ஆளுநர்களின் படுபாதகங்கள்: உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய அவலத்திலும் அவலம்!
மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் எழுதும் கட்சிக் கடிதம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்
இரா.முத்தரசன் எழுதும் கட்சிக் கடிதம்
ஆளுநர்களின் படுபாதகங்கள்!
உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய
அவலத்திலும் அவலம்!
பொதுமக்கள் தாங்கள் பாதிக்கப்பட்டால், நீதிமன்றங்களை நாடிச் சென்று தங்களுக்குரிய உரிமைகளை, நியாயங்களை பெறுவதற்கு முயற்சி செய்வார்கள்.
பணத்தை செலவழித்து, வழக்கறிஞர்கள் கேட்ட தொகையை கொடுத்து, நியாயம் பெற அல்லது உரிமைகளைப் பெற முயன்று வென்றவர்கள் உண்டு. பெரும் தொகை மட்டுமல்ல, தன்னிடம் இருந்த செல்வத்தை எல்லாம் இழந்து, இழப்பதற்கு இனி ஏதும் இல்லை என்ற நிலையில் தோற்றவர்களும் உண்டு.
இங்கே தனி நபர்கள் அல்ல, மாறாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரவேண்டிய அவலம் ஏற்பட்டு வரிசை கட்டி நிற்கின்றன.
‘நாட்டின் கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் மாநில அரசுகள், தாங்கள் ஆட்சி நடத்திட உதவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை நாடிய அவலங்கள் ஏற்பட்டது இல்லை.
ஜனநாயகத் தன்மையற்று, சர்வாதிகாரத்தின் மீது பற்றும், பாசிச கொள்கை மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவாக அவதாரம் எடுத்திட்ட பாஜக, குஜராத் போன்ற மாநிலங்களை ஆட்சி செய்திட வாய்ப்பை பெற்றது.
அம்மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். இஸ்லாமிய மக்கள் மீது வீண் பழி சுமத்தி வெறுப்பேற்றினார். ஆர்எஸ்எஸ் வன்முறைக் கும்பல், கலவரத்தில் கைதேர்ந்த கும்பல் குழந்தைகள், பெண்கள், முதியோர் என அனைவரையும் சூறையாடியது.
மத ரீதியாக மக்களைப் பிளவுக்கு உள்ளாக்கியது. சகோதரர்களாக, மாமன் மைத்துனராக வாழ்ந்திட்ட இஸ்லாம், இந்து மக்கள் மத ரீதியாக மாநிலம் எங்கும் பிளவுபட்டனர். அத்தகைய பிளவு வகுப்பு வாத வெறி பிடித்த பாஜகவிற்கு சாதகமான நிலையை உருவாக்கியது.
தங்களின் கேடுகெட்ட ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், தொடரவும் கலவரம், அதனால் ஏற்பட்ட ரத்தப் பெருக்கு, படுகாயங்கள், உயிர்ப்பலிகள்.. அனைத்தும் குஜராத்தில் பாஜகவிற்கு இன்றளவும் கை கொடுத்து வருகின்றது.
பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கி, நாடு பின்பற்றிய மதச் சார்பின்மை கொள்கையை ஆழக் குழி தோண்டிப் புதைத்து, அங்கே ராமர் கோயில் கட்டி அழகு பார்ப்பதால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி தொடர்கின்றது.
மக்களுக்கு மதத்தின் மீதும், கடவுளின் மீதும், சாதிகள் மீதும், இன்ன பிற மூடநம்பிக்கைகளின் மீதும் உள்ள நம்பிக்கை என்கிற அறியாமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, மக்களுக்கு மென்மேலும் மத, சாதி வெறி தீயை வளர்த்து, அதில் தாங்கள் குளிர் காய்ந்து அரசியல் ஆதாயம் தேடுகின்ற அற்பத்தனமான அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, நாட்டை ஒட்டுமொத்தமாக கலவர பூமியாக்கிவிட்டால், நாட்டையே குஜராத் ஆக்கிவிட்டால், அவர்களின் நோக்கத்தை தங்கு தடையின்றி நிறைவேற்றிக் கொள்ளலாம். நிரந்தர மாமன்னராகத் திகழலாம் என்பது அவர்களது லட்சியமாகும்.
தங்களின் லட்சியம் நிறைவேற எங்கெங்கு கலவரம் செய்திட வாய்ப்புள்ளது என்று பார்த்துப் பார்த்து கலவரம் செய்கின்றார்கள்.
குஜராத்தில் அவர்களது ஆட்சி, மோடி முதலமைச்சர், அங்கே கலவரம் மேற்கொள்ள முடிந்தது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி, கல்யாண் சிங் அம்மாநில முதலமைச்சர். பாபர் மசூதியை இடிக்க முடிந்தது.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அதிலும் குறிப்பாக பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக, ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக உள்ள மாநில அரசுகளுக்கு எதிராக என்ன செய்யலாம்?
அவர்களைப் பணிய வைக்க வேண்டும். பணிய வைக்க முடிந்த இடத்தில் பணிய வைத்து மண்டியிட வைப்பது.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக ஆட்சி பாஜகவின் அடிமை ஆட்சியாகவே காலம் தள்ளியது.
