்?
கடந்த 14 ஆண்டுகளாக நிதி கமிஷன் தமிழ்நாட்டுக்கு வழங்கும் தொகையை குறைத்துக் கொண்டே வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 6.1% தமிழ்நாட்டில் இருந்தும் நிதியில் 4.079% மட்டுமே கொடுக்கப்படுகிறது.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில், தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இதற்காக பாராட்டப்படாவிட்டாலும் தண்டனை வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்பு, 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த முறையை 15 வது நிதிக் குழு மாற்றியது. இப்போது 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒதுக்கீடு என்பதால் நிதி பங்கீட்டைக் குறைக்கிறார்கள். நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் அபாயமும் உள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் உற்பத்தி குறியீடு, கிழக்கே உள்ள 15 மாநிலங்களின் ஜிடிபி யை விட அதிகம். மக்கள் தொகை குறைவு, உற்பத்தி அதிகம் என்ற நல்ல அம்சங்களே இந்த மாநிலங்களைப் பழிவாங்க பயன்படுத்தப்படுகின்றன.
சரக்கு சேவை வரியை (ஜிஎஸ்டி) நேரடியாக வசூலிப்பதால் மாநிலங்கள் நிதி சுயாட்சியை இழந்துவிட்டன. எந்தப் பொருள் மீது எவ்வளவு வரி என்று நிர்ணயிக்கும் உரிமை பறிக்கப்பட்டு விட்டது. என்றாலும் மாநில வருவாயைப் பாதுகாப்பதற்காக இழப்பீடு வழங்குவதாக ஒன்றிய அரசு கூறியது. அது 2021 வரை வழங்கியதோடு நிறுத்தப்பட்டு விட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இழப்பீட்டை நீட்டிக்குமாறு மாநிலங்கள் கேட்டும், ஒன்றிய அரசு உறுதியாக மறுத்து விட்டது.
சென்ற மே மாதம் உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பில் “ஜிஎஸ்டி கவுன்சில் எந்த ஒரு முடிவையும் பொதுக் கருத்தின் அடிப்படையில் தான் எடுக்க வேண்டும். பெரும்பான்மை முடிவு என்று எடுத்து நமது வளமான பாரம்பரியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தக் கூடாது. அந்தக் கவுன்சிலின் முடிவுகள், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தக் கூடியது அல்ல. எல்லோரும் இணங்கும் முறையில் முடிவுகளை எடுத்து இந்திய நாட்டின் கூட்டமைப்பு முறைமையை பாதுகாக்க வேண்டும்” என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளது. இதை எல்லாம் மோடி அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை.
நகர்ப்புற வீடு கட்டும் திட்டம், கிராமப்புற வீடு கட்டும் திட்டம் ஆகியவை “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா” என்ற பெயரில் வழங்கப்பட்டாலும், அதில் 70% தொகையை மாநில அரசு தான் வழங்குகிறது.
சில ஆயிரம் பேர் பேசும் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.643.84 கோடி ஒதுக்கிய ஒன்றிய அரசு, உலகெங்கும் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் தமிழுக்கு 22.94 கோடியைத் தான் ஒதுக்கி இருக்கிறது.
மோடியின் சித்து விளையாட்டுக்களுக்கு அடிபணியாமல் இருக்கும் தென்மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு, தொடர்ந்து மோடி அரசால் ஒடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பாரபட்ச அரசு 2024ல் மக்களால் விரட்டப்பட வேண்டும்.