
மீண்டும் இந்தித் திணிப்புப் புதிய வடிவில் வருகிறது. அவ்வப்போது இந்தி குறித்த அச்சுறுத்தல்கள் தோன்றி முன்னெழுந்தாலும், இந்தி மொழியினை வலியுறுத்துவதும், அதன் வழியாகச் சமக்கிருதக் கல்விக்கு அடித்தளம் அமைக்க முயல்வதும் தொடர் நிகழ்வுகளாகவே இருந்து வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி ஆகியவற்றில் தாய் மொழி, அறிவு மொழி, தொடர்பு மொழி எனப் பல்வேறு நிலைகளில் மொழிகளைக் கற்றுக்கொள்வதாக மட்டுமே இன்றைய சிக்கல் இருக்கவில்லை.
மாறாக, மக்களது அன்றாட வாழ்முறையில் மொழிகளின் பயன்பாடு, இன்றியமையாமை, வேண்டல், வழியில்லாமை, பண்பாட்டுச் சூழல் என்பன போன்ற பல கூறுகளும் மொழிகளைத் தெரிந்துகொள்வதில் அடங்குகின்றன என்பதுதான் உண்மை.
பள்ளியில் மூன்று ஆண்டுகளோ அல்லது சில ஆண்டுகளோ, பயன் எதுவுமில்லாமல், கற்று மறப்பதற்காக மட்டுமே கல்விப் பாடத்தில் மூன்றாவதாக ஒரு மொழியினைக் கற்றாகவேண்டும் என்று வற்புறுத்தப்படுவதால் பெரும் எதிர்ப்புகள் உருவாகின்றன.
எந்த மொழியாக இருந்தாலும், அந்த மொழியினைக் கற்பது நல்லது என்று கூறுவதோ, பயன்படும் என்று நம்பவைக்க முனைவதோ எந்த அளவுக்கு ஏற்புடையது என்பதைத் தெளிவுபடுத்தியாகவேண்டும். அப்படிக் கூறுதற்குச் சில அடிப்படைகளும் இருந்தாகவேண்டும். இன்று மூன்றாவது மொழியாக இந்தி அல்லது இந்திய மொழிகளில் ஒன்று இருக்கவேண்டும் என்று வற்புறுத்துவோர், கீழ்க்கண்டவற்றில் ஏதாவது ஒன்றுக்காக அந்த மூன்றாவது மொழி வேண்டப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
1. தாய் மொழி
2. அறிவு மொழி
3. வேலை வாய்ப்பு மொழி
4. பெரும்பான்மை மொழி
5. தொடர்பு மொழி
6. இணைப்பு மொழி
7. ஆட்சி மொழி
8. வணிக மொழி
9. சமய – பண்பாட்டு மொழி
10. இலக்கிய வள மொழி
11. அரசியல் செயல்பாட்டு மொழி
12. நடைமுறை மொழியறிவு
ஆகிய இவற்றுள் ஏதாவதொரு வேண்டலைக் கருதியே ஒரு மொழியினைக் கற்பது அமைய முடியும்.
தமிழ்நாட்டின் பின்னணியில், இவையல்லாமல் வேறு ஏதேனும் காரணிகள் இருந்தால், அவற்றை ஒன்றிய அரசும் தமிழகப் பா.ச.க.வினரும்தான் எடுத்துக் கூறவேண்டும்.
எத்தகைய வேண்டலும் இல்லாமல், பயனும் இல்லாமல் ஒரு கொள்கையாக அல்லது கோட்பாடாக வகுக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக மட்டுமே மூன்றாவது மொழியினைக் கற்றாகவேண்டுமென ஓர் இனத்தினை வலியுறுத்துவது பொருந்துவதாகத் தெரியவில்லை.
