மாநில செயலாளர்

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்!

கட்சிக் கடிதம் - மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்

போர்க்குணமிக்க தோழர்களே!

கலை வேலைப்பாடுகள் உடைய மிக விலை உயர்ந்த, அழகிய புத்தம் புதிய மதுபானி சேலை அணிந்து, பட்டுத்துணி ஜாக்கெட் சகிதமாக குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

குடியரசுத் தலைவர் திரோபதி முர்மு தேனும், தயிரும் கலந்து குழந்தைக்கு ஊட்டுவது போல் ஊட்டியும் விட்டார்.

‘‘மகளே! பாவ காரியங்கள் எதையும் செய்யத் துணியாதே! பாகுபாடாக நடந்து கொள்ளாதே! அனைவருக்கும் மதிப்பளித்து, நல்ல பண்புடைய பெண்ணாகத் திகழ்வாய்!’’ என பகிரங்கமாகச் சொல்லாவிட்டாலும் தேனும், தயிரும் கலந்து ஊட்டியதன் பொருள் அதுவாகவே தான் இருக்க முடியும்!

எந்த ஒரு குடியரசுத் தலைவரும் இதற்கு முன்னர், நிதி அமைச்சருக்கு இப்படி ஊட்டியதாகத் தெரியவில்லை.

குடியரசுத் தலைவர் மாளிகையில் சுவைமிக்கத் தேனும், தயிரும் அருந்தி சுவைத்து முடித்த கையோடு நாடாளுமன்றம் வந்தார் நிதி அமைச்சர். 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இடை, இடையே தண்ணீரைக் குடித்தவாறு படித்தார்.

ஒன்றே கால் மணி நேரம் அழகான ஆங்கிலத்தில் வாசித்தார். அவர் வாசிக்க, வாசிக்க மேசையைத் தட்டித்தட்டி பாவம் பிரதமர் நரேந்திர மோடியின் கை வலிக்கத்தான் போகிறது.
அவரது கையைக் காட்டிலும், அவர் முன்னே இருந்த மேஜைக்குத்தான் வலி அதிகமாகி இருக்கும்.

பிரதமர் முன்னே உள்ள மேஜை என்ற காரணத்தால் அது மிக பலம் உள்ளதாகத்தான் அமைத்திருப்பார்கள். சற்று பலவீனமான மேஜையாக இருந்து இருக்குமேயானால், உடைந்து தெறித்து இருக்கும். அவ்வளவு அடிகளை வாங்கி வருகிறது பரிதாபத்திற்குரிய மேஜை.

மேசையைப் பலமாக, மிகப் பலமாகத் தட்டிய மோடியின் கைக்கு, அவர் வீட்டிற்குச் சென்றவுடன் பணிப் பெண்கள் வெந்நீர் வைத்து ஒத்தடம் கொடுத்து இருப்பார்கள்.
ஆனால் மேசைக்கு யார் ஒத்தடம் கொடுக்கப் போகின்றார்கள். அதன் வலியை அதுவேதான் போக்கிக் கொள்ள வேண்டும்.

பிப்ரவரி முதல் நாள் நிதியமைச்சர் வாசித்த அறிக்கை, அன்று தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அன்று மாலை ஏடுகள், மறுநாள் காலை ஏடுகள் அனைத்திலும் தலைப்புச் செய்தி “வருமான வரி கிடையாது” என்பதனை அனைத்து ஏடுகளும் பிரதிபலித்தன.

நாட்டில் வாழும் 140 கோடி மக்களில், மாத ஊதியம் ஒரு லட்சம் ரூபாய் பெறுவோர் நிதியமைச்சர் நிர்மலா அவர்கள் குறிப்பிட்டது போல், ஒரு கோடி பேர் மட்டுமே!
இந்த ஒரு கோடி பேரும், பெருமளவிற்குப் பணியாற்றுகிற இடம் ஒன்றிய, மாநில அரசுத் துறைகளில்.

