
தேசிய மொழி என ஒன்றினைத் தேர்ந்தெடுக்க இயலாத நிலையில், அலுவல் மொழியாக மட்டுமே இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.
பல்வேறு மொழிகள் வழங்குகின்ற இந்திய ஒன்றியத்தில், வரலாற்றுப் பின்புலத்திலும் பண்பாட்டு அளவிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் தேசிய இன மக்களை இந்தி என்ற ஒற்றை மொழியால் இணைக்க இயலவில்லை.
விடுதலையடைந்து எழுபத்தேழு ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்தி மொழியால் அலுவல் மொழி என்ற ஏற்றத்தினைப் பெற முடியவில்லை. ஒன்றிய அரசிலும் இந்தி பேசும் மாநிலங்களிலும்கூட முழுமையாக இந்தியைப் பயன்படுத்தும் நிலை வரவில்லை. உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் ஆங்கிலம் தொடர்கிறது.
விடுதலைக்குப் பின்னர் இருந்த மன நிலையில், அடிமைப்படுத்தி வைத்திருந்த வேற்று நாட்டு மொழியான ஆங்கிலம் தேசிய மொழியாகவோ, இணைப்பு மொழியாகவோ அலுவல் மொழியாகவோ இருக்கக்கூடாது என்ற உணர்வுகள் மேலோங்கி இருந்தன.
இத்தகைய உணர்வுகள் விடுதலைப் போராட்டக் காலத்திலேயே விதைக்கப்பட்டு, விளைச்சலுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுட்டன எனலாம். 1918இல் சென்னையில், காந்தியடிகளால் தோற்றுவிக்கப்பட்ட தென்னிந்திய இந்திப் பரப்பு அவை (தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா) போன்றவை, நாடெங்கிலும் பல்வேறு பெயர்களில் நிறுவப்பட்டன.
இந்தி மொழியினைத் தேசிய மொழியாக்கவேண்டும் என்ற எண்ணத்தில், மறைமுகமாக இந்துசுத்தானி என்ற பெயரில் இந்தியை ஏற்கச்செய்ய காந்தி கண்ட கனவுகளும், இந்தி பேசுவோரின் விருப்பங்களும், அரசமைப்பு அவையில் தென்னிந்திய எதிர்ப்புகளால் நிறைவேறவில்லை. முரண்பட்ட கருத்துக்களினூடே, சமக்கிருதத்தைத் தேசிய மொழியாக்கும் முயற்சிகளும் நடந்தன. அனைத்தையும் கடந்து, இந்திய ஒன்றியத்தில் அடங்கியுள்ள மாநில இன மக்களை இணைக்கும் மொழியாகவும் அமையாததால், அலுவல் மொழி என்ற நிலையினை மட்டுமே இந்தியால் பெற முடிந்தது.
அப்போதும்கூட, தமிழ், வங்காளம் போன்று சில மாநிலங்களில் மட்டுமே பேசப்படும் ஒரு பகுதி மொழிதான் இந்தியும் என்பதைப் பெரும்பாலானோர் தெளிவாக எடுத்துரைத்தனர். இது மறைக்கப்படவுமில்லை; மறுக்கப்படவுமில்லை.
அன்றைய அரசமைப்பு அவை, வாக்குரிமை அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால், காசி சையது கரிமுதீன் (நடுவண் மாமாநிலம் மற்றும் பிரார்) என்ற உறுப்பினர், முழு வாக்குரிமை அடிப்படையில் அடுத்துத் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றம்தான் மொழி குறித்த இறுதியான முடிவினை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆயினும், இந்தியை அலுவல் மொழியாக ஏற்கும் சட்டப் பிரிவுகள் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போதைய அரசமைப்பு உறுப்பினர்களிடம், இந்தி மொழிக்கான ஏற்பும் மறுப்பும் இணையாகவே இருந்தன. அன்று அவைத்தலைவராக இருந்தவர், இந்தி பேசும் பீகார் மாநிலத்தைச் சார்ந்த ராசேந்திர பிரசாத். இவர் தனது சிறப்பு வாக்கை அளித்து இந்தி அலுவல் மொழியாவதை உறுதி செய்தார். இந்தியின் பரப்புரைக்காகப் பல்லாண்டுகளாகச் செயல்பட்டுவந்த அமைப்புகளின் தலைவராகவும் பணியாற்றிக்கொண்டிருந்த இந்திப் பற்றாளர் ஒருவரின் நடுநிலையற்ற வாக்களித்தலால் மட்டுமே இந்தி நுழைந்தது என்பதுதான் உண்மை.
