நுண்கடன் வலையில் சிக்கி, பாதிக்கப்பட்ட பெண்கள் எங்களை சந்திக்கும் போது, அவர்கள் அழுது புலம்புவது வேதனையாக இருக்கிறது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தால் மாறி மாறி பாதித்து வருகின்றன. 2018ல் கோரத்தாண்டவம் ஆடியது கஜா புயல். தென்னை, வாழை, பலா எழுமிச்சை, நாரத்தை, கிடாரங்கா போன்ற நீண்ட கால விவசாய பயிர்கள் அனைத்தும் 90% அழிந்து போயின. ஏராளமான கால்நடைகள் மடிந்தன. விவசாயிகள் வீடுகளை இழந்து நிற்கதியாய் முகாம்களில் தஞ்சம் அடைந்தார்கள்.
புயல் பாதித்த நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாயின. வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் அதிலிருந்து இன்று வரை மீள முடியவில்லை. துயரங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.
டெல்டா பகுதி மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். தொடர்ந்து வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். குடும்பத்தில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் தென்னிந்தியாவின் ‘மான்செஸ்டர்’ என போற்றப்படும் கோவை, திருப்பூர் போன்ற கொங்கு மண்டல பகுதிக்குப் புலம்பெயர்ந்து, ஆடைகளை உற்பத்தி செய்யும் கம்பெனிகளில் பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அங்கு கிடைக்கும் வருமானத்தை அனுப்பி வைத்து குடும்பங்களைக் காப்பாற்றி வருகின்றனர்.
கொரோனா கால பொருளாதார இழப்பில் இருந்து இன்று வரை அப்பகுதி மக்களால் மீள முடியவில்லை, இதனால் வேலை வாய்ப்பை இழந்து தொழில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விவசாய உற்பத்திக்கு பெரும்பகுதி நவீன எந்திரங்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வேலையின்மையால் துயரப்படுகின்றனர்.
மேலும் மதுவுக்கு அடிமையான கணவன் மற்றும் மகன்களின் பணத் தேவையையும், சமாளிக்க வேண்டிய பொறுப்பு பெண்களுக்கே உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கந்துவட்டி, நுண்கடன் பெற குடும்ப தலைவி தள்ளப்படுகிறாள். ஏழ்மையிலிருந்து குடும்பங்களை மீட்டெடுப்பதற்காக உழைக்க முன்வரும் பெண்கள் பக்கம், நுண்கடன் நிறுவனங்கள் (மைக்ரோ பைனான்ஸ்) என்ற பெயரில் உள்ள கந்து வட்டிக்காரர்களின் பார்வை திரும்பி உள்ளது. இந்தப் பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி நுண்கடன், கந்துவட்டி நிறுவனங்கள் கடன் வாங்க வைக்கின்றன. இதற்காக 20 குடும்பங்களைக் கொண்ட குழுக்களை உருவாக்கிக் கொள்கின்றனர்.
இந்த நிறுவனங்களிடம் கடன் பெறுவதற்கு இரண்டு போட்டோ, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்குப் புத்தக நகல் இருந்தால் போதுமானது. உங்கள் வங்கி கணக்கில்
காப்பீட்டுக்காக (இன்சூரன்ஸ்) பிடிக்கப்படும் பணம் போக, கடன்பெற்ற மீதத் தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் ஏறிவிடும் என்று கூறி, எளிதாக நுண்கடன் வலைக்குள் பெண்களை கொண்டுவருகின்றனர். இப்படி கந்துவட்டி கொள்ளையர்களின் வலையில் சிக்கும் பெண்கள், அதிலிருந்து மீளமுடியாத அடிமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
நுண்கடன் வலையில் சிக்கி, பாதிக்கப்பட்ட பெண்கள் எங்களை சந்திக்கும் போது, அவர்கள் அழுது புலம்புவது வேதனையாக இருக்கிறது.
குழுக்கடன் பெற்றவர்கள், குறித்த தேதியில், குறித்த காலத்தில் தவணையை கட்டவில்லை என்றால் நுண்கடன் நிறுவன வசூல் ஏஜென்ட்கள் அவர்களை மிரட்டி அவமானப்படுத்தி வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அமர வைத்து விடுகிறார்கள்.
