HDFC வங்கி விவகாரம்: முழுமையான விசாரணையை உடனடியாக நடத்திட வேண்டும்-கே.சுப்பராயன் எம்.பி வலியுறுத்தல்!
எச்.டி.எப்.சி. வங்கி விவகாரம் குறித்து ஒன்றிய நிதியமைச்சருக்கு 31.05.2022 அன்று கே.சுப்பராயன் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நேற்றைய தினம் (30.05.2022) பதற்றத்தை உண்டாக்கக் கூடிய அளவிற்கு அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் எழுப்பியுள்ள எச்.டி.எப்.சி. வங்கி விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர உங்களின் உரிய மற்றும் உடனடித் தலையீட்டை நான் வலியுறுத்திக் கோருகிறேன்.
எச்.டி.எப்.சி. வங்கியின் சில நூறு வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருப்புத் தொகை திடீரென்று பல லட்சங்களாகவும், மேலும் சில வாடிக்கையாளர்களின் கணக்கில் பல கோடிகளாகவும் அதிகரித்தன. இவ்வகையில் அதிகரித்துள்ள மொத்த தொகை ரூ.1300 கோடியாகும். வங்கி நிர்வாகத்திடமிருந்து இதுவரையில் அதிகாரப்பூர்வமான எந்த அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில், புரிந்து கொள்ள முடியாத இந்த விவகாரத்திற்கு ‘தொழில்நுட்ப கோளாறு’ தான் காரணம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு சீர் செய்யப்படும் வரை, அப்பாவி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாத வகையில் அவர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு அவர்கள் இரட்டை தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தின் விளைவுகள் அறிய முடியாதவை அல்ல; இது தொடர்பான சந்தேகங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. பதில் அளிக்கப்படாத கேள்விகளும், சந்தேகத்திற்கு உரிய தொடர்புகளும் உள்ளன. கண்ணுக்கு புலப்படாத மேலும் பல விஷயங்கள் இருப்பதாகத் தெரிய வருகிறது.
வங்கித் துறையின் நம்பகத்தன்மை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது எழுந்துள்ள பிரச்சினை இனிவரும் காலங்களில் பல்கிப் பெருகக் கூடியது ஆகும். எச்.டி.எப்.சி. வங்கி நிர்வாகத்திடமிருந்து உடனடியாக நீங்கள் விளக்கம் கோர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். முறைகேடுகள் இருப்பின், அவற்றை வெளிக்கொண்டு வர, உண்மை நிலையை உரைத்திட, ஒரு முழுமையான விசாரணையை உடனடியாக நடத்திட வேண்டும். இது குறித்து நிதியமைச்சகம் விரைந்து செயல்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கே.சுப்பராயன் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.