அரசமைப்பு அவையில் நடந்த உரைகளையும் உணர்வுகளையும் வைத்து நோக்கும்போது, வெளிநாட்டு மொழி என்பதால் ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற கருத்து முன்னிறுத்தப்பட்டது. இந்திய மொழிகளில் ஒன்றுதான் அலுவல் மொழியாக இருக்கவேண்டும் என்பதால் மட்டுமே இந்தியை ஏற்கத் தயக்கத்துடன் முடிவு செய்யப்பட்டது.
அரசமைப்புக் கூறுவதென்ன?
இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒன்றியத்தின் அலுவல் மொழி, ஒன்றியத்தில் உள்ள இனங்களின் மொழிகளது (எட்டாவது அட்டவணை மொழிகள்) பயன்பாடுகள் ஆகியன குறித்து 343 முதல் 351 வரையிலான பிரிவுகள் பல விவரங்களை வெளிப்படுத்துகின்றன.
இந்திய அரசியல் சட்டத்தில் 343ஆவது பிரிவு, இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி இருக்குமென்று கூறுகிறது. இந்திய ஒன்றியத்தில் இணைந்துள்ள அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டுவிட்ட அனைத்து மாநிலங்களுக்குமான பொது அலுவல் மொழியாக இந்தி பரிந்துரைக்கப்படவில்லை.
ஆனால், 351ஆவது பிரிவு, ‘இந்தி மொழியின் பரவலை ஊக்குவித்தல், அதை வளர்த்தல், அதன் வழியாக இந்தியாவின் கூட்டுப் பண்பாட்டினது அனைத்துக் கூறுகளுக்குமான வெளிப்பாட்டு ஊடகமாகச் செயல்படுத்துவது’ ஆகிய பணிகளை ஒன்றிய அரசுக்கு ஒதுக்கியுள்ளது. இதனால், இந்திய ஒன்றியத்தின் தொடர்பு மொழி அல்லது இணைப்பு மொழியாக இந்தி வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்னும் பிரிவு மறைமுகமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்குள் நுழைக்கப்பட்டுவிட்டது எனலாம்.
அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த அய்ந்து ஆண்டுகளிலும் அதனையடுத்துப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் குடியரசுத் தலைவர் ஓர் ஆணையத்தினை அமைக்கவேண்டும் என்றும், எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளின் உறுப்பினர்களுடன் கூடியதாக அது அமையவேண்டும் என்றும், அந்த ஆணையம் உரிய பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு வழங்கவேண்டுமென்றும் பிரிவு 344 (1), (2) ஆகியன குறிப்பிடுகின்றன.
அத்துடன், அத்தகைய பரிந்துரைகளை வழங்கும்போது அந்த ஆணையம், இந்தியாவின் தொழில், பண்பாடு, அறிவியல் முன்னேற்றங்களைக் கருத்தில் கொள்வதுடன், பொதுச் சேவைகளில் இந்தி பேசாத பகுதிகளின் அடிப்படை உரிமைகளையும் நலன்களையும் மதிக்கவேண்டுமென்றும் பிரிவு 344 (3) வற்புறுத்துகிறது.
