ஏஐடியுசி: எழுச்சியின் வரலாறு -7
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட கோரல் மில் தொழிலாளர்களுக்கு வெற்றி. ஆனால் தம்மை தோற்கடித்த வ.உ.சிதம்பரனாருக்குப் பாடம் புகட்ட வெள்ளையர் நிர்வாகம் விரும்பியது.
1908 மார்ச் 12 ஆம் தேதி, பிபின் சந்திரபாலர் சிறையில் இருந்து விடுதலை அடைந்ததை கொண்டாடியதாக குற்றம்சாட்டி வ.உ.சி, சுப்பிரமணிய சிவாவை பிரிட்டிஷ் ஆட்சி கைது செய்தது. பெரும் கலவரம் ஏற்பட்டது. அவர்களை விடுவிக்க வலியுறுத்தி தென்தமிழகம் முழுவதும் மார்ச் 14 முதல் 19 ஆம் தேதி வரை பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதுவே இந்தியாவின் முதல் பொது வேலைநிறுத்தம் ஆகும்.
வேலைக்குச் சென்ற கோரல் மில் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒப்பந்தப்படி அவர்கள் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. அது பற்றி அவர்கள் கவலை கொள்ளவில்லை.
வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை (40 ஆண்டுகள்), சுப்பிரமணிய சிவாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரை எப்போதும் “மாமா” என அழைத்த பாரதியார் எழுதினார்:
“வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார்
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ,
வருந்தலை என் கேண்மைக் கோவே!
தாளண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி,
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதிநீ வாழ்தி!வாழ்தி!”
அவர் அரசியல் கைதியாக அல்ல; தண்டனைக் கைதியாகவே நடத்தப்பட்டார். மாட்டுக்குப் பதிலாக வ.உ.சியை செக்கில் பூட்டி இழுக்கச் செய்தனர்.
“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்,
நூலோர்கள் செக்கடியில் வாடுவதும் காண்கிலையோ”
என பாரதி கதறினார்.
அதனாலேயே அவர் “செக்கிழுத்த செம்மல்” ஆனார்.
மேல்முறையீட்டில் 4 ஆண்டுகளில், 1912 டிசம்பர் 12 அன்று வ.உ.சிதம்பரனார் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வக்கீல் தொழில் நடத்த முடியாதபடி அவரது ‘சன்னத்‘ பறிக்கப்பட்டது சிறையிலிருந்து வெளிவந்த அவரைப் பெருங்கூட்டம் வந்து வரவேற்கவில்லை. தொழுநோயாளியாய் ஆக்கப்பட்ட சிவாவும் வெகு சிலரும்தான் வரவேற்றனர்.
அப்படியும்கூட சென்னை வந்து பல தொழிற்சங்கங்களைக் கட்ட வ.உ.சிதம்பரனார் உதவினார். பிழைப்புக்காக அந்தப் பெரும் செல்வந்தர் பலசரக்குக் கடை நடத்தினார். தொல்காப்பியத்துக்கு உரை எழுதுவது உட்பட இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார். தனது சன்னத்தைத் திருப்பித்தந்த வெள்ளை அதிகாரி வாலேஸ் நினைவாகத் தன் மகனுக்கு வாலேஸ்வரன் எனப் பெயரிட்டார். கோவில்பட்டி சென்று மீண்டும் வக்கீல் தொழில் நடத்தினார்.
1920ல் கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அமர்வில் ஆயத்தமானார். 1936 நவம்பர் 18ஆம் தேதி அன்று இறந்தார்.
தான் ஏற்ற லட்சியத்துக்காக தனது வாழ்க்கை முழுவதையும் இழந்த, அதைப் பற்றிக் கவலைப்படாமல் தனது பணிகளைத் தொடர்ந்த, தொழிலாளர்களுக்காகவும், நாட்டுக்காகவும் தன்னை முழுதாக அர்ப்பணித்த மாமனிதர் வ.உ.சிதம்பரனார்.
அவரது திருப்பெயர் நீடூழி வாழ்க!
(இன்னும் வரும்)
கட்டுரையாளர்:
டி.எம்.மூர்த்தி
தேசிய செயலாளர், ஏஐடியுசி
ஆசிரியர், ஜனசக்தி