கோட்டூர் தோழர் அம்புஜம் மறைவுக்கு இரங்கல்
மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை
கோட்டூர் தோழர் அம்புஜம் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட முன்னணி தலைவர்களில் ஒருவரும், கோட்டூர் ஒன்றிய ஊராட்சியின் முன்னாள் தலைவருமான அம்புஜம் (வயது 73) நேற்றிரவு (27.09.2023) காலமானார் என்ற செய்தி ஆழ்ந்த வேதனை அளிக்கிறது.
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம், அழகிரி கோட்டகம் கிராமத்தில் வசித்து வந்த தோழர் அம்புஜம் சிறு வயதில் இருந்தே இடதுசாரி இயக்கத்தோடு பயணித்தவர். இவரது கணவர் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியாகவும், கூட்டுறவு சங்கத் தலைவராகவும் செயல்பட்டவர்.
விவசாயத் தொழிலாளர்களை சங்க அமைப்பில் அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டு வந்த அம்புஜம், சங்கத்தின் ஒன்றிய நிர்வாகப் பொறுப்புகளிலும், மாவட்டக் குழு உறுப்பினர், மாநிலக் குழு உறுப்பினர் போன்ற உயர் பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர்.
மாதர்களின் உரிமைகளுக்கான போராட்டங்களிலும் முன்னணி வகித்த அம்புஜம் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர் பொறுப்புகளில் செயல்பட்டவர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை வழி நின்று செயல்படுவதில் உறுதி காட்டியவர். இவர் கட்சியின் மாவட்ட குழு மற்றும் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், மாநிலக் குழு உறுப்பினர் பொறுப்புகளில் செயல்பட்டு கட்சிக்கு பெருமை சேர்த்தவர்.
கோட்டூர் ஒன்றிய ஊராட்சியின் தலைவர், திருவாரூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஒன்றிய ஊராட்சிக் குழு உறுப்பினர் என மக்கள் பிரதிநிதியாக தொடர்ந்து பணியாற்றி, அனைத்துப் பகுதி மக்களின் நன் நம்பிக்கையை பெற்றவர். அவரது இழப்பு எளிதில் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.
அம்புஜத்தின் கணவர் ராஜமாணிக்கம், மகன் சக்திவேல், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, செவ்வணக்கம் செலுத்துகிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.