மாதம் ஒரு லட்ச வருமானம் பெற்றால், அவர்கள் அரசுக்கு வருமானவரி செலுத்த வேண்டியது இல்லை. வரி என்பதனைச் சரியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்

அரசால் விதிக்கப்படுகிற வரி, வருமான உடையவர்கள் கட்டாயம் வரி செலுத்திட வேண்டும்.
அரசுத்துறை என்றாலும், தனியார்த் துறை என்றாலும் அவர்கள் பெறுகின்ற மாதாந்திர ஊதியத்தில் அரசு நிர்ணயித்த வரியைச் செலுத்தியே ஆக வேண்டும்.

அரசுத் துறையில் பணி புரிகின்றவர்களின் ஊதியத்தில், வரிக்குரிய தொகையினைப் பிடித்தம் செய்து கொண்டு, மீதியைத்தான் வழங்குவார்கள். ஆகவே, இவர்கள் வரி ஏய்ப்பு செய்தார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.

தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள், ஊதியத்திற்கு ஏற்ப அரசு நிர்ணயிக்கும் வரியை நிறுவனம் பிடித்தம் செய்து, அவர்களுக்கு உரிய வரித் தொகையினை அரசு கஜானாவில் சேர்த்து விட வேண்டும். அவ்வாறு நிர்வாகம் செய்யத் தவறினால், நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டி வரும் என்பது மட்டுமல்ல, நிறுவனம் தண்டிக்கப்படும்.

ஆகையால் மாத ஊதியம் பெறுபவர்கள் வரி ஏய்ப்பு செய்ய முடியாது, இயலாது.
வரி ஏரிப்பு செய்ய இயலாத, முடியாத நிலைக்கு உட்பட்டவர்கள்தான் அந்த ஒரு கோடி பேர்கள். அவர்கள் இனி வரி செலுத்திட வேண்டியது இல்லை என்பதுதான் தலைப்புச் செய்தியாக வெளிவந்துள்ளது.

சரி மற்றொரு வரியைப் பெருமையோடு பார்ப்போம். ஜனசக்தி வாசகப் பெருமக்கள், கட்சி அரசியலைத் தாண்டிச் சிந்திப்பவர்கள். வாரம்தோறும் தவறாமல் ஜனசக்தி பார்ப்பவர்கள் அல்ல, பக்கம் தவறாமல் படிப்பவர்கள். காரணம் ஜனசக்தியில் வரும் கட்டுரைகள், செய்திகள் அனைத்தும் மிகுந்த பொறுப்புணர்வோடு வெளியிடப்படுபவை.

ஆதலால் பக்கம் தவறாமல் வரி, வரியாகப் படித்து பயன் பெறுபவர்களே ஜனசக்தி வாசகர்கள்.

ஜனசக்தி வாசகர் என்றாலே, அவர் பெருமைக்குரியவர் என்று பொருளாகும்.
அப்படிப்பட்ட பெருமைக்குரிய வாசகர்களாகிய நீங்கள், சென்ற வாரம் ஜனசக்தி (பிப்ரவரி 2-8) இதழைப் படித்திருப்பீர்கள். குறிப்பாக சென்ற வார இதழில் வெளியாகியுள்ள ஆசிரியர் உரையை (தலையங்கம்) படித்திருப்பீர்கள்.

ஒருவேளை உங்கள் வேலைப்பளுவின் காரணமாக பின்னர் படிக்கலாம் எனக் கருதி‌ படிக்காமல் விட்டிருந்தால், தயவுகூர்ந்து அதனை ஒரு முறைக்கு, இருமுறை படியுங்கள். படிப்பது மட்டுமல்ல, உங்களின் குறிப்பேட்டில் அதனைக் குறிக்கத் தவறாதீர்கள்.

அதில் அப்படி என்னதான் அதிமுக்கியத்துவம் வாய்ந்த செய்தி உள்ளது எனக் கேட்கலாம்?
சென்ற வாரம் ஜனசக்தி என்பது நிதிநிலை அறிக்கை வைக்கப்படுவதற்கும் முன்பாக, 2024 டிசம்பர் 17 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் போக்கிரி ராஜா அமித் ஷா, அண்ணல் அம்பேத்கர் குறித்து அவதூறு பேசிய நாள்.