புதுச்சேரியில் உள்ள ரங்கசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி என்ற பெயர்தான் உள்ளதே தவிர, மாறாக அங்குள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் கண் அசைவுக்கு கட்டுப்பட்ட ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.
இத்தகைய தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை அரசுகளுக்கு மாறாக, கொள்கை ரீதியாக செயல்படக்கூடிய, ஜனநாயகம் மதச்சார்பின்மை கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் அரசுகளை மக்கள் தேர்ந்தெடுத்தனர்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளில் ஒன்று தமிழ்நாடு அரசு ஆகும். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. திமுக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி, கேரளத்தில் இடதுசாரிகளின் கூட்டணி ஆட்சி, டெல்லி, பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி, மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி.
இவை எல்லாம் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் மக்கள் விரோத மசோதாக்களுக்கு ஆதரவாக இல்லை.
தங்களுக்கு உள்ள பெரும்பான்மை பலத்தைக் கொண்டு விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு எதிராக நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு எதிராக தங்களின் கருத்துக்களை வலிமையாக எடுத்துக் கூறின.
சட்டமன்றத்தில் தீர்மானங்களையும் நிறைவேற்றினர். இத்தகைய நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியாக ஏற்கவோ, சகித்துக் கொள்ளவோ மனம் இல்லாத மோடி அரசு தனது கோர முகத்தை காட்டியது.
தனக்கு அடிபணியாத மாநில ஆட்சிகளுக்கு தனது மிருக பலத்தை பயன்படுத்தி பல்வேறு நெருக்கடிகளை கொடுத்திட முனைந்தார் மோடி.
மிக முக்கியமாக மாநிலங்களுக்குரிய வரியைப் பெறுவதில் மாநில அமைச்சர்களும் நிதி அமைச்சர்களும் ஒன்றிய அரசிடம் மன்றாட வேண்டிய மிக மோசமான அவலம், முன் எப்போதும் இல்லாத பெரும் அவலத்தை ஏற்படுத்தினர்.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு தாராளமாக நிதி வழங்கல், ஒன்றிய ஆட்சியை அரசியல் ரீதியாக எதிர்க்கும் மாநிலங்களுக்கு நிதியை குறைத்து வழங்கி நெருக்கடியை உருவாக்குதல் மிக முக்கியமானதாகும்.
ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்தியதற்குரிய நிதிகளைக் கூட மாநிலங்களுக்கு வழங்காமல் நெருக்கடியை உருவாக்குதல்.
மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிபுரியும் கிராமப்புற தொழிலாளர்களுக்குரிய ஊதியத்தைக்கூட பல மாதங்களாக வழங்காமல் முடக்கி வைப்பது போன்ற அநாகரிகமான அரசியலில் பாஜகவின் ஒன்றிய அரசு ஈடுபடுகின்றது.
இவை போதாது என்று மாநில அரசுகளை செயல்படாமல் முடக்கி வைக்கும் மூர்க்கத்தனமான செயலில் ஒன்றிய மோடி அரசு ஈடுபட்டு வருகின்றது.
தங்களின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்திட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை நடத்துவது போன்ற ஜனநாயக விரோதமான முறையில் செயல்பட ஆளுநர்களை பயன்படுத்துகிறது.
தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், டெல்லி, மேற்குவங்கம், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்கள் உட்பட, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் தங்களுக்குரிய பணிகளை மேற்கொண்டு செயல்படுவதற்கு மாறாக, மோடியால் அனுப்பப்பட்ட அடியாட்கள் போன்று செயல்படுகின்றார்கள்.
பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது; சட்டமன்றத்தை தங்களின் கால்தூசி என கருதி செயல்படுவது; மசோதாக்கள் குறித்து கேள்வி எழுப்பினால்; ஆளுநர் விருப்பம் போல் அவை குறித்து முடிவுகள் எடுக்க வானளாவிய அதிகாரம் இருப்பதாக வாய்ச்சவடால் அடிப்பது என அடாவடியாக செயல்பட்டு வருகிறார்கள்.
இதன் காரணமாக மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் ஆளுநர்களின் அத்துமீறலைக் கண்டு தனது வேதனையை, கவலையை வெளிப்படுத்தி உள்ளது.
“நீங்கள் (ஆளுநர்கள்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல” என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டி வழக்கை ஒத்திவைத்துள்ளது.
ஆளுநர்களுக்கும் மாநில அமைச்சர்களுக்கும் இடையே நடைபெறுவது தனிப்பட்ட போராட்டம் அல்ல. தனிப்பட்ட முரண் அல்ல.
ஜனநாயகத்திற்கு எதிரான, அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பான, மாநில உரிமைகளைப் பறித்திடும் செயலாக, மாநில வளர்ச்சித் திட்டங்களை முடக்கம் செயலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில ஆட்சிகளை, சட்டமன்றங்களை அவமதிப்பதாக உள்ள ஆளுநர்களின் படுபாதகத்தை எதிர்த்து நீதிமன்றத்தை மாநிலங்கள் நாடவேண்டிய அவலத்திலும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய அவலம் அடியோடு நீக்கப்பட 2024 தேர்தலில் பாடம் புகட்டத் தயாராவீர்!
இரா.முத்தரசன்
மாநிலச் செயலாளர்