கட்டுரைகள்மாநில செயலாளர்

அலைகடல் மீது தொலையும் வாழ்க்கை – 1

இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் எழுதிய கட்சிக் கடிதம் வருமாறு:

கடல் நீரோட்டத்துக்கு எல்லைகள் தெரியாது!

போர்க்குணமிக்க தோழர்களே!

உலகில் வாழும் எண்ணற்ற தொழிலாளர்களின் வாழ்வில் வேறுபட்ட, வித்தியாசமான, வேறு எந்த தொழிலாளிக்கும் இல்லாத அவலங்கள் நிறைந்திட, வாழ்க்கையினை வாழ்ந்திட வேண்டிய கட்டாய நிலைக்கு தமிழ்நாட்டு மீனவ பெருமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்களின் துயரங்கள் என்றுதான் தீரும் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.

ஒவ்வொரு தொழிலாளியும் தான் பணிபுரியும் இடத்தில், தான் மேற்கொள்ளும் பணிக்கு உத்தரவாதம் வேண்டும். ஊதிய உயர்வு வேண்டும், ஊக்கத்தொகை வேண்டும், பணி ஓய்வுக்குப் பின்னர் ஓய்வுக் கால ஊதியம் வேண்டும் என்று கோரிப் போராடுவார்கள்.

ஆனால், மீனவர்கள் அதிலும் குறிப்பாக, தமிழக மீனவர்கள் கோரிக்கை என்பது வித்தியாசமாக உள்ளது.

தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும்.
தனது தொழிலுக்குப் பாதுகாப்பு வேண்டும்.
தனது உடமைகளுக்குப் பாதுகாப்பு வேண்டும்
என ஒன்றிய, மாநில அரசுகளிடம் மன்றாடுகின்றனர்.

தமிழ்நாட்டு கடற்கரை ஏறத்தாழ 1076 கி.மீ. நீளம் கொண்டதாகும். இது நாட்டின் மொத்த கடற்கரையில் 13 விழுக்காடு ஆகும்.

தமிழ்நாட்டு கடற்கரை பழவேற்காடு பகுதியில் இருந்து வேதாரண்யம் வரை சோழமண்டல கடற்கரை என்றும், வேதாரண்யத்தில் இருந்து தனுஷ்கோடி வரை பாக் நீரிணைப்பு என்றும், தனுஷ்கோடியில் இருந்து கன்னியாகுமரி வரை மன்னார் வளைகுடா / முத்து குளித்தலை என்றும், கன்னியாகுமரியில் இருந்து நீரோடி வரை அரபிக் கடல் பகுதி என்றும் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் பல மணல் திட்டுகளும் சிறிதும் பெரிதுமாக பல தீவுகளும் உள்ளன.

அவற்றில் இராமேஸ்வரம் தீவு, குந்துக்கல் தீவு, புனவாசல் தீவு, முயல் தீவு, பூ மரிச்சான் தீவு, முல்லைத்தீவு, மணல் தீவு, கச்சத்தீவு, அப்பா தீவு, நல்ல தண்ணி தீவு, உப்புத் தண்ணி தீவு மற்றும் குருசடித் தீவு ஆகியன குறிப்பிடத்தக்கவை.

இந்தத் தீவுகளில் ஒன்றான கச்சத்தீவு என்பது இந்திய, இலங்கை நாடுகளிடையே, பாக் நீரிணையில் சுமார் ஒரு மைல் கல் நீளமும் அரை மைல் கல் அகலமும் 285 ஏக்கர் பரப்பளவும் கொண்ட, மீன்வளம் மிக்க ஒரு சிறிய தீவு ஆகும்.

பாக் நீரிணை என்பது தமிழகத்தில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் கடற்கரை பகுதிகளுக்கும் இலங்கையின் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களின் கடற்கரைக்கும் இடைப்பட்ட கடல் பகுதியாகும்.

பாக் நீரிணை மிகக் குறுகிய கடற்பரப்பை கொண்டது. இதன் அதிகபட்ச அகலம் 100 கிலோ மீட்டர் ஆகும்.

சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த இராபர்ட் பாக் என்பவரின் பெயர் தான் இந்த நீரிணைக்கு சூட்டப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இந்த நீரிணைப்பில் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்வளம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமேஸ்வரத்திலிருந்து படகில் செல்லும் போது இராமேஸ்வரம் கோயில் கோபுரம் மெல்ல மறைய, கச்சத்தீவு நம் கண்களுக்குத் தெரியும்.

இராமேஸ்வரத்திலிருந்து கச்சத்தீவு செல்ல அதிகபட்சம் இரண்டு மணி நேரமாகும். கச்சத்தீவிருந்து யாழ்ப்பாணம் 70 கி.மீ. தொலைவும், நெடுந்தீவு 28 கி.மீ. தொலைவும், இராமேஸ்வரம் 18 கி.மீ. தொலைவும், தலைமன்னார் 25 கி.மீ. தொலைவும் உள்ளது.

கச்சத்தீவு பகுதியை சுற்றிலும் நல்ல மீன்வளம் குறிப்பாக இறால் அதிக அளவில் கிடைப்பது மட்டுமல்ல, சங்கு, முத்துச்சிப்பி மற்றும் பவளப்பாறை ஆகியன மீனவர்களுக்குப் பெரும் வருமானத்தை ஈட்டி தருவதாகும்.

