கட்டுரைகள்

நிலைகுலையாத மாவீரர் கேடிகே தங்கமணி

டி.எம்.மூர்த்தி

இப்போது நான் எந்த வயதில் இருக்கிறேனோ, அந்த வயதில் தோழர் கேடிகே. தங்கமணி இருக்கும்போது அவரை முதல் முதலாக சந்தித்தேன். எமர்ஜென்சி முடிந்த அடுத்த ஆண்டு.

அவரைப் பற்றி..!

அவர் ஒரு பெரிய கோடீஸ்வரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தக் காலத்திலேயே இறக்குமதி ஏற்றுமதி வணிகத்து ஈடுபட்ட குடும்பம் அவருடையது. டி.வி.எஸ். நிறுவன உரிமையாளரான கிருஷ்ணாவும் அவரும் நண்பர்கள். லண்டனில் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். இந்திரா காந்தியின் கணவர் ஃபெரோஸ் காந்தியின் கல்லூரித் தோழர். ஹாக்கி விளையாட்டு வீரர். நேரு குடும்பத்துடன் நெருக்கமாய் இருந்தவர். இலங்கை மலேசியா ஆகிய நாடுகளில் வழக்கறிஞர் தொழில் நடத்தியவர். தினத்தந்தி நிறுவன சி.பா. ஆதித்தனார் அவரும் ஒரே வீட்டில் பெண்ணெடுத்தவர்கள்.
விடுதலைப் போராட்ட வீரர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர். இவ்வாறெல்லாம் அவரைப் பற்றி பலரும் எனக்கு கூறியிருக்கிறார்கள்.

நான் கல்லூரி முடித்து அப்போதுதான் வெளிவந்திருந்தேன். அனைத்திந்திய மாணவர்கள் மன்றத்தில் உறுப்பினர். திருப்பரங்குன்றத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒரு கிளை அப்போதுதான் அமைத்திருந்தோம். கையால் எழுதப்பட்ட பிரதிகள் ஐந்து சுற்றுக்கு விடப்படும் ஒரு மாத இதழை நடத்தி வந்தோம்.
அவர் மதுரை ஐக்கிய பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தில் ஒரு கூட்டத்தில் பேசுவதாக பேச இருந்தார். மதுரை கோட்ஸ் மில்லில் பணிபுரிந்த தோழர் ராமசுப்பிரமணியன்  என்னை அந்த கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
அன்றிருந்த பஞ்சாலை தொழிலாளர் சங்க அலுவலக அறை மிகவும் சிறியது. அவர் அமர்ந்திருந்த நாற்காலியை சுற்றி இடமே இல்லாமல் கூட்டம்.‌ 30 பேர் அமரத்தக்க அந்த அறையில் 50க்கும் அதிகமானோர் நெருக்கியடித்து உட்கார்ந்து இருந்திருந்தார்கள்.

சம்பள உயர்வு கோரி நடைபெற இருந்த மாநிலம் தழுவிய பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம் சம்பந்தமாக அவர் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த ஆண்டிலேயே அந்த சங்கத்தில் முழு நேர ஊழியராகச் சேரப் போகிறேன், அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குப் போகப் போகிறேன் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

படிமங்களை உடைத்தவர்!

இஸ்திரி போட்டு மடித்த அடையாளங்களை தெரியாத வெள்ளை சட்டை. அதேபோன்று தூய வெண்மையைத் தொலைத்திருந்த வேட்டி. தோளில் சல்லடை போன்று இருந்த கரை போட்ட ஒரு சிவப்பு நிற அருவித் துண்டு. சட்டைப் பையில் பெரிய கட்டைப் பேனா. கையில் மஞ்சள் பை. நேரில் அவரைக் காணும் முன்பு என் மனதில் அவரைப் பற்றி எனது மனதுக்குள் ஒரு சித்திரம் வைத்திருந்தேன்.  அதற்கும், நேரில் கண்ட அவரது தோற்றம், பழக்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
தோழர் தா.பாண்டியன் அவர்களின் ஏற்ற இறக்கம் நிறைந்த கம்பீரமான பேச்சை மேடைகளில் கேட்டு, தலைவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்று நினைத்திருந்தேன்.

கே.டி.கே. அந்தப் படிமத்தையும் உடைத்தார். சிறு சிறு வாக்கியங்கள். குரலை உயர்த்தவே இல்லை. ஒரு உரையாடுகிற  நடையில் தான் பேசிக் கொண்டிருந்தார்.
முதல் பார்வையில் என் எதிர்பார்ப்புகளை எல்லாம் பொய்ப்பித்த அந்த மனிதர் மறையும் வரையில், 22 ஆண்டுகள் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். அவரைவிட மேலாக என்னை ஈர்த்த மனிதர் யாருமில்லை என்ற நிலையில் நெஞ்சில் நிலைத்து தங்கியிருக்கிறார்.

சலனமில்லாத உறுதி!

பெருமதிப்புக்குரிய தியாகி ஐ.மாயாண்டி பாரதி “உங்க ஆளு சரியான முரடனப்பா” என்று இந்தக் கதையைச் சொன்னார்.

‘ஒரு முறை வேலூர் சிறையில் நாங்கள் இருந்தோம். 39 நாள்வரை அவர் உண்ணா விரதம் இருந்தார். அடி சரியான அடி. எப்படி முயன்றாலும் சாப்பிடமாட்டார். காவலர்கள் அவரது வாயை வலுக்கட்டாயமாகத் திறந்து, குழாயைவிட்டுக் கஞ்சியை ஊற்றுவார்கள். அப்போதும் அவர் விழுங்காமல் துப்புவார். சட்டையிலும், மார்பிலும், வயிற்றிலும் கஞ்சி கொட்டிக் கிடக்கும். தினமும் அப்படி ஊற்றுவார்கள். அப்படியே காய்ந்து அப்பியிருக்கும். தாடி, சவரம் கிடையாது. அடையாளமே கண்டுபிடிக்க முடியாது.

அவருடைய உடம்பில் பல தழும்புகள் உண்டு. ஒவ்வொரு தழும்புக்கும் ஒரு கதை உண்டு”

நெற்றித் தழும்பு!

அவர் நெற்றியில் குறுக்கு வெட்டாக ஒரு தழும்பு உண்டு. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, ஒரு நாள் நேரு அவரிடம் ‘இவ்வளவு அமைதியான நீங்கள் எப்படி அந்த இம்சை கட்சியில் இருக்கிறீர்கள்’ என்று கேட்டாராம். அவரிடம் தனது நெற்றிக் தழும்பைக் காட்டி, “உங்கள் அகிம்சை கட்சி தந்த பரிசு இது” என்றாராம் கே.டி.கே. ஒன்றும் பேசாமல் நகர்ந்து விட்டார் நேரு என்று சொல்லி சிரிப்பார் கே.டி.கே.

நானும் கைதாகிறேன்!

போலீஸ் என்ற உடனே அந்த முரட்டுத்தனம் அவரைப் பற்றிக் கொள்ளும். நான் நேரில் பார்த்த நிகழ்வு இது.

கே.டி.கே., நான், டி.ஆர்.எஸ். மணி ஆகியோர் வேறொரு பணிக்காக மதுரை சென்றிருந்தோம். தோழர் எம்.சரவணன் வந்து, செல்லூரில் கைத்தறி தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி போராடுவதாகவும், கே.டி.கே. வந்தால் நல்லது என்றும் அழைத்தார். வந்த வேலையை மறந்து கே.டி.கே. கிளம்பினார்; கூடவே நானும் டி.ஆர்.எஸ்.ஸூம். அங்கே போனபோது ஒரே போலீஸ் மயம். ஒலிபெருக்கி அனுமதி தரப்படவில்லை. கைத்தறி தொழிலாளர்கள் அரைவட்டமாக தரையில் அமர்ந்திருக்க, உள்ளூர் தலைவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தனர். ஒரே பதட்ட நிலை.

ஆட்டோவிலிருந்து நாங்கள் இறங்கியதும், காவல்துறை உயரதிகாரி வேகமாய் கே.டி.கே.விடம் வந்தார். “ஐயா! அனுமதி ரத்து செய்திருக்கிறோம். நீங்கள் அவர்களை உடனடியாகக் கலைந்து போகுமாறு சொல்லி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உதவவேண்டும்“ என்று கேட்டுக்கொண்டார்.