சட்டப்பேரவை வழியாக மாநிலங்கள் சட்டங்களை இயற்றித் தங்களுக்கான அலுவல் மொழியினை முடிவு செய்துகொள்ளலாம் என்று பிரிவு 345 தெளிவுபடுத்துகிறது. அதுவரை அந்த மாநிலங்களில் அலுவல் மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்பதையும் குறித்துச் சொல்கிறது.
ஒரு மாநிலத்துக்கும் மற்றொரு மாநிலத்துக்கும் மற்றும் ஒன்றிய அரசுக்கும் ஒரு மாநிலத்துக்குமான தொடர்புகளுக்குத் தற்போது இருப்பது போல ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்கும் என்று பிரிவு 346 கூறுகிறது.
தனியாகச் சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றும் வரை, உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் ஆங்கிலமே பயன்பாட்டு மொழியாக இருக்கும். மேலும், நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் முன்வரைவுகள், இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் அவசரச் சட்டங்கள், ஆணைகள், விதிகள், துணைவிதிகள், ஒழுங்குமுறைகள் போன்ற அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கவேண்டுமென்பதை பிரிவு 348 உறுதிப்படுத்துகிறது.
இந்தி அலுவல் மொழி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், அத்தகைய ஏற்பில் அல்லது முடிவில் பல நடைமுறைத் தடைகள் இருந்ததையே இந்த அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் வெளிக்காட்டுகின்றன.
அரசமைப்பு அவையில் ஒரு சிலர் சுட்டிக்காட்டியது போன்று, 15 ஆண்டுகளில் இந்தியை அலுவல் மொழியாக்கிவிட முடியுமென்று எதிர்பார்ப்பது நடக்கக்கூடியதல்ல என்பது தெரிந்திருந்தும், இந்திப் பற்றாளர்கள் – வெறியர்கள் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. அடுத்த ஆறு திங்கள்களுக்கு மட்டுமே ஆங்கிலத்தை அகற்றக் கால வாய்ப்புத் தரவேண்டும் என்றுகூடப் பிடிநிலையில் சிலர் தொடர்ந்தனர்.
அரசமைப்புச் சட்டம் இயல் 17இல் உள்ள 343 முதல் 351 வரையிலான பிரிவுகள், இந்தி மொழியினரின் உணர்வுகளை நிறைவு செய்வதன் பொருட்டு அரைகுறையாகப் புகுத்தப்பட்டிருக்கின்றன என்பதில் புனைவேதுமில்லை. விரைவுபடுத்த மேற்கொண்ட முயற்சிகள், விவரங்களோடும் இருக்கவில்லை.
இந்தி பேசுவோர் – பேசாதோர் வேறுபாடுகள்
அரசமைப்பு அவைக்கு வெளியில் இயல்பாக ஆங்கிலத்தில் உரையாடி எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட உறுப்பினர்களில் சிலர், தென்னிந்திய உறுப்பினர்களுக்குத் தாங்கள் பேசுவது புரியாது எனத் தெரிந்தும், அரசமைப்பு அவைக்குள் தங்கள் கருத்துக்களை இந்தியிலேயே எடுத்துரைத்தனர். இது அவையிலும் சுட்டிக் காட்டப்பட்டது.
இந்தி பேசுவோர், இந்தி பேசாதோர் என உறுப்பினர்கள் அரசமைப்பு அவையில் இரண்டாகப் பிரிந்திருந்தனர் என்பதும்கூட வெளிப்படையாகவே எடுத்துக்காட்டப்பட்டது.
விடுதலைக்குப் பல்லாண்டுகள் முன்னர் நடைபெற்ற காங்கிரசுக் கட்சியின் அனைத்திந்திய மாநாடுகளிலும் இந்தப் பிரிவினை எதிரொலித்திருக்கிறது. ஆங்கிலம் தெரிந்திருந்தும் வடநாட்டினர் இந்தியில் பேசுவதும், இந்தி தெரியாத மாநிலங்களிலிருந்து சென்றோர் மட்டும் ஆங்கிலத்தில் பேசுவதும் தொடர்ந்து நடைமுறையில் இருந்தது. இந்தி மொழி புரியாமல் பிறர் தவித்ததையும் எதிர்ப்புக் குரல்கள் ஆங்காங்கு எழுந்ததையும் காணமுடிந்தது. இதுவே அரசமைப்பு அவையிலும் தொடர்ந்தது.
