ஏஐடியுசி: எழுச்சியின் வரலாறு -10
சென்னை பின்னி மில் ஊழியர்கள் 1918ல் சங்கம் அமைத்தனர். தம்மை அவர்கள் தொழிலாளர்கள் (லேபர்) என உணர்ந்தனர். தமது மில்லைத் தாண்டியும் சென்னையில் பணியாற்றும் தொழிலாளர்களை தம் சங்கத்தில் சேர்க்க விரும்பினர். எனவே அது “மெட்ராஸ் லேபர் யூனியன்” ஆனது.
இதன் உறுப்பினர் சந்தா மாதத்துக்கு 1 அணா. முன்பு போல இல்லை. சந்தா கட்டுவதால் உறுப்பினர் உண்டு; விதிகள் உண்டு; நிர்வாகிகள் உண்டு. எனவே இதுவே இந்தியாவின் முதல் சங்கமும் ஆனது.
ஹோம்ரூல் இயக்கத்தில், அன்னி பெசண்ட் அம்மையாருடன் பணிபுரிந்த பி.பி.வாடியா சங்கத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். வெள்ளையரான சூப்பர்வைசர்கள் தங்களை மிகமோசமான முறையில் நடத்துகிறார்கள் என்பதும், மதிய உணவு இடைவேளை மிகவும் குறுகியது என்பதும்தான் தொழிலாளர்களின் பெரும் குறை.
சங்கம் தொடங்கிய பிறகு 30 நிமிட இடைவேளை 40 நிமிடமாக உயர்த்தப்பட்டது. மில்வாசலில் மலிவு விலை தானியக் கடையும் திறக்கப்பட்டது. ஒரு நூலகம் வைக்கவும், சில நல நடவடிக்கைகளுக்கும் கூட நிர்வாகம் ஒப்புக்கொண்டது.
ஆனால் சம்பள உயர்வு கோரிக்கையை மட்டும் ஏற்க மறுத்துவிட்டது. இதனால் நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாடு முற்றி, வேலைநிறுத்தம் வரை சென்றது. நிர்வாகமோ கதவடைப்பு (லாக்-அவுட்) செய்துவிட்டு நீதிமன்றம் சென்றது. அப்போது சங்கம் வைத்துக் கொள்ள சட்டம் எதுவும் இல்லை. சங்கமே சட்ட விரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சங்கம் இயங்கத் தடை விதித்ததோடு, ஒப்பந்தத்தை மீற தொழிலாளர்களைத் தூண்டிய குற்றத்துக்காக தலைமை தாங்கி வழிநடத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இறுதியில், வேலைநிறுத்தத்துக்கு காரணமான 13 தொழிலாளர்களுக்கு வேலை இல்லை; சங்கத்துடனான தொடர்புகளை வாடியா துண்டித்துக்கொள்ள வேண்டும் என முடிந்தது. திரு.வி.க., சிங்காரவேலர், சக்கரைச் செட்டியார் ஆகியோர் தண்டனை ஏற்கத் தயார், ஆனால் சங்கத்தைக் கைவிட மாட்டோம் என உறுதியாக நின்றனர்.
(இன்னும் வரும்)
கட்டுரையாளர்: டி.எம்.மூர்த்தி
தேசிய செயலாளர், ஏஐடியுசி
ஆசிரியர், ஜனசக்தி