கடவுளின் பாதத்தில்
மலர் வைப்பதற்காக
கோவிலுக்குப் போகாதே!
உன் வீட்டை முதலில்
அன்பின் நறுமணத்தால்
நிரப்பு!
கடவுளின் பீடத்தில்
தீபங்களை ஏற்றி வைக்க
கோவிலுக்குப் போகாதே!
முதலில் உன் இதயத்தில்
அடர்ந்திருக்கும் பாவச் செயல்,
பெருமிதம், தன்னகங்கார இருளை
வழித்தெறி!
பிரார்த்தனைகளின் போது
தலை கவிழ்ப்பதற்காக
கோவிலுக்குப் போகாதே!
முதலில் சக மனிதர்களை
பணிந்து வணங்கிடப்
பாடம் படி!
யாருக்கு தவறிழைத்தாயோ
அவர்களிடம் சென்று
மனமுருகி மன்னிப்புக்
கேள்!
முட்டி மடக்கி மண்டியிட்டு
வழிபாடு செய்வதற்காக
கோவிலுக்குப் போகாதே!
கீழே மிதிபட்டுக் கிடப்போரை
கைகொடுத்து தூக்கிவிட
உன்னுடல் முதலில்
குனியட்டும்!
முளைத்த இளந்தளிர்களுக்கு
உன் துணையால் வலிமைசேர்!
நசுக்காதே!
உனது தீய செயல்களுக்காக
பாவமன்னிப்பு வேண்டி
கோவிலுக்குப் போகாதே!
யாரெல்லாம் உன்னைக்
காயப்படுத்தினரோ
மனதார அவர்களை
மன்னித்துவிடு!
தமிழில்: டி.எம்.மூர்த்தி