அறிக்கைகள்தமிழகம்மாநில செயலாளர்

கள்ளச் சாராயம் குடித்து 30 பேர் பலி: குற்றவாளிகளை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்

மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தல்

கருணாபுரம் கள்ளச்சாராய விற்பனை மற்றும் துயரச் சாவுகள் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கள்ளக்குறிச்சி நகரின் அருகில் உள்ள கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை குடித்ததால் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, விழுப்புரம், சேலம் என பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்ற செய்தி நெஞ்சை பிளக்கும் வேதனை அளிக்கிறது.

இந்தக் கொடூர குற்ற நிகழ்வுக்கு காரணமான கள்ளச் சாராய வியாபாரம் கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த சட்டவிரோத, சமூக விரோதச் செயல் மாவட்ட வருவாய்த்துறை மற்றும் காவல் நிர்வாகத்தின் ஆதரவோடு நடந்து வருவது, இந்த துயரச் சம்பவத்தின் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த குற்றச் சம்பவத்தை அறிந்தவுடன், ஆரம்ப கட்ட விசாரணையில் உண்மைகளை அறிந்த மாண்புமிகு முதலமைச்சர், மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்தும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல் துறை அலுவலர்கள் சிலரை தாற்காலிக பணி நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளதுடன், மேலும் வழக்கு விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றியும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

கருணாபுரம் கள்ளச்சாராய  உற்பத்தி மற்றும் விற்பனையில் வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் கலால் துறை அலுவலர்களும், சுயநல வெறிகொண்ட தனிநபர்கள் சிலரும் ஒரு அச்சாக செயல்பட்டு வருகிறார்கள் என ஆழ்ந்த சந்தேகம் கொள்வதாக உள்ளன. கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டது போன்று மேற்கண்ட நபர்களும் கைது செய்யப்பட வேண்டும்.

கருணாபுரம் கள்ளச்சாராய விற்பனை மற்றும் துயரச் சாவுகள் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புள்ள எவரொருவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
அண்மையில் மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளில் கருணாபுரம் பகுதியில் இருந்த ஒரு கடையும் மூடப்பட்டது. இதனை வாய்ப்பாக கொண்டு  கள்ளச்சாராய வியாபாரத்துக்கு பயன்படுத்தியுள்ளனர். இதற்கு காரணமானவர்கள் யார் என்பது உட்பட விசாரிக்கப்பட வேண்டும்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு போதுமான இழப்பீடு வழங்குவதுடன், மறுவாழ்வுக்கான உதவிகளையும் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button