தாமிரவருணி உபரி நீரை வறண்ட பகுதிகளுக்கு திருப்புவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!
மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டின் தென்பகுதியில் பெய்த கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளன.
இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் எதிர்பாராமல் வரும் உபரி நீரை வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விடும் முயற்சியில், தாமிரவருணி ஆற்றின் கன்னடியன் கால்வாயில் இருந்து கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைத்து வறண்ட பகுதிகளுக்கு 765 மில்லியன் கன அடி திருப்பும் திட்டம் முந்தைய கலைஞர் ஆட்சியில் (2000) ஆம் ஆண்டு அறிவித்தது, அது, தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் தற்போது தாமிர வருணியின் உபரி நீரை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இத்திட்டத்தை வரவேற்பதுடன், இதே போல் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் மழைக் காலங்களில் கிடைக்கும் உபரி நீரை பயன்படுத்தும் திட்டங்களை உருவாக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது என கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.