கொரோனா வந்து “செத்தா போய்ட்டீங்க” “சோறு திங்குறியா, வேறு ஏதும் திங்குறியா” “தவணை தவறினா ஓ.டி. போட்டுடுவேன், இனிமே எங்கேயும் கடன் வாங்க முடியாது. 21 இடத்தில கையெழுத்து வாங்கியிருக்கோம். உன்னுடைய வங்கி கணக்கை முடக்கிடுவோம்” என்றும் சில இடங்களில் மிரட்டுகின்றனர். கண்ணியமான வாழ்க்கை வாழ்ந்த அந்தப் பெண்கள், நுண்கடன் முகவர்களின் அடாவடியால் அசிங்கப்படுவதுடன், எழுத முடியாத கொச்சை வார்த்தைகளைச் சொல்லி கேலி செய்வதாகவும் எங்களிடம் குமுறுகின்றனர்.
கந்துவட்டி கொடுமை குறித்து எங்கள் மாதர் அமைப்புகளுக்கு வரும் புகார்களை, முழு பங்கேற்புடன் தீர்த்து வைத்திருக்கின்றோம். இருந்த போதிலும், சில இடங்களில் அவர்களின் அட்டூழியத்தால் மனமுடைந்து, அவமானம் ஏற்பட்டதாகக் கருதி கும்பகோணம் – திருப்பனந்தாளில் ஒரு பெண்ணும், திருவாரூர் மாவட்டத்தில் பேரளத்தில் ஒரு பெண்ணும் தீவைத்து மாய்த்துக் கொண்டனர். 2 ஆயிரம் ரூபாய்க்காக தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு கிராமப்புற பெண்கள் தள்ளப்படுகின்றனர்.
மதுப் பழக்கத்தால் உடல் வலிமையை இழந்த கணவன்மார்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதுடன், குறைந்த சம்பளத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குகிறார்கள். இதனால், நூறு நாள் வேலை, சித்தாள் வேலை, விவசாய கூலி வேலை, வீட்டு வேலை, சிறு, குறு நிறுவனங்களில் வேலை போன்ற வேலைகளுக்குச் சென்று, கந்து வட்டி கொடுமையில் இருந்து தப்பிக்க உழைத்து வருகின்றனர்.
ஒரு சில கணவன்மார், வேலைக்காக திருப்பூர், கோவை, சென்னை போன்ற நகரங்களுக்கும் கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும் சென்று விடுகின்றனர். இவர்களின் பலர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி குடும்பத்துடனான தொடர்பையும் துண்டித்து விடுகின்றனர்.
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் இல்லாததால் வேலைவாய்ப்பை இழந்த ஆயிரக்கணக்கான கிராமப்புற பெண்கள், அதிகாலையிலையே புறப்பட்டுச் சென்று பேருந்துக்காக அவர்கள் காத்திருக்கும் போதுதான் எங்களால் நேரில் சந்திக்க முடியும். குறிப்பாக மூன்று மணி அளவில் வேளாங்கண்ணி முதல் கோட்டூர் வரையிலான சாலைகளில் தஞ்சை செல்லும் பேருந்துகள் மூலம் 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்து நிலத்தடி நீரை நம்பி சாகுபடி செய்யும் மன்னார்குடி, நீடாமங்கலம், அம்மாபேட்டை, ஒரத்தநாடு தஞ்சாவூர் பகுதிகளுக்கு பேருந்தில் சென்று இரவு 9 மணிக்கே வீடு திரும்புகின்றனர்.
அதுபோல் திருவாரூர் பகுதியில் இருந்து, நீடாமங்கலம், வலங்கைமான் போன்ற பகுதிகளுக்கு வேலைக்குச் சென்று நடவு அல்லது களை எடுத்து வருகின்றனர்.
கான்ட்ராக்ட் நடவுப் பணியாக இருந்தால், காலை 7 மணிக்கு வயலில் இறங்கினால் தான் இரவுக்குள் அந்தப் பணியை முடித்து ஒப்பந்த சம்பளத்தைப் பெற முடியும். இல்லையெனில் 250 அல்லது 300 ரூபாய் கூலி தான் கிடைக்கும். இதன் மூலம் குடும்பச் செலவை ஈடு செய்ய முடியுமா? கட்டுபடி ஆகுமா?
