இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடுவோம்! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு தீர்மானம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் தஞ்சாவூரில் பிப்ரவரி 18, 19 தேதிகளில் (செவ்வாய், புதன்) பி.பத்மாவதி (முன்னாள் எம்எல்ஏ) தலைமையில் நடைபெற்றது,
கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன், வை.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் க மாரிமுத்து, தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து உத்திராபதி உள்பட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடுவோம்
ஒன்றிய பாஜக அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் முன்வைத்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழக மக்களை வஞ்சித்துள்ளது. தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித் துறைக்கு, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.2152 கோடி நிதியை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இப்போது ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி வழங்குவோம் என நிபந்தனை விதித்துள்ளது.
இதனால் 44 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமக்ரா சிக்ஷா அபியான் மற்றும் பிஎம்ஸ்ரீ கல்வித் திட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது. தமிழ்நாடு அரசு “இல்லம் தேடி கல்வி” திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருவதன் மூலம் மாணவர்களில் கற்றல் திறன் அதிகரித்து வருவதை ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கை வெகுவாக பாராட்டியுள்ளது.
ஆனால், ஒன்றிய அரசின் கல்வித்துறை தமிழ்நாடு மும்மொழித் திட்டத்தை ஏற்றுக் கொண்டால் தான் நிதி ஒதுக்குவோம் என மாநில மக்களின் கல்வி உரிமையை பறித்து, இந்தி மொழியை திணித்து, உயர் தனிச் செம்மொழியாம் தமிழ் மொழிக்கு கேடு செய்யும் தவறான முறையில் செயல்பட்டு வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் எந்த மொழிக்கும் எதிரான வெறுப்புக் கொண்டவர்கள் அல்ல; “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தொன்மை மரபை வளர்த்தெடுத்து வருபவர்கள். இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து 1937 ஆம் ஆண்டிலும், 1965 ஆம் ஆண்டிலும் தமிழ்நாடு ஒரு முகமாக கொந்தளித்துப் போராடியதை ஒன்றிய அரசுக்கு நினைவூட்டி, “இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகிற வரை இந்தியைத் திணிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபடாது” என நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழிப்படி ஒன்றிய அரசு நடந்து கொள்ள வேண்டும்,
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக, முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது. தமிழக மக்களையும் குறிப்பாக மாணவர், இளைஞர்கள் மற்றும் மொழி உரிமை செயல்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகளை திரட்டி, ஒன்றிய அரசின் இந்தி மொழித் திணிக்கும் முயற்சிகளுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொள்வது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் முடிவு செய்கிறது.
வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை வழங்குக
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், ஊரகப் பகுதிகளில் உடல் உழைப்பை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வரும் குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறும் உரிமை பெற்றுள்ளன. இந்த வேலை உறுதியளிப்புத் திட்டத்தை கிராம ஊராட்சிகள் மூலம் செயல்படுத்தி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் செயல்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒன்றிய அரசு அறிமுகம் செய்த, இந்த முன்னோடி திட்டத்தில் நாடு முழுவதும் 26 கோடி தொழிலாளர்கள் வேலை அட்டை பெற்று, பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில் ஒன்றிய பாஜக அரசு அதிகாரத்துக்கு வந்த பின்னர் பெரும் மாற்றங்கள் செய்து, திட்டத்தை சிதைத்து, சீர்குலைத்து வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ 4.50 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என பொருளாதார அறிஞர்களும், விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஒன்றிய பாஜக அரசு ஆண்டுக்கு, ஆண்டு வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கான நிதியை வெட்டிக் குறைந்து வருகிறது. வரும் ஆண்டிற்கு (2025-26) ரூ. 86 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்துடன், கடந்த 2022- 23 ஆம் ஆண்டில் ஐந்து கோடியே 19 லட்சம் வேலை அட்டைகளை ரத்து செய்து, கோடிக்கணக்கான தொழிலாளர்களை திட்டத்தில் இருந்து நீக்கி விட்டது. வேலை செய்த தொழிலாளர்களுக்கு கால முறைப்படி ஊதியம் வழங்காமல் பெரும் தொகை நிலுவையாகத் தேங்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு கடந்த ஆண்டு வழங்க வேண்டிய 2208.74 கோடி ரூபாய் ஊதிய பாக்கியை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. வேலை செய்த தொழிலாளர்கள் ஊதியம் பெறுவதற்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நவ தாராளமயப் பொருளாதாரக் கொள்கை விவசாய உற்பத்தி முறையை முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ள சூழலில், வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதும், வேலை பெறும் நாட்களையும் ஊதியத்தையும் உயர்த்துவது அவசியமாகும். ஆனால் இதுவரை ஆண்டுக்கு 100 நாள் வழங்குவதையும் கூட உறுதி செய்யாமல், அதிகபட்சம் 60 நாட்கள் வரை மட்டுமே வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 100 நாள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்
- வேலை செய்த தொழிலாளர்களுக்கு வாரா வாரம், நிலுவை இல்லாமல் ஊதியம் வழங்க வேண்டும் .
- ஊதியம் தருவதில் ஏற்படும் கால தாமதத்திற்கு, சட்டத்தில் கண்டுள்ள படி அபராத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் .
- வேலை நாட்களை ஆண்டுக்கு 200 ஆக உயர்த்தி, குறைந்தபட்ச ஊதியமாக தினசரி ரூ 700 வழங்க வேண்டும்
- 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி தமிழ்நாட்டில் வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும்
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஊரகப்பகுதி உடல் உழைப்புத் தொழிலாளர்களைத் திரட்டி தொடர் இயக்கங்களை நடத்துவது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் முடிவு செய்கிறது.
