மாநில செயலாளர்

ரத்த தானம் வழங்கிடுவீர்!

கட்சிக் கடிதம் - மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்

போர்க்குணமிக்க தோழர்களே!

நமது அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆகிய இரு பெரும் அமைப்புகள் முக்கியமானதோர் முடிவை மேற்கொண்டுள்ளது.

ஆம் மார்ச் 23ஆம் நாள் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் ரத்ததானம் வழங்குவது என்று முடிவு செய்துள்ளனர்.

அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள நாள் நாட்டின் மிக முக்கியமான நாளாகும். விடுதலைப் போராட்டத்தில் நாடு முழுவதுமுள்ள மாணவர்களை, இளைஞர்களை, பொதுமக்களை போர்க்களத்தில் கிளர்ந்தெழச் செய்திட்ட நாளாகும்.

வெள்ளை ஏகாதிபத்திய அரசை எதிர்த்துக் களம் கண்ட காளையர்கள் மாவீரர்கள் எனப் போற்றப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவருக்கும் அந்நிய அரசு தூக்குத் தண்டனை விதித்தது.

மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் நாள் மார்ச் 24 என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே மார்ச் 23ஆம் நாள் மரண தண்டனையை நிறைவேற்ற அரசு முடிவு செய்தது.

24 ஆம் நாள் மக்கள் பெரும் திரளாய்க் கூடுவார்கள் என்றெண்ணிய அந்நிய அரசு முதல் நாளே அவர்களுக்கு முடிவு கட்டுவது என்று முடிவு செய்துவிட்டது.

மார்ச் 23 ஆம் நாள் கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ள பகத்சிங்கைத் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமாகி அவரது அறை நோக்கிச் சென்றார்கள்.

அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்ற அதிகாரிகள் பகத்சிங்கிடம் செய்தியைக் கூறி தூக்கு மேடைக்கு அழைக்கின்றனர்.

அம் மனிதனோ நாளை தானே எனக்குத் தூக்கு தண்டனையை நிறைவேற்றப்பட வேண்டும். இன்றே ஒரு நாள் முன்னதாகவே வந்து விட்டீர்களே என வினவ, இல்லை, இல்லை இன்றே உங்களின் தண்டனையை நிறைவேற்றிட வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது என்கின்றனர்.

ஓ அப்படியா பரவாயில்லை வருகிறேன் சற்று பொறுங்கள், நான் இப்போது மாமேதை லெனினுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றேன். அவரின் நூலான ‘அரசும் புரட்சியும்’ என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் சில பக்கங்கள் பாக்கியுள்ளன. அவைகளைப் படித்து முடித்து விடுகிறேன். அதன் பின்னர் வருகிறேன் எனக் கூற அதிர்ந்து போன அதிகாரிகள் பகத்சிங் படித்து முடிக்கும் வரை காத்திருந்தனர்.

மரணத்திற்குச் செல்பவன் புத்தகத்தைப் படித்தால் என்ன? -படிக்காமல் விட்டால் என்ன? என்று கேட்கலாம். இல்லை இது மிக முக்கியமான நூல். புரட்சிக்காரன் எழுதிய நூல். இதனை இப்போது படித்து அதில் உள்ள செய்திகளை அறியாமல் விட்டால், மரணத்திற்குப் பின்னரா படிக்க முடியும்.

மரணத்தின் தறுவாயிலும் புத்தகம் படிக்க முடிந்தது என்றால் அவன் எத்தகைய நெஞ்சுரம் மிக்கவனாக இருக்க முடியும்!

படித்து முடித்தான். நான் முடித்து விட்டேன் புறப்படலாமா? என விருந்துக்குச் செல்வது போல் அதிகாரிகளைக் கேட்டான்.அதிகாரிகள் வாய்திறந்து பேச இயலாத சக்தி பெற்றவர்களாகத் தலையை அசைத்தார்கள். அதிகாரிகள் புடைசூழ மாவீரனுக்குரிய புன்னகையோடு கம்பீரமாக நடந்தான்.

தூக்கு மேடைக்குச் செல்வதற்கு முன்னர், தண்டனைக் கைதிகளின் உடல் எடையைச் சோதிப்பது வழக்கம். பகத்சிங்கை சோதித்தார்கள். அவனது எடை முன்னைக் காட்டிலும் அதிகரித்திருப்பது கண்டு அதிகார வர்க்கமும், மருத்துவர்களும் ஆச்சரியக் கடலில் மூழ்கித் திகைத்து நின்றார்கள்.

அவனது உடல் எடை குறையவில்லை, உடல் நடுங்கவில்லை, முகத்தில் சோகமில்லை, வருத்தமில்லை, கம்பீரம் குறையவில்லை. அவன் தெளிவாக இருந்தான். ‘‘என் தாய்நாட்டின் விடுதலைக்காக என் உயிரை தானம் செய்கிறேன். இதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. மாறாகப் பெருமிதத்தோடு தூக்குக் கயிற்றை முத்தமிடக் காத்திருக்கிறேன்’’ என்பது போன்ற அவனது அனைத்துச் செய்கைகளும் இருந்தன.

இதற்கு முன்பு வெள்ளை அரசுக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில் தாங்கள் அரசியல் கைதிகள் தங்களைச் சாதாரண குற்றவாளிகளைப் போல தூக்கிலிடாமல் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தனர். அரசு அதனை நிராகரித்து விட்டது.

மாவீரனுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றிய நாள்தான் மார்ச் 23. அத்தகைய நாளில்தான் நமது தோழர்கள் இரத்ததானம் வழங்க முடிவு செய்துள்ளார்கள்.

மனிதர்கள் மரணத்திற்குப் பின்னர் கண்களை தானம் செய்யலாம். அக்கண்கள் இருவருக்குப் பார்வையைத் தரும்! மனிதர்கள் மரணத்திற்குப் பின்னர் உடலை மருத்துவமனைக்கு தானம் வழங்கலாம். அவ்வாறு வழங்குவதன் மூலம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களின் பயிற்சிக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

மரணத்திற்குப் பின்னர் உடல் எரிக்கப்படுகின்றது அல்லது புதைக்கப்படுகின்றது. இதனால் என்ன பயன்?

புதையுண்டோ அல்லது எரித்துச் சாம்பலாகும் இரு கண்களை தானம் வழங்குவதன் மூலம், இறந்த பின்னரும் அவரது இரு கண்கள் பார்வையற்றவர்களுக்குப் பொருத்தி அவர்கள் பார்வையைப் பெறுகின்றார்கள். இறந்த பின்னரும் அவர்களது கண்கள் உயிருடன் இருக்கின்றன. இறந்த பின்னரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மரணத்திற்குப் பின்னர் உடல் மருத்துவக் கல்லூரிக்கு வழங்குவதன் மூலம், மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. நமது மதிப்புமிக்க தலைவர் துப்பாக்கித் தோட்டாக்களைத் தனது கைகளில் காலம் முழுவதும் சுமந்தவர் தியாகச் சீலர் தோழர் ஏ.எம்.கோபு வின் மரணத்திற்குப் பின்னர், அவரது விருப்பப்படி, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.

அண்மையில் இயற்கை எய்திய சிவகங்கை மாவட்ட தலைவர்களில் ஒருவரான தோழர் முத்துராமலிங்கம் (மாதர் சம்மேளன மாநிலச் செயலாளர் மு.கண்ணகியின் கணவர்) இயற்கை எய்திய நிலையில் அவரது விருப்பப்படி சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் மௌனசாமி, தன் மரணத்திற்குப் பின்னர் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிட வேண்டுமென இப்போதே உயில் எழுதி வைத்து விட்டார்.

இவைகள் எல்லாம் நல்லதொரு முன்னுதாரணங்கள். வாழும்போது நாம் அச்சமின்றி இரத்ததானம் செய்யலாம். அவ்வாறு நாம் வழங்குவதால் எவ்விதப் பாதிப்பும் கிடையாது.
விபத்துகள், அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு இரத்தம் தேவைப்படுகின்றது. நோய்களுக்கு ஏற்றவாறு, அறுவை சிகிச்சைக்கு ஏற்றவாறு ரத்தம் தேவைப்படுகின்றது.
தேவைப்படுவோருக்கு இரத்தம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

அவதி மட்டுமல்ல, விலை மதிக்க முடியாத உயிர் போகின்றது அத்தகைய உயிர்களைக் காக்கவும் தேவைப்படுவோருக்கு ரத்தம் வழங்கவும் மருத்துவமனைகளில் இரத்த சேமிப்பு வங்கியில் ரத்தம் சேமித்து வைக்கப்படுகின்றது. அத்தகைய சேமிப்பிற்கு ரத்தம் வழங்க, தானமாக வழங்க நமது மாணவர்களாலும் இளைஞர்களாலும் முன் வந்திருப்பது வரவேற்பிற்கும் பாராட்டுக்கும் உரியதாகும்!

இளம் தோழர்கள் மட்டுமல்ல மூத்தவர்களும் வழங்கலாம். வழங்கிட வாரீர்! மார்ச் 23 ஆம் நாள்!

மீண்டும் சந்திப்போம்

தோழமைமிக்க,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button