அன்றைய நாளை ஏன் அமித் ஷா அம்பேத்கர் குறித்து அவதூறு பேச வேண்டும். ‘சோழியன் சிண்டு சும்மா ஆடாது’ என்பது பழமொழியாகும்.

அமித் ஷா அவதூறு பேசியவுடன் ஆத்திரமடைந்த எதிர்க் கட்சிகள், அம்பேத்கரை நேசிப்பவர்கள் அமித் ஷாவைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

எதிர்க் கட்சிகள் முழக்கம் எழுப்பியதை ஊடகங்கள் கூச்சல், குழப்பம் என வர்ணிக்கின்றன.
ஊடகங்கள் கருத்துப்படி அதனைக் கூச்சல், குழப்பம் என்று வைத்துக் கொள்வோம்!
அத்தகைய கூச்சல், குழப்பத்தை ஒருவர் மிகச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். அவர் வேறு யாருமல்ல, அவர்தான் ஒன்றிய அரசின் நிதித் துறை இணை அமைச்சர் திருவாளர் பங்கஜராய் சவுத்திரி.

‘எரிகிற வீட்டில் இழுத்தது லாபம்’ என்பதற்கு ஏற்ப, சந்தடி சாக்கில் 230 பக்கம் கொண்ட இந்தியத் தலைமை கணக்கு தணிக்கையாளரின் (சி.ஏ.ஜி) அறிக்கையை ஓசைப்படாமல் நாடாளுமன்றக் கூட்டத்தில் முன்வைத்து கதையை முடித்துக் கொண்டார்.
அறிக்கை மீது விவாதிக்க வேண்டிய எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எவரும் அவையில் இல்லை. அனைவரும் அமித் ஷாவைக் கண்டித்து வெளிநடப்பு செய்து விட்டனர். நல்லதாகப் போய்விட்டது மோடி அரசுக்கு.

வரி என்று சொல்கிறோம் அல்லவா? அந்த வரியைக் கட்டாதவர்கள், வரி ஏய்ப்பு செய்தவர்கள், எத்தனை லட்சம் கோடி ரூபாய் என்பது மட்டுமல்ல, அதனை வருமானவரித்துறை வசூலிக்கவில்லை என்பதுடன், அது இனி வராது என்ற முடிவிற்கே வந்துவிட்டது.
வங்கிகளில் கடன் பெற்ற பெரிய மனிதர்கள், திரும்பச் செலுத்த மாட்டார்கள். அதனை வராக் கடன் என்று அறிவித்து அதை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்துவிடும்.

அதுபோன்றே பெரும் நிறுவனங்கள் தாங்கள் கோடி, கோடியாய்க் கொள்ளையிட்ட லாபத்தில், அரசுக்குச் செலுத்திட வேண்டிய வரியைக் கட்ட மாட்டார்கள். அவர்களிடம் வருமான வரித்துறை கடுமை காட்டாது, வசூல் செய்யாது, வசூலிக்க வழியில்லை என்று கூறிவிடும்.
இத்தகைய அரசின் கையாலாகாத் தனத்தையும் கூற முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு வழங்கிய சலுகைகளும், அதன் விளைவாக நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தும், தணிக்கைத் துறையின் அறிக்கை குறித்து மிகத் துல்லியமாக தலையங்கம் கூறுகின்றது.

மற்றொரு வகை வருமான வரி தள்ளுபடி என்று விளம்பரம். ஆனால், வரி தள்ளுபடி யாருக்கேனும் நாட்டு மக்கள் ஒருவருக்காவது உண்டா? வரி செலுத்துபவர்கள் யார்? அந்த ஒரு கோடி பேர் மட்டும் தானா?

இல்லை, அந்த ஒரு கோடி பேர் உட்பட 140 கோடி மக்களும் அன்றாடம் ஒவ்வொரு நாளும் என்பதல்ல, ஒவ்வொரு நொடிப்பொழுதும் வரி செலுத்தி வருகின்றோம்!