இந்திய ஒன்றியத்திலிருந்த அனைத்து இன மக்களில், இந்தி மொழி பேசுவோர் 40% அளவில் மட்டுமே இருந்தும், இந்தி அலுவல் மொழியாக ஏற்கப்படும் நிலை உருவாகிவிட்டது. மனித உணர்வுகளுக்கும் உண்மைச் சூழல்களுக்கும் நடைமுறை செயல்பாடுகளுக்கும் நிறைவேற்ற முடியாத நிலைமைகளுக்கும் மாறாக அரசமைப்பு அவையில் இந்தி திணிக்கப்பட்டுவிட்டது என்றுதான் கூறவேண்டும். அப்போது. இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து வந்திருந்த சில பிற்போக்குச் சனாதனிகளும் இந்த ஏற்பாட்டை ஒப்புக்கொண்டுவிட்டனர்.
அலுவல் இந்தி அனைவருக்கும் வேண்டியதில்லை
இருப்பினும், அரசமைப்புச் சட்டப் பிரிவுகளின் வரிகளுக்குள் இந்தி இடம்பெற்றுவிட்டாலும், சட்டம் அவர்களுக்குச் சார்பாக இருந்துவிடவில்லை. மீண்டும் தொகுத்துக் கூறினால், கீழ்க்கண்ட நிலைமைகள் தொடர்கின்றன:
- ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக மட்டுமே இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டது
- இந்திய ஒன்றிய அரசின் செயல்பாடுகளுக்கு வெளியே இந்தியைப் பயன்படுத்தவேண்டும் என்ற வற்புறுத்தல் – வலியுறுத்தல் – வல்லாண்மை எதுவும் அரசியல் சட்டத்தில் இருக்கவில்லை
- மாநிலங்களில் அந்தந்த இன மக்களின் மொழி, அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது
- இந்தி பேசாத மாநிலங்களோடு ஒன்றிய அரசு தொடர்புகொள்ள ஆங்கிலம் தொடர்கிறது
- தொழில், பண்பாடு, அறிவியல் முன்னேற்றம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தி பேசாத மக்களின் அடிப்படை உரிமைகளையும் நலன்களையும் புறக்கணிக்காமல் மதித்து நடைமுறைகளை ஒன்றிய அரசு வகுக்கவேண்டும்
- உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களின் செயல்பாடுகள், சட்ட திட்டங்கள் என அனைத்தும் ஆங்கிலத்தில் தொடரவேண்டும்
- இந்திய ஒன்றியத்தில் இருக்கும் பல இனங்களின் கூட்டுப் பண்பாட்டினை உள்வாங்கிக் கொண்டுதான் தொடர்புக்கான மொழியாக இந்தியை வளர்த்தெடுக்க வேண்டும்.
குறிப்பாகப் பிரிவு 344 (3) தெளிவாக எடுத்துக் கூறுவதைப் போல, தொழில், பண்பாடு அறிவியல் முன்னேற்றம் ஆகியவற்றின் வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு, இந்தி பேசாத மக்களின் அடிப்படை உரிமைகளும் நலன்களும் காக்கப்படவேண்டும் என்பதை மீறித் தமிழர்கள் மீது அல்லது இந்தி பேசாத பிற மக்கள் மீது இந்தியைத் திணிக்க அரசியல் சட்டத்தின் ஏற்பு எந்த அளவிலும் நிலையிலும் இல்லவே இல்லை.
மேலும், அலுவல் மொழி மட்டுமே என்றான பின்னர், இந்தியை எவ்வகையிலும் தமிழர் உள்ளிட்டு எவர் மீதும் வேறு வகைகளில் திணிக்க வாய்ப்பே தரப்படவில்லை.
