ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிய நிவாரண நிதியை முழுமையாக வழங்க வலியுறுத்தி 08.01.2024 ஆர்ப்பாட்டம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத் தீர்மானங்கள்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் 05.01.2024 அன்று சென்னையில் உள்ள மாநில கட்சி அலுவலகத்தில் தோழர் எம்.ஆறுமுகம் (முன்னாள் எம்.எல்.ஏ) தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர் கே.நாராயணா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.பத்மாவதி, க.சந்தானம், வகிதா நிஜாம் வை.சிவபுண்ணியம், எம்.ரவி, டி.ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் டி. ராமசந்திரன் (தளி), க மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
தமிழ்நாடு அரசு கோரும் தேசிய பேரிடர் நிவாரண நிதியை முழுமையாக வழங்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி 08.01.2024 ஆர்ப்பாட்டம்
கடந்த 2023 நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக தீவிரமாகி டிசம்பர் 3, 4 தேதிகளில் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து 17, 18 தேதிகளில் தென்தமிழகத்தில் பெய்த பெருமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததால் தமிழ்நாடு அரசு போர் கால வேகத்தில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு பெருமாநகர் மற்றும் எட்டு மாவட்டங்களில் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்து போனது. சிறு, குறு நடுத்தரத் தொழில்கள், வணிக செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கடுமையான இயற்கை பேரிடரை ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் வான் வழி ஆய்வு செய்தும், நிதியமைச்சர் பேரிடர் பாதிப்புப் பகுதிகளை நேரில் கள ஆய்வும் செய்துள்ளனர். ஒன்றிய அமைச்சகங்களுக்கு இடையிலான உயர்நிலை அதிகாரிகள் கொண்ட மத்திய குழு விரிவான ஆய்வு செய்து, சேதாரங்களை மதிப்பீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து, உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஆரம்ப நிலையில் கோரினார் தொடர்ந்து விரிவான மதிப்பீடு செய்து ரூ.21 ஆயிரத்து 692 கோடி வழங்க வேண்டும் என கடந்த டிசம்பர் மாதம் பிரதமரிடம் நேரில் முறையிட்டுள்ளார்.
தற்போது பாதிப்புகளை முழுமையாக மதிப்பிட்டு, தமிழ்நாடு இயற்கை பேரிடர் பாதிப்பில் இருந்து மீண்டு, மறுவாழ்வு பெறுவதற்கு தர ரூபாய் 37 ஆயிரத்து 907 கோடி பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
புயல், பெருமழை இயற்கை பேரிடர் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டிய ஒன்றிய அரசு வழக்கமாக, இயல்பான காலத்திற்கு வழங்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதி. தவிர, தற்போது ஏற்பட்ட பாதிப்புகளை எதிர் கொள்ள நிதியுதவி செய்ய மறுத்து, தமிழ்நாட்டையும், மக்களையும் வஞ்சித்து வருவதையும், ஒன்றிய நிதியமைச்சர் உள்பட பாஜகவினர் மலிவான அரசியல் பரப்புரை செய்து வருவதையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு வன்மையாகக் கண்டிப்பதுடன்,
தமிழ்நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரை, கடுமையான தேசியப் பேரிடராக அறிவித்து, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ.37 ஆயிரத்து 907 கோடியை முழுமையாக விரைந்து வழங்க வலியுறுத்தி 08.01.2024 திங்கள் கிழமை தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என மாநில நிர்வாகக் குழு முடிவு செய்கிறது.
-
பாஜகவின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனம்
சேலம் மாவட்டம், இராமநாயக்கன் பாளையம் ஏழை விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன் ஆகியாரில் நிலத்தை பறிக்க சட்டவிரோத மோசடியில் ஈடுபட்டு பாஜக இளைஞர் அணி செயலாளருக்கு ஆதரவாக அமலாக்கதுறை ஏவப்பட்டிருக்கிறது. அமலாக்கத்துறை ஏழை விவசாயிகளுக்கு அனுப்பிய அழைப்பாணையில் (சம்மன்) சாதிப் பெயரை குறிப்பிட்டு தீண்டாமை குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளது. அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற விசாரணை அமைப்பு இறையாண்மை இழந்து செயல்படுவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக் குழு கண்டிக்கிறது.
-
ஆதார் இணைப்பு கட்டாயம் என்கிற உத்தரவை ரத்து செய்க
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளர்கள் அவர்களது வேலை அட்டையுடன் ஆதார் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என நிர்பந்திக்கிறது. கடந்த 31.12. 2023 ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிந்து விட்டது எனக் கூறி லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கும் பேராபத்தை உருவாக்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அமர்வு தனிநபர் அந்தரங்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலை அரசின் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் விவசாயத் தொழிலாளர் நலன்களுக்கு விரோதமாகவும் செயல்படும் ஒன்றிய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கண்டிப்பதுடன், நூறு நாள் வேலை அட்டையில் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
-
குற்றவியல் சட்டத் திருத்தம் – நீக்க கோருதல்
ஒன்றிய அரசு குற்றவியல் சட்டத்தை திருத்தி, சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு பத்தாண்டு சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டுநர்கள் மத்தியில் கடுமையான கொத்தளிப்பையும், எதிர்ப்பையும் உருவாக்கி இருப்பதை கருத்தில் கொண்டு, பத்தாண்டு தண்டனை என்ற சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.