கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக உள்ள நூறு நாள் வேலைத்திட்டம், 21 மாநிலங்களில் முழுமையாக முடங்கும் நிலையும், 10 கோடிக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை இழக்கும் ஆபத்தும் உருவாகியுள்ளது.
ஓராண்டில், 100 நாட்களுக்கு வேலையை உத்தரவாதம் செய்ய வேண்டிய இந்த திட்டம், நரேந்திர மோடி அரசு நிதி ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்கியதால், 2023 – 24 ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதத்திலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
2022-2023 ஆம் நிதியாண்டில் ரூ. 89 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ. 73 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியது. 2023 -2024 ஆம நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இதையும் குறைத்து, ரூ. 60 ஆயிரம் கோடியை மட்டுமே ஒன்றிய பாஜக அரசு ஒதுக்கியது. இது, முந்தைய ஆண்டு வழங்கப்பட்ட ரூ. 73 ஆயிரம் கோடியை விட 18 சதவிகிதமும், எதிர்பார்க்கப்பட்ட ரூ.89 ஆயிரம் கோடியை விட 33 சதவிகிதமும் குறைவாகும்.
இந்த 60 ஆயிரம் கோடி ரூபாயும் முழுமையாக வழங்கப்படவில்லை. 2022-23 நிதியாண்டில் தொழிலாளர்களுக்கு வைக்கப்பட்ட சம்பள நிலுவை மட்டும் ரூ. 17 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், அந்த நிலுவைத் தொகை போக மீதமுள்ள ரூ. 43 ஆயிரம் கோடியை மட்டும் வைத்து கிராமப்புற மக்களுக்கு முழுமையாக வேலை வாய்ப்பை வழங்கிட இயலாது. இதனை பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டிய போதும் காதில் வாங்கிக்கொள்ளாத ஒன்றிய பாஜக அரசு, தற்போது அந்தத் திட்டத்தை முடங்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
இது பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்த போது, தேவை ஏற்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அதன்படி, நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க ரூ. 23 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யுமாறு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் செப்டம்பர் 15 அன்று கோரிக்கை விடுத்தது. அதற்கு எந்தப் பதிலும் அளிக்காமல் நிதி அமைச்சகம் மவுனம் காத்து வருகிறது.
2021-22 மற்றும் 2022-23க்கு இடையில், இந்தத் திட்டத்திற்கான நிதியில் 25 சதவிகிதம் குறைக்கப்பட்டது. அந்தப் பற்றாக்குறையை சமாளிக்க கூடுதலாக ரூ. 25 ஆயிரம் கோடி கேட்கப்பட்ட நிலையில், ரூ.16 ஆயிரம் கோடி மட்டுமே ஒன்றிய பாஜக அரசு ஒதுக்கியது.
இப்படி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய பாஜக அரசு இழுத்தடிப்பதால், இந்தத் திட்டத்தின் செயல்பாடு மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் 100 நாள் வேலை உறுதித் திட்டம் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா அளவில், நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் 2022 டிசம்பர் மாதம் வரை 11.37 கோடி குடும்பங்கள் வேலை பெற்றுள்ளதாக ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் 93.35 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால், 65 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் 86 விழுக்காடு பெண்கள், 14 விழுக்காடு ஆண்கள், ஒட்டுமொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 30 விழுக்காட்டினர் பட்டியல் மற்றும் பழங்குடியினர் ஆகும்.
‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-1’ ஆட்சிக் காலத்தில், இடதுசாரிகளின் தொடர் போராட்டத்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின், இந்தத் திட்டத்தை நிறுத்தும் முயற்சியாக நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து வருகிறது.