
மும்பையில், ‘ஹேபிடேட்’ என்ற பெயரில் செயல்பட்ட அரங்கத்தை சிவசேனா குண்டர்கள் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.
குரூரமான மதவெறி கொண்டபாஜக மீதும் அதன் ஆட்சியின் மீதும் கூர்மையான விமர்சனங்களை நகைச்சுவையாக முன்வைக்கும் குணால் காம்ரா என்ற ‘ஸ்டாண்ட் அப் காமெடி’யாளர் ஒரு நிகழ்ச்சியை நடத்தி அதைக் காணொளியாகப் பதிவு செய்து வெளியிட்டதே அதன் காரணம்.
‘வீ ஷல் ஓவர்கம்’ (நாங்கள் வெல்வோம்) என்ற உலகளவில் பிரபலமான பாடலின் இந்தி வடிவத்தை, வேறு சொற்களால் நிரப்பி அவர் பாடியிருந்தார்.
எல்லாவற்றையும் இழப்போம், இதயத்தில் மூட நம்பிக்கைகளை ஏற்போம், நாட்டைச் சீர்குலைப்போம், அதானி, அம்பானி அடிக்கும் கொள்ளைகளுக்கு அடிபணிவோம் எனும் சொற்களோடு, காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவையும், பாலியல் வல்லுறவுக்காக தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கும் சாமியார் ஆசாராம் பாபுவையும் வாழ்த்தி அந்தப் பாடல் அமைந்திருந்தது.
எவ்வளவு கேவலமான பாதையில் நாடு வழிநடத்தப்படுகிறது என்பதைச் சிரிக்கச் சிரிக்க படுகிண்டலாய் வர்ணித்தது அந்தப் பாடல்.
மகாராஷ்டிரா துணை முதல்வரான ஏக்நாத் ஷிண்டேவை ‘துரோகி’ என்று குறிப்பிட்டு, உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகக் கட்சியைப் பிளந்ததைக் கேலி செய்தும் பாடினார்.
காம்ராவின் இந்தக் காணொளி பரபரப்பாகப் பரவியதால், நிகழ்ச்சி நடந்த அரங்கத்தையும், அதனை உள்ளடக்கிய விடுதியையும் ஷிண்டேயின் சிவசேனா கும்பல் தாக்கிச் சூறையாடியது. அதுமட்டுமின்றி, விதி மீறிக் கட்டப்பட்டதாகக் கூறி அந்த விடுதியின் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி இடித்துத் தள்ளியது.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், ‘பேச்சுரிமை முக்கியமானதுதான். ஆனால் அதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அவர் பிரதமருக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், நாட்டின் மிக முக்கியத் தொழிலதிபர்களுக்கும் எதிராகப் பேசுகிறார். பேசுவதற்கும் ஒரு எல்லை உண்டு. எந்த வினைக்கும் எதிர்வினை உண்டு’ என்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நியாயம் கற்பித்துள்ளார்.
காம்ரா மன்னிப்பு கேட்காவிட்டால், அவருக்கும் இதே கதி தான் என்று பகிரங்கமான அச்சுறுத்தல்கள் தொடுக்கப்படுகின்றன.
39 வயதான காம்ரா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்று பகிரங்கமாக அறிவித்தவர். மாட்டிக்கொண்டதும் மன்னிப்புக் கோர அவர் சாவர்க்கர், எச்.ராஜா, அண்ணாமலை வழி வந்தவரல்லர்!
“நான் ஒருபோதும் மன்னிப்புக் கோர மாட்டேன். நகைச்சுவையான விமர்சனங்களை ஏன் இவர்கள் வன்முறையால் எதிர்கொள்கிறார்கள்?” என்றதோடு நிற்காமல், “என்னைத் தாக்குபவர்கள் வாருங்கள், நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன்” என மீண்டும் பகடி செய்திருக்கிறார்.
ஆனால் இதே தமிழ்நாட்டில், டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட முனைந்த போது பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். மாலையில் விடுவிக்கப்பட்டார்.
இதைக் கண்டித்து, “எதிர்ப்புகளை நசுக்குகிறீர்கள். இதுதான் ஜனநாயகமா? இவ்வளவு கோழைத்தனமாக நீங்கள் செயல்பட முடிகிறதா?” என்று அண்ணாமலை கேட்டார்!
கைது செய்யப்பட்ட இன்னொரு தலைவர் எச்.ராஜா “இந்த நாய் வண்டியில் நான் ஏற மாட்டேன்” என்று பிடிவாதம் பிடித்தார். டாஸ்மாக் குறித்த வழக்கில் துறையின் அமைச்சர் மட்டுமல்ல, இன்னொரு மனீஷ் சிசோடியா (அதாவது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர்) சிறைக்குள் தள்ளப்படுவதைப் பார்ப்பீர்கள்” என்று மார்தட்டிக் கொண்டார். ஆனால் அமலாக்கத் துறையைத்தான் நீதிமன்றம் கண்டித்தது.
“கேடிகளும் பாலியல் குற்றவாளிகளும் திமுக நிர்வாகி என்ற பெயரில் பகிரங்கமாகத் திரிகிறார்கள்” என்று குற்றம் சுமத்தினார் அண்ணாமலை.
தந்தை பெரியார் மீதும், திமுக மீதும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் மீதும் தரம் தாழ்ந்த, அருவருக்கத்தக்க, மோசமான தனிநபர் தாக்குதல்களை, பொய்யும் புரட்டுமாய் பிஜேபி தலைவர்களும் அதன் பரிவாரங்களும் தொடுத்து வருவதை நாடறியும்.
நீதிமன்றங்கள் எத்தனை முறை கண்டித்தாலும், ஆர்எஸ்எஸ்ஸுக்கு முரண்பாடான கருத்துகளை வெளிப்படுத்துபவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பது உத்தரப்பிரதேசத்தில் தொடங்கி மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா என்று பரவிக் கொண்டிருக்கிறது.
“தமிழ்நாட்டிலும் ஆத்திரமூட்டி, எவ்வாறாகிலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, ஒரு கலவரச் சூழலை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி விட வேண்டும் என்று பிஜேபி திட்டமிடுகிறது. கலவரம் நடக்கும் இடத்தில்தான் அதனால் காலூன்ற முடியும் என்பதே அனுபவம்.
திமுகவுக்கு எதிரான கட்சிகளைக் கூட, தன்னை ஆதரிக்க வேண்டும் என்று அச்சுறுத்தித்தான் அடிபணிய வைக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், ஏமாற மாட்டார்கள்!