பேய் மழை, பெருவெள்ள பாதிப்பும் ஒன்றிய அரசின் வஞ்சகமும்
இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் எழுதிய கட்சிக் கடிதம் வருமாறு:
போர்க்குணமிக்க தோழர்களே!
வடகிழக்கு பருவமழை பெய்யாமல் பொய்த்து போகும் எனில் தமிழ்நாடு வறட்சியின் கோரப் பிடியில் சிக்கி தவிக்க வேண்டிய நிலை ஏற்படும். தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டிற்கு பெரிதும் பயன்படாது. குறைந்த அளவே பெய்யும். வடகிழக்கு பருவமழை தான் தமிழ்நாட்டின் குடிநீர், விவசாயம் என அனைத்திற்கும் பயன்படுவதாகும்.
பருவ மழை சீராக இன்றி பேய் மழையாக, பெரும் மழை பெய்தால் அதுவே தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்
பொதுவாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புயல் மழை வெள்ள காலமாக அறிவிக்கப்படுகிறது. செப்டம்பர் இறுதியில் தொடங்கும் மழை அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிகரித்து, டிசம்பர் மாதம் மத்திய பகுதி வரை அதிகரிக்கும் மழை மழையுடன் புயலும் சேர்ந்து பெரும் பாதிப்புக்கு ஆளாக்கும்.
இந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் சீராக தொடங்கிய மழை, மூன்றாம் தேதி அதிகரித்து நான்காம் தேதி பெரும் மழையுடன் புயல் காற்றும் வீசியது.
இதன் காரணமாக சென்னை பெருநகரம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன. இது குறித்து ஜனசக்தி ஆசிரியர் தோழர் டி. எம். மூர்த்தி மிக விரிவான முறையில் ஜனசக்தியில் எழுதிய கட்டுரையை படித்திருப்பீர்கள். இந்த மாவட்டங்களில் நமது தோழர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னணி ஊழியர்கள் தங்களால் முடிந்த வரையில் நிவாரண பணிகளில் ஈடுபட்டது பாராட்டிற்குரியது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், -முதலமைச்சர் மற்றும்– அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள், தொழிலாளர்கள் என அனைவரும் களத்தில் நின்று பணியாற்றினார்.
அரசும் நிவாரணங்களை அறிவித்து வழங்கிட முற்பட்ட நிலையில், டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய இருதினங்கள் தென்மாவட்டங்களில் பெய்த பெரும் மழை, பேய் மழையாக கொட்டித் தீர்த்தது.
இப்பெருமழையின் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இம்மாவட்டங்களில் உள்ள கண்மாய்கள் மிக முக்கியமானதாகும். ஒவ்வொரு கண்மாயும் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் ஏக்கர் சாகுபடி நிலங்களுக்கு, பாசனத்திற்கு பயன்பட்டு வருகின்றது.
தமிழகத்தின் புகழ்மிக்க நதியான தாமிரபரணி ஆறு பெருமழை காரணமாக கரைபுரண்டு ஓடியது. இதன் காரணமாக மழை நீர் வடிவதற்கு வழி இல்லாத நிலை ஏற்பட்டது.
பெரும் மழையின் காரணமாக கண்மாய்கள் நிரம்பி வழிந்த நிலையில், தொடர்ந்து மழையின் காரணமாக கண்மாய்களின் கரைகள் உடைந்து தண்ணீர் முழுவதும் வெளியேறியது. இதன் விளைவாக வெள்ளக்காடாக காட்சியளித்தது.
தூத்துக்குடி, நெல்லை மாநகரங்கள் தண்ணீரில் தத்தளித்தது. தண்ணீர் முழுவதுமாக வடிந்து இயல்புநிலை திரும்ப பல நாட்களாகின.
மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. குடிநீர், பால் மற்றும் அத்தியாவாசிய பொருட்கள் இன்றி தவித்தது மட்டுமின்றி, எங்கே குடியிருப்பது என்பது பெரும் பிரச்சனையானது. வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் அனைத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது.
தங்களது சொந்த வீட்டில் நிற்பதற்கு கூட இடம் இன்றி மக்கள் பரிதவித்து நின்றார்கள். அவர்களின் ஆடைகள், படுக்கை விரிப்புகள், வீட்டு உபயோக பொருட்கள், பிரிட்ஜ், கிரைண்டர், வாஷிங் மெஷின், மிக்ஸி, மின்விசிறிகள், ஏர் கூலர் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன.
குடிசை வீடுகளில் மன்சுவர் இடிந்து தரைமட்டமாகி விட்டன. இவர்களது வீட்டில் என்ன பொருள் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். பானை, குடம், பிளாஸ்டிக் குடம், தட்டு, கரண்டி போன்ற பொருட்கள் எல்லாம் தண்ணீரில் மிதந்து சென்றன. எங்கே சென்றது யாருக்கும் தெரியாது. சிறு தொழில் புரிவோர். மீண்டு எழு முடியாத அளவுக்கு பாதித்துள்ளனர்.
இவர்களின் நிலை இது வென்றால், விவசாயிகளின் நிலை மீண்டெழ எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று கணித்து சொல்ல இயலாது.
தாங்கள் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள். தண்ணீரில் மூழ்கி முளைத்துவிட்டன. தண்ணீரில் தெப்பத்தில் கதிர்கள் மிதந்து கொண்டிருந்தன.
வாழை மரங்கள் தார் முற்றி வரும் பொங்கலுக்கு பயன்படக்கூடிய நிலையில், வாழை மரங்கள் சாய்ந்து போர்க்களம் போல காட்சியளிக்கின்றது.
உளுந்து, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, கடலை போன்ற தானியங்களும், ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெருமளவு சாகுபடி செய்துள்ள சிறு கிழங்குகளும் இம்மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி உப்பளம் பகுதியில் உப்பளங்கள் பாதிக்கப்பட்டதுடன், முன்பு சேகரித்து வைத்திருந்த உப்புக்களும் பெரும் சேதத்திற்கு உள்ளாகி இருப்பதுடன், இதில் பணிபுரிந்து வரும் உப்பள தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க ஓரிரு மாதங்கள் ஆகக்கூடும்.
விலை மதிக்கவொண்ணா மனித உயிர்கள் காப்பாற்ற இயலாத நிலை, சுவரிடிந்து விழுந்தும், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டும் பலர் இறந்துள்ளனர்.
ஆடு, மாடு, கோழி என கால்நடைகள் பெறும் எண்ணிக்கையில் மாண்டு போயின.
விருதுநகர் மாவட்டம் வடக்கு நத்தம் கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 200 வெள்ளாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதை நேரில் காண முடிந்தது.
பெருமழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன், அமைச்சர் பெருமக்களுக்கு மாவட்ட வாரியாக பொறுப்பு அளிக்கப்பட்டு, அனைத்து அமைச்சர்களும், ஆளும்கட்சி மற்றும் தோழமை கட்சி மக்கள் பிரதிநிதிகள் களத்தில் நின்று பணியாற்றி வருவதை கண்கூடாக காண முடிந்தது.
முதலமைச்சர் டெல்லி சென்று இந்தியா கூட்டணி கூட்டத்தில் (டிசம்பர் 19) கலந்துகொண்டு அன்று இரவு பிரதமர் நேரம் ஒதுக்கி தந்த இரவு 10:30 மணிக்கு பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயலால் ஏற்பட்ட சேதங்கள், பாதிப்புகள் அனைத்தையும் விவரமாக எடுத்துக் கூறி, தமிழ்நாட்டிற்கு இயற்கை பேரிடரில் ஏற்பட்ட பாதிப்பை ஏற்று பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்றும், பாதிப்புகளில் இருந்து மீளவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கவும் கோரினார்.
- தற்காலிக நிவாரணமாக ரூ.7033 கோடி
- நிரந்தர நிவாரணமாக ரூ.12659 கோடி
- தென் மாவட்டங்களுக்கு ரூ.2000 கோடி
ஆக மொத்தமாக ரூ. 21,692 கோடி தேவை, இதனை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும் என்று எடுத்து கூறினார்.
டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய குழு, சேதங்களை பார்வையிட்டதுடன், அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என பாராட்டியதுடன், முதலமைச்சரை சந்தித்து அவர் அளித்திட்ட கோரிக்கை மனுவையும் பெற்றுச் சென்றனர்.
தென் மாவட்டங்களுக்கும் மத்திய குழு வந்து சென்றுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங்கும் தமிழ்நாட்டிற்கு வந்து, ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்த்து சென்றுள்ளார்.
இதன் மூலம் பாதிப்பின் தன்மைகளை ஒன்றிய அரசால், முழுமையாக அல்லது ஓரளவுக்கேனும் உணர்ந்திருக்க முடியும்.
இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடு செய்ய பொருளாதார உதவியும் தேவை.
இவை மட்டுமின்றி சாலைகள், மின்சாரம், கட்டிடங்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. ஆற்றுக்கரைகள், வடிகால் கரைகள், கண்மாய் குளங்கள், ஏரிகள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
இவைகளை சரி செய்து பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமெனில், பெரும் நிதி தேவை.
தேவைகள் அனைத்தையும் மாநில அரசே ஈடு செய்ய இயலுமா? நடைமுறை சாத்தியம்தானா?
வரிப்பணம் முழுவதையும் வாரி சுருட்டி செல்லும் ஒன்றிய அரசு, மாநிலம் பாதிக்கப்படும்போது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டாமா?
சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் ஒன்றிய நிதி அமைச்சர், மாநில அரசுக்கு எதிராக அளித்துள்ள பேட்டி அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.
ஒன்றிய அரசுக்கு இருக்கும் பிரச்சினை ஒரே ஒரு பிரச்சனை தான்.
தமிழ்நாட்டு முதலமைச்சர் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டது அவர்களை மிகவும் பாதித்துள்ளது என்பதனை நிர்மலா சீதாராமன் பேட்டி வெளிப்படுத்துகின்றது. (இப்பேட்டியினை கண்டித்து மாநில கட்சியின் சார்பாக தனி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது)
அல்லலுரும் மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் அற்பர்களின் ஆட்சி ஒன்றியத்தில் நடைபெறுகின்றது.
அவர்களது அடாவடிதனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆயத்தமாவீர்!
தோழமைமிக்க
இரா.முத்தரசன்
மாநிலச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி