நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆகஸ்ட் 3ம் தேதியன்று பத்திரிகை மற்றும் பருவ இதழ்களின் பதிவு மசோதா 2023 நிறைவேற்றப்பட்டுள்ளது.
1867ல் பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட பத்திரிகை மற்றும் புத்தகங்கள் பதிவுச் சட்டத்துக்கு பதிலாக, இந்தப் புதிய சட்டம். வழக்கம் போலவே, காலனிய அடிமைச் சட்டத்திலிருந்து விடுதலை என அரசு பெருமையடித்துக் கொண்டது. ஆனால் இது பத்திரிகைகளுக்கு கூடுதல் சுதந்திரம் தரவில்லை; மாறாக அதில் இருப்பதையும் பறித்துக் கொள்கிறது.
இந்தச் சட்டப்படி செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களை பதிவு செய்வதற்கும், பதிவேடுகளை பேணுவதற்கும் பத்திரிகை பொது பதிவாளர் எனும் அதிகாரமையம் உருவாக்கப்படுகிறது. பத்திரிகையை வெளியிடுபவர் அல்லது உரிமையாளர் சட்ட விரோத செயல்கள் தடுப்பு (ஊபா) சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவர் என்றாலோ அல்லது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர் என்று கருதப்பட்டாலோ, அவரது பதிவு விண்ணப்பத்தை நிராகரிக்க முடியும். அதே நேரத்தில் ஏற்கனவே வந்து கொண்டிருக்கும் பத்திரிக்கை என்றாலும் இதே காரணங்களைக் கூறி, அதன் பதிவை ரத்து செய்ய சட்டத்தின் 4(1), 11(4) பிரிவுகளின் கீழ் பொதுப்பதிவாளருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.
அதற்கும் அதிகமாக சட்டத்தின் 6(பி) பிரிவின்படி அரசு குறிப்பிடும் அதிகாரிகள், பத்திரிக்கை வளாகத்துக்குள் நுழையவும் அங்குள்ள ஆவணங்களை ஆய்வு செய்யவும், எடுத்துச் செல்லவும் தமக்கு தேவைப்படும் தகவல்கள் பற்றி எந்த ஒரு கேள்வியையும் கேட்டுப் பதில் பெறவும் அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஆனால் அத்தகைய அதிகாரம் யாருக்குத் தரப்படும் என்பது சட்டத்தில் இல்லை. சட்டத்தின் 19வது பிரிவின்படி, சட்டத்திற்கு வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை ஒன்றியஅரசு வெளியிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது சட்டத்தை இயற்றி திருத்துகிற நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை எடுத்து அதிகாரிகளின் கைகளுக்கு இச்சட்டம் தருகிறது.
இதற்கு முன் இது போன்று நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு, விதிகள் என்ற பெயரில் அந்த சட்டத்திலேயே கூறப்படாத கொடூரமான நியதிகளை அரசு வரைவு செய்துள்ளது.
ஆங்கிலம் தவிர்த்த மற்ற மொழிகளில் வரும் பத்திரிகைகளை கட்டுப்படுத்துவதற்காக 1878ல் வெர்னாகுலர் பிரஸ் ஆக்ட் ஒன்றை பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் கொண்டு வந்தது. அதன்படி, பத்திரிகையாளர் எனும் முறையில் சுரேந்திரநாத் பானர்ஜி கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்த மக்கள் எழுச்சி காரணமாக அச்சட்டத்தை பிரிட்டிஷ் அரசு கைவிட்டது. அதிலிருந்த ஷரத்துக்களைக் கொண்டு இந்தப் புதிய சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றுகிறது.
மோடி பிரதமரான பின், அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்த என்டிடிவி-யை மோடியின் நண்பரான அதானி விலைக்கு வாங்கி விட்டார். அதன் இன்னொரு போட்டியாளராக இருந்த நெட்ஒர்க் 18ஐ மற்றொரு நண்பரான முகேஷ் அம்பானி விலைக்கு வாங்கினார். அந்த நிறுவனத்தின் 70 க்கு மேற்பட்ட சேனல்களுக்கு 80 கோடி பார்வையாளர்கள் இருக்கிறார்கள்.
2020ல் கொரோனாவை பற்றி செய்தி வெளியிட்டதற்காக 55 பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். தற்போது கூட 13 பத்திரிகையாளர்கள் சிறையில் உள்ளார்கள். பாஜக தலைவர்களை எதிர்த்து கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்கள், நெறியாளர்கள் உடனடியாக அந்த நிறுவனங்களில் இருந்து விலக்கப்படுகிறார்கள்.
குஜராத்தில் நிகழ்ந்த கலவரம் சம்பந்தமான காணொளிகளை இரு பகுதிகளாக ஒளிபரப்பிய இந்தியாவில் உள்ள பிபிசி, சோதனை என்ற பெயரில் சீர்குலைக்கப்பட்டது. பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் 2017ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
85% க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் தாம் பணிபுரியும் நிறுவனம் மோடிக்கு ஆதரவானது என்று நம்புகிறார்கள். ஆட்சியில் இருப்பவர்களின் ஊதுகுழல்களாக பெரும்பான்மையான தொலைக்காட்சிகள் மாறிவிட்டன.
உலகத்தில் 180 நாடுகளில் பத்திரிக்கை சுதந்திரம் எந்த நிலையில் உள்ளது என்பதற்கான பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. அந்தப் பட்டியலில் 2016ல் 133வது இடத்தில் இந்தியா இருந்தது. 2021 இல் 9 இடங்கள் கீழ் இறங்கி 142 வது இடத்துக்கு வந்தது 2022இல் 150ம் இடத்துக்கு கீழிறங்கியது. இந்த ஆண்டிலோ மேலும் 11 இடங்கள் கீழிறங்கி 161 வது நாடாக இருக்கிறது. பத்திரிக்கை சுதந்திரம் எவ்வாறு நசுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது என்பதற்கான சாட்சி இது.