
இந்தியாவில் இரு மொழியா? மும்மொழியா? என மொழிக் கொள்கை குறித்த உரையாடல்கள் மீண்டும் எழந்துள்ளது. தமிழகத்தில் இத்தகைய உரையாடல்கள் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு மேல் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி வருகிறது. இரு மொழிக் கொள்கையைப் பேணுகிறது. பிற மொழிகளை தமிழ்நாடு எதிர்ப்பதில்லை. ஒன்றிய அரசின் மொழித் திணிப்பைத்தான் எதிர்க்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே மொழிக் கொள்கை குறித்து விவாதங்கள் துவங்கிவிட்டன. 1937 இல் பிரிட்டிஷ் இந்தியாவில் ராஜாஜியின் ஆட்சி இந்தியைத் திணித்தது. நீதி கட்சியும், தந்தை பெரியாரும் இதனை பகிரங்கமாக எதிர்த்துப் போராடினர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட காலம் அது. தோழர் ஜீவா உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் பலர் அடக்குமுறைகளுக்கும், தேடுதலுக்கும் உள்ளாகியிருந்த காலச் சூழல் அது.
தலைமறைவு காலத்திலேயே உலக இலக்கியங்களையும், மொழி வரலாறுகள் குறித்தும் மிக ஆழமான பார்வை கொண்ட பல்வேறு அறிஞர் குழாம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்தது. அனைவரும் புனைப்பெயர்களில், தலைமறைவு என வாழ வேண்டிய அடக்குமுறைக் காலம் அது.
விடுதலைக்குப் பின், 1960களில் மீண்டும் இந்திய நாடாளுமன்றத்தில் மொழிக் கொள்கைகள் குறித்த உரையாடல்கள் தொடங்கின.
இந்தித் திணிப்பிற்கு எதிராக, 1961 இல் தமிழ்நாடு போர்க் கோலம் பூண்டது. இதற்காகப் போராட்டங்களும், உயிர்பலியும் கொடுக்கப்பட்டது. திமுக இப்போராட்டத்தில் முன்னணியில் இருந்தது.
பின்னர் நேரு, இருமொழி குறித்த கொள்கையை அறிவித்தார்! இந்தி பேசாத மக்கள் மீது, மாநிலங்கள் மீது இந்தித் திணிப்பு இருக்காது, அதுவரை இணைப்பு மொழியாக ஆங்கிலம் தொடரும் என உறுதியளித்தார்.
ஆனாலும் அன்றிலிருந்து இன்று வரை பல்வேறு வடிவங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தி திணிக்கப்படுகிறது.
தாய்மொழி தமிழ், ஆங்கிலம் தொடர்பு மொழி, ஆங்கிலம் கொண்டு இந்தியாவிலும் தொடர்பு கொள்ளலாம். உலகிலும் தொடர்பு கொள்ளலாம்.
ஆங்கிலம் ஓர் மொழி. அது தொடர்புக்கும், அறிவியல் மற்றும் வர்த்தகத்திற்கும் பயன்படுகிறது. அதற்காக, அது அறிவு என்றோ, பகுத்தறிவு என்றோ ஏற்க இயலாது. அறிவை வளர்த்துக் கொள்ள அது பயன்படும்.
ஆங்கிலம் பகுத்தறிவு என்றால் ஆங்கிலம் அதிகம் பயின்றோர் அனைவரும் பகுத்தறிவாளர்களா? அல்ல.
பகுத்தறிவு என்பது சமூக அறிவியல் சார்ந்தது, உண்மை சார்ந்தது, மானிடர் சமத்துவம் சார்ந்தது, விடுதலை சார்ந்தது. இதன் அனைத்தையும் மறுத்தவர்கள்தான் ஆங்கிலேயர்கள்.
ஆங்கிலம் மட்டுமே அறிவியல் மொழி ஆகுமா? தாய்மொழியில் ரஷ்யர்கள் சாதிக்கவில்லையா? பிரஞ்சு மொழி பேசுவோரும், சீன மொழி பேசுவோரும் சாதிக்கவில்லையா?
தமிழ்மொழியில், கல்வியும், அறிவியலும் போதிக்கப்படும் போது, தமிழும் உலகில் சாதிக்கும்.
ஒவ்வொரு மொழிக்கும் சிறப்புகள் இருக்கக் கூடும். அதனால், அம்மொழி உயர்ந்தது? பிற மொழி தாழ்ந்தது அல்ல, பிறமொழிகளுக்கு இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு!
தமிழோடு பயணப்பட்ட கிரேக்கம், அப்போது பேசப்பட்ட லத்தின், பாரசீக மொழி, ஏன்? சமஸ்கிருதம் என யாவும் வழக்கில் இன்று இல்லை.
தமிழ் மட்டும் வாழ்கிறது. காரணம்? தமிழ் பிற மொழிகளை மதிக்கும், பிற மொழி ஏற்கும், பிற மொழியோடு உறவாடும், அதன் கதவுகள் அடைபடுவதில்லை.
இத்தகைய நெகிழ்ச்சியும், உறவும் தமிழில் உண்டு. எனவேதான் தமிழ் அழியவில்லை, தமிழ் வாழ்கிறது. செம்மொழியில் செம்மாந்து நிற்கிறது.
தற்போது திடீரென பிரதமர் மொழி ரீதியில் பிரிவினைகள் கூடாது என்கிறார். அவர் தமிழ்நாட்டைக் குறி வைத்துத்தான் இப்படி கூறுகிறாரா?
மொழி ரீதியில் மட்டுமல்ல சாதி, மத ரீதியிலும் பிரிவினை கூடாது என்கிற மாநிலம்தான் தமிழ்நாடு. எதன் பேரிலும் பிரிவினைகள் கூடாது என்பதே நமது நிலை.
இந்தித் திணைப்பை அல்லது மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என்கிற ஒன்றிய அரசின் நிலைப்பாடுதான் பிரிவினை, பிரதமர் முதலில் இதனை உணர வேண்டும்!
உலகிலேயே முதன்முதலில் 1848 ல் தான் மொழி குறித்த தொலைநோக்கு வெளிப்பட்டது.
மார்க்ஸ், ஏங்கல்ஸ் பிரகடனப்படுத்திய கம்யூனிஸ்ட் அறிக்கைதான், பல்வேறு மொழிகளில் உலகை மதித்தது.
கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழி பெயர்ப்பதற்காக ஆங்கிலம், டேனிஷ், ஜெர்மன் எனப் பல்வேறு மொழிகளும், தேசிய இனங்களை அடையாளப்படுத்தும் தோழர்கள் இங்கு கூடி உள்ளனர் எனக் கூறப்பட்டது.
இதன்மூலம் உலகில் பல மொழிகளை மதித்தது கம்யூனிஸ்ட் அறிக்கை. பல மொழி பேசும் தேசிய இனங்களை அங்கீகரித்தது.
ஒன்றை ஒன்று மதிப்பது அவசியம். ஒன்றை மற்றொன்று ஏற்பது விருப்பம்.
இத்தகைய மொழிக் கொள்கை எப்போதும் வாழும்!