தாய் மொழியாக அமைவது உயிர் மூச்சாக வாழ்வோடு இணைந்திருப்பதாகும். உரையாடல்களைத் தொடங்கவும் உள்ளங்களைத் தொடவும் உணர்வுகளைத் தொடரவும் உரிமைகளைத் தேடவும் கருத்துக்களைப் பகிரவும் எனப் பல வகைகளில் மனித வாழ்வில் பிணைந்திருப்பது தாய் மொழிதான். ஆகவேதான், தாய்மொழி அறிவு மனித இனங்கள் அனைத்திலும் முன்னிலை பெறுகிறது.
அடுத்து, தாய் மொழிக்கு அப்பால் கிடைக்கக்கூடிய பிற அறிதல்கள் அனைத்தையும் பெறுவதற்கான ஊடகமாக அறிவு மொழி அமைகிறது.
மனித முன்னேற்றத்திற்கான, வளர்ச்சிக்கான, வளத்துக்கான, வாய்ப்புகளுக்கான கருவியாக அறிவு மொழி திகழ்கிறது. தாய் மொழியானது, அறிவு மொழியாக இல்லாத எதிர்பாராத ஒரு சூழல் இருந்துவிட்டால், அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்ற கருவியாக அறிவு மொழி பயன்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலம் அத்தகையதொரு இடத்தினைப் பிடித்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இந்தி உள்ளிட்ட பிற தாய் மொழிகள் அனைத்தும் அறிவு மொழியாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்கின்ற பின்புலத்தில்தான் ஆங்கிலம் அந்த இடத்தைப் பெறுகிறது.
இந்தி கற்றால் வேலை வாய்ப்புகள் மிகும் என்ற மாயையினை முன்னிறுத்தி அச்சுறுத்துவது இன்று பொருத்தமற்றதாகும். நாடு விடுதலை அடைந்தபோது ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் பணிகளை நம்பியே பெரிதும் இருக்கவேண்டியிருந்தது. தொழில், வணிக வளர்ச்சியில் முன்னேற்றம் காணாத காலமது. ஆனால், இன்று நிலைமைகள் மாறிவிட்டன. பெரும் தொழில்கள், குறுந்தொழில்கள் எனப் பலவும் பெருகிவிட்டன. குறிப்பாக, தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னிலை மாநிலமாகத் திகழ்கிறது.
அதனால்தான், வடநாட்டினர் பலர் தமிழகத்திற்குத் திரண்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலேயே வேலைக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதால், உடல் உழைப்புப் பணிகளுக்குத் தமிழ் நாட்டினர் வேறு மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்படவில்லை. இதனால், தமிழர்கள் மூன்றாவது மொழியாக இந்தி போன்ற எந்த மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டிய நிலை இங்கு இப்போது இல்லை. மாறாக, பிற மாநிலத்தோர்தாம் தமிழ்நாடு வந்தவுடன் தமிழைப் பயன்பாட்டு மொழியாகக் கற்றுக் கொள்கின்றனர்.
உடல் உழைப்பு அல்லாத பிற பணிகளுக்கு, அறிவு மொழியாக உள்ள ஆங்கிலமே போதுமானதாக இருந்துவிடுகிறது. இந்தியின் பயன்பாடு அங்கு வேண்டப்படுவதில்லை.
வாழிடங்களில் உள்ள மக்களோடு தொடர்புகொள்ள, தாய் மொழி அல்லாத வேறொன்று வேண்டியிருக்குமானால், அந்த மொழியினைப் பயில்வது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது. உடன்வாழும் வேற்று மொழியினர் புறக்கணித்துவிட முடியாது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்தி அல்லது வேறோர் இந்திய மொழி பயன்பாட்டு மொழியாக இல்லை. தமிழ்நாட்டின் எல்லைப்புறங்களில் இருக்கின்ற வேற்றின மக்களும் பிற பகுதிகளில் வாழ்வோரும் தாங்கள் வாழ்கின்ற இடத்தின் பெரும்பான்மை மொழியான தமிழைத் தாங்களாகவே கற்றுக்கொள்கின்றனர்.
இந்த நிலையில், இந்தி போன்ற வேறொரு மொழி, வாழிட மொழியாகத் தமிழின் இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை.