தூங்கும்போதும் கூடவா என கேட்கிறீர்கள் அல்லவா? ஆம்! அப்போது கூடத்தான். உங்கள் வீடுகளில் நீங்கள் உறங்கும்போது மின்விசிறி, குளிர்சாதனம் பயன்படுகின்றதா இல்லையா? சரி இவை இல்லாதவன் வரி செலுத்தாமல் இருக்கலாம் அல்லவா என கேட்கிறீர்கள்? அவர்கள் வீட்டில் சிமினி விளக்கு அல்லது மெழுகுவர்த்தி எரிவதில்லையா? கொசுவத்தி சுருள் புகைந்து கொண்டு இருக்குமே? இவை அனைத்திற்கும் வரி, வரி, வரி மேல் வரிகள் உண்டு!
இவை மட்டுமா? கார்கள், டிராக்டர்கள், லாரிகள், ஜீப்கள், டிரக்குகள், குட்டி யானை வண்டிகள் மட்டுமா ஓடுகின்றன?

இருசக்கர வாகனங்கள் எண்ணற்றவை இருக்கின்றனவே? ஆட்டோக்கள் ஓடுகின்றனவே! இவை எல்லாம் பெட்ரோல், டீசல் இன்றியா இயங்குகின்றன? இவைகளுக்குப் போடப்படும் வரியை யார் செலுத்துகிறார்கள்? நாட்டு மக்கள் தானே? அவர்களுக்கு வரிச் சலுகை உண்டா
நீங்கள் போற்றிப் புகழும் நிதிநிலை அறிக்கையில்?

பள்ளிச் சிறுவர்கள் பயன்படுத்தும் பென்சில், ரப்பர், நோட் புக் உட்பட கல்வி கற்கும் அனைவரும் வரி செலுத்தி வருகின்றார்களே அவர்களுக்கு வரி விலக்கு உண்டா?
அலுமினியப் பாத்திரம் முதல், அத்தியவாசிப் பண்டங்கள் வரை அனைத்திற்கும் வரி போடுகின்றீர்களே? அதற்கு விலக்கு உண்டா நிதிநிலை அறிக்கையில்?

நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் வரி மேல் வரி போட்டு, நாள்தோறும் கோடி கோடியாய்ப் பல்லாயிரம் கோடி வசூல் செய்வார்கள். ஒட்டுமொத்த நாட்டு மக்களிடத்திலும் வசூல் செய்து, பெருங் குவியலாய்க் குவித்து வைத்துக் கொண்டு, தன்னை ஆதரிக்கக் கூடிய ஒரு மாநிலத்திற்கு மட்டும் வாரி வழங்குவார்கள்.

“ஊரார் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே” என்ற பழமொழிக் கேற்ப இன்றைய மோசடியின் ஒன்றிய அரசு செயல்பட்டுக் கொண்டுள்ளது.

நாட்டில் பெரும்பாலும் மக்கள் வேளாண் தொழிலை மட்டுமே நம்பி இருக்கின்றார்கள் என்பதும், எட்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையினை அளித்திட்ட நிதி அமைச்சருக்கு, நாட்டில் எட்டுக் கோடி விவசாயத் தொழிலாளர்கள் வறுமையில் உள்ளதை உணர்வாரா?
மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருபதாம் ஆண்டில், இவ்வேலைவாய்ப்பை நம்பி உள்ள 8 கோடி விவசாயத் தொழிலாளர்கள் வயிற்றில் அடித்திட்ட நிதி அமைச்சரே நீங்கள் வாழ்க!

மோசடி அரசின் மோசடியான நிதிநிலை அறிக்கையைத்தான் பாஜகவும் அவர்களது கூட்டணிகளும் இருகரம் கூப்பி வரவேற்று மகிழ்ந்த வண்ணம் உள்ளனர்.
பாஜகவின் நயவஞ்சக நாடக அரங்கேற்றத்தைக் கண்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள்.

தஞ்சை ராமையாதாஸ்தான் நினைவுக்கு வருகின்றார். “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.’’
மீண்டும் சந்திப்போம்

வணக்கம்
தோழமைமிக்க,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button