கே.டி.கே. கூட்டத்துக்குள், நுழைந்து நடுவில் போய் நின்றார். எல்லோரும் எழுந்து வரவேற்றனர். அவராக உரத்த குரலில் பேசத் தொடங்கினார். ‘உங்களைக் கலைந்து போகச் சொல்லுமாறு போலீஸ் அதிகாரி என்னிடம் கேட்டுக் கொண்டார். தொழிலாளி போராடும்போது, கூட்டம் போட்டு தமது பிரச்சினையைப் பேசக்கூட காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பது நியாயமில்லை. ஒலிபெருக்கி தரமாட்டோம் என்கிறார்கள். சரி பயன்படுத்த வேண்டாம். ஆனால் நாம் பேசுவோம். யாரும் எதற்கும் அசையாதீர்கள். எல்லாத் தலைவர்களும் பேசுவார்கள். போலீஸ் கைது செய்யட்டும். நானும் உங்களோடு அரெஸ்ட் ஆகிறேன்’ என்றார்.
ஒரே ஆரவாரம். போலீஸ் சுற்றி வளைத்து நின்றும் யாரும் அஞ்சவுமில்லை; நகரவும் இல்லை. எல்லோரும் பேசியபின்பு, கே.டி.கே. வாழ்த்திப் பேசினார். கூட்டத்தையே கைது செய்தது காவல்துறை.

அனைவரையும் கைது செய்தபின், கே.டி.கே.யை ஜீப்பில் ஏற்றி காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். நான், மறைந்த ஜான் மோசஸ், இன்னும் சிலர் அவரோடு இருந்தோம்.

கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை வேறு இடத்துக்கு கொண்டு சென்று விட்டார்கள். கே.டி.கே.வுக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே! உடனே தொழிலாளர்களிடம் கொண்டு செல்லுமாறு கூறி வெளியேற முயற்சித்தார். விடுதலை செய்வதாகச் சொன்னபோதும், தொழிலாளர்கள் இருந்த இடத்துக்கு அழைத்துச் செல்லச் சொல்லி அங்கிருந்துதான் விடுதலையானார்.
சாகும் வரை கட்சிதான்; செத்தாலும் கட்சி தான்

மதுரைச் சிறையில் ஒரு முறை என்னிடம் சொன்னார்:
“அந்த மாமரத்துக்கு பக்கத்தில் உள்ள தனிமைக் கொட்டடியில் தான் என்னை வைத்திருந்தார்கள். ஒருநாள் என் ஆடைகளைக் களைந்து, கைகளைப் பின்புறமாகக் கட்டி, வெயிலில் குப்புறப்படுக்கப் போட்டு மலத்தைக் கரைத்து என் மீது ஊற்றிவிட்டுப் போனார்கள். கட்சியில் இல்லைன்னு எழுதிக் கொடுத்துட்டு வீட்டுக்குப் போடா, இல்லையின்னா இங்கதான் உனக்கு சாவு என்றார் ஒரு கான்விக்ட் வார்டர்.

ஜெயில் காவலர் “கம்யூனிஸ்ட் வாழ்க” ன்னு இப்பச் சொல்லுடா” என்று இளக்காரமாகச் சிரித்தான். சீமான் வீட்டுப் பிள்ளை, சீமையிலே படித்தவர். அசிங்கப்படுவது பொறுக்காமல் போய் விடுவான் என்பதுதான் அவர்களின் எண்ணம்.

அப்போது நான் “சாகும் வரை கம்யூனிஸ்ட் கட்சியை விட்டுப் போகமாட்டேன்; செத்தாலும் போகமாட்டேன்” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
அவர் இதைச் சொன்னபோது, ஏதோ பஸ்ஸிலிருந்து இறங்கி வருகிறேன் என்று சொல்வதுபோல சாதாரணமாகச் சொன்னார். அந்த நொடியில் நான் சிலிர்த்துப் போனேன்.

சொன்னபடி வாழ்ந்தவர்

அவரது இறுதிக்காலம், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகமான பாலன் இல்லத்தின் சிறிய அறையில்தான் கழிந்தது.

தனது எந்த வைராக்கியத்தையும் இழந்து விடாமல், 88 ஆண்டு காலம் துடித்து வந்த அந்த இரும்பு இதயம் ஓய்வு எடுத்தது.

அவர் உயிர் துறந்த 2001 டிசம்பர் 26ம் தேதி, எந்தக் கட்சியை தனது உயிர் மூச்சாக நேசித்தாரோ அந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 76 வது அமைப்பு தினம்.
அவரது உறவினர்களான பெரும் செல்வந்தர்கள், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குத்தான் வரவேண்டியிருந்தது.
தோழர் கே.டி.கே. திருப்பெயர் நீடூழி வாழ்க!

கட்டுரையாளர்:
டி.எம்.மூர்த்தி
ஜனசக்தி, ஆசிரியர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button