நாடு அல்லது ஒன்றியம் அல்லது கூட்டரசுகளில், தொடர்புகொள்ள ஒரு மொழி இருந்தாகவேண்டும் எனச் சொல்லப்படுகிறது. இந்திய ஒன்றியத்தில் அறிவு மொழியாக அமையும் ஆங்கில மொழியே இத்தகைய பங்களிப்பினைச் செய்துவிடுவதால், தொடர்புக்கெனத் தனியொரு மொழி வேண்டியதில்லை என்பதையும் நோக்கவேண்டும். இணைப்பு மொழிக்கும் இதுவே ஒத்ததாகின்றது.
மக்களுக்குத் தெரிந்திருக்கின்ற, குறிப்பாக மக்களோடு தொடர்புகொள்கின்ற ஆட்சி அலுவலர்களுக்குத் தெரிந்திருக்கின்ற மொழிதான் ஆட்சி மொழியாக அமைய முடியும். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், பல மொழிகள் பேசுகின்ற இந்தியா போன்ற கூட்டாட்சி நாடுகளில், அனைவருக்கும் அறிமுகமாகியுள்ள ஆங்கிலம் அல்லது தாங்கள் திணிக்க விழையும் இந்தி போன்ற மொழிகளில் அந்தந்த மாநிலங்களோடு ஒன்றிய அரசு தொடர்புகொண்டால், அவற்றைப் புரிந்துகொள்கின்ற அறிவு மாநிலத் தலைமைச் செயலகத்தின் பணியாளர்களுக்கு இருந்தால் போதுமானது. தங்களது மாநில மொழிகளில் அவர்கள் அன்றாட அலுவல்களுக்கான அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கிவிடுவார்கள். இதற்காக மாநிலத்தில் வாழ்கின்ற அனைவரும் பயனில்லாமல், இந்தியைப் படித்தாகவேண்டும் என்று வலியுறுத்தவேண்டியதில்லை.
அத்துடன், வேறு மாற்று இல்லாமல் ஆங்கிலம் தொடர்ந்துகொண்டிருப்பதால், மாணவர் அனைவரும், மக்கள் அனைவரும் இந்தி மொழியைக் கற்கவேண்டும் என்று திணிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதாகத் தெரியவில்லை. எப்படியிருப்பினும், தலைமைச் செயலக அலுவலகத்தில் மொழிபெயர்ப்புக்காக இருப்போர் மட்டுமே வேண்டுமானால் மூன்றாவது மொழியினை அறிந்திருந்தால் போதுமானது.
மேலும், ஆட்சி மொழி என்ற இடத்தை இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தி மொழிக்கு வழங்கவில்லை, வழங்கப் போவதுமில்லை என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
வணிக மொழி என்பது வாங்குவோர் அல்லது பயன்படுத்துவோர் தொடர்புடையது அல்ல. விற்போர் தொடர்புடையதாகவும் இருக்கவில்லை. பொருள் உற்பத்தியாளர், பொருள்களை வாங்கி வழங்குவோர், வணிக முகவர் போன்றோர் மட்டுமே வணிகப் பகிர்வில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அனைவரும் இந்தி பேசும் மாநிலங்களைச் சார்ந்தோராக மட்டுமே இருக்கவில்லை. பல மொழிகள் பேசும் பல மாநிலங்களில் இத்தகையோர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வணிகத் தொடர்புக்குப் பயன்படுத்தக்கூடிய மொழியினைத் தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.
இத்தகைய மொழியறிதல், கல்விக்கூடத்தில் பெற்றதாகப் பெரிதும் இருப்பதில்லை. அன்றாட வணிக வாழ்வுச் சூழல் அவர்களுக்கு வேண்டிய மொழி அல்லது மொழிகளைக் கற்றுத் தந்துவிடுகிறது. மக்கள் தொகையில் 0.001%க்கும் குறைவானோர் ஈடுபட்டிருக்கும் வணிகச் செயல்பாடுகளுக்காக ஓரினத்தின் அனைத்து மக்களையும் இந்தி மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று திணிப்பது வன்மத்தையே காட்டுகிறது.
சமயப் பண்பாட்டு மொழியாக இந்தி என்றும் இருந்ததில்லை. வேற்று ஆட்சியர் காலத்தில், சமயப் பரப்பலுக்காக இன்றைய இந்திய ஒன்றியத்தின் பல பகுதிகளுக்கும் வந்திறங்கிய கிருத்துவப் பற்றாளர் பலரும் உள்ளூர் மொழிகளைக் கற்று, அவற்றின் வழியாகத்தான் சமய மாற்றங்களையும் பரப்புரைகளையும் செய்துவந்தனர்.
ஆங்கில ஆட்சியின் பரப்பு அடுத்தடுத்து மிகுந்ததால், ஆங்கிலம் எளிதில் பரவியது. அத்துடன், அறிவியல் பாடங்களையும் தங்களது கல்வித் திட்டத்தில் அவர்கள் இணைத்துக்கொண்டனர். இதனால், சமயம் அல்லது பண்பாட்டு அல்லது ஆட்சி நிலைகளில் ஆங்கிலம் இங்கு புகுத்தப்படவில்லை. மாறாக, அறிவு மொழியாகக் கற்றுத்தரப்பட்டதால், தானாகப் புகுந்து நிலைகொண்டுவிட்டது.
ஆனால், இந்தி மொழி இத்தகைய பங்காற்றுவதற்கான உயர்விடம் பெறவில்லை என்பதால் அந்த மொழியினைக் கற்பதிலும் கற்றுத் தருவதிலும் பயன் ஏதுமில்லை. சமக்கிருதம் பண்பாட்டளவில், ஊடுருவ முயன்றாலும், மொழியாக மக்களிடம் சென்றுசேரவில்லை. எனவே, அதனை ஒரு மொழியாகவே தமிழர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. சமக்கிருதத்தைப் பயில்வதால் பயனில்லை என்பதும் வெளிப்படையாக அறிந்தவொன்றாக இருக்கிறது.
இலக்கிய வளத்துக்காகவே ரசிய, பிரெஞ்சு மொழிகளைக் கற்க வேண்டுமென ஒரு காலத்தில் கருதப்பட்டது. அந்த மொழிகளில் இருந்த இலக்கியங்கள் அத்தகைய மேன்மையினைப் பெற்றிருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. சமக்கிருதம் இந்த உயரத்தினை எட்டுதற்கான முயற்சிகள் பலவற்றை எடுத்துக்கொண்டாலும், புதுமைகள் ஏதுமின்றிப் பழமையினை மட்டுமே பிடித்துக்கொண்டிருந்ததால் அது எடுபடவில்லை. சமக்கிருத ஆர்வலர் சிலரது எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.
தமிழுக்கு இத்தகையதொரு தகுதி இருந்தாலும், ஏற்றுவாரும் போற்றுவாரும் இல்லாததால், ஒதுக்கப்பட்டிருந்தது என்பதை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட முடியாது. தொடக்க காலத் தமிழறிஞர்களில் பலர் பார்ப்பனராக இருந்ததால், சமக்கிருதத்தை முன்னுறுத்தித் தமிழின் பெருமையை மறைத்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அண்மைக் கால அகழ்வுகளும் அவற்றையொட்டிய ஆய்வுகளும் தமிழின் பண்பாட்டுச் சிறப்பை உறுதிப்படுத்தியுள்ளன.
தமிழின் தற்காலப் படைப்புகள் பலவும் வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. தரமும் தகுதியும் கொண்ட பெரும்பாலான படைப்புகள் பல மொழிகளில் பெயர்க்கப்படுகின்றன. இவற்றுக்காக மட்டுமே ஒரு மொழியினை அனைவரும் பயிலவேண்டும் என்ற நிலை தற்போது உலகெங்கும் இல்லாமல் போய்விட்டது.
ஆய்வில் ஈடுபடுவோர் அல்லது ஈடுபாடு கொண்டோர் மட்டுமே தங்களுக்கு வேண்டிய மொழியினைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மற்றபடி, மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்வோர் இந்தி அல்லது தங்களது தேர்வுக்கான மொழியினைக் கற்றுக்கொண்டால் போதுமானது என்பது இன்று நடைமுறைக்கு வந்துவிட்டது. இதற்காக, மக்கள் அனைவரும் மூன்றாவது மொழியொன்றைக் கற்றுக்கொள்ளவேண்டும் என வற்புறுத்த வேண்டியதில்லை.
மேலும், எந்தக் காலத்திலும் கற்றுக்கொண்டாகவேண்டும் என்ற தகுதியை இந்தி எட்டிப்பிடித்ததுமில்லை.
உலகின் எந்த ஒரு நாட்டிலும் அரசியல் செயல்பாடுகளுக்காகத் தனியாக மொழி எதுவும் நிலைநிறுத்தப்பட்டதில்லை. அந்தந்த நாடுகளில், அந்தந்த மொழிகள் இத்தகைய பணிகளை எளிதில் நிறைவேற்றி வருகின்றன. இந்திய ஒன்றியத்தின் பெரும் தலைவர்கள் எவரும் மாநில மொழியினை ஒதுக்கிவிட்டு அரசியல் செய்ய முடிந்ததில்லை. மக்களைத் திரட்டுதல், கொள்கைகளைப் பரப்புதல், அமைப்புக்குள் கொண்டு வருதல் போன்ற அனைத்தையும் அந்தந்த இனத்து மொழியினைப் பயன்படுத்தியே செய்ய முடிகிறது.
உள்ளூர் மொழி தெரியாத தலைவர்கள், எந்த மொழியில் பேசினாலும் மொழிபெயர்ப்பாளர் உடன் நின்று மக்களிடம் உள்ளூர் மொழியில் செய்திகளைக் கொண்டு சேர்க்கிறார். சில வேலைகளில் தலைவர்களது சில வரிகள் உள்ளூர் மக்களுக்குப் புரியாது என்றால், மொழிபெயர்ப்போர் சிலவற்றைச் சேர்த்துச் சொல்வதும் நடக்கிறது. எனவே, இந்திய ஒன்றியத்தில் இந்தி மட்டுமே பொது வாழ்வுக்கு அல்லது அரசியல் செயல்பாட்டுக்குப் போதுமானதாக இருக்காது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
நடைமுறை மொழியறிவு என்பது பள்ளியில் அல்லது பயிற்சிக்கூடத்தில் படித்துத் தெரிவதல்ல. அன்றாட வாழ்முறையில் வேண்டல்களையும் பழகுதலையும் அடியொற்றித் தாமாகப் பெறுவது. சுற்றுலாச் செல்லும்போது பண்டைய இடங்கள், கோயில்கள், தங்கும் விடுதிகள், உணவிடம், போக்குவரவு போன்ற சூழல்களில் இந்தி மொழி பயன்படும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
முதலில் ஒன்றினை மனதில் கொள்ளவேண்டும். இந்திய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள இனங்களின் மக்கள் பெருமளவில் சுற்றுலாச் செல்லும் பொருளியல் வாய்ப்பில் இருக்கவில்லை. சுற்றுலாச் செல்வது என்று வந்தால்தான், அதற்கான மொழி வேண்டியிருக்கும். இவ்வாறாக. சுற்றுலாச் செல்வோர் மக்கள் தொகையில் ஒரு விழுக்காடுகூட இருக்கமாட்டார்கள். இந்தக் குறைந்த அளவு மக்களுக்காக அனைவரையும் இந்தி மொழி கற்கவேண்டும் எனக் கட்டளையிடுவது வேடிக்கையாகவே இருக்கிறது.