இந்தித் திணிப்புக்குச் சட்ட ஏற்பில்லை.
இந்த நிலைமைகளில், மாணவர் அனைவரும் மும்மொழிகளில் ஒன்றாக இந்தியைப் படிக்கவேண்டும் அல்லது இந்திய மொழிகளில் ஒன்றையாவது தேர்ந்தெடுக்கவேண்டும் என்று தேசியக் கல்விக் கொள்கை முன்மொழிவது அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்கு முற்றிலும் முரணானதாகும்.
கல்வி பொதுப் பட்டியலில் இருக்கலாம். உயர்கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் உரிமை ஒன்றிய அரசுக்குத் தரப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தி பேசாத மக்கள், குறிப்பாகத் தமிழ் இனத்தின் மீது மூன்றாவது மொழியொன்றைப் புகுத்த அல்லது திணிக்க ஒன்றிய அரசுக்கு வழியேதும் வழங்கப்படவில்லை.
தேசியக் கல்விக் கொள்கையை வகுக்கலாம்; சில பரிந்துரைகளைச் சொல்லலாம்; தரத்தினை வலியுறுத்தலாம்; நிதி தந்து உதவலாம். ஆனால், அரசமைப்புக்கு மாறாக எதிராகத் தமிழர்களின் உரிமைகளையும் நலன்களையும் மிதித்துவிட முடியாது; பறித்துவிட முடியாது. இவை அறிவுரைகளாக இருக்கலாம்; ஆணைகளாக இருக்க இயலாது.
தமிழர்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் மாறாக இருந்தால், எதையும் ஒதுக்கித் தள்ளும் உரிமை மாநில மக்களுக்கு உண்டு என்பதைத்தான் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 344(3) தெளிவுபடுத்துகிறது.
தமிழ்நாட்டின் தொழில், பண்பாடு, அறிவியல் முன்னேற்றம் ஆகியன ஒன்றியத்தின் பிற இனங்களைவிடத் தனித்திருக்கின்றன. இவற்றைக் காக்கவும் மேம்படுத்தவும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லவும் தமிழ் மக்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது. இந்த அடிப்படை உரிமைகளையும் முனைந்து பெற்ற நலன்களையும் பின்னோக்கித் தள்ள ஒன்றிய அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அரசமைப்புச் சட்டம் இடம் தரவில்லை. ஆனால், தடைகளைத் தடுத்து நிறுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்து, இந்திய ஒன்றியத்தில் இருக்கும் பல இனங்களின் கூட்டுப் பண்பாட்டினை உள்வாங்கிக்கொண்டு, இந்தி தொடர்பு மொழியாக வளர்த்தெடுக்கப்படலாம் என்று எழுத்துக்களில் இடம்பெறலாமேயன்றி, எடுத்துக்கொள்ளப் பயன்படாது.
தமிழரும் இயைபு கொண்ட பிற தென்னிந்திய இனங்களும், வட இந்தியப் பண்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறானோராவர். இவர்களது பண்பாட்டுக் கூறுகளை இந்திப் பண்பாட்டுடன் இணைப்பதும் கலப்பதும் நடைமுறையில் எளிதாக இருக்கப்போவதில்லை. பண்பாடு மட்டுமல்லாது, மொழியினங்களும் வேறானவையாக உள்ளன.
இங்கும்கூட, இந்தி மொழியின் பரவலை ஊக்குவித்தல், வளர்த்தல், இந்தியாவின் கூட்டுப் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளுக்கும் வெளிப்பாட்டு ஊடகமாக இந்தியைச் செயல்படுத்துதல் ஆகியவற்றைத்தான் பிரிவு 351 விழைகிறது. இவையெல்லாம் இந்தியைத் திணிப்பதற்கான அடிப்படைகளாக அமைந்துவிடவில்லை. இத்தகைய வளர்ச்சியினை எட்டிப் பிடிக்க இந்தி இன்னும் செழுமைப்படுத்தப்பட வேண்டும். இதற்கான முதல் கட்ட முயற்சிகளைக்கூட மேற்கொள்ளாமல், இப்போதிருக்கின்ற இந்தியை அப்படியே தொடர்பு ஊடகமாக மாற்ற முனைவது அரசமைப்பு வழிகாட்டுதலுக்கு முழுதும் மாறானதாகும்.
