அமெரிக்காவின் கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸில் தீப்பற்றி எரிகிறது. மரங்கள், கட்டிடங்கள், மின்கம்பங்கள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் குறிப்பாக ஹாலிவுட் திரைப்பட நகரங்கள் என அனைத்தும் தீப்பற்றி எரிகின்றன.
லட்சக்கணக்கான மக்கள் உயிரைப் பிடித்தபடி பதறி அலறி ஓடுகிறார்கள். இது விபத்தா? சதி வேலையா? நவீன ராணுவ தந்திரங்களால் செய்யப்படும் லேசர் முறை போன்ற நடவடிக்கைகளா.? செய்வதறியாது திகைக்கிறது அமெரிக்கா.
டேக்டிகல் அணுகுண்டு வீசினால் எப்படி பற்றி எரியுமோ, அப்படி எரிகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். டேக்டிகல் அணுகுண்டு என்பது மனிதர்களை கொல்லாது, தப்பிக்கலாம், பொருட்கள் யாவும் அழிந்துவிடும். அதன் அணுக்கதிர்வீச்சால் மனிதர்களுக்கு பாதிப்பு இல்லை. அதனை தான் இப்படி டேக்டிகல் என கூறுகிறார்கள். ஐந்து ஆறு தினங்களாக அமெரிக்காவின் இராணுவம், தீயணைப்புத்துறை, காவல் துறை என ஒட்டுமொத்த அதிகார இயந்திரங்களும் குவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை. உலகின் முதல் வல்லரசு நாடு, உலகின் முதல் ராணுவ பலம் கொண்ட நாடு, உலகின் முதல் வளர்ந்த ஏகாதிபத்திய தொழில் நுட்ப நாடு, ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை. அணைக்க தெரியவில்லை, உலகத்தின் முன் தலைகுனிந்து நிற்கிறது அமெரிக்கா.
அமெரிக்கா மட்டுமல்ல ஐரோப்பாவிற்கே தீயை அணைக்க தெரியாது. ஐரோப்பாவின் தட்பவெட்ப சூழலில் தீப்பற்ற வாய்ப்பில்லை எனினும் தீப்பற்றி விட்டால் அவர்களுக்கு அணைக்கத் தெரியாது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் தான் போராடித் தீயை அணைப்பார்கள்.
பிரேசில், சீனா, இந்திய, ரஷ்யா தீயை அணக்க பரிச்சியப்பட்ட, நவீன பட்ட நாடுகள். அவர்களை உதவிக்கு அழைக்கவும் அமெரிக்கா தயங்குகிறது. கொரோனா காலத்தில் கூட அமெரிக்கா நிலை குலைந்தது, ஐரோப்பா தடுமாறியது. அப்போது சின்னஞ்சிறிய கியூபா மருத்துவர்கள் ஆற்றிய சேவையை ஒட்டுமொத்த உலகமே பாராட்டியது.
தற்போது தீயை அணைப்பதில் முன்னேறிய நாடுகளான தென் கொரியா, ஜப்பான், ஈராக், துருக்கி, விளங்குகின்றன. அவர்களை அழைக்கக் கூட அமெரிக்கா தயங்குகிறது.
சிறிய நாடோ, ஏழை நாடோ, பணக்கார நாடோ, எங்கும் மக்கள் தான் வாழ்கிறார்கள். அதிலும் இயற்கை சீற்றம் பேதம் அறியாது, நாடு அறியாது. இது போன்ற சூழல்களில் நாடுகள் ஒன்றிணைந்து ஒன்றுக்கொன்று உதவ வேண்டும் என ஐநா விதிகள் உண்டு. பல நாடுகளுக்கிடையே ஒப்பந்தமும் சட்டமும் உண்டு. உலகம் பதைத்துப் பார்க்கிறது. அமெரிக்கா அழைக்க மறுக்கிறது. கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் குறிப்பாக ஹாலிவுட் நகரம் முற்றிலும் பற்றி எரிகிறது.
துயரமல்லவா..? அமெரிக்கா மக்களும் புவியின் மாந்தர்கள் தானே, அங்கு நிகழ்வதும் துயரம் தானே, பற்றி எரியும் தீயை அணைக்க வேண்டும். அங்கு நல்ல இயல்பு நிலை திரும்ப வேண்டும். இதுதான் உலக மக்களின் விழைவு. ஆனாலும் இந்த சூழல் அமெரிக்கா ஆட்சியாளர்கள் ஒன்றை உணர வேண்டும். யுத்தத்தால் பற்றி எரியும் சூழலை அமெரிக்கா பார்த்ததில்லை. இரண்டாம் உலக யுத்தத்தில் நாகசாகி, ஹிரோஷியமா பற்றி எரிந்தது, சாம்பல் கூட மிஞ்சவில்லை. வியட்நாம் சிறிய நாடு, நேபாம் குண்டுகளை வீசியதன் விளைவாக அந்த நாட்டு மக்கள் மாண்டு போயினர். ஆப்கான், லிபியா, காசா பல நகரங்களில் அமெரிக்கா குண்டு வீசியபோது பற்றி எரிந்தன நகரங்கள். போர் எப்படி நெருப்பை வீசுமோ அப்படித்தான் இயற்கை நெருப்பை அமெரிக்காவில் வீசுகிறது என எண்ணம் தோன்றுகிறது. ஆனாலும் எதன் பொருட்டும் மக்கள் அழியக்கூடாது. தீ அணையட்டும்.