சுற்றுலாச் செல்லும் இடங்களில் எதிர்கொள்ளும் மனிதர்களில் பெரும்பாலானோர் பல மொழிகளைத் தெரிந்தோராகவே உள்ளனர். இந்தி மாநிலங்களாக இருந்தாலும் பிற இன மக்களது மாநிலங்களாக இருந்தாலும் இது இயல்பாக அமைந்துவிடுகிறது. திருப்பதி கோயிலுக்குப் போவோருக்குத் தமிழ் மட்டுமே தெரிந்திருந்தால் போதும். வடநாட்டில் இருந்து ராமேசுவரம் வரும்போது இந்தி மட்டும் போதுமானது. இந்தி தெரியாமலும் இருக்கலாம். ஆங்கிலம் தெரியாமல் தமிழை மட்டும் வைத்துக்கொண்டு பண்டை நாளிலிருந்து இன்று வரை காசிக்குச் சென்று வருவோர் பலர்.
சென்னை நடுவண் ரயில் நிலையத்தில் உள்ள சுமை தூக்குவோருக்குப் பல பழமொழிகள் தெரியும். மாமல்லபுரம், தாசுமகால் போன்ற இடங்களில் உள்ள வழிகாட்டிகள், பல மொழிகளைத் தாமாகவே கற்றுப் பயன்படுத்துகின்றனர். பல மாநிலங்கள் வழியாகப் பயணம் செல்லும் சுமையுந்து ஓட்டுநர்கள், அவர்கள் செல்லுமிடங்களில் உள்ள மொழிகளைத் தெரிந்து வைத்திருக்கின்றனர்.
பள்ளியில் கற்றுத்தான் இத்தகைய மொழியறிவு பெறவேண்டும் என்னும் நிலை அவர்களுக்கு வந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்களில் பலர் பள்ளிப் படிப்பைக்கூடத் தாண்டாதோர் ஆவர். ஆனால், எட்டாக் கனியாகத் தெரியும் ஆங்கிலத்திலும் பேசித் தாங்கள் கூறவேண்டிய விவரங்களை விரிவாக எடுத்துரைத்துவிடுகின்றனர்.
மேற்கண்ட பல நிலைகளிலும், இந்தி மொழியறிவு அல்லது அறிமுகம் எந்த வகையிலும் மக்களுக்கு நேரிடையாகவும் மறைமுகமாகவும் பயன்படுவதில்லை என்பதை அறிய முடிகிறது. அத்துடன், தாய் மொழி, ஆங்கில அறிவு மொழி அல்லாத மூன்றாவது மொழியாக இந்தி அல்லது வேறொரு இந்திய மொழியினை அவர்களது வாழ்நாளில் என்றாவது பயன்படுத்தவேண்டியிருக்கும் எனக் கருதத் தக்கோர் தமிழ்நாட்டில் மிகக் குறைவானோர் என்பதைவிட, அரிதாக ஒரு சிலரே என்பதும் தெளிவாகிறது.
வரலாறு, பண்பாடு, சமூக உணர்வுகள், அரசியல் போன்ற அனைத்துக்கும் அப்பால் நோக்கினாலும், இந்தி மொழியினைக் கற்றுக்கொள்வதால் தமிழர்கள் யாதொரு பயனையும் அடையப் போவதில்லை என்பதை ஒதுக்கித்தள்ளிவிடக்கூடாது.
அதே போன்று, பொருளியல், உரிமை, வளர்ச்சி, முன்னேற்றம், வாய்ப்புகள், வளம், அரசியல் என்பன போன்ற எந்த அளவில் எடுத்துக்கொண்டாலும், இந்தி மொழியைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பதால், தமிழர்கள் எதையும் இழந்துவிடப் போவதில்லை என்பதையும் புறக்கணித்துவிட முடியாது.
பயனில்லாமை, இழப்பில்லாமை என்ற இரண்டையும் நடுநிலையில் நின்று பார்க்கும்போது, இந்தி மொழி வேண்டியதில்லை என்பதிலும் இந்தித் திணிப்பை எதிர்ப்பதிலும் தமிழ் மக்களிடமுள்ள உறுதியையும் நேர்மையையும் புரிந்துகொள்ளலாம்.