இதனால், அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்து குழந்தைகளுக்கு உணவு சமைத்து, கணவனுக்கு தேவையான பணிகளை செய்து வைத்துவிட்டு மூன்று அல்லது நான்கு மணிக்கு பேருந்தில் ஏறி ஏழு மணிக்கு குறிப்பிட்ட இடத்திற்கு செல்வார்கள். அவர்கள் வீடு திரும்பும் போது இரவு ஏழு அல்லது எட்டு மணி ஆகிவிடும்.
வடுவூர் பகுதிகளில் பலமுறை பேருந்து பயணத்தின் போது அவர்களுடன் பயணிப்பது உண்டு. அப்போது அவர்களுடைய ஊரின் பெயரையும் பணிச் சுமையையும் குடும்பப் பின்னணியையும் கேட்டால் அதிர்ச்சி அடைந்து விடுவீர்கள்! எப்போது வீட்டிற்குச் சென்று இரவு உணவு குழந்தைகளுக்கு கொடுப்பீர்கள் என்று கேட்டால் நாங்கள் போய் தான் அன்றாடம் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.
உறங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகளை எழுப்பி இரவு 11 மணிக்குத்தான் சாப்பிட உணவு கொடுப்போம். அதன் பிறகு தான் நாங்கள் படுக்க முடியும். அதற்கு இரவு 12 மணி ஆகிவிடும் என்கின்றார்கள்.
இதைக் கேட்கும் பொழுது ஒரு பாடல் வரி ஞாபகத்திற்கு வருகிறது.
இழுத்து இழுத்து வேலை செய்து
இருட்டுறப்ப கூலி வாங்கி
புழுத்தரிசி கஞ்சி வெச்சு
பசித்தணிய படுத்திருந்தேன்
கும்பி தனிஞ்ச சுகம்
கொஞ்சம் கூட மாறாமல்
வம்புத்தனமாய்
ஏன் வந்துதித்தாய் சூரியனே!!
அப்படியானால், அவர்கள் இரண்டு மணி நேரம் கூட உறங்குது இல்லை. இது அடுக்குமா? இப்படித்தான் சம்பாதிக்க வேண்டுமா? நூறு நாள் வேலை நடக்கின்றதே! அந்தப் பணியில் ஈடுபடலாமே என்று கேட்டால், எங்களுக்கு 100 நாள் வேலை தொடர்ந்து எங்கே கொடுக்கிறார்கள். சென்ற ஆண்டு 21 நாட்களும், இந்த ஆண்டு இதுவரை 11 நாட்கள் மட்டுமே வேலை கொடுத்துள்ளனர். ஆண்களுக்கு வேலை இல்லை. குழு கடன் வாங்கி தொலைத்து விட்டோம், அதைக் கட்டவில்லை என்றால் எங்களை அவமானப்படுத்தி விடுவார்கள். அது மட்டுமா?
அரசாங்கமே டாஸ்மார்க் கடைகளை திறந்து வைத்துள்ளது. எங்கள் கணவன்மார்களுக்கு நாளை குடிக்க இன்றே பணம் கொடுத்து விட வேண்டும். இல்லை என்றால், குடும்பத்தில் சண்டை தான் நடக்கும். நாங்கள் உறங்கும் அந்த ரெண்டு மணி நேரமும் இல்லாமல் போய்விடுமே. குழந்தைகளுக்கான படிப்பு செலவு, கல்யாணம், காதுகுத்து, சடங்கு என அனைத்து செலவுக்கும் பணம் தேவைப்படுகிறது. இதனால், நுண்கடன் வாங்கி சிக்கி விடுகிறோம். அந்த கடனை கட்டுவதற்காகவே தினமும் நாளை எங்கு வேலைக்கு செல்வது என்கின்ற சிந்தனையோடு தான் உறங்க செல்கின்றோம்.
பாதிக்கப்பட்ட இந்தப் பெண்களை எப்படி மீட்டெடுக்கப் போகிறோம்?
அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் வேளாண் பொருட்களை மூலப்பொருளாகக் கொண்டு செயல்படும் தொழிற்சாலைகளை அந்தந்தப் பகுதிகளிலேயே அரசே உருவாக்கி பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கலாமே. இந்தக் கனவு நிறைவேறுமா? உழைக்கும் பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுமா? இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அவர்களின் உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கனவு மெய்ப்பட போராட்டமே ஒரே வழி.
கட்டுரையாளர்: சு.தமிழ்ச்செல்வி ராஜா
tamilpriyan331@gmail.com