நேதாஜியை புகழ்வதாக நினைத்து காந்தியை கொச்சைப்படுத்தி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. எத்தனை முறை அவர் சொன்னாலும் உண்மை என்னவோ வேறு விதமாக இருக்கிறது.
இரண்டாம் உலகப்போர் நடந்த போது சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவம் “சலோ டெல்லி” டெல்லிக்குச் செல்! என அறிவித்து படை திரட்டி வந்தது. அந்த படைப் பிரிவுகளின் பெயர்கள் (ரெஜிமென்ட்) கூட காந்தி, ஜவர்கலால் நேரு போன்றவர்களின் பெயர்களில் தான் இருந்தன. அத்தோடு இந்திய தேசிய ராணுவத்தின் கொடியாக மூவர்ண கொடியும், அதன் நடுவே காந்தியின் ராட்டையும் இடம் பெற்றிருந்தது.
விடுதலைப் போராட்ட இயக்கத்தில் தலைவர்களுக்குள் பல சமயங்களில் கருத்து மாறுபாடுகள் வந்திருக்கின்றன. இந்திய தேசிய காங்கிரசின் அகில இந்திய தலைவருக்கான தேர்தல் போட்டியில் பட்டாபி சீத்தாராமையாவை காந்தி நிறுத்தினார். காங்கிரஸ் கட்சியில் உள்ள வலதுசாரி சக்திகள் அவரை பலமாக ஆதரித்தனர். இந்த நிலையில் திரிபுரியில் நடந்த இந்த காங்கிரஸ் மாநாட்டில்தான் இடதுசாரிகள் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பெயரை காந்தியின் வேட்பாளருக்கு எதிராக முன்மொழிந்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அவரை பலமாக ஆதரித்ததுடன் பிரச்சாரமும் செய்து அவரை வெற்றிபெற வைத்தது.
பின்னர் அவர் இந்தியா விடுதலை பெற ஆயுதப் போராட்டம் அவசியம் என கருதினார். எனவே வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, உதவிகளைப் பெற்று விடுதலைக்கான போரை நடத்திட திட்டமிட்டார். நேதாஜி அவர்களுக்கு ஒரு ரகசிய பயணத் திட்டத்தை பஞ்சாபின் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட்டான அச்சார் சிங் சீமா ஏற்பாடு செய்தார். அதில், மாறுவேடத்தில் எல்லையைத் தாண்டி காபூல் வரை அவரை அழைத்துச் செல்ல கம்யூனிஸ்ட் கட்சியின் பகத்ராம் தல்வார் என்ற தோழருக்கு தனிப் பொறுப்பளித்து அதனை திறம்பட நிறைவேற்றினார்.
ஓய்வறியா போராளியான நேதாஜி குறித்து கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அறிஞரான பேராசிரியர் கிரேன் முகர்ஜி ஒரு தனிப் புத்தகமே எழுதினார்.
சுபாஷ் சந்திரபோஸ் ஆயுதப் போராட்டம் நடத்தினாலும் காந்தியின் அகிம்சை வழியிலான போராட்டத்தையும் அவர் மதித்தார். இரண்டு வழிமுறைகளின் நோக்கமும் ஒன்றுதான்; இந்தியா விடுதலை அடைவதே என்று அவர் குறிப்பிட்டார்.
காந்தியும் சுபாஷ் சந்திரபோசை மிகவும் மதித்தார். தேச பக்தர்களின் இளவரசன் என்று சுபாஷை போற்றினார். அதேபோல தேசப்பிதா காந்தி என்று முதன் முதலில் காந்திக்கு அடைமொழி கொடுத்தவர் சுபாஷ்தான்.
1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தியார் அறிவித்த போது அதனை முழுமையாக ஆதரித்து நின்றவர் சுபாஷ். இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த (ஐஎன்ஏ) வீரர்கள் மீது டில்லி செங்கோட்டையில் நடந்த வழக்கு விசாரணை அனைத்திலும் நேரு வழக்கறிஞர் அங்கி உடுத்தி, அந்த வழக்குகளில் முழுமையாக வாதாடினார்.