தமிழ்நாட்டு மீனவர்கள் குறிப்பாக இராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் பாரம்பரியமாக கட்டுமரங்கள் மற்றும் நாட்டுப் படகுகளின் மூலம் மீன்பிடிக்கச் செல்வதும், கச்சத்தீவில் ஓய்வு எடுப்பதும், மீன் வலைகளை உலர்த்துவதும், மீண்டும் மீன்பிடிக்கச் செல்வதும் என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இதேபோன்று இலங்கை பகுதியைச் சேர்ந்த நெடுந்தீவு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் கச்சத்தீவு பகுதிக்கு வந்து மீன்பிடிப்பதும், வலைகளை உலர்த்துவதும், ஓய்வு எடுத்துக் கொள்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இருநாட்டு மீனவர்களுக்கும் எத்தகைய பகை உணர்வோ, காழ்ப்புணர்ச்சியோ இல்லை. இரு நாட்டு மீனவர்களும் சகோதர பாசத்துடன் பழகி வந்தனர்.

இராமநாதபுரம் சேதுபதி கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமைகள் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் செய்துள்ளார்.

1905 ஆம் ஆண்டு சீனி கருப்பன் என்ற மீனவர் புனித அந்தோனியார் தேவாலயத்தை கச்சத்தீவில் கட்டினார்.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் அந்தோனியார் ஆலயத் திருவிழா நடைபெறும். தங்கச்சி மடத்திலிருந்து கத்தோலிக்க பாதிரியார் கச்சத்தீவுக்கு சென்று திருப்பலி நடத்துவார்.

இவை அனைத்தும் இராமநாதபுரம் மாவட்ட கெஜட்டில் உள்ளது.

1948 ஆம் ஆண்டு ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டது. சென்னை மாகாண அரசு 11.8.1949ல் அரசாணை எண்: 2093 வெளியிட்டு, கச்சத்தீவு சென்னை மாகாணத்திற்கு சொந்தமான அரசு நிலம் என அறிவித்தது.

அத்தகைய அரசாணை மூலம் இராமேஸ்வரம் கிராம சர்வே எண்: 1250ல் 285 ஏக்கர் 200 சென்ட் பரப்பளவு கொண்ட கச்சத்தீவை அரசு புறம்போக்கு நிலமாக அறிவித்தது. இந்நிலை 1974 ஆம் ஆண்டு வரை நீடித்து, இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கச்சத்தீவு இருந்து வந்தது.

1974 ஆம் ஆண்டு நல்லெண்ண அடிப்படையில் இந்திய, இலங்கை உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்திய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. 1974 ஜூன் மாதம் 26 ஆம் நாள் இந்திரா காந்தியும் ஜூன் மாதம் 28ஆம் தேதி சிரிமாவோ பண்டாரநாயகாவும் கையெழுத்திட்டனர்.

இந்திய மீனவர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் கச்சத்தீவுக்கு வந்து செல்லலாம். எந்தப் பயண ஆவணங்களும் இலங்கை அரசிடம் அனுமதியும் பெறத் தேவையில்லை என்றும், பாரம்பரிய வழக்கப்படியே இந்திய, இலங்கை படகுகள் பரஸ்பர நீர் எல்லைக்குள் வந்து செல்லலாம் என்றும் உடன்பாடு காணப்பட்டது. அதுவும் 1976ல் இல்லை என்று ஆனது.

பாரம்பரிய மீனவர்களைப் பொறுத்தவரை கடலில் மீன் பிடிக்க எல்லை என்பதே இல்லை. கடல் எல்லைகள் என்பவை நிலத்தில் வாழும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. நிலம் சார்ந்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட எல்லைகளை பாரம்பரிய மீனவர்கள் பொருட்படுத்துவது இல்லை. ஏனெனில் காற்றும் கடல் நீரோட்டமும் இயற்கையில் எப்படி உள்ளதோ அதற்கேற்பவே கடல் வேட்டையை அமைத்து கடலில் வலையை வீசுவார்கள்.

இந்திய கடல் எல்லையில் வலைகளை வீசினால், சில மணி நேரங்களில் கடல் வெள்ளம் எனப்படும் கடல் நீரோட்டம் வலைகளையும், படகுகளையும் இலங்கை கடற்பகுதிக்குள் இயற்கையாகவே கொண்டு சென்று விடும்.

அதேபோல இலங்கை கடற்பகுதியில் வலைகளை வீசினால் கடல் நீரோட்டம் இந்திய கடற்பகுதிக்கு வலைகளையும் படகுகளையும் கொண்டு வருவது இயற்கையாகவே நடக்கும் ஒன்று என்பதனை அறிவாளி பெருமக்கள் உணர வேண்டும்.

இந்தியா, இலங்கை ஆகிய இரு நாட்டு மீனவர்களுமே எல்லை தாண்டி மீன்பிடிப்பதை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடலுக்குள் சென்று மீன் பிடிப்பதும், இலங்கை மீனவர்கள் கேரள கடல் பகுதி, லட்சத்தீவு மற்றும் மினிக்காய் தீவுகள் ஆகியவற்றில் மீன் பிடிப்பதும் வாடிக்கையான ஒன்றுதான்.

இந்தியா – இலங்கை இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட இரு ஒப்பந்தங்களுக்குப் பின்னரும் கூட ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் வரை இருநாட்டு மீனவ மக்களும் எந்தப் பிரச்சனையும் இன்றி, இருநாட்டு கடல் பகுதிகளிலும் மீன்பிடித் தொழிலை செய்து வந்தனர். (தொடரும்)

தோழமைமிக்க

இரா.முத்தரசன்
மாநிலச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

(ஜனசக்தி, 2023 நவம்பர் 26 – டிசம்பர் 2 இதழ்)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button