இரண்டு வாரத்தில் மூன்று மலையாள திரைப்படங்கள் வெளிவந்தன. அதில் மஞ்சுமல் பாய்ஸ் ஒரு அரைத் தமிழ் படம். அரைத்த மாவையே அரைக்கும் பெரும்பான்மைத் தமிழ் படங்களை விட்டு தள்ளி நிற்கும் படம். மிக டிரெண்டிங்காக, அனைவரையும் கவர்ந்து இழுத்து வருகிறது.
மலையாளப் படங்களுக்கு என்று ஒரு தனி இடத்தை தமிழர்கள் வைத்திருக்கிறார்கள். அதில் கோலோச்சிக் கொண்டிருக்கும் படங்களில் இந்த மஞ்சுமல் பாய்ஸ் நிச்சயமாய் சேர்ந்துவிடும்.
பதினோர் பேர் கொண்ட இளைஞர் பட்டாளம், கொச்சி பக்கம் உள்ள மஞ்சுமல் என்ற இடத்திலிருந்து கொடைக்கானலுக்குச் சுற்றுலா வருகிறார்கள். நாம் நன்கறிந்த ‘குணா குகை’யில் ஒருவர் விழுந்து விடுகிறார். நண்பர்கள் எப்பாடுபட்டு அவரை காப்பாற்றுகிறார்கள் என்று சொல்லும் போது நம்மை இருக்கையின் நுனிக்கு இழுத்து வந்து விடுகிறார்கள். வேறு எதுவும் நடந்து விடக்கூடாது என நம் நெஞ்சைப் பதற வைக்கிறார்கள்.
இயக்குநர் சிதம்பரத்திற்கு இது இரண்டாவது படம். அப்படித் தோன்றாத வண்ணம் தேர்ச்சியோடு வழிநடத்துகிறார். பெரிய பிரசித்தி பெற்ற கலைஞர்கள், நட்சத்திர நடிகர்கள் இல்லை. கதாநாயகி கூட இல்லை. இரண்டே பாடல்கள். அதிலும் ஒன்று நமக்குப் பிடித்த “கண்மணி அன்போடு காதலன்” எழுதிய கடிதம்.
படத்தின் கதைதான், கதாநாயகன்.
அம்பிளி, சூடானி, ரோமான்சம் ஆகிய திரைப்படங்களில் தனது நடிப்பால் ஈர்த்த நடிகர் சௌபின் இப்படத்தில் நடித்ததோடு, தயாரிப்பாளராகவும் புதிய பரிமாணம்.
படம் ஆரம்பித்து 15 நிமிடத்திற்குள் அந்த 11 கதாபாத்திரங்களோடு நமக்கு நெருக்கம் ஏற்பட்டு விடுகிறது. மிஞ்சி இருக்கும் ரெண்டேகால் மணி நேரமும் ஒரே குகையை சுற்றியே கதை ஓடுகிறது. நம்மையும் இழுத்துக் கொண்டு ஓடுவது தான் இப்படத்தின் வெற்றி.
குணா குகையில் உள்ள பள்ளத்தை விவரிக்கும் காட்சி மிகவும் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது. விலகும் நபர் (சுபாஷ்) எவ்வாறு கீழே விழுகிறார் என்று விவரித்த காட்சி கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்தான் என்றாலும், நமக்கு சிலிர்த்துப் போகிறது.
உள்ளூர்வாசிகளின் விவரிப்பின் வழியே அந்த குகையின் குரூரம் முன்வைக்கப்படுகிறது. அந்தப் பள்ளத்துக்கு இன்னொரு பெயர் டெவில் கிச்சன், சாத்தானின் சமையலறை!
படத்தின் மிகப்பெரிய பிளஸ், திரைப்படம் எடுக்கப்பட்ட விதம்தான். குகையைச் சுற்றி மட்டுமே கதை நகர்ந்தாலும், கொஞ்சம் கூட சலிப்பு தட்டவில்லை. நாமும் குகைக்குள் மாட்டிக்கொள்கிறோம். மூச்சு விடுவது சிரமமாகி விடுகிறது போங்கள்! அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் சைஜூ காலித்.
ஒரு குகைக்குள் எவ்வாறு இப்படி ஒரு காட்சியமைக்க முடியும் என்று ஒவ்வொரு நொடியும் யோசிக்க வைக்கிறார்கள். படம் முடிந்த பின்னரே அது குணா குகையைப் போலவே அமைத்த செட் என்று தெரிய வந்தது. எது குகை, எது செட், எது கொடைக்கானல் என்று தெரியாமல் கலக்கி இருக்கிறார், புரொடக்ஷன் டிசைனர் அஜயன்.
வெறும் பேக்ரவுண்ட் ஸ்கோர் மட்டுமல்லாமல், அப்படி ஒரு சவுண்ட் எபெக்ட். சில இடங்களில் எந்தவித சத்தமும் இல்லாமல், நிசப்தத்தையே மிகவும் சத்தமாய் நமக்குத் தோன்ற வைத்த இசையமைப்பாளர் சுசின் ஷியாம் பாராட்டுக்குரியவர்.
இதை இப்படியே வைத்துவிட்டு, படத்தை பார்த்து விட்டு வந்து படித்தீர்கள் என்றால் நல்ல லிங்க் கிடைக்கும். ஓடிடியில் அல்ல; திரையிலேயே பார்த்தாக வேண்டிய படம் இது.
குணா திரைப்படத்திற்கு இப்படம் ஒரு பெரிய சமர்ப்பணம் செய்துள்ளது. அதில் வரும் பாடலான கண்மணி அன்போடு காதலன் படத்தில் கிளைமாக்ஸில் வைக்கப்பட்ட விதம் மிகவும் அற்புதம். ராஜாவின் கை வண்ணத்தில் வந்த பாடல், காதலுக்கு மட்டுமல்ல நட்புக்கும் அவ்வளவு அழகாகப் பொருந்துகிறது.
இவ்வளவு பெரிய குகையில் இருந்து விழுந்தவனை எப்படிக் காப்பாற்ற முடியும்? சும்மா கதையெல்லாம் விடாதீங்க என்று நினைக்கத் தோன்றும். ஆனால் 2006 ஆம் ஆண்டில் உண்மையிலேயே இவ்வாறு நடந்தது என்று படத்தின் முடிவில் காட்டுகிறார்கள். நமக்கு இன்னும் ஆச்சரியம். படம் முடிந்த பின்னும் கூட, அதைப் பற்றியே பேச வைப்பதால், நெஞ்சுக்குள் இன்னும் ஓடி முடியவில்லை என்று புரிகிறது.
அனைவரும் இப்படத்தை திரையரங்குகளில் குடும்பத்தோடு போய் பார்க்க வேண்டிய, தகுதியான திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ்.
கட்டுரையாளர்:
எம்.ஆர்.ஆதவன்
தகவல்தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுகிறார்.
கவின்கலைக் கல்லூரியின் சிற்பி பட்டம் பெற்றவர்.
திரைப்பட விமர்சனம் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொடர்புக்கு: 9840244625