கோவையில் நடந்த ஊடக சந்திப்பின்போது பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ‘நீங்கள் தலைவர் பதவியில் இல்லை என்றால் பாஜகவில் இருப்பீர்களா’ என்ற கேள்வியை ஒரு பெண் பத்திரிக்கையாளர் எழுப்பினார். அதற்கு பொருத்தமான பதிலை அவர் கூறியிருக்கலாம்.
ஆனால் “கேள்வி கேட்பதற்கு என்று மரபு இருக்கிறது. அறிவாளித்தனமான இந்த கேள்வியை யார் கேட்கிறார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும். வந்து என் பக்கத்தில் நில்லுங்கள்” என்று அண்ணாமலை அழைத்து இருக்கிறார். “மரபை தாண்டினால் அண்ணாமலை யாராயிருந்தாலும் விடமாட்டான்” என பஞ்ச் டயலாக் வேறு!
”இந்த கேள்வி எந்த வகையிலும் அறம் தவறிய கேள்வியோ, ஒரு தனி நபரின் அந்தரங்க வாழ்க்கை குறித்த கேள்வியோ, ஒரு அரசியல் கட்சித் தலைவரின் குடும்ப விவகாரம் தொடர்பான கேள்வியோ, கேட்கவே கூடாத அல்லது கேட்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத கேள்வியோ கிடையாது” என்று பத்திரிக்கையாளர் சங்கம் சுட்டிக்காட்டி இருக்கிறது
அகங்காரம் தலைக்கேறிய ஆணவம், ‘என்னை தட்டிக் கேட்க யார் இருக்கிறார்’ என்ற முரட்டு துணிச்சல் அவரை இப்படி எல்லாம் பேச வைக்கிறது.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்திலும் பத்திரிகையாளர்களை பார்த்து “மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி எல்லாம் சுத்தி சுத்தி வர்றீங்க! நாய், பேய், சாராயம் விக்கிறவன் கேட்பதற்கெல்லாம் நான் பதில் சொல்லனுமா” என்று வினவினார்.
இக்கட்டான கேள்விகளை பத்திரிகையாளர்கள் வைத்தால் “நீங்கள் எல்லாம் அறிவாலய அடிமைகள்” என்பார்.
தனக்காக கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்கு பதிலாக, அவர்கள் பணியாற்றிய செய்தி நிறுவனங்கள் வேலையை விட்டு நீக்கியோ அல்லது அவர்களாகவே விலகிச் செல்லும் வகையில் சிறுமைப்படுத்தியோ வந்துள்ளனர். தமிழ்நாடு நன்கறிந்த பல ஊடகவியலாளர்களுக்கு இந்த கதி நேர்ந்தது. இதன் மூலம் அந்த செய்தி நிறுவனங்கள் தம்மை “கமலாலய அடிமைகள்” என்பதை நிரூபித்தன.
ஊடக நேர்மையைப் பாதுகாப்பதை விட, தமது சொத்துக்களையும் ஊடக வணிகத்தின் மூலம் ஈட்டும் பெரும் பொருளையும் பாதுகாப்பதே இந்த முதலாளிகளின் நோக்கமாக இருக்கிறது.
ஊடக அறத்தைக் காப்பதற்காக நின்றால், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சேர்ந்து படையெடுக்கும். அல்லது பங்குச்சந்தை தகிடுதத்தங்களால் சொத்துக்களோடு அந்த ஊடகம் கார்ப்பரேட் முதலாளிகளால் கபளீகரம் செய்யப்படலாம். என்டிடிவிக்கு நேர்ந்த கதி எல்லோருக்கும் தெரியும்.
கெடுபிடிகளுக்கெல்லாம் அடிபணியாமல், மோடி அரசின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி வந்த “நியூஸ் க்ளிக்“ செய்தி நிறுவனத்தின் மீது மோடி அரசு இப்போது பாயத் துவங்கி இருக்கிறது. அதில் பணிபுரிந்த பத்திரிக்கையாளர்கள், பணியாளர்கள் அனைவரது வீடுகளும் ரெய்டு செய்யப்பட்டுள்ளன.
“உன் மீது வன்முறை பயன்படுத்த உத்தரவோடு வந்திருக்கிறோம். பேசாமல் ஒத்துழை” என்று பெண் பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவரும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களது தனிப்பட்ட விவரங்கள் குடும்பப் பின்னணி உட்பட விசாரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் பற்றிய கேள்வி பலமுறை தொடுக்கப்பட்டுள்ளது. அவர்களது கேமரா, மடிக்கணினி, எலக்ட்ரானிக் பொருட்கள், கார்கள் உட்பட அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி வீட்டுக்குள்ளும் சோதனை செய்திருக்கிறார்கள். ஒரே நாளில் நிறுவனத்தை பூட்டி சீல் வைத்து விட்டார்கள். பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஏவப்பட்டிருக்கிறது.
“சந்தேகத்துக்குரிய” 37 ஆண்களையும் 9 பெண்களையும் விசாரித்து இருக்கிறோம் என்று டெல்லி காவல்துறை கூறுகிறது.
ஒரு இளம் பெண் பத்திரிக்கையாளர் “எனது எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது. ஏனென்றால் நேர்மையான பத்திரிகை செயல்பாடும், இந்த நாட்டு மக்களின், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரலை கவலைகளை பொதுவெளியில் தருவதும் இப்போது குற்றமாக்கப் பட்டுவிட்டது” என்கிறார்.
அமெரிக்காவிலிருந்து, சீனத் தொடர்புடைய நிதி உதவியை நியூஸ் கிளிக் பெறுகிறது என்று திடீரென “கண்டுபிடித்து” விட்டார்கள். அந்த செய்தியாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடுவது மட்டுமல்ல, இந்தக் கொடூர செயலை கண்டிப்பவர் எல்லோரையும் சீனாவின் ஏஜெண்டுகள், தேசத்துரோகிகள் என்று பொது வெளியில் கூசாமல் குற்றம் சாட்டுவதற்கான பின்புலத் தயாரிப்பே இது.
திரைகள் எல்லாம் கிழிந்து, பாசிச சக்திகளின் கோரமுகம் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கி விட்டது. உலகின் எந்த நாட்டிலும் சர்வாதிகாரம் அதிக காலம் நீடித்ததில்லை!