தலையங்கம்

துணிந்து நில் மகளே, இசைவாணி!

ஜனசக்தி தலையங்கம்

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்று தடுப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று 2018 செப்டம்பர் 28 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்தது.

கேரளத்தின் இடதுசாரி அரசு தீர்ப்பைச் செயல்படுத்த முனைந்தாலும், இந்துத்துவ மதவெறி சக்திகள், அதனை செய்யவிடவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவே தீர்ப்பை எதிர்த்தார்.

அப்போது, எழுதப்பட்ட கானா பாட்டுதான், “ஐயம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா”. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி உள்ளே வரவிடாமல் தடுக்கிறார்களே, ஐயப்பா நீயே கேள்! என்பதுதான் இதன் பொருள்.

அந்தப் பாடல் முழுவதிலும் இந்து மதம் பற்றியோ, கடவுள் பற்றியோ எதிர்மறையாக ஒரு சொல் கூட இல்லை. பாடல் முழுக்கப் பெண் விடுதலைதான் வலியுறுத்தப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் பினாமிகள் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கின்றன.

“இந்து தெய்வங்களைக் குறிவைத்து கேவலமாகப் பாடல் எழுதப்பட்டுள்ளது சபரிமலை ஐயப்பன் மீது தரக்குறைவான பாடல், மிக மன வருத்தத்தில் உள்ளோம்” என்கிறது மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார்.

“ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி தெய்வம். பிரம்மச்சரியம் என்பது சுயக்கட்டுப்பாடு, மனித உடலின் பாலியல் பாகங்கள் மீதான கட்டுப்பாடு அல்லது எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவற்றில் காமத்திலிருந்து விடுபடுவது. கோவிலுக்குள் மாதவிடாய் நின்று போகாத பெண்கள் நுழைந்தால் ஐயப்பனின் பிரம்மச்சரியம் கெட்டுவிடும்” என்று இவர்கள் பேசுவதுதான் ஐயப்ப சுவாமியை உண்மையில் கேவலப்படுத்துவதாகும்.

அனைத்து உயிர்களின் மீதும் அன்பு செலுத்தி அருள் பாலிக்கும் கடவுள் மீது, எவ்வளவு இழிவான கருத்தை இவர்கள் கொண்டிருக்கிறார்கள்!
பாட்டு வந்து ஆறு ஆண்டுகள் ஓடிவிட்ட பின்பு, தற்போது, ஆர்எஸ்எஸ் கம்பு சுழற்றுவதன் காரணம் என்ன?

புகாரே விடை அளிக்கிறது. நடிகை கஸ்தூரியைக் கைது செய்தது போல, இந்தப் பாடலைப் பாடிய இசைவாணி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறது அந்தப் புகார்.

“புகார் செய்த பின்பும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவிக்கும் அனைவர் மீதும் ஒரே மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா? முதல்வர் என்ன செய்கிறார்? இது ஒரு இந்து விரோத அரசு” என்று பரப்புரை செய்வதுதான் சங்கிகளின் ஒரே நோக்கம்.

அரசு முடிவு எடுத்து நடிகை கஸ்தூரியைக் கைது செய்யவில்லை. அழைப்பு அனுப்பியும், ஆஜராகாததால், நீதிமன்றம்தான் கைது செய்யுமாறு உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் அவர் பிணை கேட்டபோது, எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அரசு வழக்கறிஞர், பிணையில் விடுவிக்கப்படவே உதவி செய்தார்.

இசைவாணியை ஏன் கைது செய்ய வேண்டும்? கோவிலுக்குள் போக வேண்டும் என்று பாடலில் பெண் கேட்கிறார். அதுதான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அதனை செயல்படுத்துமாறு கோருவதை எப்படிச் சட்டவிரோதம் என்று சொல்ல முடியும்?
இசைவாணி கிறித்தவர். அவர் எப்படி இந்து மதம் பற்றிப் பேசலாம் என்கிறார்கள். அவர் இந்து மத தெய்வங்களை வணங்கும் பாடல்களையும் பாடி இருக்கிறார். கிறிஸ்தவரான ஏசுதாஸின் ஹரிவராசனம் பாடலோடுதான் ஐயப்ப சாமி கோவிலின் நடையே திறக்கிறது.

எனவே மதம் அல்ல காரணம். இசைவாணி ஒரு பெண், அதிலும் தலித். இங்குதான் இந்த ஆணவக் கொலைகாரர்களுக்கு இடிக்கிறது. பிறப்பினால் சாதியாக்கி இழிவு படுத்துவது மட்டுமல்ல; பெண்ணாகப் பிறப்பதே இழிவுதான் என்ற இவர்களது வர்ணாசிரம மனு (அ)தர்மச் சிந்தனைதான் இந்த எதிர்ப்பின் அச்சு. அதோடு அரசியல் உள்நோக்கத்தோடு திமுக அரசை அசைத்துப் பார்க்கும் நரித் தந்திரம்.
கிரேசி மோகன், கமலஹாசன் திரைப்படங்களில் இந்து தெய்வங்களை நக்கல் அடித்த போது, இவர்கள் புண்படவில்லை. காரணம் ஊரறிந்தது

பாடகி இசைவாணியை அலைபேசியில் அழைத்து எண்ணிறந்த ஆபாச வசவுகள், அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன.

அதே பாடலைப் பாடி காணொலி வெளியிட்டு ஆதரிக்குமாறு தென்சென்னை மாவட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தோழர்கள், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஏராளமானோர் பாடி பதிவு செய்திருக்கிறார்கள். இதற்காகப் பெருமன்ற பொறுப்பாளர் மணிகண்டன் மீதும் ஆபாச வசவுகள், அச்சுறுத்தல்கள்!

ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்த துணிச்சல்கார இசைவாணிக்கு, திராவிட, முற்போக்கு, ஜனநாயகச் சக்திகள் துணை நிற்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button