வரலாற்று உண்மைகள் இவ்வாறு இருக்க, காந்திக்கும் நேருவுக்கும் எதிரான முகாமில் சுபாஷையும், பட்டேலையும் வைத்து வரலாறே இல்லாத ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர் தங்களுக்கான புதிய திரிக்கப்பட்ட வரலாற்றை உருவாக்குகின்றனர்.
சுபாஷ் சந்திரபோஸ் இந்து மகா சபையையும் சாவர்க்கரையும் ஒருபோதும் ஏற்றுக் கொண்டவர் இல்லை. வெளிப்படையாகவே எதிர்த்தார். இந்து மகா சபை ஒரு வகுப்பு வாத இயக்கம் என்று குற்றம்சாட்டினார். இந்திய விடுதலையை விட காங்கிரஸ் விழ வேண்டும் என்பதிலேயே அவர்கள் குறியாக இருக்கிறார்கள் என இடித்துரைத்தார்.
1940 ஆம் ஆண்டு, பார்வேர்டு பிளாக் வார இதழின் தலையங்கத்தில் அவர் குறிப்பிடும்போது “இந்து மகா சபை கல்கத்தா முனிசிபல் தேர்தலில் வெள்ளைக்காரர்கள் நியமித்த கவுன்சிலர்கள் குழு வெற்றி பெறுவதற்காக இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளர்களை தோற்கடிக்க இந்து மகா சபை செயலாற்றியுள்ளது” என்று கூறியுள்ளார்.
அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த போது இந்து மகா சபை உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் லீக் உறுப்பினர்களாக உள்ளவர்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களில் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என்ற உறுதியான முடிவை அறிவித்தவர் நேதாஜி.
நேதாஜி – சாவர்க்கரின் முக்கிய முரண்பாடு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை இந்து மகா சபை முஸ்லிம் லீக்கோடு இணைந்து எதிர்த்ததில் இருந்துதான் தொடங்குகிறது. இந்து மகா சபை, பிரிட்டிசாரின் போர் முயற்சிகளுக்கு அதனுடைய தரைப்படை, கடற்படை, மற்றும் விமானப்படைக்கு லட்சக்கணக்கான இந்து வீரர்கள் வெள்ளம் போல உதவிட வேண்டும் என்று தனது உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டது.
இந்துமகா சபையின் தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜி ஆங்கிலேய அரசுக்கு எழுதிய கடிதங்களில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எப்படியாவது தேசிய இயக்கத்தை குறிப்பாக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நசுக்க வேண்டும் என பல அறிவுரைகளை அளித்திருந்தார்.
வகுப்புவாதத்தை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வந்த போஸ் “ஏகாதிபத்தியம் விட்டெறிகிற ரொட்டித் துண்டுகளை தமக்குள் பங்கிட்டுக் கொள்வதற்குத்தான் வகுப்புவாத கட்சிகள் அக்கறை கொண்டுள்ளன. இந்திய தேசிய காங்கிரசுக்கு எதிராக தூண்டிவிடும் நோக்கிலும், அதன் செல்வாக்கை குறைக்கும் முயற்சியிலும் காலம் காலமாக பயன்படுத்தப்படும் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கொண்டு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இக்கட்சிகளுக்கு ஊக்கம் அளித்தனர். இந்த வகுப்புவாத கட்சிகளுக்கும் இந்தியா விடுதலை அடைவது குறித்து எந்தவித அக்கறையும் இல்லை” என்று தன் வரலாற்று நூலான எனது இந்திய போராட்டம் (தி இண்டியன் ஸ்ட்ரகில்) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுரையாளர்: த.லெனின்
மாநிலக்குழு உறுப்பினர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி