ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்குக!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தீர்மானம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் 13.02.2024 (செவ்வாய் கிழமை) சென்னையில் உள்ள கட்சியின் மாநில அலுவலகமான பாலன் இல்லத்தில் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் தேசியச் செயலாளர் டாக்டர் கே.நாராயணா, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன் எம்.பி, எம்.செல்வராசு எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ராமச்சந்திரன், க.மாரிமுத்து உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய அரசியல் நிலை
ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோவில் குடமுழுக்கு, அதற்கு பின்னர் ஏற்பட்டு வரும் அரசியல் வளர்ச்சிப் போக்குகள் குறித்து தேசிய செயலாளர் டாக்டர். கே.நாராயணா விளக்கினார். ஒன்றிய பாஜக அரசு, அரசியல் அமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளை எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை சீர்குலைக்கவும், அந்த மாநிலங்களில் அரசியல் ஆதாயம் தேடும் கருவிகளாகவும் பயன்படுத்தி வருவதை அவர் பட்டியலிட்டுக் கூறினார். ஒரே நாடு, ஒரே தேர்தல் ஒரே கலாச்சாரம் என்று பேசுவதின் பேராபத்தை உணர வேண்டும். இது போன்ற காரணங்களால் நாட்டின் ஜனநாயக முறைகளும், அரசியல் அமைப்பு சட்டமும் பாதுகாக்க வேண்டும். அதற்காக பாஜக அரசு அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். இந்த முயற்சியில் இண்டியா கூட்டணி உருவாகி வலிமை பெற்று வருகிறது என்றும் கே.நாராயணா கூறினார்.
மாநில அரசியல்
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மாநில அரசியல் வளர்ச்சிப் போக்குகளை விளக்கிப் பேசினார். நாடாளுமன்றத் தேர்தல், தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை விபரங்களை கே.சுப்பராயன் எம்பி எடுத்துக் கூறினார். நிறைவாக கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய அரசின் அடக்குமுறைக்கு கண்டனம்
ஒன்றிய பாஜக அரசு 2021 ஆண்டில் நிறைவேற்றிய விவசாயிகள் விரோத, மூன்று வேளாண் வணிக சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு ஓராண்டுக்கும் மேலான போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தின் நிர்பந்தத்தால் மூன்று வேளாண் வணிக சட்டங்களையும் திரும்பப்பெற்ற ஒன்றிய அரசு விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யும் சட்டப்பூர்வ ஏற்பாடு செய்வதுடன் மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்த ஒன்றிய அரசு கடந்த இரண்டாண்டுகளாக நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது. இந்த நிலையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மீண்டும் தலைநகர் டெல்லியில் போராடத் தொடங்கியுள்ளனர். விவசாயிகள் முன்னெடுத்து வரும் போராட்டத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது. விவசாயிகள் போராட்டத்தின் மீது ஒன்றிய அரசு கடுமையான அடக்குமுறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சாலைகளில் கூரிய கம்பிகளை புதைப்பது, சாலைகளை துண்டித்து பள்ளங்கள் தோண்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அரசு, காவல்துறை மூலம் 144 தடையுத்தரவு, ஊரடங்கு உத்தரவு, கண்ணீர் புகை வீச்சு போன்றவை மூலம் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் ஜனநாயக விரோத செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் வன்மையாக கண்டிப்பதுடன், விவசாயிகள் பிரதிநிதிகளை அழைத்து, அவர்களது கோரிக்கைகள் மீது தீர்வு காண வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்குக!
அரசியலமைப்பு அதிகாரத்தின்படி மாநில ஆளுநர் அரசின் தலைவராக செயல்பட வேண்டிய கடமை பொறுப்பை பெற்றவர். மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையில் அமைச்சரவை ஆலோசனைப்படி ஆளுநர் செயல்பட வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை சட்டப்பேரவைக் கூட்டத்தில் உரையாற்றி, கூட்டத்தொடரை தொடக்கி வைப்பது, அதனை முடித்து வைப்பது போன்ற சம்பிரதாயப் பூர்வமான கடமைகளையும் ஆளுநர் மேற்கொள்ள வேண்டும். ஆனால், தமிழ்நாடு ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, சட்டமன்றப் பேரவையின் மரபுகளையும், மாண்புகளையும் சிதைத்து, மலிவான அரசியல் நடவடிக்கையில் ஆளுநர் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்த உரையை வாசிக்க மறுத்து, அவரது விருப்பத்துக்கு உரை ஆற்றினார். இந்த ஆண்டு உரையாற்ற மறுத்து அவையில் அமர்ந்து விட்டு, பின்னர் “நாட்டுப்பண்” தொடர்பான சர்ச்சையை உருவாக்கியுள்ளார். வழிவழியான சம்பிரதாயப் பூர்வ அதிகாரம் தவிர வேறு அதிகாரம் ஏதும் ஆளுநருக்கு இல்லை என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக வரையறுத்து அறிவுறுத்தியுள்ளன. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், அரசின் செயல்பாடுகளை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டதை உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது. இதற்கு பிறகும் ஆர்.என்.ரவி ஆளுநர் பொறுப்பில் தொடர்ந்து நீடிப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. அவரை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் குடியரசு தலைவரை கேட்டுக் கொள்கிறது.
பிப்.16 மறியலுக்கு முழு ஆதரவு
மோடி அரசின் மக்கள் விரோத, தேச விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்தியாவின் விவசாயிகள், தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பிப்ரவரி 16ம் தேதியன்று கிராமங்களில் முழு அடைப்பு, தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளது. கூடுதலாக மாநிலம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்தையும் நடத்த தமிழ்நாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மிக அவசியமான போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வரவேற்று ஆதரிக்கிறது. கட்சிக் கிளைகள் விவசாயிகள், தொழிலாளர்களின் போராட்டத்துக்கு உதவி செய்வதோடு, அதில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.
‘தந்தை பெரியார் வன உயிரின சரணாலய’ அறிவிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்!
ஈரோடு வனக்கோட்டம், அந்தியூர் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட பர்கூர் வனப்பகுதியில் 80114.80 ஹெக்டேர் (801.148 ச.கிமீ) பரப்பளவை, ‘தந்தை பெரியார் வன உயிரின சரணாலயமாக’ தமிழ்நாடு அரசு கடந்த 31/01/24-ம் தேதி அறிவிக்கை செய்துள்ளது.
*2006 ஆம் ஆண்டு, வன உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம், வனப்பகுதியில் வாழும் பழங்குடிகள் மற்றும் இதர வனம் சார்ந்து வாழும் மக்களின் பாரம்பரிய உரிமைகளை அங்கீகரிக்கிறது. இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டு 17 ஆண்டுகளாகியும், தமிழ்நாட்டில் முழுமையாகவும் – அரசியல் உறுதியோடும் அமலாக்கப்படவில்லை. இதனால், பழங்குடியினர் மற்றும் வனம் சார்ந்து வாழும் மக்களின் பாரம்பரிய – சமூக வன உரிமைகள் அங்கீகரிக்கப் படவில்லை.
தற்போது தமிழ்நாடு அரசின் ‘தந்தை பெரியார் வன உயிரின சரணாலய’ அறிவிப்பு, வன உரிமைச் சட்டம்-2006 ன் உணர்வுகளுக்கு மாறாக, மக்களின் பாரம்பரிய வன உரிமைகளை பறிப்பதாக உள்ளது. ஏற்கனவே, உயர்நீதிமன்றமும் வனச் சரணாலயம், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள் ஆகியவற்றில் கால்நடை மேய்ச்சலை தடை செய்து வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்து ரத்து செய்ய வேண்டும் என்னும் கோரிக்கையும் நிலுவையில் உள்ளது.
பர்கூர் மலைப்பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘மறை மாடுகள்’ உள்ளன. ‘பர்கூர் மறை மாடுகள்’ ஒரு சிறப்பு வாய்ந்த அரிய இனவகையாகும்.
இந்த அரியவகை பர்கூர் மறையின மாடுகளின் பெருக்கத்தை அதிகரிக்கவும், இந்த இனத்தை பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு, பர்கூரில் ‘மறைமாடுகள் ஆராய்ச்சி மையத்தையே’ அமைத்துள்ளது. மேலும் மலைவாழ் மக்களின் பிரதான வாழ்வாதாரமும் கால்நடை வளர்ப்பாகும்.
தற்போது பர்கூர் வனப்பகுதி வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், கால்நடை மேய்ச்சல் தடைபடுவதோடு அரிய இனவகையான ‘பர்கூர் மறை மாட்டினம்‘ அழியும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. மலைமக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, தமிழ்நாடு அரசு..
1. 2006-வன உரிமைச் சட்டத்தை அமல் செய்வதன் மூலம், பழங்குடியினர் மற்றும் இதர வனம் சார்ந்து வாழும் மக்களின் பாரம்பரிய உரிமைகளை முதலில் அங்கீகாரம் செய்ய வேண்டும்.
2. வனப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க சட்டரீதியான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
3. அது வரை இப்போது அறிவிக்கை செய்துள்ள ‘தந்தை பெரியார் வன உயிரின சரணாலய அறிவிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்.
என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு, வனத்துறையையும் – தமிழ்நாடு அரசையும் கேட்டுக்கொள்கிறது.
தமிழ் வழியில் பயின்ற மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தல், பரனூர் சுங்கச்சாவடி நீக்கம் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.