ஆளுநரின் அடாவடி அரசியலுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்த அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனக் கோப்பை திருப்பி அனுப்பியுள்ளார். மக்கள் தேர்வு செய்து அமைத்துள்ள மாநில அரசுக்கு எதிராக ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அண்மையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களையும், பெற்றோர்களையும் ஆளுநர் அழைத்துப் பேசி ஆத்திரமூட்டிய செயலை தமிழ்நாடு வெகுண்டெழுந்து கண்டித்தது. தமிழ்நாட்டின் உணர்வை ஒன்றிய அரசு அலட்சியப்படுத்தி, மாணவர்களும், பெற்றோர்களும் தற்கொலைக்கு நெட்டித் தள்ளப்படுகின்றனர்.
ஆளுநர் பொறுப்புக்கு ஆர்.என்.ரவி எள் முனையளவும் தகுதியற்றவர் என்பதால் அவரை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் முறையிட்டு ஓராண்டு காலம் முடிந்த பிறகும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்பது ஜனநாயக ஆட்சி முறைக்கு ஏற்றதல்ல. அரசியல் அமைப்பு சட்டத்தின் அத்துமீறல் நடக்காமல் கண்காணிக்கும் கடமைப் பொறுப்பை குடியரசுத் தலைவர் நிறைவேற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
நாட்டின் சுதந்திர தின விழாவில் 55 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், அதனை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க மறுத்து ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது தமிழ்நாடு மாநில மக்களின் அரசியல் உரிமைக்கு எதிரானது, அதிகார ஆணவத்தின் வெளிப்பாடு. பணியாளர் நியமனம் தொடர்பான அதிகாரம் மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சிக்கு தான் வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில அரசுக்கு எதிராக கலகம் நடத்தும் வன்மத்துடன் செயல்பட்டு வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது
அரசியல் அமைப்புச் சட்டம் மாநில அரசின் அதிகாரங்களாக வழங்கியுள்ள குடிமக்களின் அரசியல் உரிமைகள் பறிக்கப்படுவதை தமிழக மக்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை ஆர்.என்.ரவி உணர வேண்டும். அவர் செல்லும் இடங்களில் அவரது ஜனநாயக அத்துமீறலை கண்டித்து, கறுப்புக்கொடி காட்டுவது உள்ளிட்ட ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்துவார்கள் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது என கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் எச்சரித்துள்ளார்.