வழக்கறிஞர் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்
ஒன்றிய மோடி அரசு வழக்கறிஞர் திருத்த சட்டம் – 2025ன் மூலம் வழக்கறிஞர்களின் சுதந்திரத்தையும், மக்களுக்காகப் பாடுபடும், போராடும் கடமையையும் தடுக்கத் துணிந்துள்ளது.
வழக்கறிஞர் கழகமான பார் கவுன்சில் நிர்வாகிகளை வழக்கறிஞர்களே தேர்வு செய்வதை மாற்றி, இனிமேல் ஒன்றிய அரசே நியமிக்கும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பார் கவுன்சிலை தன் கைப்பாவையாக்கிக் கொள்கிறது.
நீதிமன்றப் புறக்கணிப்பு மற்றும் நீதிமன்றங்களில் போராட்டத்திற்கு தடை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் போராடக்கூடிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை காண்பது, ஒட்டுமொத்த வழக்கறிஞர்களின் குரல்வளையை நெரித்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை இது மிகவும் கண்டிக்கத்தக்கது. பிரிவு 49ஏ-ன்படி அந்நிய சட்ட நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதித்து வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டால் இந்தியாவில் இருக்கக்கூடிய கடைக்கோடி வழக்கறிஞர்களின் நிலை என்னவாகும் என்பதை கருத்தில் கொள்ளாமல் அந்நிய சட்ட நிறுவனங்களை இந்தியாவிற்கு அனுமதிப்பது என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உடனடியாக மோடி அரசாங்கம் இந்த வழக்கறிஞர் திருத்தச் சட்டம்-2025 திரும்பப்பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு வலியுறுத்துகிறது.
குழந்தைகள் மீதான பாலியல் வன் தாக்குதல்களை தடுத்து நிறுத்துக!
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அறிவுக்கூடங்களாகத் திகழ வேண்டிய கல்வி நிலையங்களில் அதிகரித்து வரும் பாலியல் வன்தாக்குதல்கள் பெரும் கவலையளிக்கிறது.
காவல்துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரிகளும், காவலர்களும் பாலியல் வன்தாக்குதலுக்கு ஆளாவது வேலியே பயிரை மேயும் பேரபாயமாக வெளிப்பட்டு வருகின்றது. குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் தொடர்பாக, கடந்த 2020ஆம் ஆண்டில் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் 3143 வழக்குகள் பதிவாகியிருந்தன. இது 2021 ஆம் ஆண்டில் 4415 வழக்குகளாக அதிகரித்துள்ளன. இதில் நான்காயிரம் பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும், 3,338 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 256 மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
போக்சோ சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து தீர்வு காண வேண்டும் என சட்டம் வலியுறுத்தும் நிலையிலும், கடந்த ஐந்தாண்டுகளில் 7,293 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள் செயலற்று கிடக்கின்றன. இவைகளை சீரமைத்து, செயலூக்கம் கொண்டதாக திருத்தியமைத்து, விழிப்புணர்வு பரப்புரையை தீவிரப் படுத்த வேண்டும்.
போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்யப்படும் குற்றவாளிகள், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டிக்கும் வகையில் விசாரணை அமைப்புகளின் மீது தனி கவனம் செலுத்தி, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு, தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்துக!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகில் உள்ள மேலப்பிடவூரைச் சேர்ந்த, பட்டியலின கல்லூரி மாணவர் ஆர் அய்யாச்சாமி (வயது 19) புல்லட் ஓட்டியதை சகித்துக் கொள்ள முடியாத சாதி ஆதிக்க வெறி, அவரது இரண்டு கைகளையும் வெட்டிய செய்தி சமூக நீதிக் கொள்கைக்கு சவாலாக அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பட்டியலின மாணவன் சின்னதுரை படிப்பில் முன்னணி வகித்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத சாதி வெறியன் அவரது வீடு புகுந்து அவரையும், அவரது சகோதரியையும் வெட்டிப் படுகொலை செய்ய முயற்சித்ததை காண நேர்ந்தது.
பகுத்தறிவு சிந்தனையும், சமத்துவக் கருத்துக்களும் ஆழ வேரோடியுள்ள தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு சங் பரிவார் கும்பல்கள் பல்வேறு தளங்களில் ஊடுருவி, சாதி, மதவெறி சக்திகளுக்கு வெறியூட்டி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகள் தீவிரமடைந்து வருவது முக்கியக் காரணமாகும். இது அரசின் அதிகார வர்க்க கட்டமைப்பிலும், காவல்துறை நிர்வாகத்திலும் பிரதிபலித்து வருகின்றது. கள்ளக்குறிச்சி, கருணாபுரம் கள்ளச்சாரய சாவில் இறந்து போன 70 பேரில் 60 பேர் பட்டியலின பிரிவைச் சேர்ந்தவர்கள். கடந்த ஏழு மாதங்களில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் 60 பேர் கொல்லப்பட்டிருப்பதும், 61 பேர் மீது கொலை முயற்சி நடந்திருப்பது பெருங்கவலை அளிக்கிறது.
சாதி வெறி, மதவெறி சக்திகளின் நடவடிக்கைகளை கூர்மையாக கண்காணித்து, ஆரம்ப நிலையிலேயே இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், பட்டியலின மக்கள் மீதான வன்தாக்குதல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களை விரிவுபடுத்தி, வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டிக்கப்படும் வகையில் விசாரணை அமைப்புகள் சார்பற்ற நடுநிலையோடு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக் குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.