ஒன்றிய அரசுக்குச் சட்ட உரிமையில்லை
அரசமைப்புச் சட்டப்படி, மொழி தொடர்பாக ஒன்றிய அரசு செய்யக்கூடியனவாக இருப்பவை இவை மட்டும்தான்:
1. முடியுமெனில், ஒன்றிய அரசின் செயல்பாடுகள் அனைத்தையும் இந்திக்கு மாற்ற முயற்சிக்கலாம்
2. இதற்காக ஒன்றிய அரசின் அலுவலர் அனைவரையும் இந்தியைத் தெரிந்துகொள்ளுமாறு வற்புறுத்த முனையலாம்
3. இந்தி பேசாத மக்களின் அச்சத்தினைப் புறக்கணித்து, எதிர்ப்புகளை எதிர்கொண்டு, திறன் இருந்தால் உரிய சட்டங்களை இயற்றி, மாநிலங்களுடன் தொடர்புகொள்ள இந்தியைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யலாம்
4. உச்ச நீதிமன்றம் முழுமையாக ஏற்றுக்கொண்டால், உரிய சட்டங்களை நிறைவேற்றி, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றின் அலுவல்களை இந்தியில் மேற்கொள்ளுமாறு வற்புறுத்த நினைக்கலாம். ஆனாலும், இதில் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்த வாய்ப்பில்லை.
இவற்றுக்கு மேல் இந்தி மொழி தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எத்தகைய உரிமைகளும் கடமைகளும் எப்போதும் வழங்கப்படவில்லை.
- இந்தியை மூன்றாவது மொழியாக இந்தி பேசாத மக்களைக் கற்க வலியுறுத்துவது
- ஏதோவொரு வகையில் இந்தியை நுழைக்க முயல்வது
- இந்தி பேசாத மாநிலங்களின் அலுவல்களை இந்தியில் நடத்துமாறு கேட்டுக்கொள்வது
- நிதி நிறுத்தம் போன்ற அடாவடிகளை மேற்கொள்வது
- வேண்டிய மொழி மாற்று ஏற்பாடுகளின்றி, இந்தி பேசாத மக்களிடம் பேசியும் எழுதியும் எரிச்சல் ஊட்டுவது
போன்ற செயல்கள் எவையாக இருந்தாலும், அவை அனைத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒப்புதலைப் பெறாதவையாகவே இருக்க முடியும்.
ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக மட்டுமே இருக்கின்ற இந்தியை, ஒன்றிய அரசின் அலுவல்களோடு நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லாத மக்களையும் மாணவரையும் படிக்கவேண்டும் என்று வற்புறுத்தவும் பயன்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தவும் அரசமைப்புச் சட்டத்தில் இடம் தரப்படவில்லை.
சட்டத்துக்கு ஒவ்வாத ஒன்றினைத் தமிழர் மீது திணிப்பதைத் தமிழ் மக்கள் ஏற்கவில்லை. எந்த மொழியினைப் படிப்பது, எப்படி ஒரு மொழியினைப் பயன்படுத்துவது என்பன ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட உரிமைகள் ஆகும். இதில் தலையிட ஒன்றிய அரசு உள்ளிட்ட எவருக்கும் உரிமையும் தகுதியும் இல்லை.
இந்தி மொழி குறித்த சிக்கலில், ஒன்றிய அரசு தனக்குத் தரப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்ட எல்லைகளைப் புரிந்து தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும்.
தமிழ் நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள், தங்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அறிந்து, அவற்றை நிலைநாட்டிக்கொள்ளவேண்டும்.